வால்பாறை பயணம்
பூக்களை தேடி மழையில் சோலைக்காடுகளுக்குள் பயணம்
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மழை காடுகளில் மழை அதிகமாக பெய்யும் மாதங்களில் தான் அரிய வகை பூக்களும் மலரும் என்பதால் நாங்கள் வால்பாறைக்கு எப்பொழுதுமே மழை காலத்தில் தான் செல்வோம். இந்த வருடம் கொரோனா காரணத்தினால் எவ்விடமும் செல்ல முடியாமல் வீட்டில் அடைந்து கிடந்த எங்களுக்கு செப்டம்பர் மாதம் வால்பாறை சுற்றுலா பயணிகளுக்கு திறந்து விடப்பட்டது என்ற செய்தி கேட்டவுடன் மழையில் ஒரு பயணத்திற்கு தயாராகிவிட்டோம்.
நங்கள் ஆழியாறில் உள்ள வனசோதனை மையத்திற்கு அதிகாலை வந்து விட்டோம், 7 மணிக்கு வன அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கும் வரையில் அவ்விடத்தில் உள்ள மலையண்ணன் (Malabar Giant Squirrel), பேரலகு மீன்கொத்தி (Stork-billed Kingfisher) பறவையை பார்த்துக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் வன அதிகாரிகள் நுழைவு கட்டணத்தை வாங்கிக்கொண்டு எங்களை உள்ளே அனுமதித்தார்கள். நாங்கள் பல மாதங்களுக்கு பிறகு வனப்பகுதிக்கு வந்ததால் அதிக ஆர்வத்துடன் காட்டை ரசித்துக்கொண்டே வண்டியில் சென்றோம். ஒரு இடத்தில் அணை பகுதி நன்றாக தெரிந்தது. அங்கே வண்டியை நிறுத்திவிட்டு அணைநீரில் ஏதாவது தெரிகிறதா என்று பைனாகுலரில் வினோத் பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவ்விடத்தில் அருகே இருந்த பாறையில் ஏதாவது மலர் தெரிகின்றதா என்று தேடிக்கொண்டிருந்தேன். சில நிமிட தேடலுக்கு பிறகு நான் ஒரு அழகிய , அரிதான மஞ்சள் நிற வாண்டா ஆர்க்கிட் மலரை கண்டுபிடித்தேன்.
நான் உற்சாகமாக வினோத்திடம் அதை சொல்ல திரும்பியபோது , வினோத் அணையோரத்தில் யானை குடும்பம் ஒன்று நிற்கிறது என்று கூறினார். இவ்விடங்களில் வண்டியை விட்டு இறங்கி சுற்ற அனுமதி இல்லையென்பதால் நாங்கள் காரில் இருந்துகொண்டே யானைகளை,ஆர்க்கிட் மலரை படம்பிடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
காட்டு பாதைகளில் சில இடங்களில் லேண்டனா செடிகள் முளைத்துவிட்டன. கொஞ்சம் உயரம் செல்ல ஆரம்பித்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. சில இடங்களில் பன்னம் (Fern) செடிகள் மிகவும் அழகாக வளர்ந்திருந்தன, அங்கே வினோத்தை வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு நான் மலர் செடிகளை தேடினேன்.பச்சை பசேர் என்று வளர்ந்திருந்த செடிகளின் நடுவே ஒரு மெஜந்தா நிற மலர் என்னை கவர்ந்திழுத்தது.
