ஆரல்வாய்மொழி மலையேற்றம்

தமிழ்நாட்டில் நிறைய சிறிய மலைகள் இருந்தாலும் பெரும்பாலான மலைகள் காப்புக்காடுகளுக்கு உள்ளே வருவதால் வனத்துறை அனுமதி இல்லாமல் மலையேற முடியாது. அதே சமயம் தமிழ்நாட்டில் நிறைய மலைகோவில்கள் உள்ளதால் அந்த கோவில்களுக்கு செல்ல அனுமதி இருக்கும். ஆனால் அந்த கோவில்கள் பிரபலமான கோவில்கள் இல்லையென்றால் பக்தர்கள் கூட்டம் இருக்காது.

Sithagiri malai
தமிழ்நாட்டில் ஏகதேசம் அனைத்து மலைகளிலும் ஒரு சிறிய கோவில் இருக்கும். பெரும்பாலும் அவை குறிஞ்சி கடவுள் முருகனின் கோவிலாகவே இருக்கும்.

அப்படி ஒரு மலை தான் ஆரல்வாய்மொழியில் உள்ள சித்தகிரி மலை. நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழியை கடந்து செல்லும்போதெல்லாம் இந்த சித்தகிரி மலையை நானும் வினோத்தும் பார்த்துக்கொண்டே செல்வோம். இமாலய மலைகள் எல்லாம் ஏறுகிறோம் , நம் சொந்த ஊர் அருகே உள்ள மலைகள் ஏற வாய்ப்பு அமையவில்லையே என்று சொல்லிக்கொண்டே கடந்து செல்வோம்.

Birdwatching
மலையில் ஏதாவது ஆந்தையோ அல்லது கழுகோ பாறைகளில் எங்காவது அமர்ந்திருக்கிறதா என்று நானும் வினோத்தும் தேடிக்கொண்டே இருந்தோம்.

கொரோனாவிற்கு பிறகு ஊரில் பலபேருக்கு வெளியே சென்று நிறைய இடங்கள் பார்க்கவேண்டும் என்று ஆசை வந்ததால் நாகர்கோவில் அருகே உள்ள மலைகள் எல்லாம் ஏறுகிறார்கள் என்று கேள்விப்பட்டோம். சித்தகிரி மலை ஏற ஒரு குழு முடிவு செய்திருந்த நாளன்று நாங்களும் நாகர்கோவிலில் இருந்ததால் கண்டிப்பாக நாங்களும் பங்கெடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டோம். ஒரு சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு சந்திக்கலாம் என்று சொன்னவுடன் நாங்கள் அதற்கேற்ப கிளம்பி 5.15 மணிக்கு மலை அடிவாரம் சென்றுவிட்டோம். பிறகுதான் தெரிந்தது , அவர்கள் நாகர்கோவில் ஊருக்குள் தான் 5.30 மணிக்கு சந்திக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

Sunrise from hillock
எப்பொழுதுமே சூரியன் உதிக்கும் தருணத்தில் காட்டுக்குள் இருந்தால் தான் பறவைகளின் சத்தத்தோடு அந்த நாளை தொடங்க முடியும்.

நாங்கள் தான் ஆர்வக்கோளாறில் சீக்கிரமே வந்துவிட்டோம். விடியும்வரை தூரமாக தெரிந்த காற்றாலைகளை பார்த்து எப்படி மக்களை மூளை சலவை செய்திருக்கார்கள் , இவை தான் புவி சூடாவதற்கு உள்ள தீர்வு என்று புலம்பிக்கொண்டிருந்தபோது சிலர் மலையேற்றத்திற்கு வந்து சேர்ந்தனர்.

முழுவதுமாக வெளிச்சம் வராவிட்டாலும் நாங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டோம். மண்பாதையாக இருந்தாலும் ஏறுவதற்கு ரொம்ப சிரமமாக இல்லை. பாறைகள் முழுவதும் ஆமணக்கு வகையை சார்ந்த வாலஸ் ஸ்பர்ஜ் ( Wallace Spurge / Euphorbia lacei ) வளர்ந்திருந்தன.

Euphorbia lacei
சூரிய ஒளி மலையில் உள்ள புற்களின் மேல் விழுந்தபோது அவை அனைத்தும் தங்க நிறத்தில் தகதக என்று மின்னியது போன்று இருந்தது.

இவற்றை நம் மக்கள் கள்ளி வகை என்று தவறாக கூறுவார்கள் , ஆனால் கள்ளி செடிகள் நம் நாட்டில் இயற்கையில் காட்டில் உள்ளவை அல்ல. கருஞ்சிட்டு , சின்னான் பறவைகளின் சத்தத்தை தவிர அவ்விடம் மிகவும் அமைதியாக இருந்தது. பாறைகளின் அமைப்புகள் மிகவும் அழகாக இருந்தன. அவற்றை எல்லாம் ரசித்துக்கொண்டே மேலே நடந்து கொண்டே இருந்தோம். நல்ல சிகப்பு நிறத்தில் சூரியன் அப்படியே எழுந்து வந்துகொண்டிருந்தது மிகவும் அழகான காட்சியாக இருந்தது.

