கொடைக்கானல் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அழகிய மலைதொடர்கள் , ஸ்வெட்டர் போட்டுக்கொள்ளலாம் என்ற அளவுக்கு ஒரு குளிர், ஆங்காங்கே விற்கப்படுகின்ற சூடான பஜ்ஜி,சோளங்கள் மற்றும் பல சுற்றுலாதளங்கள். ஆனால் இயற்கை பிரியர்களான எனக்கும் , என் கணவர் வினோத்துக்கும் கொடைக்கானல் என்றவுடனே நினைவுக்கு வருவது மேற்கு தொடர்ச்சி மலை பறவைகள் , அந்த உயரத்தில் காணப்படும் பட்டாம்பூச்சிகள் மற்றும் விதவிதமான மலர்கள். நாங்கள் பலமுறை கொடைக்கானல் சென்றிருந்தாலும் எங்களுக்கு கொடைக்கானலில் வாழும் வன உயிரினங்களை முழுவதும் பார்த்த திருப்தியே இல்லை. அதனால் சில மாதங்கள் கொடைக்கானலில் வசித்து அங்கே உள்ள பறவைகளையும் மற்ற உயிரினங்களையும் காணலாம் என்று முடிவு செய்தோம். அப்படி கொடைக்கானலில் தங்கி இருந்த போது ஒரு தோழர் காட்டுவழியாக பெருமாள்மலை – பழனி ட்ரெக் கூட்டி செல்கிறேன் என்றார். உடனே அந்த நடைபயணத்திற்கு தயாரானோம்.
கொடைக்கானல் ட்ரெக்கிங்
பெருமாள்மலையில் ட்ரெக்கிங் பாதையில் ஒரு அழகான அருவி உள்ளது. அதிகாலையில் குக்குறுவான் சத்தம் போட ஆரம்பித்த நேரத்தில் நாங்கள் அருவிக்கு செல்லும் ஆற்று பாதையில் நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் சென்ற மாதத்தில் மழை இல்லை, அதனால் தண்ணீரையும் பாறைகளையும் கொஞ்சம் எளிதாக தாவி செல்ல முடிந்தது. மழைக்காலத்தில் இந்த பாதையில் நடக்க இயலாது. ஆற்றில் இருபுறமும் நல்ல உயரமான காட்டு மரங்கள் இருந்தன , அதனால் என் கண்கள் மீன்பிடி ஆந்தையை தேட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் நான் எதிர்பார்த்த மாதிரியே ஒரு மீன்பிடி ஆந்தை அடர்ந்த மரத்தில் அமர்ந்திருந்தது. ஆனால் ஆந்தையின் கண்கள் என்னை முதலில் கண்டுபிடித்து விட்டதால் உடனே பறந்துவிட்டது. எங்கள் தோழர் வேகமாக நடைப்பயணத்தை தொடர வலியுறுத்தினார். கொஞ்ச தூரம் நடந்த பின்பு ஆந்தையின் குரல் கேட்டது. குரலை கேட்டபின் எங்களால் தேடாமல் இருக்க முடியவில்லை. அதனால் குரல் வந்த திசையில் கொஞ்சம் தேடியபின், மீன்பிடி ஆந்தையை மறுபடியும் கண்டுபிடித்துவிட்டோம். கழுத்து வரை தான் ஆந்தை தெரிந்தாலும் அதன் தொண்டையை உப்பிக்கொண்டு சத்தம் எழுப்பியது பார்க்க மிகவும் அழகாக இருந்தது.
