ஊட்டியில் மனிதர்கள் நடத்தும் மலர் கண்காட்சியையும் இயற்கை தானாகவே நடத்தும் கண்காட்சியையும் ஒப்பிட கூட முடியாது.

நானும் வினோத்தும் காட்டு மலர்களை பார்ப்பதற்காக பல காடுகள் சென்றுள்ளோம். மற்ற நாடுகளில் செல்லும் வழியெல்லாம் காட்டு மலர்களை காணமுடியும் போது நம் நாட்டில் பொதுவாக  சரணாலயங்களில் மட்டுமே காட்டு மலர்களை பார்க்க முடியும். இதற்கு முக்கிய காரணம் நாம் பெரும்பாலான இடங்களை மனிதர்களின் உபயோகத்திற்காக மட்டுமே மாற்றிக்கொண்டோம். அதனால் அவ்விடங்களில் செடிகள் வளர்ந்தாலும் அவை களை , வேற்று நாட்டு செடிகள் மட்டுமே. நம் நாட்டில் உள்ள காட்டு மலர்களை  இமாலய தொடர்ச்சி மலைகளில் உள்ள புல்வெளிகளில்  நன்றாக பார்க்க முடியும். ஆனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் நிற்கும் தமிழ்நாடு மலர்களின் வளத்தில் பின்னணியில் தான் இருக்கின்றது.

Solanum pubescens செடிகளில் இந்த அந்துப்பூச்சி புழுக்கள் இலைகளை நன்றாக சாப்பிட்டுக்கொண்டிருந்தன.

ஒவ்வொரு சென்டும் ப்ளாட்டாக கருதப்படுவதால் அவ்விடங்களில் ஒரு புல் கூட வளராத மாதிரி மாற்றிவிடுகிறார்கள். இக்காரணங்களினால் எனக்கும் வினோத்திற்கும் தமிழ்நாட்டில் மலைகள் இல்லாமல் தரை நிலங்களில் எங்காவது மலர்களை காண்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் அதை தப்ப விடுவதே இல்லை. ஒரு வாரம் முன்பு அதே இடத்திற்கு நாங்கள் சென்றிருந்தோம். அப்பொழுது அங்கிருந்த செடிகளில் எல்லாம் ஏதாவது ஒரு புழு இருந்து இலைகளை கடித்துக் கொண்டிருந்தது. Hawkmoth புழுக்கள் கொழு கொழு வென்று இருந்தன. நான் நெடுநாள் கழித்து அவ்விடத்திற்கு குழந்தையுடன் சென்றதால் எல்லாவற்றையும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன். நான் புதிதாக Polygala javana செடி ஒன்றை கண்டேன்.

பிங்க் நிறத்தில் மிக சிறிய அழகான மலர் எளிதில் கண்ணில்படாது. இம்மாதிரி சிறு செடிகளை தான் நாம் மேய்ச்சல், வேற்று நாட்டு செடிகள் காரணமாக வேகமாக இழந்து வருகின்றோம்.

அதே இடத்திற்கு எங்கள் NGO KNF ஆர்வலர்களுடன் வினோத் மறுபடியும் சென்றபோது வேறு நிறைய பட்டாம்பூச்சிகள் பார்ப்போம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள். ஆனால் தரை முழுவதும் வெள்ளை மலர்களை எதிர்பார்க்கவில்லை.

மலர்கள் இல்லாதபோது இவை எல்லாம் வெறும் முள்செடிகள், வெறும் முள்புதர்கள் என்று கூறும்போது இம்மாதிரி செடிகளை தான் நாம் கூறுகிறோம்.

Barleria cuspidata

இந்த குழுவில் வினோத்தை தவிர வேறு எவருமே மலர்களை உற்று நோக்குபவர்கள் இல்லை. ஆனால் இவ்வளவு பூக்களை கண்டவுடன் அனைவரின் ஆர்வத்தையும் அந்த மலர்கள் இழுத்துக் கொண்டன. மழை மேகம், மெல்லிய காற்றில் இந்த வெள்ளை Barleria cuspidata மலர்கள் மிகவும் அழகாக காட்சி அளித்திருக்கின்றன.

