இந்தியாவில் திருமணம் என்றாலே குறைந்தது 100-10000 மக்களை அழைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருப்பதால் திருமணங்கள் என்றாலே கூட்ட நெரிசலில் சென்று வரும் ஒரு நிகழ்ச்சி ஆகி விட்டது. அவரவர் பண வசதிக்கேற்ப பிரம்மாண்ட முறையில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்ற ஒரு கலாச்சாரம் உருவாகி உள்ளது. இதனால் எனக்கும் வினோத்திற்கும் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமென்றாலே மிக கடினமான காரியமாகும். எங்கள் தோழர்கள் பெரும்பாலும் இயற்கையுடன் இயைந்து வாழ நினைப்பவர்கள் என்பதால் சூழல் உணர்வுடன் நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அவரவர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விருப்பத்திற்காக நிறைய மக்களை அழைக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பார்கள். எனக்கு மற்ற நாடுகளில் நடக்கும் திருமணங்களை பார்க்கும் போது எவ்வளவு அழகான சுற்றுசுழலில் மிகவும் நெருங்கிய உறவுகள் , நண்பர்களை மட்டும் அழைத்து ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியாக நடத்துவது நன்றாக இருக்கிறதே என்று தோன்றும்.

தங்கிய ரிசார்ட்டை சுற்றி உள்ள இடங்கள்

அதனால்தான், எங்கள் தோழர்கள் தணிகைவேல்–ப்ரீத்தி தம்பதியினர், பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணத்தை முடித்த பின், நெருக்கமான சிலரை மட்டுமே அழைத்து, ஒரு தனிப்பட்ட விழாவை நடத்தப்போகிறோம் என்றதைக் கேட்டவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது

அந்த அழகான நிகழ்ச்சி பவுர்ணமி நாளில், ஒரு இயற்கை பண்ணை ரிசார்ட்டில் நடைபெற்றது. மணிமுத்தாறு அருகில் இருந்ததால் வெயிலில் அவதிப்பட வேண்டி இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால், இரு நாட்களும் மழை சாரலும் மென்மையான காற்றும் எங்களை அரவணைத்தன.

இயற்கை ஆர்வலர்கள் அதுவும் இரவாடிகள் ஒன்று கூடியதால் எங்களுடைய நிகழ்ச்சி நிரலில் முக்கியமாக இரவு நடை இருந்தது. வினோத் “இயற்கையுடன் இளைப்பாறுவோம்” என்ற அரசாங்க பள்ளி மாணவர்களுக்கான கேம்ப் நடத்துவதற்காக மணிமுத்தாறு சென்று விட்டு மாலை தான் நிகழ்ச்சிக்கு இணைந்தார். மதிய நேரத்தில் அனைவரும் வேறு இடத்திற்கு உணவு உண்ண சென்றிருந்த வேளையில் நானும் என் குழந்தையும் மட்டும் அந்த புல்வெளியை சுற்றி நடந்து வந்தோம். தங்கியிருந்த டென்ட் அருகிலேயே நோனி செடியில் ஹாக் மாத் புழு பார்த்தோம். பாபுல் ப்ளூ, க்ராஸ் ஜ்வெல் போன்ற சிறிய பட்டாம்பூச்சிகள் நிறைய பறந்துகொண்டிருந்தன. குக்குறுவானின் சத்தத்தை என் குழந்தை மிமிக் செய்து கத்த , அந்த ரிசார்ட் நிறுவனர் எங்களை எந்த இனமடா நீங்கள் என்று பார்த்த பார்வையில் நான் ரிசார்ட் வளாகத்தை விட்டு வெளியே இருந்த புல்வெளிக்கு குழந்தையை கூட்டிக்கொண்டு சென்று விட்டேன். பாதையில் என் மகளை விளையாடவிட்டு விட்டு நான் அங்கே இருந்த மலர்களை பார்க்க ஆரம்பித்தேன்.

மலர்கள், புழு, காளான் என்று நான் நடக்கும்போது என் கண்ணில்பட்டவை

சிறிது நேரத்தில் நண்பர்கள் அனைவரும் திரும்பி வந்து, வினோத்தும் வந்த பின் நிகழ்ச்சி களை கட்ட ஆரம்பித்தது. சிலர் இடத்தை எளிதாக அலங்கரித்தார்கள், சிலர் தர்பூசணியை கேக் மாதிரி வெட்டுவதற்காக உற்சாகத்துடன் கைவினை செய்தார்கள். அன்று பவுர்ணமி என்பதால் வெள்ளை நிற உருண்டை விளக்கை நிகழ்ச்சியின் மையமான தணிகை-ப்ரீத்தி தம்பதியினரின் கையில் குடுத்து நிலாவை கையில் குடுப்பது போல் படம் எடுத்தது மிகவும் அழகாக இருந்தது.