ஆந்தையை பார்த்த திருப்தியில் உற்சாகமாக நடைபயணத்தை ஆரம்பித்தோம். கொஞ்ச நேரம் நடப்பதில் மட்டும் கவனம் செலுத்தினோம். முருக பக்தர்கள் இந்த பாதையை பழனி கோவிலுக்கு செல்ல உபயோகிப்பதால் பாதை தெளிவாக இருந்தது. அருவி,பறவைகளின் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் இல்லாத அந்த ரம்மியமான காலை நேரத்தை அனுபவித்துக்கொண்டே நடந்து சென்றோம். ஒரு அழகான பாறையை பார்த்தவுடன் அங்கே காலை உணவை சாப்பிடலாம் என்று அமர்ந்தோம். உணவை அமைதியாக உண்டு கொண்டே சுற்றுவட்டாரத்தை பார்த்துக்கொண்டிருந்தோம். வினோத் அருகே இருந்த ஒரு குன்றில் மலர் ஒன்று வித்தியாசமாக தெரிகிறது என்று கேமராவை எடுத்தார்.இவ்வளவு தூரத்தில் என்ன மலர் தெரிய போகின்றது என்று நான் பைனாகுலரை எடுத்து பார்த்தால் ஒரு லில்லி மலர் புற்களின் இடையே பெரிதாக மலர்ந்திருந்தது.
நடைபயணம் தாமதமானாலும் பரவாயில்லை என்று லில்லி மலர் இருந்த பாதை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். கொஞ்சம் செங்குத்தான பாறைகளை ஏறி சென்ற பின்பும் செடியின் அருகில் செல்ல இயலவில்லை. ஆனால் இப்பொழுது பைனாகுலரில் பார்த்தால் அந்த மலர் நீலகிரி நீண்ட லில்லி (Nilgiri Long-Flowered Lily – Lilium wallichianum var. neilgherrense) என்று தெரிந்தது. இந்த மலரை மேற்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் மட்டுமே பார்க்க முடியும். அதிலும் புல்வெளிகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை லில்லியை கண்டதும் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது. ஒரு கொத்தாக மலர்ந்திருந்த அந்த மலரை கண்குளிர பார்த்துவிட்டு மறுபடியும் நடைபாதை வந்து சேர திரும்பி நடக்க ஆரம்பித்தோம். ஆனால் மற்றொரு மலர் என் கண்களை ஈர்த்தது. ஹபனேரியா (Habenaria longicorniculata ) ஒரு பாறை முழுவதும் கொத்தாக மலர்ந்திருந்தன. இந்த வெள்ளை நிற ஆர்க்கிட் , தேவதை போல மிகவும் அழகாக இருந்தது.
ஆர்க்கிட் மலர்
இரண்டு அழகிய மலர்களை பார்த்தபின்பாவது நாங்கள் இரண்டு பேரும் வேகமாக நடந்து விடலாம் என்று பார்த்தால் இரண்டு நிமிடத்திற்குள் ஒரு அழகிய அந்துபூச்சியை பன்னம் செடிகளின் இடையே பார்த்துவிட்டேன். அதுவும் நாங்கள் நெடுநாளாக தேடிக்கொண்டிருந்த சந்திர அந்துபூச்சி (Lunar Moth) மிகவும் ஒயிலாக தொங்கிக்கொண்டிருந்தது. பின்புறம் தான் நாங்கள் இருந்த இடத்திலிருந்து தெரிந்தது, செடியை திருப்பி அந்துபூச்சியை பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது. ஆனால் பகல் வேளை, அப்பூச்சி தூங்கும் தருணம் என்பதால் தொல்லை படுத்த வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டோம். நிறைய எதிர்பார்க்காத விஷயங்களை பார்த்துவிட்டதால் அதன் பிறகு சில மணிநேரங்கள் நடப்பதில் மட்டும் கவனம் செலுத்தினோம்.