புழுக்களுக்கு இலைகள் மட்டுமல்லாமல் மலர்களும் தான் உணவு.

இம்மாதிரி மலர்கள் வெகு சில நாட்களே மலர்ந்திருக்கும் என்பதால் மறுநாளே வினோத் என்னை அங்கு அழைத்து சென்றார். நாங்கள் குழந்தையை எடுத்து சென்றதால் வெயிலுக்கு முன்பே சென்று விடலாம் என்று அதிகாலையில் சென்று விட்டோம். ஆனால் சூரிய வெளிச்சம் இல்லாததால் மலர்கள் எதுவும் மலரவில்லை. எல்லாம் மொட்டாக தான் இருந்தன. எங்களுடன் பிரசாந்த் என்று சுற்றுச்சூழலில் எங்களை மாதிரியே ஆர்வம் கொண்டிருப்பவர் வந்திருந்தார். அவரிடம் நாங்கள் அவ்விடங்களில் உள்ள காற்றாலைகள் பற்றி புலம்பிகொண்டிருந்தோம். பச்சை பூசதலில் இந்த காற்றாலைகள் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றன.

காற்றாலைகள் செய்வதற்கு தேவைப்படும் ஆற்றல் , அவற்றை நிறுவுவதற்காக அழிக்கப்படும் காடுகள் பற்றியோ யாரும் பேசுவதில்லை.அதுவும் குற்று செடிகள் இருக்கும் காடுகள், புல்வெளிகள் மக்கள் கண்ணில் வெற்றிடங்களாகவே தெரிவதால் அவற்றை அழிப்பதை யாரும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இதை பற்றியெல்லாம் புலம்பிக்கொண்டே அங்கே இருந்த ஆற்றின் அருகில் சென்றுவிட்டோம். அங்கே உள்ள ஆலமரத்தில் ஒரு நீலகிரி லங்கூர் எப்பொழுதும் அமர்ந்திருக்கும். அது மனிதர்களிடம் நன்றாக பழகிவிட்டதால் அவர்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டுகொண்டு அதன் நீண்ட வாலை ஆட்டிக் கொண்டு அங்கேயே சுற்றிகொண்டிருக்கும். ஊர் மக்கள் அந்த ஆற்றில் துணி துவைத்துக் கொண்டும் குளித்துக் கொண்டும் இருந்தார்கள். நாங்கள் மட்டும் கேமரா , பைனாகுலர் வைத்து சுற்றி கொண்டிருந்ததால் எங்களை அவர்கள் கேள்விக்குறியுடன் பார்த்து கொண்டே சென்றார்கள்.

நாங்கள் கொஞ்ச நேரம் அங்கே செலவிட்டுவிட்டு மலர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லலாம் என்று சுற்றிக் கொண்டிருந்தோம். அங்கே இருந்த ஒரே ஒரு Vachellia tortilis செடி நன்றாக மலர்ந்திருந்தது. தூர இருந்து பார்த்தபொழுது சில பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தது தெரிந்தது. அருகில் சென்று பார்த்தால் மரம் முழுவதும் கசகசவென்று விதவிதமான தேனீக்கள் , பூச்சிகள், பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று ஒன்றாக என்னவென்று கவனித்து படம்பிடிப்பதற்குள் நேரம் சென்றுவிட்டது.

மலர்கள் கண்டிப்பாக இந்நேரம் மலர்ந்திருக்கும் என்று மலர்கள் இருந்த இடத்திற்கு சென்று விட்டோம். முற்கள் நிறைந்த செடிகளில் வெள்ளை மலர்கள் மிகவும் அழகாக மலர்ந்திருந்தன. தரை முழுவதும் வெள்ளை பந்துகள், பின்னாடி உயர்ந்த மலை தொடர்ச்சி என்று என் முன் இருந்த காட்சியை நான் சில நிமிடங்கள் அப்படியே நின்று ரசித்தேன். ஆனால் வெயில் அதற்குள் நன்றாக ஏறிவிட்டது.

