டெத் வேலி தேசிய பூங்கா – ஒரு அழகிய பாலைவனம் 


டெத் வேலி அமெரிக்காவிலேயே உள்ள பெரிய தேசிய பூங்கா. 3,373,063 ஏக்கர் பரப்பளவில் உள்ள டெத் வேலி தேசிய பூங்கா, அமெரிக்கா கண்டத்திலேயே உள்ள சூடான, காய்ந்த இடமாகும். 1849 ஆம் ஆண்டு தங்க வயல் தேடி வந்த ஐரோப்ப அமெரிக்கர்களில் ஒரு கும்பல் வழி தவறி இங்கு வந்து இறந்துவிட்டதால், இவ்விடத்திற்கு டெத் வேலி என்று பெயர் வந்தது. பெயருக்கு மாறாக அவ்வளவு சூடான வெப்பநிலையிலும் கூட பல வகை உயிரினங்கள் இந்த பூங்காவை தங்களின் உறைவிடமாக வைத்திருக்கின்றன. டெத் வேலி சுற்றுவட்டாரத்தில்  போராக்ஸ் தாது தோண்டப்பட்டதால் சில வருடங்கள் இவ்விடம் பிரபலமாக இருந்தது. டெத் வேலியில் உள்ள உப்பளங்கள், பல வகை உப்புகளுக்கும், போராக்ஸ், ஹைட்ரேட் போன்ற தாது பொருட்களுக்கும் பெயர் போனது. விதவிதமான சுற்றுசூழல் கொண்ட டெத் வேலியில் பல சுற்றுலாதளங்கள் உள்ளன. வெயில் அதிகமாக உள்ள இடமென்பதால், இவ்விடங்களை சுற்றி பார்ப்பதற்கு தனி சக்தி வேண்டும். 

சப்ரிஸ்கி பாயிண்ட் (Zabriskie Point)

 

டெத் வேலி தேசிய பூங்காவின் கிழக்கில் இருக்கும் சப்ரிஸ்கி பாயிண்ட்,  பர்னஸ் க்ரீக் ஏரி (Furnace Creek Lake)  ஐந்து மில்லியன் வருடங்களுக்கு முன்பு காய்ந்து போனபோது உருவான இடம். அரிப்பினாலும் காலத்தினால் உள்ள மாற்றங்களாலும் உருவாகிய இடமென்பதால், நாம் பொதுவாக பார்க்கும் இயற்கை காட்சிகள் மாதிரி இல்லாமல்  இவ்விடம் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். சப்ரிஸ்கி பாயிண்ட் (Zabriskie Point) அதிகாலையில் சூரியன் உதிக்கும் போது செல்ல வேண்டும். சூரியக்கதிர்கள் இவ்விடத்தின் மேல் படும்போது, இந்த காய்ந்த பூமி மிக அழகாக தெரியும். நாங்கள் அதிகாலையில் குளிரில் இவ்விடத்திற்கு சென்றபோது, ஏகப்பட்ட புகைப்படக்காரர்கள் சூரிய உதயத்தை எடுப்பதற்கு நின்று கொண்டிருந்தார்கள். சுற்றுலா பயணிகளை விட புகைப்படக்கார்கள் நிறைய பேரை இங்கே கண்டோம். 

பாலைவனத்தில் வாழும் அரிய உயிரினங்கள்

டெத் வேலி பப் மீன் (Death valley pupfish)

பாலைவனத்தில் மீன் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறீர்களா ? டெத் வேலியில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே இந்த பப் மீன் இருக்கின்றது. மிகவும் சிறிய இடத்தில் இருப்பதால் இம்மீன் அழிந்து போகும் ஆபத்தான நிலையில் உள்ளது. நாங்கள்  பல்லுயிர் ஆர்வலர்கள் என்பதால் டெத் வேலி சென்ற போது, இந்த பப் மீன் இருக்கின்ற சால்ட் க்ரீக் (Salt Creek) சென்றோம். சுற்றுலா பயணிகள் க்ரீக்கை  சேதப்படுத்தாமல் நடப்பதற்கு ஏற்ப மரப்பாலம் அழகாக போடப்பட்டிருந்தது. அந்த சிறிய உப்பு நீர் தேக்கத்தில் மற்ற மீன் வகைகளால் உயிர் வாழ முடியாது. ஏனென்றால் அந்த நீரில் உப்பு அளவு கடலை விடவும் நான்கு மடங்கு அதிகமாக இருக்கும், தண்ணீரின் வெப்ப நிலையும் 47 °C வரை செல்லும். பப் மீன் இனசேர்க்கை காலத்தின் போது நீல நிறத்தில் இருக்கும். அதனால் நாங்கள் நீல நிற மீனை தேடினோம், ஆனால் ஒரு மீன் கூட கண்ணில் படவில்லை. சிறிது நேரம் வெயிலில் கண் வலிக்க தேடிய பின்பு மணல் வண்ணத்திலேயே இருந்த பப் மீனை கண்டுபிடித்தோம். நாங்கள் சென்ற மாதம் இனசேர்கை இல்லை போலும், அதனால் பப் மீன்களை நீல நிறத்தில் பார்க்க முடியவில்லை. 