கொண்டை பாம்புக்கழுகு தொண்டை கிழிய கத்திக்கொண்டே வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பட்டாம்பூச்சிகள் இங்கும் அங்கும் நிறைய பறந்து கொண்டிருந்தன. பொதுவாக சிவப்பு வட்ட கண்ணன் பட்டாம்பூச்சியை கொடைக்கானல் உச்சியில் உள்ள காடுகளில் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த அழகிய பட்டாம்பூச்சியையும் நடக்கும் பாதையில் கண்டோம். இந்த பட்டாம்பூச்சியும் முன்பு பார்த்த லில்லி மாதிரியே தென் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காண முடியும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் உயிரினங்களை பார்ப்பது ஒரு தனி அனுபவம். மேற்கு தொடர்ச்சி காடுகளில் மட்டுமே காணக்கூடிய தாவர வகைகள் ஏறக்குறைய 1200 இருக்கின்றன. அப்பேற்பட்ட காடுகளுக்குள் நடக்கும் போது வியக்கத்தக்க காட்சிகளை பார்ப்பதற்கு எப்பொழுதுமே வாய்ப்பு உள்ளது.
செல்லும் வழியில் நிறைய வேங்கை மரங்கள் இலை தெரியாத அளவுக்கு பூக்கள் வைத்திருந்தன. பட்டாம்பூச்சிகளும்,தேனீக்களும் அந்த காட்டு மலர்களை மொய்த்துக் கொண்டிருந்தன. காட்டு மலர்களில் உள்ள தேனுக்கு எப்போழுதுமே பூச்சிகளிடம் ஒரு தனி கிறக்கம் இருக்கும். பூச்சிகள் வந்ததால் நீலச்சிட்டு , பச்சை சிட்டு போன்ற பறவைகள் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன . ஊருக்கு நடுவில் இருக்கும் அழகுக்கு வைத்த மரங்களில் உள்ள பூக்களுக்கு பெரும்பாலும் தேனீக்கள் வரவே வராது, அதனால் பறவைகள் நடவடிக்கைகளும் ஊருக்குள் குறைவாகவே இருக்கும். அதனால் காட்டில் இந்த சம்பவங்களை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கும். இவை சிறு சம்பவங்களாக தெரிந்தாலும் ஒரு ஆரோக்கியமான காட்டுக்கு இவையெல்லாம் தான் அத்தாட்சி. ஒரு காட்டிற்கு புலிகளும், யானைகளும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தேனீக்களும் மற்ற சிறு பூச்சிகளும்.
இம்மாதிரி சிறு சிறு அழகிய இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டே நடந்து வரும்போது எவ்வளவு தூரம் நடந்தாலும் களைப்பே தெரிவதில்லை. இந்த நடைபயணத்தில் உயரத்தில் இருந்து கீழே வருவதால் பள்ளத்திலேயே இறங்கி வந்தோம். அதனால் நடைபயணம் கொஞ்சம் எளிமையாகவே இருந்தது. பழனி காட் சாலை அருகே வந்தபோது பெரும்பாலும் லேண்டனா , கோட் வீட் செடிகள் தான் இருந்தன. மாலை கூட்டினுள் அடைவதற்கு முன் ஒரு ஆட்டம் போடுவதற்கு மரங்கள் மேல் சில பறவைகள் குதித்துக் கொண்டிருந்தன. தேன் பருந்து ஒன்று ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருந்தது. அதிகாலையிலிருந்து அந்திமாலை வரை இயற்கையுடன் ஒன்றி இருந்தோம். இயற்கை காட்சிகளை கவனிக்காமல் நடந்திருந்தால், இந்த நடைபயணம் இவ்வளவு சிறப்பாக அமைந்திருக்காது. அதனால் தாமதமாக எங்கள் நடைபயணத்தை முடித்ததை பற்றி கவலையும் இல்லை. மனதிருப்தியுடன் அங்கே இருந்து வீடு திரும்பி செல்ல ஒரு வண்டியில் ஏறி அமர்ந்த பின்பு தான் கால் வலி தெரிய ஆரம்பித்தது. இருப்பினும் அந்த அழகிய நாளை பற்றி உற்சாகமாக பேசிக்கொண்டே வண்டியில் பயணத்தை ஆரம்பித்தோம்.