Eco Park (Aruvi Poonga), Five falls , Courtallam – ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்கா

ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்கா
ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்கா நுழைவுவாயில்.

குற்றாலம் என்றவுடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அருவி. குடும்பத்துடன் நன்றாக அருவியில் குளித்துவிட்டு கூட்டான்சோறு பொங்கி உண்பது (இப்பொழுது பிரியாணியாக மாறிவிட்டது) தமிழ்நாட்டில் உள்ள ஏகதேசம்பேர் வாழ்வில் ஒரு தடவையாவது செய்திருப்பார்கள் அல்லது செய்ய ஆசைப்பட்டிருப்பார்கள். எனக்கோ குற்றாலம் அருகே தான் தாத்தா வீடு என்பதால் பள்ளி விடுமுறைக்கு வரும்போதெல்லாம் கண்டிப்பாக குற்றாலம் சென்று விடுவோம். குற்றால அருவியை தாண்டி அதை சுற்றி உள்ள காடுகளை பற்றி யோசித்ததே இல்லை. காடுகளை பற்றி அறிய ஆரம்பித்தபின் தான் அகஸ்தியமலை உலக அளவில் எவ்வளவு சிறப்பு பெற்றது என்று புரிந்தது. அருமை புரிந்த பின்பும் குற்றாலம் அருவி அருகே உள்ள காட்டுக்கு செல்ல வாய்ப்பு கிட்டவே இல்லை.

கொரோனா காலத்தில் வெளி மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் இருந்தபோது தாத்தா ஊரில் சில நாள் இருக்கலாம் என்று கிளம்பினோம். எங்கள் புளியந்தோப்பு , மாந்தோப்பை சுற்றி முடித்தவுடன் பம்ப்செட்டில் குளித்துவிட்டு , தோட்டத்தில் காய்த்திருந்த மா, பலா,வாழை என்ற முக்கனிகளையும் பாராபட்சம் பார்க்காமல் உண்டு களித்தோம்.

பலாப்பழம்
உலகிலேயே உள்ள பெரிய பழம் நம் தோட்டத்தில் காய்த்தால் சில நேரம் நமக்கே அருமை தெரியாமல் போய்விடுகிறது.

பனை மரத்தில் இருந்த நுங்கையும், தென்னை மரத்தில் இருந்த இளநீரையும் விட்டு வைக்கவில்லை. பொதுவாக தோட்டத்தில் மயில்களின் சத்தம் உச்சமாக கேட்கும், ஆனால் நாங்கள் வந்ததிலிருந்து ஒரு மயிலை கூட பார்க்கவில்லை. எனக்கு மனதிற்கு அது நெருடலாகவே இருந்தது. கொஞ்சம் காட்டு பறவைகளை பார்த்தால் தான் மனது சமாதானமாகும் என்று ஐந்தருவி அருகே தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை அமைத்திருந்த பூங்கா செல்லலாம் சென்று கிளம்பினோம்.

மாலை மூன்று மணி அளவில் தான் பூங்கா வாசலை சென்றடைந்தோம். வாசலிலேயே குருசர் (Cruiser) மற்றும் தமிழ் மறவன் பட்டாம்பூச்சிகளை பார்த்தவுடன் வேகமாக கட்டணம் செலுத்திவிட்டு உள்ளே நடக்க ஆரம்பித்தோம்.

தமிழ் மறவன்
“தமிழ் மறவன்” நம் தமிழ் மாநில பட்டாம்பூச்சியை நல்ல காட்டு பகுதிகளில் தான் காண முடியும்.

கூட்டம் பெரிதாக இல்லை , ஆனால் புதுமண தம்பதியினர்கள் புகைப்படம் எடுப்பதற்கு நிரம்பி வழிந்தனர். அந்த பூங்கா கோவையில் உள்ள கள்ளாறு பூங்கா மாதிரி இருந்தது , ஆனால் சுற்றுலா பயணிகள் நடப்பதற்கான இடங்கள் நிறைய இருந்தன. மிக உயரமான மரங்களும் அதில் படுத்து இளைப்பாறிக்கொண்டிருந்த கருமந்திகளும் (Nilgiri Langur) , கிடைத்ததையெல்லாம் பிடித்து தின்று கொண்டிருந்த மலையண்ணனும் அந்த கடும் வெயிலிலும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தன.

 கருமந்தி - nilgiri langur close up
மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் இந்த கருமந்திகள் , செம்முக மந்தி மாதிரி தொல்லை செய்யவே செய்யாது.

திரும்பிய இடமெல்லாம் பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. எனக்கு மிகவும் பிடித்தமான ரூபி தொண்டை புல்புல் ஜோடியாக அருகே இருந்த ஒரு கிளையில் வந்து அமர்ந்தன. தொலைவிலிருந்து காட்டுக்கோழியின் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.

