வினோத்தும் நானும் கன்னியாகுமரி நேச்சர் பௌன்டேஷன் ஆரம்பித்ததிலிருந்து பெரிதாக வெளியூர் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் அதை பற்றி கவலைபடாத அளவுக்கு
எங்களுக்கு கன்னியாகுமரியில் உள்ள காடுகளை சுற்ற வாய்ப்பு கிடைத்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்படி ஒரு அழகான மலை பகுதி உள்ளது என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. நான் பிறந்து , வளர்ந்த மாவட்டத்தில் இவ்வளவு வருடம் கழித்து இந்த மலைப்பகுதிக்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.


கன்னியாகுமரியில் உள்ள அனைத்து வனசரகத்தில் உள்ள பூக்கள் ,பட்டாம்பூச்சிகள். பறவைகள், அந்துப்பூச்சிகள் என்று எல்லாவற்றையும் கண்டு களித்தோம். இவற்றில் எனக்கும் வினோத்துக்கும் மிகவும் பிடித்த இடங்கள் என்னவென்றால் முத்துக்குளி வயல் , களியல் புல்வெளி , அசம்பு மலை. களியல் புல்வெளிக்கு மலையேற்றம் செய்தோம், அந்த அனுபவத்தை பற்றி தனியாக சொல்கிறேன். அசம்பு மலையில் உள்ள காட்டுக்கு செல்வதற்கு வன அலுவலர்களின் அனுமதி வேண்டும். அந்த மலை உச்சி வரை செல்லும் வழியெல்லாம் நிறைய எஸ்டேட்கள் உள்ளன. அந்த எஸ்டேட்களுக்கு தொடர்ந்து செல்லும் ஜீப்புகளால் மட்டுமே அந்த ஏற்றங்களிலும் , மண் சாலைகளிலும் ஓட்ட இயலும்.

நாங்கள் வன அதிகாரிகளுடன் , அசம்பு மலையில் உள்ள விக்டோரியா எஸ்டேட்டில் தங்கி வேலை செய்பவர்களுடனும் சேர்ந்து ஜீப்பில் அசம்பு மலைக்கு பயணம் செய்தோம். எங்களுடன் வந்தவர்கள் அனைவரும் பலமுறை அசம்பு மலைக்கு பயணம் செய்ததால் , இந்த மெதுவான ஜீப் பயணத்தை சலிப்புடன் ஆரம்பித்தார்கள் . நானும் வினோத்துமோ மேலே சென்று சேரும் வரை அடர்ந்த காடுகளையும் , சிறிய நீரோட்டங்களையும் , புல்வெளிகளையும் அவ்வளவு ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டே சென்றோம். எங்கள் ஆர்வத்தை பார்த்து ஒரு வன அலுவலர் , நாம் தங்கும் இடம் அருகில் வந்துவிட்டோம் ,இங்கிருந்து நடந்து செல்ல விருப்பமா என்று கேட்டார். நாங்கள் அந்த வாய்ப்புக்காகத்தானே காத்துக்கொண்டிருந்தோம். உடனே கேமரா பையை மட்டும் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.

Asambhu grassland trail
இது தான் ஜீப் செல்லும் பாதை. இந்த பாதையில் ஜீப்பில் செல்வதை விட நடந்து செல்வது தான் மிகவும் நன்றாக இருந்தது.

