காட்டில் முகாமிடுதல் ஒரு தனி அனுபவம். இரவு நேரம் காட்டை காட்டினுள் இருந்து பார்ப்பது சிலிர்ப்பூட்டுவதாக இருக்கும். நானும் வினோத்தும் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள காடுகளில் பல நாட்கள் முகாமிட்டிருக்கிறோம். ஆனால் தென்னிந்தியாவில் அந்த அனுபவம் எங்களுக்கு கிடைக்கவே இல்லை. யானை, புலி, சிறுத்தை இருக்கும் காடுகளில் முகாமிடுதல் எளிதான செயல் அல்ல. மற்ற நாடுகளில் நாங்கள் இரண்டு பேர் மட்டும் முகாமிடவதற்கு தேவையான கருவிகளை வைத்துக்கொண்டு வெளியிலேயே சமைத்து பல நாட்கள் இருந்திருக்கிறோம். தமிழகத்தில் அம்மாதிரி வாய்ப்பு எங்காவது கிடைக்காதா என்று தேடிக்கொண்டிருந்தோம். அந்த வாய்ப்பு எங்கள் சொந்த ஊரான கன்னியகுமாரியிலேயே கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
பல்லுயிர் கணக்கிடுதலுக்காக கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தில் பல இடங்களுக்கு சென்றோம். அதில் ஒரு இடம் தான் களியல். முத்துக்குளி வயல் போல இவ்விடத்திலும் ஒரு புல்வெளி பகுதி இருக்கிறது, ஆனால் கடினமான மலையேற்றத்திற்கு பிறகு தான் அவ்விடத்தை அடைய முடியும் என்று வன அதிகாரிகள் கூறியவுடன் வினோத்தும் நானும் அந்த புல்வெளிக்கு கண்டிப்பாக செல்லவேண்டும் என்று முடிவு செய்தோம்.
வன அதிகாரிகளுடன் அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டு ஒரு நாள் காலை களியல் வன அலுவலகம் சென்றோம். அங்கிருந்து உணவு பொருட்களை எல்லாம் சேகரித்துவிட்டு ஒரு ஜீப்பில் அருகாமையில் உள்ள வன இருப்பிடத்தில் இரவு தங்கினோம். மறுநாள் அதிகாலை அங்கிருந்து சில வன அதிகாரிகள் மற்றும் வேட்டை காப்பாளரான பரப்பன் என்றவருடன் நாங்கள் அகஸ்தியமலைக்கு ஜீப்பில் சென்றடைந்தோம். இவ்விடத்திற்கு நாங்கள் ஏற்கனவே கேரளா வழியாக பட்டாம்பூச்சி கணக்கெடுப்பிற்கு வந்திருக்கிறோம்.
இம்முறை தமிழ்நாடு வழியாக உள்ளே சென்று மலை உச்சியில் உள்ள புல்வெளிக்கு செல்ல போகிறோம். நடக்க ஆரம்பித்த இடத்தில் முழுவதும் முக்குனா (Mucuna bracteata) தரை முழுவதும் படர்ந்து பச்சை கம்பளம் விரித்து கிடந்தது. அவ்விடத்தில் வேறு எந்த உயிரினங்களையும் பார்க்க முடியவில்லை.
கொஞ்சம் தாண்டி சென்ற பிறகு, உயரமான காட்டு மரங்களுடன் அடர்ந்த காட்டு பகுதி வந்த பிறகு தான் பறவைகளின் ஒலி கேட்க ஆரம்பித்தது.
நாங்கள் நிறைய தூரம் நடக்கவேண்டும் என்பதால் எங்கேயும் நிற்காமல் வேக வேகமாக மலையேற ஆரம்பித்தோம். இம்மாதிரி மலைகளில் செடிகளை கவனிக்க ஆரம்பித்தால் , ஒவ்வொரு உயரத்திற்கும் செடிகள் மாறிக்கொண்டே இருக்கும். முதலில் உயரமான, வயதான காட்டு மரங்கள் , அதன் பிறகு காட்டோடைகள் இடையே சில செடிகள், அதன் பிறகு நாய் தேக்கு , சைக்காட், பனை வகை செடிகள், அதன் பிறகு புற்கள் ஆங்காங்கே மரங்கள், உச்சி அடைந்த பின்பு புற்கள், நடுநடுவே வேறு தாவரங்கள் என்று மாற்றங்களை பார்த்துக்கொண்டே மலையேற்றத்தை செய்ததால் களைப்பாக இருந்தாலும் உற்சாகத்துடனேயே மலை ஏறினோம்.
மூட்டு பழம் (Baccaurea courtallensis/ Mootapalam) என்ற மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் ஒரு மரத்தை பரப்பன் எங்களுக்கு காட்டினார். அந்த மரத்தின் காய், மலர் ஒரு தனித்துவமாக இருக்கும் , ஆனால் அதற்கான பருவம் நாங்கள் சென்ற மாதம் கிடையாது என்பதால் அவர் காட்டிய மரத்தில் காய், மலர் எதுவுமே இல்லை. கரடிகளுக்கு அம்மரத்தின் காய்கள் மிகவும் இஷ்டமாம். எனக்கு என்றாவது அம்மரத்தின் கனிகளை கரடி சாப்பிடும் காட்சியை காண கிடைத்தால் எவ்வாறு நன்றாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே நடந்தேன்.
