சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் பயணம்
நாங்கள் ஹாசனூரில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பிரிவு இதுவரை சென்றதில்லை. கொரோனா காலத்தில் வேறெங்கும் செல்ல முடியாமல் இருந்தபோது ஒருநாள் ஹாசனூர்-தலமலை வரை காரில் சென்று வரலாம் என்று கிளம்பினோம். அவ்விடம் செல்லும் வழியில் உள்ள பவானி சாகர் அணையையும் அப்படியே பார்த்துவிட்டு வரலாம் என்று பெரிய ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் இந்த ஒரு நாள் பயணத்திற்கு கிளம்பினோம். இந்த பயணத்தின் பின்பு எப்படி அருகில் இருந்த ஒரு அழகான இடத்தை இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்திருக்கிறோம் என்று எங்களை நாங்களே கேட்டு கொண்டோம்.
பவானி சாகர் அணை செல்லும் சாலை காலையில் மிகவும் அமைதியாக இருந்தது. பல இடங்களில் கருங்கொண்டை நாகணவாய் பறவைகள் கூட்டமாக பறந்து கொண்டிருந்தன. பாலைக்கொடிகள் ஆங்காங்கே கொத்துக்கொத்தாக மலர்ந்து கிடந்தன.
ஒரு இடத்தில் குட்டி பாலமும் அடித்து ஓடிக்கொண்டிருந்த நீரும் கண்ணில் பட்டதும் வண்டியை நிறுத்திவிட்டு அங்கே சென்றோம். அவ்விடத்தில் இருந்த நீர்படுகையில் ஊர் மக்கள் குளித்து ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர். மற்றொரு புறம் நம் மக்கள் காலை கடனை செவ்வனே செய்து கொண்டிருந்தனர். கொரோனாவில் உள்ள ஒரு நன்மை மாஸ்க் அணிவதால் துர்நாற்றங்களில் இருந்தாவது தப்பிக்க முடிகிறது.
ஒரு வழியாக அமைதியான நடைபாதையை கண்டுபிடித்தோம். அங்கே பட்டாம்பூச்சிகள் நிறைய பறந்து கொண்டிருந்தன, அவற்றை பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று பறவைகளுக்குள் ஒரே அமளி துமளி. வினோத் ஓடி சென்று என்னவென்று பார்த்தால் ஒரு பருந்து கருங்கொண்டை நாகணவாய் பறவையை பிடித்திருந்தது. அந்த பருந்து அதன் வேட்டையை தூக்க முடியாமல் பறந்து கொண்டிருந்தபோது ஒரு காக்கா வந்து அதை தட்டிவிட்டது. பருந்துக்கும் உணவாகாமல் அந்த நாகணவாய் பள்ளத்தில் சென்று விழுந்து விட்டது. ட்விங்கிள் படிக்கும்பொழுது காளியா காகம் மிகவும் நல்லது செய்வது போல இருக்கும், ஆனால் வனவாழ்வில் காளியா செய்வது அனைத்தும் தவறு.
பவானி சாகர் அணை
அவ்விடத்தில் இருந்து பவானி சாகர் அணை சென்றோம். கொரோனா காரணத்தினால் அணை இன்னும் திறக்கப்படவில்லை.
அதனால் அப்படியே தொடர்ந்து ஓட்ட ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் காட் ரோடு ஆரம்பித்து விட்டோம். தலைமலை சென்று சேர்வதற்கு 27 குண்டூசி வளைவுகள் இருந்தன. கொஞ்ச தூரம் மேலே ஏற ஆரம்பித்தவுடனே பச்சை மலைகள் மிகவும் அருகில் அழகாக தெரிந்தன. ஆனால் சிறிது நேரத்தில் போக்குவரத்து நெரிசலினால் அனைத்து வண்டிகளும் அப்படியே நின்று விட்டன. நாங்கள் சிறிது நேரம் சுற்றி இருந்த இயற்கை காட்சிகளையும் , தாவி ஓடிக்கொண்டிருந்த குரங்குகளையும், லெப்பர்ட் பட்டாம்பூச்சிகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். ஒரு வழியாக மேலே இருந்து லாரிகள் வர ஆரம்பித்தன. அப்பாடி வண்டி நகர ஆரம்பித்து விட்டதே என்று நாங்கள் நகர ஆரம்பித்தால் அடுத்த வளைவில் மறுபடியும் வண்டி நெரிசல்.
