குறிப்பு : இந்த ப்ளாகில் வினோத் அவர் எடுத்த படங்களை , வரைபடங்கள் போல மாற்றியுள்ளார். எனக்கு புகைப்படங்களை விட இந்த படங்கள் ரொம்ப பிடித்திருக்கிறது. இது கிப்லி ஓவியம் அல்ல, எனக்கு கிப்லி படங்கள் ரொம்ப பிடிக்கும் , அதனால் அதை சும்மா எல்லோரும் AI உபயோகித்து உருவாக்குவது அந்த கலைஞர்களை அவமதிப்பதாக நான் எண்ணுவதால் நாங்கள் அவற்றை உபயோகிப்பதில்லை.
டாமன் நெகரா தேசிய பூங்காவிற்கு அதிகாலை ஆறு மணிக்கே சென்று விடலாம் என்று பார்த்தால் படகோட்டிகள் 7.30க்கு மேல் தான் வர ஆரம்பிப்பார்கள் என்று தெரிந்ததால் காலை 7மணிக்கு தங்கும் விடுதியில் காலை உணவு உண்டுவிட்டு தேசியபூங்காவிற்கு கிளம்பினோம். படகில் மறுபக்கம் சென்றடைந்தவுடன் முந்தைய நாள் சென்ற வழி செல்லாமல் புதிய வழியில் சென்றோம். அடர்ந்த காடு என்பதால் 8 மணிக்கும் உள்ளே இருட்டாகவே இருந்தது. எனக்கும் வினோத்துக்கும் பொதுவாக காடுகளுக்குள் அதிகாலை 6 மணிக்கு சென்றுவிட வேண்டும் என்று திட்டமிடுவோம், அதனால் இங்கே கொஞ்சம் தாமதமாக செல்கிறோமே என்று நினைத்தால் அங்கே இன்னும் பறவைகளின் ஆட்டம் ஆரம்பிக்கவே இல்லை என்று புரிந்தது.

ஆங்காங்கே பறவைகளின் பாடல்கள் மெதுவாக கேட்டாலும் அருகே எந்த பறவைகளையும் பார்க்க இயலவில்லை. முந்தைய நாள் மழை பெய்ததால் காடு அழகாக இருந்தது. கொஞ்ச தூரம் உள்ளே சென்ற பின் கிப்பன் ஒலி கேட்க ஆரம்பித்தது. அந்த கானகத்தில் எங்களுக்கு பறவைகளின் ஒலியை விட கிப்பனின் ஒலி தான் இன்னும் இனிமையாக இருந்தது. தாய்லாந்த் சென்ற போது இதே மாதிரி கிப்பன் சத்தம் கேட்டு ஓடி போய் தூரத்தில் ஒரு தாய் மற்றும் குட்டி கிப்பனை பார்த்த அனுபவத்தை நாங்கள் பேசிக்கொண்டு சென்றோம்.

அப்பொழுது திடீரென்று அருகில் உள்ள செடிகளில் ஒரு பறவை கூட்டம் கத்திகொண்டே வந்தன. சிங்கப்பூரில் இருந்து இரு பறவையாளர்களும் அங்கே சுத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரின் கேமராவும் புதிய மாடல் கேமராக்கள் என்பதால் சட சடவென்று க்ளிக் செய்துகொண்டிருந்தனர். எங்களின் கேமரா 14 வருடத்திற்கு முன்னே உள்ளது என்பதால் அதற்கேற்ப க்ளிக் செய்துகொண்டிருந்தது. நான் குழந்தையுடன் படியில் அமர்ந்துகொண்டு பறவைகள் நகர்கின்றது என்பதை தவிர என் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பதால் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

நாங்கள் சிறிது நேரத்தில் அங்கே ஹைட் வைத்திருந்த இடத்திற்கு சென்றோம். அங்கே ஏற்கனவே ஒரு பெரிய வயதான வெள்ளைக்காரர்கள் கூட்டத்திற்கு பறவை கைட் ஒருவர் லேசர் எல்லாம் அடித்து ஏதோ ஒரு பறவையை காட்ட முயற்சி செய்து கொண்டிருந்தார். அவர்கள் எல்லோரும் கஷ்டப்பட்டு அந்த பறவையை பார்த்துக்கொண்டிருக்க என் மகளோ bird என்று கத்த, பறவை ஒன்று சட்டென்று புதருக்குள் இருந்து வெளியே பறந்து சென்றுவிட்டது. அந்த பறவையாளர் கூட்டம் எங்களை ஒரு விதமாக பார்க்க , நான் குழந்தையை வேக வேகமாக படியேறி அங்கே இருந்த அறைக்குள் சென்று விட்டேன்.