ஆரல்வாய்மொழி சித்தகிரி தென்பழனி முருகன் கோயில்

நாங்கள் பாதி தூரம் சென்ற பின் தான் அந்த குழுவில் இருந்து மற்றவர்கள் வர ஆரம்பித்து இருந்தார்கள். நாங்கள் மார்ச் மாதம் இந்த மலையேற்றத்தை செய்ததால் சுற்றி உள்ள புற்கள் அனைத்தும் காய்ந்து தான் கிடந்தன. பாறைகளில் தெளிவாக குறியிட்டிருந்ததால் பாதையில் எந்த குழப்பமும் இல்லை. வேகமாகவே நல்ல உயரம் ஏறி விட்டோம்.

South Indian Palani temple
மிகவும் செங்குத்தான ஏற்றம் போல இருந்தாலும் நடப்பதற்கு ரொம்பவும் சிரமமாக இல்லை.

இப்பொழுது இந்த மலையில் இருந்து எதிரே தெரிந்த பெரிய மலையான தெற்கு மலை எங்கள் கண்ணை உறுத்த ஆரம்பித்துவிட்டது. அந்த மலைக்கு என்று செல்ல முடியுமோ என்று பேசிக்கொண்டே உச்சி வந்து சேர்ந்துவிட்டோம். மலை உச்சியில் ஒரு சிறிய முருகன் கோவில் உள்ளது. முந்திய நாள் வெள்ளிக்கிழமை என்பதால் பூஜை செய்திருப்பார்கள் போல , கொஞ்சம் மிஞ்சிய பிரசாதங்கள் ஆங்காங்கே கிடந்தன. அதை தவிர மற்றபடி அதிசயமாக குப்பை எதுவும் இல்லை.சிறிது நேரம் மலை உச்சியில் நாங்கள் மட்டுமே நின்று கொண்டிருந்தோம். சுற்றி உள்ள மலைக்காட்சிகளை ரசித்து கொண்டிருந்தபோது குழுவில் இருந்து ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். நாங்கள் பறவை ஏதாவது கண்ணில் படுகிறதா என்று தேடிக்கொண்டிருந்தோம். காட்டுக் கதிர்க்குருவி சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் இல்லை.

Jungle prinia
கதிர்குருவிகள் எப்பொழுதுமே ஏதாவது ஒரு செடியின் உச்சியில் அமர்ந்து கொண்டு தொடர்ந்து சத்தம் எழுப்பும். காட்டுக்கதிர்குருவி பிட் பிட் என்று தொடர் சத்தத்தை அங்கே எழுப்பிக்கொண்டிருந்தது.

அதே மலையில் இன்னொரு பாதையில் ஊர்காரர் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் ஏதாவது முயலையோ , வேறு சிறிய மிருகத்தையோ பிடிப்பதற்காக சுற்றுகிறாரோ என்று பயத்துடன் இங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம். மலை உச்சியில் சிறிது நேரம் புகைப்படம் எடுத்துவிட்டு மற்றவர்கள் கீழே இறங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு குரங்கு குடும்பம் வந்து பிரசாத சாதத்தை உண்டு கொண்டிருந்தன. அங்கே இருந்த ஆமணக்கு வகை செடியில் பூக்கள் நன்றாக மலர்ந்திருந்தன. அவற்றில் சிறிய தேனீக்களும், ஈக்களும் மேய ஆரம்பித்திருந்தன. நாங்கள் அவற்றை எல்லாம் பார்த்தபின் பொறுமையாக கீழே நடக்க ஆரம்பித்தோம்.

கள்ளிப்புறா
எப்பொழுதும் பார்க்கும் கள்ளிப்புறா அன்று ஏனோ அந்த நிலப்பரப்பில் மிகவும் அழகாக தெரிந்தது.

பாறைகளில் ராக் அகாமா ஓடிக்கொண்டிருந்தன. கள்ளிப்புறா ஒரு வாலஸ் ஸ்பர்ஜ் செடி மேலே அமர்ந்து அழகாக சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது. எப்பொழுதும் பார்க்கும் புறா என்றாலும் அந்த இடத்தில் மிகவும் அழகாக தெரிந்தது. மலையில் சுற்றிக்கொண்டிருந்த ஊர்க்காரரும் நாங்கள் நடந்து சென்ற பாதையில் வந்து சேர்ந்துவிட்டார். வினோத் அவரிடம் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்பதற்குள் அவரே நீங்கள் ஏதாவது ஆடு பார்த்தீர்களா என்று கேட்டார். அப்பாடி ஆடு தான் தேடினாரா என்று தோன்றிய அதே நேரத்தில் இந்த இடத்தையும் ஆடு மேய்க்காமல் விடவில்லையா என்று தோன்றியது. நாங்கள் ஆடு எதையும் பார்க்கவில்லை என்று பதிலளித்துவிட்டு கோவிலை பற்றி மற்ற விஷயங்களை எல்லாம் கேட்டுக்கொண்டே பாதி தூரம் கீழே இறங்கிவிட்டோம்.

