நாங்கள் பலமுறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு சென்றிருந்தாலும் மிகவும் பெரிய இடம் என்பதால் ஒவ்வொரு முறை ஒவ்வொரு சரகத்திற்கு சென்றிருப்போம். அதனால் ஒவ்வொரு பயணத்திலும் புதிய இடங்களை பார்த்த உணர்வோடு தான் வினோத்தும் நானும் திரும்பி வருவோம். என் தாத்தா ஊர் தென்காசி மாவட்டத்தில் இருந்ததால் நான் பலமுறை அங்கே சுற்றியுள்ள மலைகளுக்கும் அருவிகளுக்கும் சென்றிருக்கிறேன். அவை பல்லுயிர் பார்க்க சென்ற பயணங்கள் இல்லை என்பதால் எனக்கு இவ்வளவு முக்கியமான மேற்கு தொடர்ச்சி மலை அருகே தான் நான் சிறுவயதில் விடுமுறை நாட்களை செலவழித்து இருக்கிறேன் என்று எனக்கு அப்பொழுது புரியவில்லை. இப்பொழுதெல்லாம் ஊருக்கு செல்லும்போது கண்டிப்பாக அருகே உள்ள காடுகளுக்கு செல்வது வழக்கமாகி விட்டது.
சமீபத்தில் ஊரில் இருந்தபோது எங்கள் தோழர் தணிகைவேல் அத்திரி கோவிலுக்கு கல்லூரி மாணவர்களை அழைத்து செல்கிறேன், நீங்களும் முடிந்தால் சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் கடையம் ரேஞ்சுக்கு நாங்கள் சென்றதில்லை என்பதாலும் வானிலை மிகவும் நன்றாக இருந்ததாலும் அத்திரி கோவிலுக்கு சென்று தோழருடனும் கொஞ்சம் நேரம் செலவிடலாம் என்று கிளம்பினோம். நாங்கள் ஆழ்வார்குறிச்சி செல்லும்போது, தணிகைவேல் ஒரு பொத்தையில் இருந்த காட்டுப்பூனையை கண்டுபிடித்து படம் எடுத்துக்கொண்டிருந்தார். சிவசைலம் கோவில் அருகில் 300 வருட பழமையான கடம்ப மரத்தை எங்களுக்கு காட்டினார். அதன்பிறகு நாங்கள் நேராக கடனா நதி அணைக்கு சென்றோம். செல்லும் வழியே மிகவும் அழகாக இருந்தது, எங்கள் ஊரில் இருந்து அரைமணி தூரத்தில் இருக்கும் இந்த இடத்திற்கு இவ்வளவு வருடங்களாக வராமல் இருந்திருக்கோமே என்று புலம்பிக்கொண்டே சென்றோம்.
சில நாட்கள் மட்டும் காட்டுக்குள் இருக்கும் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி உள்ளதால் கொஞ்சம் பக்தர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அனுமதி சீட்டு வாங்கி உள்ளே செல்லும்வரை நாங்கள் அணை அருகே சுற்றிக்கொண்டிருந்தோம். ஒரு குரங்கு மிகவும் தைரியமாக வினோத் அருகே வந்து அவர் தோளை தட்டி பார்த்தது. அணையில் முக்குளிப்பான் , புள்ளி மூக்கு வாத்துகள் நீந்திக்கொண்டிருந்தன. கொஞ்ச நேரம் அருகே இருந்த கண்காணிப்பு கோபுரத்தில் அமர்ந்து சுற்றி இருந்த மலை, மரங்களை பூந்துறலுடன் சேர்ந்து அனுபவித்தோம்.
கல்லூரி மாணவர்கள் வந்தபின் அவர்களுடன் வினோத்தும் தணிகைவேலும் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்கள். நான் குழந்தை தூங்கிவிட்டதால் காரில் தனியாக அமர்ந்து அங்கே பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சிகளை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு தையல் சிட்டு மிக அருகே வந்து அமர்ந்து டூவீ , டூவீ என்று சத்தமிட்டது, வீட்டை சுற்றி உன்னை தான் பார்க்கிறேன் , காட்டருகே வேறு ஏதாவது பறவையை அனுப்பு என்று அதனிடம் கூறினேன். கல்லூரி மாணவர்கள் நடக்க ஆரம்பிப்பதற்கு முன் நாங்கள் மாணவர்களுக்கான உணவுகளை எடுத்துக்கொண்டு வண்டியில் உள்ளே செல்ல ஆரம்பித்தோம்.
மிகவும் கரடு முரடான பாதை என்பதால் வினோத் வண்டி ஓட்டுவதில் முழு கவனம் செலுத்தினார். நான் பாதையோரம் இருக்கின்ற செடிகளை பார்த்துக்கொண்டே சென்றேன். அழகான கேப்பர்,கனகாம்பரம் (Capparis diversifolia,Crossandra) செடிகளை வினோத் முண்டந்துறை காடுகளுக்கு தனியாக சென்றபோது பார்த்திருக்கிறார், ஆனால் நான் முதல் தடவையாக இந்த காட்டில் தான் அந்த மலர்களை பார்த்தேன். ஒரு நதியை கடந்து தான் அத்திரி கோவிலுக்கு சென்றடைய முடியும், நாங்கள் எங்கள் 4WD காரில் முதல்முறையாக நதியை கடப்பதால் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. விளம்பரங்களில் இம்மாதிரி வண்டிகள் தண்ணீரில் செல்லும், மலையில் பாய்ந்து ஏறும் என்று காட்டினாலும் வண்டிக்குள் இருந்து ஓட்டும்போது தானே உண்மையான நிலவரம் புரியும்.