நாங்கள் தமிழ்நாட்டில் இதுவரை பார்த்த புல்வெளிகளிலேயே மிகவும் அழகானது இந்த அசம்பு புல்வெளி தான். எனக்கும் வினோத்திற்கும் ஒரு தனி உலகத்திற்கு வந்துவிட்ட மாதிரியான உணர்வு தான். நாங்கள் நிதானமாக அங்கே இருந்த செடிகளையும் பட்டாம்பூச்சிகளையும் பார்த்துக்கொண்டே நடந்தோம். நாங்கள் தங்கும் இடம் சென்றடைந்தபோது , அங்கே எங்களுக்கு எலுமிச்சை தேநீர் காத்திருந்தது. அதை அருந்திவிட்டு அங்கிருந்தவர்கள் வளர்க்கும் பூனைகளையும் , கோழிகளையும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் சமைக்க கொண்டு வந்திருந்த பொருட்களை அங்கிருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு, சிறிது நேரம் எஸ்டேட்டுக்குள் உலாவிவிட்டு வந்தோம். அவ்விடத்தில் இருந்த மேக அசைவுகளும் , காற்றில் அசைந்தாடும் புற்களையும் விட்டு என் கண்ணை எடுக்க முடியவில்லை. அந்த சுற்றுப்புறத்தை ரசித்துக்கொண்டே அங்கே வெளியே அமர்ந்து மதிய உணவை உண்டோம்.

Victoria estate
விக்டோரியா எஸ்டேட்டில் நாங்கள் தங்கிய இடத்தில் இருந்து தெரிகின்ற மலையின் உச்சிக்கு தான் மாலையில் சென்றோம்.

மதிய நேரம் அனைவரும் இளைப்பாற சென்றவுடன் நானும் வினோத்தும் அருகாமையில் இருந்த ஒரு நீரோடைக்கு செல்லலாம் என்று கிளம்பினோம். சில நிமிடங்களிலேயே பேன்டட் ராயல் பட்டாம்பூச்சியை கண்டுவிட்டோம். அந்த உற்சாகத்தில் ஓடை அருகே சென்று அங்கே இருந்த
சில சுறுசுறுப்பான பட்டாம்பூச்சிகள் அங்கும் இங்கும் பரபரவென்று பறப்பதை ரசித்துவிட்டு
திரும்பிவந்தோம். மாலை நேரம் அருகே இருந்த மலை உச்சிக்கு சென்றோம். நிறைய தகைவிலான் போன்ற பறவைகள், ஒரு கரும்பருந்து மாலை உணவை தேடி பறந்து கொண்டிருந்தன. புல்வெளியில் நல்ல சுத்தமான காற்றோடு சூரியன் அஸ்தமனத்தை பார்ப்பது ஒரு தனி சுகம். நான் ஒரு பாறையில் வசதியாக அமர்ந்துகொண்டு அந்த அழகான மாலையை ரசித்துக் கொண்டிருந்தேன்.

Asambhu grassland
shola-forests-and-grasslands-of-Asambu-Hillsபுல்வெளிக்காடுகளை எப்படி தான் வெற்றிடங்கள் என்று கூறி ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அழிக்க முடிந்ததோ ? அந்த பழக்கம் இன்று வரைக்கும் மாறவில்லை. வினோத்துக்கும் எனக்கும் காடுகள் பிடிக்குமென்றாலும், அதில் புல்வெளிகளுக்கு எப்பொழுதுமே ஒரு தனி மதிப்பு உண்டு.

திடீரென்று வினோத் கரடி ,கரடி என்று கத்தினார். நான் யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் க்ரிஸ்லி கரடி பார்த்தது போல ஒரு பெரிய உருவத்தை வினோத் கைகாட்டிய திசையில் புல்வெளிக்குள் தேடினேன். ஆனால், ஒரு சிறிய கருப்பு உருவம் குனிந்தவாறே புற்களுக்குள் செல்வதை கவனித்தபின் தான் நான் இதுவரை எப்பொழுதும் கரடியின் உருவ அளவை தப்பாக கணித்திருக்கிறேன் என்று தோன்றியது. வனஅலுவலர் எப்பொழுதும் இவ்விடத்தில் ஒரு கரடி குடும்பம் உண்டு என்று கூறினார். அன்று எங்களுக்கு அந்த ஒரு சிறிய கரடியை தவிர வேறு எந்த கரடியும் கண்ணில்படவில்லை. சிறிது நேரம் அந்த கரடி எவ்வளவு உன்னிப்பாக புற்களுக்கு இடையே உணவை தேடிக்கொண்டிருந்தது என்று பார்த்துக்கொண்டிருந்தோம்.

