கொடைக்கானல் சோலைக்காடுகள்
கொடைக்கானல் , தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான சுற்றுலா தளம். எங்களுக்கு சுற்றுலா
தளங்களில் பெரிய ஆர்வம் இல்லையென்றாலும் கொடைக்கானலுக்கு பல முறை
சென்றிருக்கிறோம். அதற்கு காரணம் அங்கே உள்ள தனித்துவமான காடுகள். எங்கள் பறவை
தோழி சாந்தியுடன் பல முறை கொடைக்கானல் முழுவதும் நடந்தே பறவைகள்
தேடியிருக்கிறோம். பெரும்பாலும் மழையில் தான் கொடைக்கானலில் சுற்றி இருக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு அழகிய காட்டு மலரை கொடைக்கானலில் நாங்கள் பார்த்து
விடுவோம். பல முறை சென்றிருந்தாலும் பேரிஜம் நீர்தேக்கத்தை சுற்றியுள்ள சோலைக்காடுகள் செல்ல வாய்ப்பு கிடைத்ததே இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு இறகுகள் தொண்டு நிறுவனத்தின்
தலைவர் ரவீந்திரன் அவர்கள் வழியாக கிடைத்தது.
வெவ்வேறு வயது தரத்தில் இருந்த 13 பேர் குழுவுடன் நாங்கள் பேரிஜம் ஏரி
சென்றடைந்தோம். பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறை அமைத்திருந்த நுழைவுவாயிலில்
இருந்து ஏரி செல்லும் வரை ஆங்காங்கே வனவிலங்குகளை வைத்து கம்பம் செய்திருந்தார்கள்.
கங்காரூவிலிருந்து, ஆஸ்ட்ரிச், ஸிப்ரா வரை எதையும் விட்டு வைக்கவில்லை . ஒரு பார்க்
அல்லது ஜூவில் இம்மாதிரி மற்ற நாடுகளில் உள்ள விலங்குகளை பற்றி சொல்லுவதில் தவறு
இல்லை. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் உள்ள ஒரு முக்கியமான காட்டு
பகுதியில் , அதுவும் அவ்விடத்தில் மட்டுமே காணப்படும் அரிய உயிரினங்கள் (Endemic wildlife)
இருக்கும் ஒரு காட்டில் அவற்றை பற்றி எந்த தகவல் பலகையும் இல்லாமல் ஏதோ ஒரு
கண்டத்தில் இருக்கும் விலங்குகளை வைத்து கம்பம் வைத்திருந்தது ஆச்சரியமாகவும்
வருத்தமாகவும் இருந்தது.
எங்கள் குழுவில் அனைவரும் வனவிலங்குகளை பற்றி நன்கு தெரிந்தவர்கள் என்பதால் நீ ஒட்டகசிவிங்கி பார்த்தாயா நீர்யானை பார்த்தாயா என்று கிண்டல் அடித்துக்கொண்டு வந்தோம். ஆனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு காட்டில் என்ன மிருகங்கள் வாழ்கின்றன என்று எதுவுமே தெரியாது, அதுவும் இப்பொழுதுள்ள பொய்யான youtube, whatsapp வீடியோக்களை வைத்தே பெரும்பாலான மக்கள் உலகத்தை பார்ப்பதால் இந்த மாதிரி விலங்குகளின் உருவங்கள் தப்பான தகவல்களை கொடுக்கிறது. இவற்றை பற்றி நாங்கள் கலந்துரையாடிக் கொண்டு சாலையில் கடந்து சென்று காட்டுமாடுகளையும் பார்த்துக்கொண்டே ஏரி சென்றடைந்தோம்.