இந்த கூட்டத்தை நாங்கள் மலேசியாவில் இருந்து கிளம்பும் வரை எல்லா இடத்திலும் பார்த்தோம், இவ்வளவு அர்ப்பணிப்புடன் பறவை பார்ப்பவர்கள் செல்லும் இடத்தை தான் நாங்களும் சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று எங்களை நாங்களே தட்டிக்கொடுத்து கொண்டோம். ஹைட் அறையில் கூட்டம் எல்லாம் நகர்ந்தபின் நாங்கள் மட்டும் தான் இருந்தோம். அங்கே இருந்து பார்த்தபோது ஒரு மரம் மட்டும் தனியே நடுவில் இருந்தது, தூரத்தில் டாலர் பறவைகளின் கூப்பாடு, அருகில் சில வேகமாக பறந்த பட்டாம்பூச்சிகள் என்று பார்த்துவிட்டு கிளம்பினோம். அதன்பிறகு பாதையில் பல இடங்களில் பட்டாம்பூச்சிகளுக்காக , பறவைகளுக்காக , இலை குரங்குகளுக்காக என்று நின்று நின்று சென்றோம்.

ஒரு டென்மார்க் தம்பதியினர் 5 வயது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தனர். அந்த பெண் குழந்தை பாதையில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள். என் குழந்தை இப்பொழுது ஓடினாலும் , செல்ல வேண்டிய திசையில் ஓடுவதில்லை !! சில வருடங்களில் என் குழந்தையும் இப்படி ஒழுங்காக பாதையில் நடந்து செல்ல ஆரம்பித்துவிட்டால் இன்னும் எளிதாக ஹைகிங் செல்லலாம் என்று நான் யோசித்துக்கொண்டே நடந்தேன். சில இடங்களில் பாதை உடைந்திருந்தன, அவற்றில் ரொம்ப கவனமாக நடந்தால் அப்போது தான் அருகிலேயே பறவை கள் வந்து கத்திக்கொண்டிருந்தன. தூரத்தில் முன்னே சென்ற குழந்தையின் அழுகுரல் கேட்டது. நாங்கள் அந்த ட்ரெயிலின் இறுதியில் உள்ள ஆறு இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த போது அந்த குழந்தையின் தாயார் அவளை முதுகில் தூக்கிக்கொண்டு சென்றார்கள். ஆஹா , இன்னும் சில, பல வருடங்களுக்கு இம்மாதிரி தான் காட்டுக்கு வர போகிறோமா என்று எண்ணி கொண்டே அந்த ஆற்றை பார்க்கும் விதமாக வைத்திருந்த ஒரு பென்ச்சில் அமர்ந்துகொண்டேன்.

குழந்தை தூங்கிக்கொண்டிருந்ததால் நான் அந்த ஆற்றையும் அவ்விடத்தில் வரும் பட்டாம்பூச்சிகளையும் பார்த்துக்கொண்டு இருந்தேன். வினோத் ஒவ்வொரு பட்டாம்பூச்சியின் பெயரையும் சொல்லிக்கொண்டு அதன் பின்னால் ஓடி சென்று படம் எடுத்துக்கொண்டிருந்தார். திடீரென ஒரு படகில் வன ஊழியர்கள் வந்து இறங்கினார்கள். எங்களை பார்த்து தலையசைத்துக்கொண்டு பரபரப்பாக காட்டுக்குள் சென்றார்கள். குழந்தை விழித்து அங்கே உள்ள பட்டாம்பூச்சிகளை பார்த்து குஷியுடன் விளையாடும் வரை நாங்கள் அங்கேயே இருந்ததால் , அவ்வளவு நேரம் கழித்து திரும்பி வந்த அந்த வன ஊழியர்களுடன் சில இளம் வயது பெண்களும் திரும்பி வந்தார்கள். பெண்களின் முகங்களில் அப்பாடா தப்பித்தோம் என்ற உணர்ச்சி, ஊழியர்களின் முகங்களில் ஒரு பெருமிதம்.

அந்த ஊழியர்களின் தலைவர், எங்களை பார்த்து எங்கே இருந்து வந்திருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டு விட்டு , “This is how we do rescue in Taman Negara” என்று பெருமையாக சொல்லிக்கொண்டு சென்றார். நாங்கள் அவ்வளவு தூரத்திற்கு பெரிதாக போடப்பட்டிருந்த ட்ரெயிலில் மட்டுமே நடந்து சென்றோம். இதை தாண்டி இன்னும் நிறைய கிலோமீட்டர்களுக்கு ட்ரெக் பாதை உள்ளது, அங்கே எல்லாம் இவ்வளவு தெளிவாக வழி இருக்காதோ என்று எங்களுக்குள் பேசிக்கொண்டே திரும்பி சென்றபோது டைனோசர் போன்று சத்தம் கேட்டது.