ஒரு இடத்தில் குகை ஒன்று இருந்தது , அவ்விடத்தில் ஏதாவது வௌவால் இருக்கிறதா என்று பார்க்க சென்றோம். அந்த இடத்திலிருந்து சுற்றுவட்டாரங்கள் மிக அழகாக தெரிந்தது. அதனால் அங்கே இளைப்பாற சிறிது நேரம் அமர்ந்து சுற்றுப்புறத்தையும் ரசித்தோம். வினோத் அருகே இருந்த பாறைகள் மேல் ஏறி சென்று செடிகளை தேட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் ஒரு முர்தானிய (Murdannia gigantea) செடியை கண்டுபிடித்து என்னை அழைத்தார். இந்த செடியை நாங்கள் பார்ப்பது இதுவே முதன்முறை என்பதால், அந்த மலரை நன்றாக அருகில் பார்த்து ரசித்துவிட்டு அங்கே இருந்து கிளம்பினோம்.
தொடர்ந்து நடந்த பின்பு கண்ணுக்கு தெரிகிற வரையில் புல்வெளி மட்டுமே இருக்கிற இடம் வந்து சேர்ந்தோம். இம்மாதிரி இடங்களை பார்க்கும்போதெல்லாம் தான் தோணும் , எவ்வளவு அழகான உலகத்தை என்ன செய்து வைத்திருக்கிறார்கள் மனிதர்கள் !! பச்சை பசேலென்ற புற்கள், மெல்லிய காற்று, அதில் அந்த புற்கள் அசைந்தாடும் அழகு, வேறு எந்த சத்தமும் இல்லாமல் சுற்றி இயற்கை மட்டுமே சூழ்ந்துள்ள அவ்வளவு ரம்மியமான இடத்தில் நாங்கள் மெய்மறந்து நின்றோம். அந்த அழகான சுற்றுசூழலை சிறிது நேரம் அமைதியாக ரசித்தபின் நான் பைனாகுலரில் ஏதாவது தூரமாக தெரிகிறதா என்று பார்த்தேன்.
பச்சை புற்கள் இடையே ஒரு இடத்தில் வெள்ளை நிறத்தில் பெரிதாக ஏதோ தெரிந்தது, ஏதாவது லில்லி மலராக இருக்குமோ என்று நினைத்தேன். பல தருணங்களில் இந்த மாதிரி தெரிவது மலராகவே இருக்காது, இருந்தாலும் தனித்துவமான மலை பகுதியில் இருப்பதால் வினோத்தும் நானும் அவ்விடத்திற்கு சென்றோம். இந்த முறை ஏமாற்றம் இல்லாமல் பெருமகிழ்ச்சி கிடைத்தது, ஏனென்றால் நான் பார்த்த வெள்ளை மலர் ஒரு ஆர்க்கிட். ஈக்ரட் ஆர்க்கிட் என்ற அழகான பெரிய ஆர்க்கிட் உயரமாக வளர்ந்து பூத்திருந்தது மிகவும் கவர்ச்சியாக இருந்தது. கண்ணை கவர்ந்திழுக்கும் அந்த மலரை ஒரு இடத்தில் கண்டுபிடித்தபின் எங்களுக்கு ஆங்காங்கே கண்ணில் தட்டுப்பட ஆரம்பித்தது. வினோத் அம்மலரை எல்லா திசை, கோணத்திலிருந்தும் படம் பிடித்தார்.
எங்களுடன் வந்த பரப்பன் என்பவருக்கு தான் அந்த இடம் அத்துப்பிடி என்பதால் அவர் முன்னே சென்று இரவு இளைப்பாற வேண்டிய இடத்தை கண்டுபிடிக்க சென்றார். புல்வெளி வழியாக கொஞ்சம் இறக்கத்தில் நடந்தபின் ஒரு பெரிய பாறையும் அதனருகே சிறிய நீரோடையும் இருப்பதால் அங்கே முகாம் இடலாம் என்று அவர் கூறினார். புற்களின் நடுவே பாதையை பிடித்து சறுக்கி விழாமல் பார்த்து பொறுமையாக நான் கால்வைத்து நடந்தபோது மற்ற அனைவரும் வேகமாக ஓடி கீழே சென்றடைந்து விட்டார்கள்.
நாங்கள் முகாமிட்ட பாறையிலிருந்து சுற்றி உள்ள இடம் மிகவும் அழகாக இருந்தது. அருகே ஓடிய சிறிய ஓடையில் தவளைகள், புட்டான் என்று எங்களுக்கு பார்த்து ரசிப்பதற்கு நிறைய உயிரினங்கள் இருந்தன. மனிதர்களால் தொடர்ந்து உபயோகிக்காத நீரோடை என்பதால் மிகவும் சுத்தமாகவும் , சுற்றி உள்ள காட்டு செடிகளோடும் இருந்த அந்த ஓடையின் ஓரத்தில் இருந்த பாறையில் ஒரு பிங்க்,வெள்ளை நிற ஆர்க்கிட் (Dendrobium wightii / Wight’s Dendrobium)மிக அழகாக கொத்தாக மலர்ந்திருந்தது.