பூங்காவில் அழகான சிலைகள், ஆங்காங்கே அமர்வதற்கு பெஞ்சுகள், நடைபாதைகள், அமர்ந்து உண்பதற்கான இடங்கள் என்று அரசாங்கம் நிறைய செய்திருந்தனர். தரை முழுவதும் மஞ்சள் புள்ளி (Yellow Dots ) என்ற வேற்று தேச செடியை பரப்பிவிட்டிருந்தனர். நம் நாட்டின் அனைத்து பூங்காக்கள் மாதிரியே இதுவும் பெரிதாக பராமரிக்கப் படவில்லை.

pathway inside five falls eco park with large trees
தமிழ்நாட்டில் வேறு எங்கும் இவ்வளவு அழகாக அரசாங்கம் பூங்கா அமைத்து பார்த்ததில்லை.

அதனால் காடு மாதிரியே இருந்ததால் அந்த பூங்காவை எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. மாலை 5 மணிக்கு பூங்காவை மூடிவிடுவார்கள் என்பதால் நாங்கள் பூங்காவை வேகமாக சுற்றிவிட்டு நாளை மறுபடியும் வரலாம் என்று கிளம்பினோம்.

மறுநாள் காலை 9 மணிக்கு தான் பூங்கா திறக்கப்படும் என்பதால் மெதுவாக கிளம்பி வந்தோம். வழியில் நுங்கு, பலாப்பழம் விற்றவர்களிடம் வேண்டாம் என்று தலையசைத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. ஞாயிற்று கிழமை என்பதால் கூட்டமாக இருக்குமோ என்று யோசனையுடன் சென்றால் அங்கே எங்களை தவிர வேறு எவரும் இல்லை.

elevated pathway five falls eco park
நம்மூரில் இம்மாதிரி இடங்களை பார்ப்பது கடினம்,அதிலும் சுத்தமாக பார்ப்பது மிக்க கடினம். கூட்டம் இல்லாததால் குப்பையும் இல்லை என்று நினைக்கிறேன்.

எங்களுக்கு அமைதியான இடம் தான் பிடிக்கும் என்பதால் உற்சாகமாக நடக்க ஆரம்பித்தோம். எளிதாக பார்க்க முடியாத தமிழ் அழகி (Tamil Lacewing), கருவேல் நீலன் (Acacia Blue) மற்றும் மலபார் ஜொலிப்பான்(Malabar Flash) பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. அவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தபோது வெள்ளி கோட்டு நீலன் (Silverstreak blue) பட்டாம்பூச்சி என் முன்னே வந்தமர்ந்து மிக அழகாக போஸ் குடுத்துவிட்டு பறந்தது.

ஓடை ஒன்று நாங்கள் சென்ற பாதை ஓரமாக ஓடிக்கொண்டிருந்தது, ஆனால் அதன் அருகே செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. அந்த காட்டோடையில் நீரோட்டமும் குறைவாகத்தான் இருந்தது, அதனால் அங்கே இருந்த பாறைகளில் ஏதாவது பட்டாம்பூச்சி அமர்ந்திருக்கிறதா என்று உற்று பார்த்துக்கொண்டிருந்த போது முன் இருந்த வேலியில் ஏதோ நகர்வது தெரிந்தது. என்னவென்று பார்த்தால் பச்சை பாம்பு (Green Vine Snake) ஒன்று இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

Green Vine Snake climbing a fence
அது என்னவோ என் ராசி, காட்டில் இதுவரை நான் பச்சை பாம்பை தவிர வேறு எந்த பாம்பையும் கண்டுபிடித்ததே இல்லை.

சீகார்ப் பூங்குருவி (Malabar whistling thrush) பின்ணணியில் லயித்து பாடிக்கொண்டிருந்தது.

இக்காட்சிகளை எல்லாம் அனுபவித்துக்கொண்டே நாங்கள் பூங்காவில் தொடர்ந்து நடந்தோம்.

சிறிது நேரத்தில் ஒரு மரத்தில் கச்சா முச்சா என்று பறவைகளின் கூப்பாடு கேட்கவே அம்மரத்தின் அருகே சென்றோம். நாங்கள் எதிர்பார்த்த மாதிரியே ஒரு வேட்டை கூட்டம் (Hunting Party) வந்திறங்கியிருந்தது. நான்கு வெல்வெட் நெற்றி பசை எடுப்பான் (Velvet-fronted nuthatch), ஒரு சின்ன மரங்கொத்தி (Brown-capped pygmy woodpecker), 2 கரிச்சான் (Ashy drongo), ஒரு மலபார் காட்டுகீச்சான் (Malabar woodshrike), 3 நீலச் சிட்டு (Fairy bluebird) தான் அவ்வளவு சத்தத்திற்கு காரணம்.

pair of  velvet fronted nuthatches climbing down a tree - beautiful blue colored bird india
நீல நிறத்தில் இவ்வளவு அழகான பறவைகள் நம்மூரில் இருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும். அதனால் தான் நாங்கள் இந்திய பறவைகள் வீடியோ ப்ராஜெக்ட் செய்ய ஆரம்பித்தோம்.