இந்த புதர்காடுகள் நம் ஊரின் சிறப்பு அம்சம், ஆனால் நமக்கு இவற்றை காடுகள் என்று ஏற்று கொள்ள முடியாமல் வெற்றிடங்கள் என்று கருதுகிறோம்.

முந்தைய நாள் மேகமூட்டமாக இருந்ததால் வெள்ளை நிற மலர்கள் இன்னும் பளிச்சென்று இருந்தது என்று வினோத் கூறினார். இதெல்லாம் தான் இயற்கை பார்வையில் எப்பொழுதுமே மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் , ஒரே வனப்பகுதிக்கு தொடர்ந்து சென்றாலும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு  அனுபவங்கள் கிடைக்கும். வினோத்திற்கு அடுத்தடுத்த நாள் அந்த மலர்களை பார்த்தாலும் வித்தியாசமான அனுபவம், நாங்கள் இருவரும் ஒரே இடத்திற்கு சென்றாலும் எங்கள் இருவருக்கும் கிடைக்கும் அனுபவம் வேறு. ஆனால் வட அமெரிக்காவில் சில இடங்களில் நாங்கள் மலர்கள் பார்த்த மாதிரியே நம் ஊரிலும் பார்த்துவிட்டோம் என்று எங்கள் இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சி. அதே நேரம் இந்த மாதிரி தான் ஒரு காலத்தில் நம் ஊர் முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும் என்று எண்ணும்போது கோபமும் , வருத்தமுமாக இருந்தது. நான் என் அம்மாவிடம் இந்த மலர்களை பற்றி கூறியவுடனே நாசரேத் பகுதியில் அவர்கள் பள்ளி சென்ற நாட்களில் அங்கிருந்த குளங்களை சுற்றி உள்ள இடங்களில் மலர்ந்து பார்த்திருக்கிறேன் என்று கூறினார்கள். இப்பொழுது அங்கே எல்லாம் வீடுகளும் கடைகளும் தான் இருக்கின்றன. இப்பொழுது நாங்கள் நிற்கின்ற இடம் 20 வருடங்கள் கழித்து எப்படி இருக்குமோ என்று நினைத்தேன்.

இவ்வளவு மலர்களை வெகுநாட்கள் கழித்து கண்ட மகிழ்ச்சியில் நான் !

கிடைக்கின்ற சில தருணங்களை நிறைய யோசித்து வீணாக்கிவிட வேண்டாம் என்று நான் நடக்க ஆரம்பித்தேன். வெயில் கொஞ்சம் அதிகமாகிவிட்டதால் குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. வினோத் குழந்தையை எடுத்துக்கொண்டு நிழலுக்கு சென்றுவிட்டார். நான் கொஞ்ச நேரம் தனியே நடந்து எங்கு திரும்பினாலும் கொத்து கொத்தாக மலர்ந்திருக்கும் மலர்களை கண்குளிர பார்த்தேன். பட்டாம்பூச்சிகளும் அதிகமாக கண்ணில்பட்டன. வேறு சில செடி வகைகளும் மலர்ந்திருந்தன, ஆனால் இந்த Barleria cuspidata மலர்கள் மலர்ந்திருந்த விதத்தை உற்று நோக்கி கொண்டு சென்றதில் வேறு எதையுமே உற்று நோக்க மனம் செல்லவில்லை. ஒரு பிப்பிட் புதர்களில் இருந்து குதித்து என்னை பார்த்ததும் தத்திதத்தி தள்ளி சென்றது. வசீகரன் பட்டாம்பூச்சிகள் தரையில் ஆங்காங்கே இறக்கையை விரித்து அமர்ந்து கொண்டிருந்தன.இந்த காட்சிகளை எல்லாம் பார்த்துக்கொண்டு பின்னாடி தெரிகின்ற மலைத்தொடர்ச்சியையும், மேலே பறந்து கொண்டிருந்த Common buzzard பறவையையும் பார்த்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து நான் கிளம்பினேன்.

அந்த சாலையில் எங்களை கடந்து பலர் சென்று கொண்டிருந்தனர் , ஆனால் அவர்களுக்கு எல்லாம் இந்த காட்சி பெரிதாக தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு இது ஒரு அழகான அனுபவம்.