Sloth bear in asambu hills
எனக்கு எப்பொழுதுமே கரடிகளை மிகவும் பிடிக்கும். அதிலும் யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் ஒரு தாயும் , குட்டிகளும் விளையாடிய காட்சியும் , இரு இள வயது கரடிகள் விளையாடியதை பார்த்தபொழுது எனக்கு கரடிகள் மேல் இருந்த அபிப்ராயம் மிகவும் அதிகமாகி விட்டது.

அந்த ரம்மியமான மாலை வேளையை நாங்கள் மிகவும் ரசித்துக்கொண்டிருந்தால் அவ்விடத்தை விட்டு நகரவே மனமில்லை. ஆனால் கரடி அவ்விடத்தில் தான் சுற்றும் என்பதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நாங்கள் கீழே இறங்கிவிட்டோம்.

நாங்கள் தங்கி இருந்த இடத்தை தவிர வேறு எங்கும் மின்விளக்குகள் கிடையாது என்பதால்
நாங்கள் இரவில் நன்றாக அந்துபூச்சிகளை பார்க்கலாம் என்று அதற்குள்ள ஏற்பாடுகளை
செய்தோம். ஆனால் காற்று மிகவும் வலுவாக இருந்ததால் எங்களால் அந்துப்பூச்சிகளை
ஈர்க்கும் வெள்ளை துணியை சுவரில் கட்டவே முடியவில்லை. அங்கே இருந்த சுவரே
வெள்ளையாக இருந்ததால், நாங்கள் மெர்குரி விளக்கை மட்டும் மாட்டிவிட்டு காத்திருந்தோம்.
அவ்வளவு காற்றிலும் சில நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு அந்துப்பூச்சி சுவரில் வந்து அமர
ஆரம்பித்தது . அரை மணிநேரத்தில் சுவர் முழுவதும் விதவிதமான அந்துப்பூச்சிகள் இருந்தன.
நாங்கள் இரவு உணவு உண்டுவிட்டு மறுபடியும் வந்து பார்த்தால் கொஞ்சம் பெரிய
அந்துப்பூச்சிகள் வர ஆரம்பித்திருந்தன. அங்கே இருந்த வளர்ப்பு பூனைகள் வேறு இந்த
அந்துப்பூச்சிகளை பிடித்து உண்ண பார்த்தன. நாங்கள் அவற்றை துரத்திவிட்டு
அந்துப்பூச்சிகளை உற்று பார்த்து , அவற்றின் விதவிதமான வடிவங்களை கண்டு வியந்து
கொண்டிருந்தோம்.

அந்துபூச்சிகளின் வண்ணங்களையும் வடிவங்களையும் பார்க்கும்பொழுது வண்ணத்துப்பூச்சிகளே கொஞ்சம் வடிவங்கள் குறைவோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.

வினோத் இரவில் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை அந்துப்பூச்சிகளில் புதிதாக ஏதாவது
வந்துள்ளதா என்று பார்த்துக்கொண்டே இருந்தார். காலையில் பெரும்பாலான
அந்துப்பூச்சிகள் பறந்து போயிருந்தன. நாங்கள் அசம்பு மலையில் பெரிதாக எதிர்பார்த்தது ,
அசம்பு சிரிப்பான் . ஆனால் புற்களில் குதித்தோடிய சில பறவைகளை தாண்டி நாங்கள்
பெரிதாக பறவைகளை பார்க்கவில்லை. அதனால் காலையில் பறவைகளை தேடி செல்லலாம்
என்று நடக்க ஆரம்பித்தோம். மரகதப்புறா ,குக்குறுவான் பறவைகள் சத்தமில்லாமல் காட்டில் ஆங்காங்கே பறந்து கொண்டிருந்தன. கருஞ்சிவப்பு சிலம்பன் ஒரு கும்பலாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.