மதிகெட்டான் சோலை
மறுநாள் காலை சிறு சிறு குழுவாக காட்டில் வெவ்வேறு பாதைகளுக்கு சென்றோம். வினோத்
, நான் ,ஜெசிந்தா மற்றும் வனப்பார்வையாளர் சதிஷ் நால்வரும் மதிகெட்டான் சோலை
சென்றோம். சதிஷ் முதலில் அடர்ந்த சோலைக்காடுகளுக்குள் அட்டைகள் அதிகமாக
இருக்குமென்று எங்களை அழைத்து செல்வதற்கு யோசித்தார். ஆனால் நாங்கள்
முன்னேற்பாடாக லீச் சாக்ஸ் , டெட்டால் எல்லாம் வைத்திருந்ததால் தைரியமாக உள்ளே
செல்லலாம் என்று கூறினோம். நாகர்கோவிலில் அலைந்து திரிந்து ஒரு பெரிய மூக்கு பொடி
டப்பாவை எங்கள் குழுவில் உள்ள ரமண கைலாஷ் கொண்டு வந்திருந்தான். அந்த பொடியை
அனைவரும் ஷூ முழுவதும் தடவி இருந்தோம் . கொடைக்கானலில் மிகவும் சிறிய பகுதி
தான் சோலைக்காடுகளாக இருக்கின்றன, மீதி அனைத்தும் சோலைக்காடுகளை அழித்து
மனிதர்கள் நட்டு வைத்த வாட்டில் , சவுக்கு மரங்கள் தான் இருக்கின்றன. இப்பொழுது வன
அலுவலுகம் ஒரு சில இடங்களில் இந்த வேற்று நாட்டு மரங்களை எடுத்துவிட்டு உள்ளூர்
மரமான நீலகிரி பே இலை (Daphniphyllum neilgherrense) போன்றவற்றை வளர்த்து
வருகின்றனர். அம்மரங்கள் சில வந்தவுடனே ஒரு சிறு கூட்டமாக நீலகிரி பிப்பிட் ஓடி குதித்து
கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
நாங்கள் காட்டின் உட்பகுதி செல்லும் போது மழை கொஞ்சம் நின்றிருந்தது. நீலகிரி
சோலைக்கிளியின் குரல் சில இடங்களில் கேட்க ஆரம்பித்தது. நாங்கள் ஆர்வமாக
சோலைக்காடுகளுக்குள் நடக்க ஆரம்பித்தோம். தரை முழுவதும் ஈரமான காய்ந்த இலைகள் ,
அவற்றின் மேல் ராமர் அட்டைகள் என்று சொல்லப்படும் ஒரு பெரிய அட்டை வகை மற்றும்
வேறு இரண்டு அட்டை வகைகள் யார் ரத்தத்தை உரியலாம் என்று தேடிக்கொண்டிருந்தன.
அட்டையை பற்றி யோசிக்காமல் சுற்றி இருந்த மரங்களில் எங்கள் கவனத்தை
செலுத்தினோம். அனைத்து மரங்கள் மேலும் விதவிதமான பாசிகளும் பன்னங்களும் (Mosses
& Ferns) வளர்ந்திருந்தன.
அரிய தாவரங்கள்
அவ்வளவு மென்மையான அந்த தாவரங்களை தடவி பார்ப்பதற்கு
அவ்வளவு நன்றாக இருந்தது. ஒரு சிறிய ஓடையை கடந்து சென்றபோது, சிவப்பு நிற பால்சம்
மலர்கள் சில கண்ணில்பட்டன. டைரியன் பால்சம் (Impatiens phoenicea) தென் மேற்கு
தொடர்ச்சி மலைகளில் மிக சிறிய இடங்களில் மட்டுமே காண முடியும்.
நானும் வினோத்தும் முதன்முறையாக இந்த காட்டு மலரை பார்த்ததோடு அந்த மலரை மனிதர்கள் தொடாத சோலைக்காட்டுக்குள் பார்த்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
முதல் நாள் நாங்கள் காட்டிய உற்சாகத்தை பார்த்து எங்கள் வனபார்வையாளர் மறுநாள்
சோலைக்காட்டில் மற்றொரு பக்கம் அழைத்து சென்றார். இரவெல்லாம் மழை
பெய்திருந்ததால் தரை மிகவும் வழுக்கிக் கொண்டே இருந்தது. கலாந்தே ஆர்க்கிட் செடிகள் (Calanthe masuca) சில என் கண்ணில்பட்டன , ஏதாவது செடியில் மலர் இருக்கிறதா என்று நானும் வினோத்தும் தேடிக்கொண்டே வந்தோம். கொஞ்சம் தூரத்தில் நிறைய ஆர்க்கிட் மலர்கள் தென்பட
ஆரம்பித்தன. நானும் வினோத்தும் அப்படி ஒரு பரவச நிலையை அடைந்துவிட்டோம்
அடர்ந்த காட்டினுள்ளே மழை பெய்ததால் பன்னம், ஆர்க்கிட் செடிகள் பளபளவென்று
மிகவும் அழகாக இருந்தன. ஒவ்வொரு காடுகளிலும் அதன் பூர்வீகமான தாவரங்கள் மட்டும்
வளரும்போது எவ்வளவு நன்றாக இருக்கிறது.ஆனால் மனிதர்களின் உபயோகத்திற்காகவும்
பேராசைக்காகவும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வேற்று நாட்டு செடிகளை
கொண்டுவந்து காடுகள் மாசுபட்டுவிட்டன.
