மெரிட் தீவு – பறவைகளுடன் ஒரு நாள்

நான் இதுவரை இவ்வளவு நீல நிறத்தில் நீரை எங்கும் பார்த்தது இல்லை. காய்ந்த புல்கள் இவ்விடத்தின் அழகை மேலும் மெருகேற்றி காட்டின.
ப்ளோரிடா மாகாணம் என்றவுடனே பலருக்கும் நினைவுக்கு வருவது டிஸ்னி லேண்ட் அல்லது கடற்கரை. ஆனால் இயற்கை பிரியர்களான எங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அலிகேட்டர். அலிகேட்டர்களை பார்ப்பதற்காக எவெர்க்லேட்ஸ் செல்லலாம் என்று முடிவு செய்தோம். எவெர்க்லேட்ஸ் தவிர வேறு எங்கு எல்லாம் பறவைகள் பார்க்க செல்லலாம் என்று பார்த்தபோது மெரிட் தீவை பற்றி கண்டறிந்தோம். மெரிட் தீவு ப்ளோரிடா மாகாணத்தின் ஏர்போர்ட் அருகில் இருந்ததால் எவெர்க்லேட்ஸ் செல்வதற்கு முன்பு மெரிட் தீவிற்கு சென்றோம்.
மெரிட் தீவு வனவிலங்குகள் காப்பகம் மெரிட் தீவில் நாசா விண்வெளி நிலையம் அருகில் உள்ளது. 140,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த காப்பகத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன.

இந்த சிறிய நீல நாரை பறவையை வட அமெரிக்காவில் மெக்ஸிகோ வளைகுடாவில் மட்டுமே காணமுடியும். சதுப்பு நிலங்களில் காணப்படும் இந்த நாரையை பார்த்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
நாங்கள் எவெர்க்லேட்ஸ் செல்லும் வழியில் இந்த காப்பகத்திற்கு செல்ல முடிவு செய்ததால் ஒரு நாள் மட்டுமே இவ்விடத்தில் சுற்றுவதற்கு திட்டம் வைத்திருந்தோம். ஒரு நாள் அல்ல ஒரு மாதம் இருந்தாலும் முழுதாக பார்க்க முடியாத பரப்பளவில் இருந்தது அந்த காப்பகம். ஆனால் ஒரு நாளில் ஒரு வலைப்பதிவிற்கு மட்டுமல்லாது ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு நிகழ்வுகள் நடந்தன.
நாங்கள் மெரிட் தீவில் உள்ள காப்பகத்திற்கு வருமுன்னரே ஒரு அரிய வனவிலங்கை பார்ப்போம் என்று நினைக்கவே இல்லை. பொதுவாகவே ஊர்திகள் நெடுஞ்சாலைகளில் பறக்கும், அமெரிக்காவில் கேட்க வேண்டுமா என்ன ? அப்படி ஒரு நெடுஞ்சாலையில் மெரிட் தீவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாலையில் ஏதோ மெதுவாக ஊர்ந்து செல்வது தெரிந்தது. அது ஊர்ந்து செல்லும் வேகத்தையும் விதத்தையும் வைத்து ஆமை என்று தெரிந்தது. அது வந்து கொண்டிருந்த வேகத்திற்கும் அங்கு வண்டிகள் சென்று கொண்டிருந்த வேகத்திற்கும் கண்டிப்பாக சாலையை பத்திரமாக தாண்டி கொள்ள முடியாது என்று எங்களுக்கு புரிந்தது. வினோத் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, தாண்டி வரும் வண்டிகளுக்கு வேகமாக கையசைத்தார்.
நான் காரில் பதைபதைப்போடு இந்த காட்சிகளை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். வினோத் வேகமாக சாலையில் ஓடி ஆமையை கையில் எடுத்துக்கொண்டு சாலையின் மறுபக்கம் சென்றடைந்தார். மரங்கள் அடர்ந்திருந்த அவ்விடத்தில் ஆமையை பாதுகாப்பாக விட்டுவிட்டு சாலையை கடந்து வந்து சேர்ந்தார். உற்சாகமாக வண்டியில் ஏறிய வினோத் அந்த ஆமை கோபர் (Gopher Tortoise) என்று கூறினார். கோபர் ஆமை காடுகள் அழிவதால் அழிந்து வரும் இனங்களில் ஒன்று. இந்த ஆமையின் வளையில் முந்நூறுக்கும் மேற்பட்ட பிற உயிரினங்கள் வாழ முடியுமென்பதால் இந்த ஆமை ஒரு காட்டின் நல்லியக்கத்திற்கு முக்கிய புள்ளியாக கருதப்படுகிறது. அப்படி ஒரு சிறப்பு மிக்க ஆமையை கண்டது மட்டுமில்லாமல் வினோத் அதை தொட்டு தூக்கியும் , காட்டில் பாதுகாப்பாக விட்டதும் மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது.