அதிலும் இம்மாதிரி காட்டாறுகளில் எங்கே குழி இருக்கிறது, பாறைகள் எவ்வளவு வழுக்கும் என்று தெரியாததால் வினோத் மிகவும் கவனமாக வண்டியை ஓட்டினார்.ஆற்றை கடந்து வண்டியை நிறுத்தியபின் எங்கள் கண்முன் நிறைய பட்டாம்பூச்சிகள் பறந்தாலும் வினோத்திற்கும் எனக்கும் ஆற்றின் தண்ணீர் அளவு ஏறிவிட்டால் திரும்பி எப்படி செல்வது என்று கொஞ்சம் கவலையாக இருந்தது. மலைகளில் மழை பெய்யும்போது காட்டாறுகளில் வேகமாக நீர் அளவு ஏறிவிடும், அதனால் எப்பொழுதுமே காடுகளின் உள்ளே ஓடும் ஆறுகளில் கவனமாக இருக்க வேண்டும். வினோத் தும்பிகள், பட்டாம்பூச்சிகள் தேடிக்கொண்டிருந்தபோது நான் ஆற்றோரமாக ஒரு இடத்தை பிடித்துக்கொண்டு குழந்தையுடன் கற்களை பொறுக்கி விளையாட ஆரம்பித்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு நாங்கள் வண்டியில் அத்திரி கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தோம். வழி நெடுக கனகாம்பரம், ட்ராவங்கூர் கேப்பர் மலர்கள் மலர்ந்து கிடந்தன. புள்ளி கத்திவாலன், தமிழ் மறவன்,கருநீல வண்ணன் போன்ற பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. பாதையில் ஒரு மரம் முறிந்து கிடந்ததால் வண்டியை அங்கே நிறுத்திவிட்டு கோவிலுக்கு நடந்து சென்றோம். கல்லூரி மாணவர்களுடன் கோவில் முன்னால் வட்டமாக அமர்ந்து உணவு உண்டோம். கோவிலை சுற்றி மிக உயர்ந்த வயதான மரங்களை பார்த்தோம்.
தோகை விரித்தாடிய மயிலையும், மரங்களில் ஓடிக்கொண்டிருந்த அழகு (Cnemaspis azhagu) பல்லியையும், சில பூச்சிகளையும் பார்த்துக்கொண்டு அந்த அழகான இடத்தில் கொஞ்சம் நேரத்தை செலவழித்தோம். கல்லூரி மாணவர்கள் அனைவரும் திரும்பி நடக்க ஆரம்பித்தபோது நாங்கள் வேகமாக கரடி குகைக்கு சென்று வந்தோம். இதுவரை கரடி உபயோகித்து வருகின்ற குகையை நேராக பார்த்ததில்லை, உள்ளே சென்று பார்க்க ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் கையில் குழந்தையுடன் குகை முன் சென்றதே கொஞ்சம் துணிச்சலான செயல், இதில் குகைக்குள் சென்றால் அது முட்டாள்தனமான செயலாக போய்விடப்போகிறது என்று திரும்பி நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் வண்டி நிறுத்தி வைத்த இடம் வரை நடந்து சென்ற பின்பு வினோத் அந்த சிறிய பாதையில் வண்டியை திருப்ப ஆரம்பித்தார். அந்த நேரத்திற்குள் நான் முன்னே நடக்கிறேன் என்று நடக்க ஆரம்பித்தேன். சில நிமிடங்களே தனியாக நடந்திருப்பேன், ஆனால் அதற்குள் சிவந்த கீரி ஒன்று கொஞ்சம் தூரத்தில் பாதையை கடந்து சென்றதை பார்த்தேன். அதுவும் என்னை கவனித்து இரண்டு காலை வைத்து எழும்பி நின்று எட்டி பார்த்தது. சில வினாடிகள் என்னை உற்று நோக்கி விட்டு காட்டுக்குள் சென்றுவிட்டது. மலை மைனா, மரம்கொத்தியின் உரக்க கத்தி கொண்டிருந்தன, வினோத் அதற்குள் வந்துவிட்டார். எனக்கு தொடர்ந்து நடக்க ஆசையாக இருந்தது, ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டது, வனவிலங்குகள் நடமாட ஆரம்பித்துவிடுமென்பதால் நான் குழந்தையுடன் வண்டியில் ஏறிவிட்டேன் .
மறுபடியும் ஆற்றை கடக்கும் ஒரு சிரமமான காரியம் வேறு இருந்தது. பாறைகள், குழிகள் எல்லாம் தண்ணீரில் தெளிவாக தெரியாததால் வண்டி ஓட்டுவது மிகவும் கடினமாக இருந்தது. ஒருவழியாக ஆற்றை கடந்தபின் தான் மன அமைதியுடன் மறுபடியும் செடிகள், பூச்சிகள் தேட ஆரம்பித்தோம். கல்லூரி மாணவர்கள் எல்லாம் வந்து சேர்ந்தபின் நாங்கள் தணிகையுடன் கிளம்பிவிட்டோம். அதன்பிறகு நாங்கள் கொண்டுவந்த இளநீரை குடித்து இளைப்பாறிவிட்டு அந்த அழகான காட்டிலிருந்து விடைபெற்றோம்.