இவ்வாறே நாங்கள் பாதி குண்டூசி வளைவுகள் கடந்து வருவதற்குள் எங்களுக்கு ஏன்டா மேலே வண்டி ஓட்டி வந்தோம் என்றாகி விட்டது. பெரிய லாரிகள் கரும்புகளையும் தென்னை நாறுகளையும் பாரம் தாங்க முடியாமல் மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தன. ஓட்டுனர்களின் பொறுமை குறைய ஆரம்பித்து குரல் அதிகமாகியது. அதனால் மலை வளைவுகளில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு ஒரு வழியாக நாங்கள் ஹாசனுர் வந்தடைந்த போது நல்ல வெயில் வந்துவிட்டது. அதன் பிறகு பறவைகளை பார்ப்பது கடினம் ஆனால் பட்டாம்பூச்சிகளை நிறைய பார்க்கலாம்.
நான் பட்டாம்பூச்சிகளை ஒரு பக்கம் தேடிக்கொண்டிருந்து எதிரே வந்த மான்கூட்டத்தையே கவனிக்கவில்லை.
வினோத் வண்டியை ஏன் நிறுத்துகிறார் என்று திரும்பி பார்த்தால் சாலையோரத்தில் ஒரு மான் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. பகலில் சாலையோரத்தில் மான்களை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நாங்கள் வண்டியிலிருந்து ஒரு புகைப்படம் விரைவாக எடுத்துக்கொண்டு அந்த அழகிய மான் கூட்டத்தை தாண்டி சென்றோம். இந்த சாலையில் ஊர்காரர்களின் வண்டிகள் தவிர வேறு எந்த வண்டிகளும் இல்லை . அதனால் இரண்டு புறமும் மூங்கில் வளர்ந்து கிடந்த அந்த சாலையில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே மெதுவாக வண்டியில் சென்றோம்.
ஒரு யானையும் அதன் குட்டியும்
மூங்கில் காடுகளை பார்த்த உடனே நாங்கள் காட்டு காவல் கூட்டமான யானைகளை பற்றி பேசிக்கொண்டே சென்றோம். சில இடங்களில் மூங்கில்கள் உடைக்கப்பட்டு இருந்தன. நாங்கள் எதிர்பார்த்தவாறே எங்களுக்கு எதிர்புறம் வந்த ஒரு ஊர்காரர் , ஒரு யானை அங்கே நிற்கின்றது கவனமாக செல்லுங்கள் என்றார்.
நாங்கள் மெதுவாக காரை ஓட்டி சென்றோம், சிறிது தூரத்தில் ஒரு யானையும் அதன் குட்டியும் அது பாட்டுக்கு அதன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தன. யானையின் பலத்திற்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும், அதன் முன் சென்று நிற்பது வீரம் அல்ல,முட்டாள்தனம். நாங்கள் அந்த யானைகள் சாலையை கடக்கும் வரை பொறுமையாக நின்றுவிட்டு அதன் பிறகு அவ்விடத்தை கடந்து சென்றோம்.
பட்டப்பகலில் வனவிலங்குகள் பார்ப்போம் என்றே நினைக்கவில்லை , அதனால் மிகுந்த உற்சாகத்துடன் தொடர்ந்து சென்றோம். ஆனால் சிறிது நேரத்திலேயே எங்களுக்கு பெரிய ஏமாற்றம் ஆகிவிட்டது. மூங்கில் காடுகள் முடிந்து யூகலிப்டஸ் காடு வந்துவிட்டது , யூகலிப்டஸ் காட்டில் எந்த வன உயிரினங்களையும் பார்க்க முடியாது.