முகாம் அருகில் இவ்வளவு அழகான அரிய வகை ஆர்க்கிட் பார்த்த சந்தோஷத்துடன் நாங்கள் அனைவரும் சமையல் வேலை செய்ய ஆயத்தமானோம். இரவு படர்வதற்கு முன் சமையல் செய்து முடித்தோம். வட்டக்கண்ணி என்று அழைக்கப்படும் ஒரு மரத்திலுள்ள இலைகளை பறித்து தட்டாக உபயோகித்தோம். இம்மாதிரி சிறிய விஷயங்கள் காட்டில் இருக்கும்போது வேறு மாதிரி செய்வது தான் ஞாபகார்த்தமாக இருக்கும்.
நம் ஊர் காட்டில் இவ்வாறு தங்குவது இதுவே முதல் முறை என்பதால் எனக்கு காட்டில் இருள் படர்ந்தவுடன் வந்த மயான அமைதி , மனதிற்கு இதமாகவும் இருந்தது அதே சமயம் சிறுத்தை , கரடி , யானை நடமாடும் இடம் என்பதால் எச்சரிக்கையோடும் இருந்தேன். காலையில் காட்டினுள் விழிப்பது ஒரு தனி அனுபவம். வானம் நிறம் மாறும்பொழுது , பறவைகள் சத்தம் மெதுவாக கேட்க ஆரம்பித்தது. தூரத்தில் கருமந்தியின் குரல் கேட்டது. இன்னும் கொஞ்சம் விடிந்தபின் நாங்கள் அருகே இருந்த இன்னொரு இடத்திற்கு சென்றோம். அங்கிருந்து மலையின் கீழ்பகுதியில் காட்டு மாடுகள் மேய்வது நன்றாக தெரிந்தது.
புற்கள் வளர்ந்திருந்த பாறையில் சிறிய மலர்கள் ஆங்காங்கே மலர்ந்திருந்தன. அதை உற்று நோக்கிக் கொண்டிருந்த போது ஒரு செரோப்பீஜியா மலர் கண்ணில் பட்டது. விசித்திரமான மலர் வடிவம் கொண்ட இந்த மலர், பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருக்குமென்பதால், கண்ணில் தட்டுப்படுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனால் அன்று நான் இரண்டு வகையான செரோபீஜியா மலர்களை ஒரே இடத்தில் கண்ணில்பட்டதும் எனக்கும் வினோத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
அதில் Ceropegia ravikumariana 2022-ல் தான் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட செடி என்று நான் பின்னர் அறிந்தவுடன் அந்த செடியின் முக்கியத்துவம் இன்னமும் அதிகமாகி விட்டது.
நாங்கள் காலை உணவை முகாமில் சமைத்து சாப்பிட்டோம். பின்னர் புல்வெளியில் கொஞ்ச நேரம் உலாவி பறவைகள் , செடிகளை பார்த்தபின் அங்கிருந்து கிளம்புவதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தோம்.
உணவு பொருட்கள் ஓரளவு தீர்ந்ததால் , பைகளின் கணம் கொஞ்சம் குறைந்திருந்தது. பரப்பன் செல்லும் வழியில் எங்களுக்கு சாம்பிராணி மரத்தை காட்டினார், அந்த மரத்தின் பட்டை மனிதர்களால் பல தடவை சுரண்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு இயற்கையான முறையில் கிடைக்கும் சாம்பிராணியை நாம் தேவைக்கு அதிகமாக எடுத்து காட்டில் உள்ள மரங்களை அழித்து அப்புறம் எலக்ட்ரிக் சாம்பிராணி உபயோகிக்கிறோம்.பரப்பன் திரும்பி செல்வதற்கு ஒரு எளிய வழி உள்ளது என்று எங்களை அழைத்து சென்றார். அது அவருக்கு மட்டுமே எளிய வழியாக தோன்றியது போலும் ,
நாங்கள் அனைவரும் அவ்வளவு பெரிய இறக்கத்தில் சறுக்கி விழுந்து எழும்பி , முட்செடிகளில் கீறல் வாங்கி, பரப்பன் பின்னே ஓடோடி கீழே வந்து சேர்வதற்குள் அனைவரும் மிகவும் களைப்படைந்து விட்டோம். கீழே வந்த பின்பு ஒரு மணி நேரம் வினோத் கார் ஓட்டி வந்தால் தான் வீடு வந்து சேர முடியும். ஆனால் முதல் முறையாக எங்கள் மாவட்டத்தில் காட்டில் முகாமிட்டு , மிக அழகான மலர்கள் மற்றும் காட்டில் இரவு தங்கியது போன்ற அனுபவங்களை உற்சாகமாக பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தபோது எங்கள் களைப்பெல்லாம் காணாமல் போய்விட்டது. இதுபோன்று காட்டில் முகாமிடுவதற்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.