இந்த கூட்டத்திற்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு குக்குறுவான் பறவை மரத்தின் உச்சியில் தனியாக இருந்து கூவிக்கொண்டிருந்தது. நாள் முழுவதும் குக்குறுவான் சத்தத்தை கேட்டாலும், பறவையை சில தடவை தான் காணமுடியும். அதனால் எந்த வகை குக்குறுவான் என்று நான் பைனாகுலரில் பார்த்தால் அது மலபார் குக்குறுவான். மிகவும் வர்ணமிக்க அந்த சிறிய குக்குறுவானை சிறிது நேரம் ரசித்துவிட்டு தொடர்ந்து நடந்தோம்.

மதிய நேரம் ஆகிவிட்டது ஆனால் இதுவரை ஒரு ஐந்து செல்பீ பிரியர்கள் தவிர வேறு சுற்றுலா பயணிகள் யாரையுமே உள்ளே பார்க்கவில்லை. நாங்கள் அங்கே இருந்த படிகளில் ஏறி பெருதும் உபயோகிக்காத பாதையில் நடக்க ஆரம்பித்தோம். திடீரென்று ஒரு புதரின் அடியில் சலசலப்பு, என்னடா ஏதாவது மிருகம் ஓடுகின்றதா என்று நாங்கள் தேடுவதற்குள் தரையிலிருந்து ஒரு சின்ன வல்லூறு(Besra) பறந்து சென்று அருகில் இருந்த மரக்கிளையில் அமர்ந்தது.

Besra (சின்ன வல்லூறு) with a kill
சின்ன வல்லூறு எளிதாக பார்க்க முடியாத பறவை, அதிலும் அதன் உணவை பிடிக்கும் தருணத்தில் பார்த்தது இன்னும் அரிய அனுபவம்.

அந்த சின்ன வல்லூறு(Besra)  காட்டு ஓணான் (Calotes calotes) ஒன்றை காலில் இறுக பற்றியிருந்தது. அங்கே அமர்ந்து சாப்பிட போகிறதா என்று நினைப்பதற்குள் உணவை எடுத்துக்கொண்டு அந்த பருந்து பறந்துவிட்டது.

வலசை பருவம் முடிந்துவிட்டதால் ஈபிடிப்பான் பறவைகள் எதையும் பார்க்கமுடியவில்லை என்று பேசிக்கொண்டே நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். சிறிது நேரம் அங்கே இருந்த நடைபாதையின் ஓரத்தில் இருந்த சிலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். கருமந்திகளோ எங்களை சுவாரசியமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தன.

Tamilnadu statues inside eco park
மஞ்சள் புள்ளி செடிகள் கூடிய சீக்கிரம் அனைத்தையும் மூடி விடும் போல, அவ்வளவு அதிகமாக வளர்ந்து கிடந்தன. ஆனால் அதனிடையே இந்த சிலைகள் அழகாக இருந்தன.

ஒரு மரத்தில் அமைதியாக ஒரு பறவை அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு நான் அது கரிச்சான் குயில் (Drongo cuckoo) என்று கண்டறிந்து வினோத்தை அழைப்பதற்குள் அப்பறவை என்னை கவனித்துவிட்டு பறந்துவிட்டது. ஞாயிற்று கிழமையில் பொது இடத்தில் இவ்வளவு அமைதியாக நேரத்தை நம்மூரில் கழிக்க முடியுமா என்று பேசிக்கொண்டே பூங்காவின் நுழைவு வாயில் சென்றடைந்தோம்.

Staircase in eco-park courtallam tenkasi
மழைக்காலத்தில் இவ்விடம் இன்னும் அழகாக இருக்கும்.இயற்கை ஆர்வலர்கள் கண்டிப்பாக வருகை தர வேண்டிய பூங்கா இந்த அழகிய குற்றால பூங்கா.

அங்கே சென்றபின் தான் தெரிந்தது, கூட்டம் அனைத்தும் நுழைவு வாசல் அருகேயே இடம்பிடித்துக் கொண்டு நின்றன. நம்மூரில் கல்யாண புகைப்படம் வெளியிடங்களில் வைத்து எடுப்பது புதிய ட்ரெண்ட் போல, மாப்பிளைகளும் பெண்களும் விதவிதமாக உடையணிந்து போஸ் குடுத்துக்கொண்டிருக்க நம்ம குரங்கு கூட்டங்கள் அவர்களின் பைகளை தூக்கிக்கொண்டு ஓட எங்களுக்கு மிகவும் சிரிப்பாக இருந்தது. எங்களுடைய அமைதியான ஐந்தருவி குற்றால பூங்கா அனுபவம் கலவரமாகிவிட வேண்டாம் என்று வேகமாக அவ்விடத்திலிருந்து ஓட்டமெடுத்தோம்.


திரும்பிய இடமெல்லாம் பட்டாம்பூச்சிகள் – Butterflies of India – part 3