வாலுள்ள பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு , அதிலும் இந்த பட்டாம்பூச்சி வகையை தமிழ்நாட்டில் பார்ப்பது கொஞ்சம் அரிது.

பறவைகளை தேடிக்கொண்டிருந்தாலும் நாங்கள் ஒரு கண்ணை புற்களுக்குள் வைத்துக்கொண்டே இருந்தோம். முன்தினம் நாங்கள் உயரமான இடத்தில் நின்றதால் கரடி எங்கள் கண்ணில் பட்டது. ஆனால் நாங்கள் அந்த காலை வேளையில் நின்றுகொண்டிருந்த இடத்தில் , கரடி எங்கள் நேர் எதிரே வந்து நின்றால் தான் தெரியும் என்கிற மாதிரி இருந்தது. திரும்பி செல்கின்ற வழியில் சில இடங்களில் பட்டாம்பூச்சிகளையும் , செடிகளையும் பார்க்கவேண்டும் என்பதால் நேரம் சரியாக இருக்கும் என்று நாங்கள் பறவைகள் பார்த்தபின் காலை சிற்றுண்டி உண்டுவிட்டு கிளம்பிவிட்டோம்.

அடர்ந்த காட்டினுள் இம்மாதிரி அருவிகளை பார்ப்பது எப்பொழுதுமே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதுவும் இந்த இடங்கள் தான் பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் முக்கிய இடங்களாக இருக்கும்.

ஜீப்பில் மிக மெதுவாக தான் கீழே இறங்க முடியும் என்பதால் , சில இடங்களில் இறங்கி சுற்றி இருந்த மலை தொடர்ச்சியை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டே நடந்தோம். ஒரு இடத்தில் திடீரென்று அருகில் இருந்த எஸ்டேட்டில் உள்ள குதிரை ஒன்று உலாவிக்கொண்டிருந்தது. இந்த மாதிரி விசித்திரமான காட்சிகளை பார்த்துக்கொண்டே வனஅலுவலர் கூறிய ஒரு வியூ பாய்ண்ட் இடத்திற்கு சென்றோம். அங்கே சில அழகான காட்டு மலர்களும் இருந்தன. அவ்விடத்தில் உள்ள
காட்சியையும் , மலர்களையும் ரசித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.

mahendragiri tallest peak
இவ்விடத்தில் இருந்து பார்க்கும்பொழுது தூரமாக தெரியும் உயர்ந்த மலை தான் மஹேந்திரகிரி. அந்த மலை தான் கன்னியாகுமரியில் உயரமான மலை.

ஒரு இடத்தில் சிறிய நீர்வீழ்ச்சி ஒன்று இருந்தது. காடுகளில் உள்ள நீரோடைகள்
எப்பொழுதுமே பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் இடங்கள். அதனால் நாங்கள் ஜீப்பை
நிறுத்திவிட்டு அந்த இடத்தில் பட்டாம்பூச்சி தேட ஆரம்பித்தோம். நாங்கள் எதிர்பார்த்தவாறே
மேப் , டிட் போன்ற அழகான காட்டு பட்டாம்பூச்சிகளை பார்த்தோம் . நாங்கள் பொறுமையாக
இவ்விடங்களை சுற்றிவிட்டு கிளம்புவதற்குள் மதிய உணவு சாப்பிடும் நேரமே வந்துவிட்டது.
எஸ்டேட்டில் செய்து கொடுத்திருந்த தக்காளி சாதத்தை வயிறார சாப்பிட்டுவிட்டு கீழே
ஊருக்குள் வந்துவிட்டோம். ஒரு நாள் மட்டுமே இருந்தாலும் வேறு ஏதோ உலகத்திற்கு
சென்று வந்த மாதிரி உணர்வு இருந்தது. அசம்பு மலையில் அந்த அழகான
மாலைப்பொழுதையும் புல்வெளிக்குள் நடந்து சென்ற கரடியையும் எங்களால் என்றும் மறக்க
முடியாது.