மெஜந்தா கோஸ்ட் (Magenta Ghost Flower/Christisonia tubulosa)
மெஜந்தா கோஸ்ட் (Magenta Ghost Flower) என்ற அரிய வகையான அந்த மலர் இலைப்பச்சை இல்லாமல் வளரும் ஒரு ஒட்டுண்ணி செடி. 90 வருடங்களுக்கு பிறகு 2003-இல் தான் இம்மலரை மறுபடியும் மேற்கு தொடர்ச்சி மலையில் கண்டுபிடித்தார்கள். அப்பேற்பட்ட அரிய செடியை மழையின் நடுவில் நாங்கள் பார்த்துவிட்டதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள பாறைகளில் வளர்ந்திருந்த காட்டு மலர்கள் , செங்குத்தான ஒரு பாறையில் தாயும் சேயுமாக மேய்ந்து கொண்டிருந்த வரையாடுகள், திடீரென்று பறந்து ஒரு உயரமான மரத்தில் வந்தமர்ந்த ஒரு ஜோடி ஹார்ன்பில் என்று மிகவும் அழகான அனுபவங்களோடு வால்பாறை சென்றடைந்தோம். டிசம்பர் மரம் (Erythrina subumbrans), பட்டடி (Patadi / African Tulip) மரங்கள் ஆரஞ்சு வண்ண மலர்களுடன் பூத்துக்குலுங்கி கொண்டிருந்தன. சிறிது நேரம் அம்மரங்களில் வந்து ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த மலை நாகணவாய் (Hill Myna) , பிளித் நாகணவாய் (Blyth Starling) , குட்டைக்கிளி (Vernal hanging parrot) பறவைகளை ரசித்துவிட்டு வால்பாறையில் இருந்து சோலையாறில் நாங்கள் முன்பதிவு செய்திருந்த விடுதி நோக்கி சென்றோம்.
நாங்கள் விடுதியை வந்தடைந்தபோது மழை இன்னும் வலுவாக பெய்ய ஆரம்பித்தது. வெகு நேரம் கழித்து மழை கொஞ்சம் குறைந்ததும் விடுதியில் இருந்த மரங்களையும் , நீரோடையையும் சுற்றி வந்தோம். கருநீல வண்ணன் (Blue mormon) , நீர்பனி இலையொட்டி (Water snowflat) , மூங்கில் மர பழுப்பன் (Bamboo treebrown) போன்ற பட்டாம்பூச்சிகள் ஆங்காங்கே கண்ணில்பட்டன. ஒரு இடத்தில் பட்டை கழுத்து கீரி (Stripe necked mongoose) எங்களை ஆர்வமாக பார்த்துவிட்டு ஓடியது. அதற்குள் எங்கள் கால்களில் அட்டைகள் ஏற ஆரம்பித்துவிட்டன , மழையும் அதிகரித்துவிட்டது. அப்பொழுது ஆரம்பித்த மழை மறுநாள் அதிகாலை வரை தொடர்ந்து பெய்தது.
காலையில் மழை நின்றதும் சீகார்ப் பூங்குருவி (Malabar Whistling Thrush) எங்கள் அறையின் வாசலில் இருந்து பாடியது.அதை தொடர்ந்து அலகுச் சிலம்பன் (Scimitar Babbler) சத்தம் கேட்க ஆரம்பித்தது. நாங்கள் இந்த சிலம்பன் (Babbler) வீடியோ எங்களுடைய Indian Bird Videos project இதுவரை எடுத்ததில்லை என்பதால் அதன் பின்னால் சிறிது நேரம் ஓடினோம். கொஞ்சம் விடிய ஆரம்பித்தவுடன் மலர்களை தேடி சாலையில் நடக்க ஆரம்பித்தோம். மழையில் இரவு முழுவதும் நனைந்திருந்த மரங்களும் , மலர்களும் அந்த பனி படர்ந்த காலையில் மிக அழகாக இருந்தன.