அமெரிக்கா மக்களால் மிகவும் வெறுக்கப்படும் மிருகம் இந்த ரக்கூன். ஆனால் கண்ணில் கரும்பட்டை வைத்து இருக்கும் இந்த விலங்கை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். சாலைகளில் அதிகமாக அடிபடும் மிருகம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம் . ஆமையை விட்டுவிட்டு சாலையின் மறுபுறம் பார்த்தால் இந்த அழகிய முகம் எங்களை உற்று பார்த்துக்கொண்டிருந்தது.
ஆமை மற்றும் ரக்கூன் பற்றி பேசிக்கொண்டே மெரிட் தீவு வனவிலங்கு காப்பகம் உள்ளே சென்றுவிட்டோம். 140,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள மெரிட் தீவை எப்படி சில வரிகளில் வர்ணிக்க முடியும் ? ஆனால் நான் ஒன்று மட்டும் சொல்ல முடியும், அந்த பளிச்சென்ற சூரிய ஒளியில் நீர்நிலைகள் ஜொலித்ததையும் , இறக்கையை விரித்துக்கொண்டு அமர்ந்திருந்த பாம்புத் தாராக்களும் , பறந்து கொண்டிருந்த விறால் அடிப்பானும் , நீர்நிலைகளின் அருகே வளர்ந்திருந்த பனை வகை மரங்களும் , நாங்கள் அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தையே அழித்துவிட்டன.

விரால் அடிப்பான் என்று அழைக்கப்படும் இந்த கழுகு இந்தியா உட்பட உலகமெங்கும் காணப்படுகிறது. பெரும்பாலும் நீர்நிலைகளை ஒட்டி காணப்படும் இந்த கழுகு மீன் பிடிப்பதில் அதி திறமைசாலி.
அமெரிக்காவில் பொதுவாக பைன் வகை மரக்காடுகளே அதிகம் காணப்படும். அதனால் இவ்விடம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. நாங்கள் நீரில் நிறைய பறவைகளை எதிர்பார்த்தோம், ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதை பற்றி பேசிக்கொண்டு வந்துகொண்டிருந்தோம்.
திடீரென ஒரு பனை வகை மரத்தில் ஏதோ நகர்வதை பார்த்து வினோத்தை வண்டியை நிறுத்த கூறினேன். கேமராவை எடுத்து மரத்தில் ஊர்ந்தது என்னவென்று பார்த்த பின்பு தான் எனக்கு தெரிந்தது, அந்த மரப்பட்டையில் இருந்தது பாம்பென்று. பாம்பை பார்த்ததும் நான் மனதிற்குள் “இவ்விடத்தில் செடிகளின் மேல் கை வைத்து விடக்கூடாது போல” என்று யோசித்துக்கொண்டிருந்தபோது வினோத் மிகவும் உற்சாகமாக பாம்பை படம்பிடிக்க ஆரம்பித்தார். வினோத் அப்பாம்பின் பெயர் “கார்ன் ஸ்நேக்” (Corn Snake) என்று கூறினார். இந்த பாம்பிற்கு மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு விஷம் கிடையாது என்றும் எலி வகைகளை தான் சாப்பிடும் என்று வினோத் கூறினார்.

கார்ன் ஸ்நேக் வளைந்து நெளிந்து மரப்பட்டையில் இருப்பது பாம்பு பிரியர்களுக்கு மிகவும் அழகாக கண்ணுக்கு தெரியும். ஆனால் மற்றவர்களுக்கு மிகுந்த பயத்தையே கொடுக்கும். எனக்கு பாம்பை பார்த்தபோது கொஞ்சம் பயமாக இருந்தாலும், அதன் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
இவ்வளவு விளக்கத்திற்கு பிறகும் எனக்கு அந்த பாம்பின் நீளத்தை பார்த்து கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால் நான் இதுவரை பார்த்த பாம்பு வகைகளில் இப்பாம்பு தான் மிகவும் அழகாக இருந்தது. நாங்கள் உள்ளே காப்பகத்திற்கு நுழைந்த நேரத்திலிருந்து ஒரு வண்டி கூட எங்களை தாண்டி செல்லவில்லை. ஆள் நடமாட்டம் மிகவும் இல்லாத இடமென்பதால் இங்கே நிறைய பாம்புகளை பார்க்கலாம் என்று வினோத் உற்சாகமாக கூறியபோது எனக்கு மனதிற்குள் ஒரே உதறல். எனக்கு ஊர்வனங்களை பொறுத்தவரையில் ஒருவருக்கொருவர் ஒரு தொலைவில் இருந்தே பார்த்துக்கொண்டால் மகிழ்ச்சி.
பாம்பை பார்த்து முடித்த பின்பு சிறிது தூரம் வண்டியிலே சென்று கொண்டிருந்தோம். ஓல்ட் ஹமாக் பாதை (Old Hammock trail) என்று ஒரு பெயர் பலகை மண் சாலையின் ஓரத்தில் தெரிந்தது. எப்பொழுதுமே தரையில் இறங்கி நடக்க ஆரம்பித்தால் தான் பல்லுயிர்களை பார்க்க முடியும். அதனால் நாங்கள் உற்சாகமாக ஒரு சிறிய பையை மட்டும் மாட்டிக்கொண்டு நடைபாதைக்கு சென்றோம்.எங்களை உள்ளே வரவேற்பது போல ஒரு பட்டாம்பூச்சி மிகவும் மெதுவாக தத்தி தத்தி பறந்து வந்தது. நான் அதுவரை பார்த்திருந்த பட்டாம்பூச்சிகள் மாதிரி இல்லாமல் வேறு வடிவத்தில் இருந்தது. நான் என்னவென்று யோசிப்பதற்குள் “ஸிப்ரா லாங்விங்” (Zebra Longwing) என்று வினோத் பட்டாம்பூச்சியின் பெயரை கூறினார்.