எளிய அலங்காரங்கள், தர்பூசணி கேக்

இரவு நிலா வெளிச்சம் வந்தவுடன் நாங்கள் அனைவரும் இரவில் பார்க்க முடிகின்ற உயிரினங்களை பார்க்க கிளம்பினோம். சிறிது நேரத்திலேயே பச்சை பாம்பு, காட்டு ஓணான் எல்லாம் பார்த்துவிட்டு அணைக்கு சென்றோம். அணையில் உள்ள பாதையில் நிலா வெளிச்சத்தில் நம் மனதிற்கு நெருங்கியவர்களுடன் நடப்பது ஒரு தனி சுகம். புற்றுப்பல்லி (Termite hill gecko) ஒன்றை பார்த்தோம், ஆனால் அது கண்ணிமைக்கும் வேளையில் ஓடி ஒளிந்து கொண்டது. இந்த குழுவில் மிகவும் ஆர்வமுள்ள இரவாடிகள் உள்ளதால் அவர்கள் அணை நீர் அருகே சென்று இரவில் மீன்களை எல்லாம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். நீரின் அருகே வெளிச்சத்தை பார்த்தவுடன் வினோத்திற்கும், ராஹினிக்கும் பொறுக்க இயலாமல் அணைக்கு கீழே இறங்கி மீன் பார்க்க சென்றார்கள். அங்கிருந்து கிளம்ப மனமே இல்லாமல் அனைவரும் உணவு உண்ண வேண்டுமே என்று தங்கும் இடத்திற்கு திரும்பி சென்றோம்.

பண்ணைக்கு திரும்பி வரும்போது அங்கு இருந்த மரத்தொன்றில் உட்கார்ந்திருந்த ஒரு பொரிப்புள்ளி ஆந்தையை (Mottled wood owl) ராஹினி அழகாக கண்டுபிடித்தாள். எனக்கு குழந்தை மடியில் உறங்கிக்கொண்டிருந்ததால் வண்டியிலிருந்து கீழே இறங்கி ஆந்தையை ஒழுங்காக பார்க்க இயலவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் அது பறந்து எனக்கு பளிச்சென்று தெரியும் வகையில் ஒரு கிளையில் சென்று அமர்ந்தது. அந்த நிமிடங்களில் இயற்கையின் அடக்கம், அதன் மென்மை, அதன் அழகு எல்லாம் என்னை பூரணமாக ஆட்கொண்டது.

ஆந்தையை பார்த்தாலே ஒரு தனி சந்தோஷம்.

இரவில் தீ வைத்து சுற்றி அமர்ந்து ஒவ்வொருவரை பற்றியும் கதை பேசி, எப்படி தணிகைவேல் ,பிரீத்திக்கு அறிமுகமானோம் என்று பேசினோம். அந்த பேச்சுகள் மிகவும் நன்றாக இருந்தது. வினோத், ராஹினி இருவரும் மிகவும் ஆர்வமாக அந்து பூச்சிக்கு திரை கட்டினார்கள் , ஆனால் பவுர்ணமி என்பதால் ஒரு பூச்சியும் வந்து துணியில் அமரவில்லை.

இரவு நேர உரையாடல்

மறுநாள் காலை, சூரியனின் முதல் ஒளிக்கதிருடன் நாங்கள் எழுந்து, தாமிரபரணி ஆற்றின் கரையை நோக்கி கிளம்பினோம். எப்பொழுதும் போல கூகுள் மேப்ஸ் எங்களை பைக் செல்லும் பாதைக்கு அனுப்பிவிட்டதால் வினோத் முட்களை எல்லாம் உடைத்துவிட்டு வண்டி ஓட்டினார். கார் வருவதற்கான எளிய பாதை இருக்கின்றது என்று ஆற்றின் மணல்கரைக்கு வந்த பின்தான் தெரிந்தது . ஆற்றில் இறங்கி, சுத்தமான நீரில் நன்கு விளையாடி , முந்தைய நாள் பரோட்டாவை சாப்பிட்டது எல்லோருக்குமே ஒரு மறக்காத அனுபவமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் ஆற்றங்கரையோரத்தில் அமர்ந்து இப்படியெல்லாம் இருக்கலாம் என்ற ஒரு யோசனையே நம் சந்ததியினருக்கு இல்லாதது அளவுக்கு மணல் திருட்டு,குப்பை,சாக்கடை என்றாகிவிட்டது தமிழ்நாட்டில் இருக்கும் ஆறு , குளங்களின் நிலைமை.

அந்த இரண்டு நாட்கள் இயற்கையோடு இருந்த அந்த சந்தோஷம், தோழர்களின் அன்பும், ஒரு வெகு நாளைக்குப் பிறகு நமக்கே உரித்தான ஒரு நிகழ்வாக இருந்த அந்த நிகழ்ச்சியும் எங்களை மனதார மகிழ வைத்தது.