வினோத் உடனே ஹார்ன்பில் என்று சொல்லிக்கொண்டே ஓடினார். நாங்களும் கடகடவென்று ஓடி தண்ணீருக்கு அந்த பக்கம் இருந்த ஒரு உயர்ந்த மரத்தில் ஹார்ன்பில் பறவைகள் தெரிந்தன. இரண்டு இருவாச்சி பறவைகள் ஒரு சேர எங்களை தாண்டி பறந்து சென்றபோது தான் எங்களுக்கு அவை ரைனோசெரஸ் ஹார்ன்பில் என்று சரியாக சொல்லமுடிந்தது. காடு முழுவதும் எக்கோ அடித்தது போல அவற்றின் சத்தம், இறக்கை அடிக்கும் சத்தம் எல்லாம் எங்களை ஒரு பிரமிப்பிற்கு கொண்டு சென்றுவிட்டது.
நாங்கள் திரும்பும் வழியில் இன்னும் நிறைய பட்டாம்பூச்சிகளையும் பறவைகளையும் பார்த்துக்கொண்டே சென்றோம்.

அதன் பிறகு நாங்கள் டாமன் நெகராவில் தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் இம்மாதிரி வெவ்வேறு ட்ரெயில் நடந்தோம். ஒரு நாள் இவ்வாறு ட்ரெயில் நடந்துவிட்டு திரும்பி வந்தபோது அங்கே உள்ள தங்கும்விடுதிகள் வழியாக திரும்பி நடந்தோம். அங்கே புல் வெட்டும் சத்தம், மோட்டார் படகுகளின் சத்தம் தான் அதிகமாக கேட்டது. அந்த ரிசார்ட் முழுவதுமே வெள்ளைக்காரர்கள் மட்டுமே இருந்ததால், அவர்கள் ஜாகிங், காலை நடை என்று செய்துகொண்டிருந்ததை பார்க்கும்போது அந்த இடத்தின் பின்னால் அவ்வளவு அடர்ந்த காடு இருக்கிறது என்ற உணர்வே இல்லை.

அங்கே இருந்த பெரிய மரங்கள் முழுவதும் ஆர்கிட் செடிகள் தொங்கிக்கொண்டிருந்தன. எதிலுமே மலரே இல்லையே என்று சொல்லிக்கொண்டே வினோத் ஒரு செடி வித்தியாசமாக இருக்கிறதே என்று படம் பிடித்த பின் தான் எங்களுக்கு தெரிந்தது, அந்த இடம் முழுவதுமே க்ரீம் வண்ணத்தில் மலர்கள் தேவதைகள் போல இருந்தன.

இவற்றை எல்லாம் உற்று பார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இந்த வழியில் வந்ததற்கு ஒரு மலரை பார்க்க முடிந்ததே என்ற சந்தோஷத்தில் நாங்கள் சென்றோம்.
டாமன் நெகரா தேசிய பூங்காவின் முக்கியமான சுற்றுலா ஈர்ப்பு தொங்கும் பாலம். நாங்கள் சென்ற சமயத்தில் பாலம் பழுது பார்த்துக்கொண்டிருந்தால் அந்த இடத்தை மூடி வைத்திருந்தார்கள், இருப்பினும் அந்த பாலம் சென்று சேரும் பாதை நன்றாக இருக்கும் என்பதால் நாங்கள் ஒரு நாள் அங்கு சென்றோம். செல்லும் வழியில் சில இடங்களில் யானை சாணி எல்லாம் கிடந்தது.

எப்படி யானை வரும் பாதையெல்லாம் இவர்கள் தண்டவாளத்தில் உபயோகிக்கும் இரும்பை வைத்து ட்ரெயில் செய்திருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. சில சிலம்பன் வகை பறவைகள் எங்களை கண்டுகொள்ளாமல் பாதையிலேயே குதித்துக்கொண்டிருந்தன. ஒரு இடத்தில் மிகப்பெரிய மரம்,குறைந்தது 500 வருடம் பழமையாக இருந்த அந்த மரத்தை கட்டியணைத்தோம். அதன்பிறகு மிகவும் ஏற்றமாக இருந்தது பாதை.