ஸிப்ரா லாங்விங் பட்டாம்பூச்சி இரவு நேரத்தில் இரையாகி விடாமல் இருப்பதற்காக கூட்டமாகவே உறங்கும். நாலெட் என்ற பூச்சிகொல்லியின் உபயோகத்தால் இந்த பட்டாம்பூச்சியின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.
இந்தியாவின் இருக்கும் பட்டாம்பூச்சிகளின் பெயர் மட்டுமல்லாமல் செல்லும் நாடுகளில் உள்ள ஒவ்வொரு பட்டாம்பூச்சி வகைகளையும் பிற உயிரினங்கள் பெயரையும் எப்படி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டவாறே உள்ளே நடக்க ஆரம்பித்தேன். நாங்கள் நடந்து சென்ற நடைபாதை சுற்றி மிக அடர்ந்த மரங்கள் இருந்ததால் பாதை கொஞ்சம் இருட்டாகவே இருந்தது. அதுவரை திறந்த சாலையில் பளிச்சென்ற வெயிலில் வண்டியை ஒட்டிக்கொண்டு வந்த எங்களுக்கு திடீரென்று வேறு ஏதோ காட்டுக்குள் சென்றுவிட்டது போல இருந்தது.
பறவைகளின் சத்தம் கூட இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்த நடைபாதையில் தொடர்ந்து நடக்கலாமா இல்லை சாலையில் நன்கு வெளிச்சத்திற்கே சென்று விடலாமா என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்த போது தரையில் இலை சருகுகள் நகரும் சத்தம் கேட்டது. நான் ஏற்கனவே தரையில் எங்கு பாம்பு ஓடுமோ என்று கவனமாக கால் வைத்து நடந்து கொண்டிருந்தேன். இதில் சத்தம் கேட்டவுடன் நான் உடனடியாக பாம்பாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் சத்தம் கேட்ட இடத்தில் ஒரு தடியான வால் மட்டும் தெரிந்தது. வாலின் அமைப்பை பார்த்தவுடனே அந்த விலங்கு நல்லங்கு (Armadillo) என்று தெரிந்துவிட்டது. நல்லங்கு விலங்கை அமெரிக்கா கண்டத்தில் மட்டுமே காணமுடியும்.

நல்லங்கு விலங்கை வாழ்நாளில் காட்டில் நேரில் பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. இம்மாதிரி சிறிய விலங்குகளை நாம் ஏகதேசம் தொலைத்து விட்டோம். மிஞ்சி இருக்கும் விலங்குகள் மிகவும் ஒதுங்கியே வாழ்கின்றன.
வால் மட்டுமே கண்ணுக்கு தெரிந்ததால் மெதுவாக நல்லங்கின் அருகில் சென்றோம். அதுவோ முகத்தை நன்றாக புற்களுக்குள் விட்டுவிட்டு மெதுவாக நகர்ந்து கொண்டே இருந்தது. அதற்கு நாங்கள் தொந்தரவாக தெரியவில்லை என்பதால் நாங்களும் பொறுமையாக அதன் பின்னே நடந்து கொண்டே இருந்தோம். சிறிது நேரம் கழித்து அது மறுபக்கம் ஓடியபோது தான் அதன் முகத்தை பார்த்தோம். எவ்வளவு வித்தியாசமான விலங்கு !!
சிறிது நேரம் அதே நடைபாதையில் நடந்து சென்ற பின் ஒரு ரயில் பாதை சென்றது. ரயில் பாதை அருகே மரங்கள் இல்லாததால் பளிச்சென்று வெளிச்சம் இருந்தது. அங்கே பல வகை பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன, நாங்கள் அதுவரை பார்த்திராத வன மலர்கள் நிறைய இருந்தன. இயற்கை அழகை பார்த்து ரசித்துக்கொண்டே நாங்கள் திரும்பி நடக்க ஆரம்பித்தோம்.