அன்று சென்ற இடங்கள் முழுவதும் சகதியாக இருந்ததால் எங்கள் ஷூ எல்லாம் வண்ணமே
தெரியாத அளவுக்கு மாறிவிட்டன. அடர்ந்த சோலைக்காடுகளை தாண்டி வந்தவுடன் ஒரு
சதுப்பு நிலம் இருந்தது. அங்கே சோலைக்காட்டில் நடந்த அளவுக்கு கூட நடக்க முடியாததால் ,
அதை சுற்றி நடக்க பாதை கண்டுபிடித்து நெட்டில் செடிகளினுள்ளே நடந்து வெளியே வந்து
சேர்ந்தோம். மற்றொரு நாள் எங்களுடன் சோலைக்காட்டுக்குள் தர்ஷினி , ரமணா வந்தார்கள். அன்று சென்ற பாதையில் நிறைய வயதான மரங்கள் இருந்தன. அவை லார்ட் ஆப் தி ரிங்ஸ் (Lord of
the rings) படத்தில் வரும் என்டஸ் (Ents) போல தோன்றின. இக்காடுகளில் எல்லாம்
உண்மையிலேயே ட்ரீ ஸ்பிரிட்ஸ் இருப்பது போல் தான் தோன்றியது.
ஷாமாவின் பாடல் நன்றாக கேட்டது, நாங்கள் அனைவரும் சுற்றியுள்ள மரங்களையும் செடிகளையும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டே நடந்தோம். ஏற்கனவே அவ்வழியில் சென்ற ஒரு குழு ஒட்டுண்ணி செடி ஒன்றை காளான் என்று நினைத்து படமெடுத்து வந்திருந்தார்கள். நானும்
வினோத்தும் அந்த மஞ்சள் நிறத்திலிருந்த ஒட்டுண்ணி செடியை தேடிக்கொண்டே நடந்தோம்.
ஒரு இடத்தில் நான் அவற்றை கண்டுபிடித்துவிட்டேன் ஆனால் ஒரே ஒரு மலர் தான்
மலர்ந்திருந்தது.
அந்த வெள்ளை மலரை (Christisonia neilgherrica) கொஞ்சம் படம்பிடித்துவிட்டு அந்த காட்டிலிருந்து கிளம்பும்போது பல நாள் முன் இறந்திருந்த ஒரு மிருகத்தின் எலும்பையும் வாலையும் கண்டோம். முதலில் நீலகிரி மார்டன் என்று நினைத்தோம் , அப்புறம் வாலின் வண்ணத்தை வைத்து கீரிப்பிள்ளை (Stripe-throated mongoose) என்று முடிவு செய்தோம். இந்த கொடைக்கானல் பயணத்தில் எங்களுக்கு சோலைக்காடுகளுக்குள் சுற்றி புதிய மலர்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பயணத்தில் மற்ற சிறப்புகள் என்னவென்றால் கொடைக்கானல் ஏரி முழுவதையும் மாலை நேரங்களில் குழுவுடன் நன்றாக சுற்ற முடிந்தது. ஹாட் சாக்லேட் , சோளம் , ஐஸ்கிரீம் என்று விதவிதமான உணவுகளை உண்ண முடிந்தது. குழுவில் நிறைய ஹரி பாட்டர் ரசிகர்கள் இருந்ததால் மேஜிக்கல் உலகத்தை பற்றி நிறைய பேச முடிந்தது.
கொடைக்கானலில் சென்று இறங்கியதும் குளிரில் நடுங்கிக்கொண்டே திரிந்தாலும், மழையில் நனைந்து சுற்றிக்கொண்டிருந்தாலும், அட்டை கடிகளில் அரிப்பு எடுத்தாலும் நாங்கள் குழுவாக கொலுமிச்சை டீ குடித்துக்கொண்டு , புசுபுசுவென்று சுற்றிக்கொண்டிருந்த நாய்களிடம் விளையாடிக்கொண்டு , தற்போதைய காடுகளின் நிலைமை பற்றி புலம்பிக்கொண்டு, நிறைய பயணக்கதைகள் பேசிக்கொண்டு பேரிஜம் ஏரியில் சுற்றியில் நாட்கள் மிகவும் இனிமையான நாட்கள்.