மரத்தில் அமர்ந்து எங்களை பார்த்துக்கொண்டிருந்த நீலகிரி மந்தி (Nilgiri Langur), ஒரு கொய்யா பழத்தை ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்த மலபார் கிளி (Malabar Parakeet) , செடியில் குச்சி மாதிரியே தொங்கிக்கொண்டிருந்த குச்சிப்பூச்சி (Stick insect) என்று எங்கள் கண்ணில்பட்ட அனைத்தையும் வீடியோ எடுத்துக்கொண்டே சென்றோம். சோலையாறு அணையின் சரிவில் வாலாட்டி நீரில் விளையாடிக் கொண்டிருந்ததை அருகே சென்று பார்க்கலாம் என்று படியேறினோம். அங்கே நடந்து சென்று கொண்டிருந்த ஊர் மூதாட்டி ஒருவர் எங்களை பார்த்து “உள்ளே செல்லாதீர்கள் , அட்டை நிறைய இருக்கின்றது , எதற்கு இந்த மழை காலத்தில் இங்கு வந்து இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்” என்று கேட்டார். நாங்கள் மலையேறிய நேரத்திலிருந்து அட்டை கடியில் சுற்றி கொண்டிருக்கிறோம் என்பது அவருக்கு தெரியாது. நாங்கள் மழையில் பூக்களை தேடி உற்சாகத்துடன் சுற்றுகிறோம் என்றும் அவருக்கு புரியவில்லை , இருந்தாலும் அவர்களின் அக்கறையான அறிவுரைக்கு மரியாதை குடுத்து நாங்கள் உள்ளே செல்லாமல் சாலையிலேயே தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் திருநெல்வேலி பால்சம் ஒரு இடத்தில் மலர்ந்திருப்பதை கண்டோம்.
ஊரை தாண்டியதும் ஒரு சிறிய மலை இருந்தது. அம்மலையில் நிறைய பிங்க் நிற பால்சம் மலர்கள் மிக அழகாக மலர்ந்திருந்தன. மழை மறுபடியும் பெய்ய ஆரம்பித்தது , ஆனால் நாங்கள் மலர் தேடலை நிறுத்துவதாய் இல்லை. கிலுகியா மலர் (East Indian Klugia) மழையில் இன்னமும் பளிச்சென்று மிக அழகாக இருந்தது. வெண்தொண்டைச் சிலம்பன் (Tawny-bellied babbler) , தையல் சிட்டு (Tailor bird) எங்களை மாதிரியே மழையை பொருட்படுத்தாமல் புதர்களில் குதித்தோடிக்கொண்டிருந்தன. அணைநீர் நடுவே இருந்த ஒரு மொட்டை மரத்தில் பெரிய நீர்காகங்கள் (Great Cormorant) கூட்டமாக அமர்ந்திருந்தன. விஷ் போன் (Wishbone) மலர்கள் பாறைகளில் இருந்த புற்களின் இடையே மலர்ந்திருந்தன. சாலையில் சென்ற வண்டியில் உள்ளவர்கள் எங்களை மழையில் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று குழப்பத்துடன் பார்த்துக்கொண்டே சென்றார்கள்.
நான் பைனாகுலரை துடைத்து துடைத்து மலர்களை தேடிக்கொண்டிருந்தேன். மழைக்கு ஒதுங்கி இலையின் அடியே இருந்த சில பட்டாம்பூச்சிகளை வினோத் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த மழையில் கூட ஒரு கறுப்பு தாவி ஆகாயப்பூரிதம் மலரில் (Silky morning glory) மிகவும் அழகாக அமர்ந்திருந்தது. அஸ்பாரகஸ் (Asparagus adscendens) மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக் கிடந்தன. இந்த அழகிய காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று பாறையில் ஒரு மலர் வித்தியாசமாக இருந்தது. பைனாகுலரில் உற்று பார்த்து அதை டால் ஆர்க்கிட் (Doll orchid) என்று உறுதி செய்தேன்.
நாங்கள் நெடுநாளாக பார்க்க ஆசைப்பட்ட ஆர்க்கிட் திடீரென்று எங்கள் கண் முன்னால் இருக்கிறது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. ஒரே ஒரு செடி தான் மலர்ந்திருந்தது, அருகே இருந்த செடிகள் அனைத்திலும் மொட்டுகள் தான் இருந்தன. அதுவரை ஒரு ஆர்க்கிட் கண்ணில் படாதா என்று தேடிக்கொண்டிருந்த எனக்கு அந்த அனைத்து செடிகளும் மலர்ந்திருந்தால் இன்னமும் அழகாக இருந்திருக்குமே என்று தோன்றியது. “உனக்காக ஒரு மலர் மலர்ந்திருக்கிறது பார் , அதை நினைத்து சந்தோஷப்படு” என்று வினோத் கூறியதும் நான் சமாதானமாகிவிட்டேன்.