அமெரிக்காவில் மற்ற மாகாணங்களில் பனி கொட்டும் டிசம்பர் மாதத்தில் பிளோரிடா மாகாணத்தில் நல்ல வெயில். பட்டாம்பூச்சிகள் மாதிரி நாங்களும் சூரிய கதிர்களை ரசித்துக் கொண்டே மெரிட் தீவில் சுற்றினோம்.
இந்த ட்ரைல் நடந்து முடிந்தபின் காரில் சிறிது நேரம் பயணித்து ஸ்கிரப் ரிட்ஜ் ட்ரைல் சென்றோம். இந்த ட்ரைல் மிகவும் சிறியது என்றாலும் ஸ்கிரப் வகை செடிகளை இங்கே காணலாம் என்பதால் அச்செடிகளை சார்ந்த உயிரினங்களை பார்க்க முடியும். முக்கியமாக அழிந்து வரும் இனங்களில் ஒன்றான ஸ்கிரப் ஜே பறவையை இங்கு காணமுடியும் என்று கேள்விப்பட்டிருந்தோம். இந்த ட்ரைலில் உள்ள செடிகளை பார்த்துக்கொண்டே சென்று கொண்டிருந்தபோது புற்களின் இடையே ஒருவர் மெதுவாக புல்லை அசை போட்டுக்கொண்டே நடந்து கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல, கோபர் ஆமை தான். ஒரே நாளில் இந்த அரிய வகை ஆமையை இருமுறை பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது . அந்த ஆமை எங்களை கண்டுகொள்ளவே இல்லை. அவ்வளவு சாதுவாக புற்களை சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆமையை பார்த்தபோது, இதையும் மனித இனம் வேகமாக அழித்து வருகிறதே என்று மனதுக்கு மிகவும் வருத்தமாகவும் இருந்தது.
அரிய வகை கோபர் ஆமை

மெரிட் தீவில் நிறைய அரிய வன இனங்களை கண்டோம் , ஆனால் அவற்றில் மிகவும் முக்கியமான விலங்கு இந்த கோபர் ஆமை. நாற்பது வருடங்களுக்கு மேல் உயிர் வாழும் இந்த ஆமை இனத்தை மனிதர்கள் கறிக்காக வேட்டையாடுகிறார்கள் என்பது வருத்தத்துக்கு உரியது.
இந்த ஆமையை எங்கள் வாழ்நாளில் மறுபடியும் பார்ப்போம் என்று நம்பிக்கையே இல்லை, அதனால் அந்த ஆமையை எவ்வளவு ரசிக்க முடியுமோ அவ்வளவு ரசித்துவிட்டு நாங்கள் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம்.
நாங்கள் இந்த ட்ரைலில் நடக்கும்போது மதிய நேரம் ஆகிவிட்டது. அதனால் ஸ்கிரப் ஜே பறவையை பார்க்க இயலாது என்று நாங்கள் பேசிக்கொண்டே சென்ற போது திடீரென்று ஒரு பறவை சத்தம் கேட்டது. நீல நிறத்தில் நாங்கள் தேடிய ஸ்கிரப் ஜே பறவை ஒரு குச்சியில் உட்கார்ந்து கொண்டு எங்களை பார்த்து ஏதோ பேச ஆரம்பித்தது. நமக்கு தான் பறவை பாஷை தெரியாதே, இருந்தாலும் அது தொடர்ந்து எங்களை பார்த்து பேசியதில் குறை கூறும் தொணி இருந்தது. உலகத்தில் அந்த பறவையின் இருப்பிடங்களை எல்லாம் அழித்துவிட்டு மிஞ்சி இருக்கும் கடைசி இடத்திற்கும் வந்து தொந்தரவு செய்கிறீர்களா என்று கேட்பது போல் இருந்தது.

ப்ளோரிடா ஸ்கிரப் ஜே பறவை அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் புதர் காடுகளில் மட்டுமே காணப்படும் பறவை. புதர் காடுகள் ப்ளோரிடாவில் வேகமாக அழிந்து வருவதால் இப்பறவை இனமும் அருகிவரும் நிலையடைந்து விட்டது.
அதனால் ஸ்கிரப் ஜே பறவையை அதற்கு மேல் தொந்தரவு செய்யாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தோம். ஒரு நாளில் பல வகை அரிய உயிரினங்களை இந்த மெரிட் தீவில் பார்த்துவிட்டோம். இவ்வளவு சிறப்புமிக்க மெரிட் தீவை அவ்விடத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பார்கள் என்ற நம்புகிறேன்!!
Sure, we are from Tamilnadu!
I would like to join you if you are anywhere in South.
I want to record sounds of birds.