உபிஹிபி  கிரேட்டர் (Ubehebe Crater)

உபிஹிபி எரிமலை பள்ளத்தாக்கு டெத் வேலி தேசிய பூங்காவின் வடக்கு பகுதியில் உள்ளது. இந்த 2000-7000 வருட பழமையான பெரிய பள்ளத்தாக்கு 500 – 777 அடி ஆழத்தில் உள்ளது. கார் பார்க்கிங் இடத்தில் இருந்து பள்ளத்தாக்கு கீழே வரை செல்வதற்கு வழி உள்ளது. குழந்தைகள் வேகமாக கீழே இறங்கி,ஏறி ஓடி வருவதை பார்த்துவிட்டு நாங்களும் குடுகுடுவென்று பள்ளத்தாக்கின் கீழே இறங்கி விட்டோம். ஆனால்,திரும்பி ஏறுவதற்குள் பட்டபாடு இருக்கிறதே!! நாங்கள் இமாலய மலையெல்லாம் ஏறி இருக்கிறோம். ஆனால் இந்த பள்ளத்தாக்கில் இருந்த சூட்டினாலோ, வண்டல்களினால் வழுக்கி, வழுக்கி ஏறியதாலோ என்னவோ மேலே ஏறுவதற்குள் தெம்பெல்லாம் போய்விட்டது. இருப்பினும், உபிஹிபி  கிரேட்டரின் கீழ் வரை இறங்கியது  இன்று வரை மறக்காத ஒரு நல்ல அனுபவம்.

மெஸ்கெட் மணல் மேடுகள் (Mesquite Flat Sand Dunes)

மெஸ்கெட் மணல் மேடுகள் டெத் வேலி தேசிய பூங்காவின் வடக்கு பகுதியில் உள்ளது. இந்த மணல் மேடுகளை சுற்றிலும் மலைகள் உள்ளதால், இந்த அழகிய இயற்கை காட்சியை நிறைய படத்தில் காட்டியிருப்பார்கள். உலக பிரசித்தி பெற்ற ஸ்டார் வார்ஸ் (Star Wars) படத்தை கூட இந்த மணல் மேடுகளில் படமெடுத்திருக்கிறார்கள். பாலைவன மணல் மேடுகளும் எரிமலை பள்ளத்தாக்கை போலவே பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், நடப்பதற்கு மிகவும் கடினமான இடங்கள். ஆனால் கண்டிப்பாக வாழ்க்கையில் இந்த மாதிரி வித்தியாசமான சுற்றுசூழலையும், தட்பவெப்ப நிலையையும் அனுபவித்தால் தான், உலகம் எவ்வளவு வித்தியாசமானது என்று புரியும். இந்த பாலைவனத்தில் கூட கிரேஸோட்,மெஸ்கெட் புதர்கள் ஆங்காங்கே வளர்ந்திருந்தன.  

பாலைவன மலர்கள் (Desert Flowers)

அமெரிக்காவிலேயே உள்ள காய்ந்த, மிக சூடான பகுதியில் மலர்களை பார்க்க முடியுமென்றே யோசிக்க முடியாது, அதிலும் மிக அழகான மலர்களை கொத்து கொத்தாக பார்ப்போம் என்றே நாங்கள் நினைக்கவில்லை. 1000 வகை செடிகள் டெத் வேலி தேசிய பூங்காவில் உள்ளன, அதிலும் 23 வகைகளை டெத் வேலியில் மட்டுமே பார்க்க முடியும். நீரே இல்லாத இந்த டெத் வேலியில் திடீரென்று கொஞ்சம் மழை வந்தால் டெஸெர்ட் கோல்ட் (Desert gold), மணல் வெர்பனா (Sand verbena) போன்ற மலர்கள் தரை முழுவதும் பூத்துக் குலுங்கும். நாங்கள் செல்லும்போது சூப்பர் ப்ளூம் இல்லையென்றாலும் நிறைய மலர்களை பார்த்தோம். பாலைவனம் என்றாலே விதவிதமான கற்றாழை செடிகளை மட்டும் பார்க்கலாம் என்று நினைத்திருந்தோம், ஆனால் பல விதமான செடிகளையும் மலர்களையும் பார்க்க முடியும் என்று இங்கு தான் தெரிந்து கொண்டோம்.

பாலைவன பறவைகள் (Desert Birds)

செடிகள் இருந்தாலே அதை சுற்றி மற்ற உயிரினங்களை பார்க்கலாம். பல்லி,ஓணான்,முயல் எல்லாம் வெயிலில் இருந்து தப்பிப்பதற்கு புதர்களில் ஒளிந்து கிடந்தன. பூக்கள் இருந்தாலே பட்டாம்பூச்சியும் இருக்க வேண்டுமே ! ஆனால், இவ்வளவு அதிகமான வெப்பத்தில் பட்டாம்பூச்சிகள் தாக்குப்பிடிக்க முடியாதென்பதால், இரவு நேரத்தில் பக்கிகள் மகரந்த சேர்க்கையை செய்கின்றன. 

நாம் ஒரு நாள் நீர் இல்லையென்றாலே தளர்ந்து விடுவோம். ஆனால், இவ்வளவு கடினமான சுற்றுசூழலில் 31 வகை விலங்குகள் , 307 பறவை வகைகள் , 36 ஊர்வன வகைகள் ,  2 மீன் வகைகள், 1000 செடி வகைகள் இருப்பது எவ்வளவு ஆச்சரியமான விஷயம். இங்கே உள்ள உயிரினங்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் சுற்றுசூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டன. ஆனால் மனிதர்கள் சுற்றுசூழலை தங்களுக்கு ஏற்ப மிகவேகமாக மாற்றிக்கொள்வதால் , மழை காடுகள் கூட பாலைவனமாக மாறிவிடும் போல!