யூகலிப்டஸ் மரங்கள் முடிந்தவுடன் பெரிய தோட்டங்கள் வர ஆரம்பித்துவிட்டன. இம்மாதிரி இடங்கள் வந்து விட்டாலே நீங்கள் பல்லுயிர்களை மறந்து விட வேண்டியது தான் , மைனாக்களும் , சின்னான்களும் தான் இங்கே குதித்தோடிக் கொண்டிருப்பார்கள்.
இவை எல்லாம் கடுப்பேற்றியது பத்தாது என்று சாலையோரங்கள் முழுவதும் லேண்டனா செடிகள் வேறு முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டன. லேண்டனா செடிகள் ஒரு இடத்தில் வளர ஆரம்பித்து விட்டால் அவ்விடத்திலிருந்து அவற்றை நீக்குவது மிகவும் கடினம். 60 % புலிகள் காப்பகத்தில் இப்பொழுது இந்த செடி தான் வளர்ந்து கிடக்கின்றன. இந்த செடிகளினால் மான் , யானை , புலி என்று பல வன ஜீவராசிகள் கஷ்டப்படுகின்றன. ஆனால் இந்த செடிகளின் மலர்களில் உள்ள தேன்களை பட்டாம்பூச்சிகள் விரும்புவதால் பலருக்கு இந்த செடிகளின் தீங்குகள் உடனே புரிவது இல்லை. உல்லாச பயணிகள் இம்மலரை படம் பிடிப்பதை பல இடங்களில் பார்த்து இருக்கிறேன், ஆனால் மலர் விரும்பிகளான நாங்கள் இந்த மலரை பார்த்தவுடன் சோகமாகி விடுவோம்.
நாங்கள் கொஞ்சம் பட்டாம்பூச்சிகளை பார்த்துக்கொண்டே மறுபடியும் காட் ரோடு சென்றுவிட்டோம். அந்த சாலைகளில் இப்பொழுது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அமைதியாக இருந்தது. காட் ரோடில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஆடுகள் மேய்க்க முடியாததால் சாலையோரங்களிலும் , பாறை சரிவுகளிலும் நிறைய காட்டு செடிகளை பார்க்கலாம். லேண்டனா மலர்கள் பார்த்து திரும்பிய எங்களுக்கு சங்குநிதி மலரிலிருந்து (Crotalaria verrucosa) கோலியஸ் மலர் (Plectranthus barbatus) வரை அனைத்தும் மிகவும் அழகாக தெரிந்தன. செங்காந்தள் / கலப்பை கிழங்கு (Gloriosa superba) என்ற தமிழ்நாட்டு மாநில மலர் (Tamilnadu state flower ) பளிச்சென்று கொத்து கொத்தாக ஆங்காங்கே மலர்ந்து கிடந்தன. அந்த சிவப்பு , மஞ்சள் வண்ண மலர்களில் ஒரு ஆரஞ்சு டிப் பட்டாம்பூச்சி வந்து தேனீ அருந்தியது.
பாறைகளின் இடையே குறிஞ்சி வகையை சார்ந்த கோன் மலர்களை (Strobilanthes cordifolia) மலர்ந்து கிடந்தன.
அந்த மலர்களின் தேனை அருந்த காட்டு தேனீக்களை போட்டி போட்டுக்கொண்டிருந்தன. இக்காட்சிகளை எல்லாம் பார்க்கும் போது தான் பல்லுயிர்களின் முக்கியத்துவம் புரியும். சிறிய பயணம் என்றாலும் விதவிதமான இயற்கை காட்சிகளை ரசிக்க முடிந்ததால் நல்ல மழைக்காலத்தில் இவ்விடத்திற்கு மறுபடியும் வர வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.