விடுதியை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் சென்ற வழியில் ஒரு கடையில் வடை போட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் சூடான வடையை மழையில் சுவைத்துக்கொண்டே விடுதி சென்றடைந்தோம். மாலை கொஞ்சம் மழை குறைந்ததும் சாலையில் மறுபடியும் நடக்க ஆரம்பித்தோம். எங்களை தாண்டி சென்ற போலீசார் புல்லுக்குள் காலை வைக்காதீர்கள் , ஒரே அட்டையாக இருக்கும் என்று கூறிக்கொண்டே சென்றார்.
நாங்கள் 100 அட்டைகளுக்கு ஏற்கனவே இரத்தம் கொடுத்துவிட்டோம் என்று அவருக்கு தெரியாது. அந்த மழையில் வேப்ப எண்ணை, லீச் சாக்ஸ் எதுவும் உபயோகமாக இல்லை. கொஞ்ச தூரம் சென்ற பின்னர் ஒரு ஆட்டோக்காரர் அங்கே ஒருவர் உங்களை கூப்பிடுகிறார் என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் காட்டிய இடத்தில் ஒருவர் எங்களுக்கு அங்கே அமர்ந்திருந்த பாம்புப் பருந்து (Crested Serpent Eagle) காட்டுவதற்காக காத்திருந்திருக்கிறார். நாங்கள் அந்த கழுகை ஏற்கனவே காலையில் பார்த்துவிட்டோம் இருந்தாலும் அவர் ஆர்வமாக எங்களுக்கு காட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் நன்றி சொல்லிவிட்டு நாங்கள் தொடர்ந்து நடந்தோம்.
மறுநாள் காலையில் காற்றோடு மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் ஊர் திரும்பலாம் என்று மழையில் வண்டி ஓட்ட ஆரம்பித்தோம். சில பாறைகளை மட்டும் நின்று பார்த்துவிடலாம் என்று ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினோம். நான் பார்த்த முதல் பாறையிலேயே ஒரு அரிய நாகதும்பா (Ceropegia candelabrum) மலரை பார்த்துவிட்டேன்.
இவ்வளவு அழகான மலரை பார்த்துவிட்டோம் என்று எங்களுக்கு ஒரே குஷி. கொஞ்ச தூரம் சென்ற பின் டீ எஸ்டேட் வர ஆரம்பித்தது , அந்த மழையிலும் அங்கே வேலை செய்பவர்கள் டீ இலைகளை பறித்துக்கொண்டிருந்தார்கள். டீ எஸ்டேட் எல்லையிலிருந்து காடு தொடங்கும் ஒரு இடத்தில் நான் 10 செந்நாய்களை (Dhole) பார்த்துவிட்டு வினோத்தை வண்டியை நிறுத்த சொன்னேன். நாங்கள் செந்நாய்களை (Dhole) படம் பிடித்துக்கொண்டிருந்த போதே எங்கள் அருகில் ஒரு சுண்டாங்கோழி (Red Spurfowl) மேய்ந்து கொண்டிருந்தது. இதை பார்ப்பதா அதை பார்ப்பதா என்று நாங்கள் பரபரத்து கொண்டிருந்தபோது ஒரு செதில் வயிற்று மரம்கொத்தி (Streak-throated Woodpecker) எங்களுக்கு மிக அருகில் வந்தமர்ந்தது. அருகே ஒரு மரத்தில் குடுமிப் பருந்து (Crested hawk eagle) எங்களை கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தது. கடந்த நாட்களில் மழை,காடு என்று சுற்றிக்கொண்டிருந்ததில் இந்த காட்டுயிர்கள் எங்களையும் அவர்களுடன் சேர்த்துக்கொண்டனவோ என்ற மகிழ்ச்சியான எண்ணத்துடன் வால்பாறைக்கு பிரியாவிடை கொடுத்து கிளம்பினோம்.
Thanks much 🙂
Thank you very much !!
Beautiful write up. Felt like I m travelling along with you.
Regards
Venkat
Beautiful write up. Felt like I m travelling along with you.
Regards
Venkataraman