தொங்கும் பாலம் மூடியிருந்தாலும் எங்களுக்கு அந்த இடத்தை சென்றடைந்து விடவேண்டும் என்று நானும் வினோத்தும் தீவிரமாக எண்ணியிருந்ததால் வியர்த்து விறுவிறுத்து மேலே ஏறி சென்றோம். ஒரு வழியாக நாங்கள் தொங்கு பாலத்தை சென்றடைந்து அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்து கொஞ்சம் உணவை உண்டு கொண்டிருந்தபோது , பாலத்தை பழுது பார்த்து கொண்டிருந்த ஒருவர் எங்களிடம் வந்து அவர் பாஷை +சைகையில் எங்கே இருந்து வருகிறீர்கள், பாலம் அடுத்த வாரம் திறந்து விடுவோம், மறுபடியும் வாருங்கள் என்று கூறினார். நாங்கள் அடுத்த வாரம் இந்தியாவிற்கு திரும்பி விடுவோம் என்று இன்முகத்துடனும், செய்யும் தொழிலில் பெருமிதத்துடனும் இருந்த அவரிடம் விடை பெற்று கிளம்பினோம்.

திரும்பி இறங்கும்போது எளிதாக இருந்ததால் நாங்கள் கடகடவென்று இறங்கி கொண்டிருந்தோம். எதிரே மேலே ஏறுவதற்கு ஒரு பெரிய சுற்றுலா கும்பலே வந்துகொண்டிருந்தது. நல்ல வேளை, யாருமே இல்லாமல் அந்த இடத்தை அமைதியாக பார்த்துவந்து விட்டோம் என்று நினைத்தேன். சுற்றுலா கும்பலில் ஏறத்தாழ எல்லோருமே ஏறுவதற்கு திணறிக் கொண்டிருந்தார்கள்.

இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று எங்களிடம் கேட்டவர்களிடம் , இன்னும் நிறைய நடக்க வேண்டும் என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு சென்றோம். ஒரு இடத்தில் நிறைய சத்தம் கேட்டபோது, பறவைகளா என்று பார்த்தால் அணில்கள் வேறு மாதிரி சத்தம் போட்டுக்கொண்டிருந்தன. கொஞ்ச தூரம் சென்றபின் சத்தமே இல்லாமல் மலாய் க்ரெஸ்டட் ஃபயர்பேக் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. ஏறத்தாழ 15 பேர் இருந்த அந்த கூட்டத்தில் 3 சேவல்கள் , 12 கோழிகள் இருந்திருக்கும் .

அவற்றை அருகில் சென்று படம்பிடிக்க வினோத் சென்றால், அவை நானே உன் அருகில் வருகிறேனே என்கிற மாதிரி வினோத்திற்கு படம் பிடிக்க முடியாத வகையில் மிக அருகில் சென்றுவிட்டன. நம் ஊரில் கோழிகள் எல்லாம் மனிதர்களை கண்டால் எகிறி ஓடும், ஆனால் இவை எங்களை கண்டுகொள்ளவில்லை. ஒரு வேளை உணவு ஏதாவது போட்டு மனிதர்கள் பழக்கிவிட்டார்களோ என்றால் அதுவும் கிடையாது, ஏனென்றால் இவை அடர்ந்த காட்டுக்குள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இங்கே இந்த பறவைகளை மனிதர்கள் வேட்டையாடுவதில்லை, அதனால் அந்த பயமில்லையோ என்று நினைத்தேன்.

நாங்கள் டாமன் நெகராவில் ஒரு நாள் அந்த ஆற்றில் படகு பயணம் செல்லலாம் என்று எண்ணி இருந்தோம். அங்கே உள்ள மிதக்கும் உணவகத்தில் உண்டுவிட்டு கடைக்காரர்களிடம் கேட்டால், அதிகாலையில் படகு பயணம் கிடையாது, 5 மணிநேரத்திற்கு மேலான படகு பயணம் மட்டுமே உண்டு என்று சுற்றுலா மக்களுக்கான கிம்மிக் பண்ணியவுடன் நாங்கள் கடுப்பாகி மறுபடியும் தேசிய பூங்காவிற்கு உள்ளேயே சுற்றலாம் என்று ஒரு ட்ரெயிலில் நடந்தோம்.

அன்று நிறைய பறவைகளையும், பட்டாம்பூச்சிகளையும் பார்த்து மகிழ்ச்சியுடன் அந்த தேசிய பூங்காவிற்கு டாட்டா சொன்னபோது 2 கருஞ்சிவப்பு பிராட்பில் பறவைகள் எங்களுக்கு மிக அருகில் வந்து அமர்ந்தன. எங்களுடைய டாமன் நெகரா பயணம் நாங்கள் நினைத்த மாதிரியே நன்றாக அமைந்ததால் சந்தோஷத்துடன் அடுத்த இடத்திற்கு கிளம்பினோம்.