Sithagiri malai
மழைக்காலத்தில் வந்தால் இந்த புற்கள் எல்லாம் பச்சையாக மாறி இயற்கை காட்சிகள் கண்டிப்பாக இதைவிடவும் அழகாக இருக்கும்.

நல்ல வெயில் வர ஆரம்பித்து விட்டதால் உழவாரன் பறவைகள் வானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டன. ஆரல்வாய்மொழி என்றாலே நல்ல காற்று தான் நினைவுக்கு வரும், அதனால் தான் அந்த காலத்திலிருந்தே அவ்வளவு காற்றாலைகள் அந்த ஊரில் இருக்கின்றன. ஆனால் நாங்கள் நடந்த நாளன்று மலை உச்சியில் கூட காற்றே இல்லை. மற்றொரு கள்ளிப்புறா பாறையில் அமர்ந்து கத்திக்கொண்டிருந்ததை வினோத் படம்பிடிக்க ஆரம்பித்தார். அந்த கள்ளிப்புறா கத்தியது போதுமென்று நினைத்து வேறொரு குத்து செடிக்கு பறந்து சென்றது. அந்த செடியில் இன்னொரு பறவை உட்கார்ந்து இருக்கிறது என்று அப்பொழுது தான் கவனித்தேன்.வெண்புருவ சின்னான் பறவை என்று நினைத்து தான் பைனாகுலரில் பார்த்தேன் ஆனால் அது மஞ்சள் தொண்டை சின்னான் பறவை.

Yellow throated bulbul
அருகி வரும் மஞ்சள் தொண்டை சின்னான் பறவையை இந்த மலையில் பார்த்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி .ஆனால் அந்த பறவையை அதன் இணையோடோ அல்லது கும்பலாகவோ பார்த்திருந்தால் இதைவிடவும் நன்றாக இருந்திருக்கும்.

மஞ்சள் தொண்டை சின்னான் பறவை இம்மாதிரி பாறைகள், புதர்காடுகள் இருக்கும் இடத்தில் மட்டுமே காணமுடியும். நாங்கள் கர்நாடகா சென்ற போது ஹம்பியில் இவை நன்றாக சுற்றிக்கொண்டிருந்தன. சித்தகிரியில் மற்ற பறவைகளையே அவ்வளவு காணமுடியாத நிலையில் , அழிந்துவரும் நிலையில் உள்ள இந்த அரிய மஞ்சள் தொண்டை சின்னானை பார்ப்போம் என்று நாங்கள் நினைக்கவே இல்லை.

அந்த சின்னான் உடனே உச்சியில் உள்ள புதர்களுக்குள் பறந்து சென்று கண்ணில் இருந்து மறைந்துவிட்டது. பொதுவாக இந்த பறவையை இணையோடு அல்லது ஒரு சிறிய கூட்டமாக தான் பார்ப்போம். அன்று அதை ஒற்றையாக தான் பார்த்தோம். க்ரானைட் குவாரியால் அழிந்து வரும் பறவையை கண்டோம் என்ற சந்தோஷம் ஒரு பக்கம் பக்கம் , இவற்றை பாதுகாக்க நமக்கு ஒரு வழியும் இல்லையே என்ற மனபாரம் ஒரு பக்கம் , இந்த குழப்பமான மனநிலையோடு தொடர்ந்து நடந்தோம்.

Hill climbing nagercoil
வறண்ட நிலையில் இந்த மலையை நாங்கள் பார்த்திருந்தாலும் எங்களுக்கு இந்த மலையேற்றம் மிகவும் பிடித்திருந்தது.

நீலமுக செண்பகம் அதன் நீண்ட வாலோடு எங்களை கடந்து பறந்து சென்றது. எனக்கும் வினோத்துக்கும் எப்பொழுது இந்த பறவையை பார்த்தாலும் முகத்தில் புன்முறுவல் வந்துவிடும்.

அடிவாரம் கிட்டே வரும்போது ஊர் தாத்தா மறுபடியும் எங்களுடன் சேர்ந்துகொண்டார். இவ்வளவு நேரம் அப்படி என்ன இந்த மலையில் பார்த்தீர்கள், என் ஆடு இன்னும் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டே சென்றார். மலை அடிவாரம் வந்தபின் ஊருக்குள் இருந்து அனைத்து மதத்தினரும் போட்டி போட்டுகொண்டு பக்திபாடல்களை ஸ்பீக்கரில் போட்டுவிட்டிருந்தனர். இவ்வளவு நேர அமைதியும் ஒரு நொடியில் காணாமல் போய்விட்டதால் நாங்கள் மழை பெய்தபிறகு சித்தகிரி மலைக்கு மறுபடியும் வருவோம் என்று பேசிக்கொண்டே அவ்விடத்திலிருந்து வேகமாக கிளம்பிவிட்டோம்.