ஜோஷுவா மரம் தேசிய பூங்காவில் கேம்பிங் அனுபவம்
அமெரிக்கா என்றாலே சுற்றுலா பயணிகள் லாஸ் வேகாஸ் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் இயற்கை பிரியர்களான எங்களுக்கு லாஸ் வேகாஸ் சுற்றி உள்ள பாலைவனத்தை பார்க்க மட்டுமே ஆசை. லாஸ் வேகாஸில் இருந்து 180 மைல் தூரத்தில் இருக்கும் ஜோஷுவா தேசிய பூங்காவிற்கு செல்ல முடிவு செய்தோம். கலிஃபோர்னியாவில் ரெட் வுட் (Red Wood) மரங்களை பார்த்ததில் இருந்து அமெரிக்காவில் உள்ள தனித்துவம் வாய்ந்த மரங்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். Yucca brevifolia என்ற ஜோஷுவா மரத்தை மோஜாவே பாலைவனத்தில் மட்டுமே பார்க்க முடியுமென்பதால் ஜோஷுவா தேசிய பூங்காவிற்கு சென்றோம். ரெட் வுட் (Red Wood) மரங்களை அனைத்து பருவக்காலத்திலும் பார்க்கலாம், ஆனால் ஜோஷுவா மரம் பூக்கும் என்பதால் மலர்கள் இருக்கும் பருவ காலத்திற்கு சென்றால் மிகவும் அழகாக இருக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஜோஷுவா மலர்களை பார்க்க முடியுமென்பதால் நாங்கள் மார்ச் மாதம் ஜோஷுவா மரம் தேசிய பூங்கா விற்கு சென்றோம்.
790,636 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஜோஷுவா தேசிய பூங்கா நாங்கள் அதுவரை சென்றிருந்த தேசிய பூங்காக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. எங்களின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஜோஷுவா மரங்கள் மட்டுமே தெரிந்தது. இப்படி ஒரு நிலப்பரப்பை நாங்கள் பார்த்ததே இல்லை. ஒரு ஆள் அரவம் இல்லாமல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இயற்கை காட்சிகளை மட்டும் பார்ப்பது இக்காலகட்டத்தில் எளிதான காரியமே அல்ல. இருபத்து நான்கு மணி நேரமும் கேளிக்கை கூத்து நடக்கும் லாஸ் வேகாஸ் அருகே இப்படி ஒரு அமைதியான இடம் இருக்கும் என்று நினைக்கவே முடியாது. லாஸ் வேகாஸ் நகரம் பிடித்தவர்களுக்கு ஜோஷுவா தேசிய பூங்கா சுத்தமாக பிடிக்காது. ஆனால் எங்களுக்கு இம்மாதிரி இடங்கள் மட்டுமே பிடிக்குமென்பதால், மிகுந்த சந்தோஷத்துடனும், மன அமைதியுடனும் ஜோஷுவா மரங்களை கண்டு களித்தோம். நாங்கள் எதிர்பார்த்தவாறே ஜோஷுவா மரங்களில் பூக்கள் மலர்ந்திருந்தன. அடுக்கடுக்காக அவ்வளவு பெரிய மலர்கள் யுக்கா மரங்களில் மலர்ந்திருந்தது மிகவும் அழகாக இருந்தது.
யுக்கா மரங்களின் மலர்கள்
நாங்கள் ஜோஷுவா தேசிய பூங்காவில் இரவு கேம்பிங் செய்ய நினைத்திருந்ததால், பூங்கா அலுவலகத்திற்கு சென்று எங்கள் பெயர்களை பதிவு செய்தோம். ஆனால் நாங்கள் கேம்ப் கிரவுண்டில் தங்காமல் ஜோஷுவா மரங்களின் இடையே முகாமிட ஆசைப்பட்டோம். அலுவலர்களிடம் தேவையான தகவல்களை வாங்கிக்கொண்டு முகாமிடும் இடத்தை தேட ஆரம்பித்தோம். இந்த தேசிய பூங்காவில் ஜோஷுவா மரங்களை தவிர நிறைய வகை பாலைவன செடிகள் இருந்தன. பாலைவன செடிகள் பொதுவாக முற்கள் அதிகம் வைத்திருக்கும். அதனால் கூடாரத்தை போடுவதற்கு சமமான தரையை தேடினோம். திடீரென்று ஒரு பெரிய கற்றாழை(Cactus) கண்ணில் பட்டது.
நாங்கள் பிக் பென்ட், டெத் வேலி தேசிய பூங்காக்களில் மலர் உள்ள கற்றாழைகளையே பார்த்திருக்கிறோம், இருந்தாலும் இந்த கற்றாழை உருண்டையாக, பெரிதாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் மற்ற செடிகளை மாதிரி இச்செடியை கட்டிப்பிடிக்க முடியாதே, ஏன் தொடக்கூட முடியாதே ! இருந்தாலும், கற்றாழையின் அருகில் சென்று ரசித்து விட்டு முகாம் போடுவதற்கான இடம் தேடுவதை தொடர ஆரம்பித்தோம். ஒருவழியாக ஜோஷுவா மரங்களின் நடுவே ஒரு பாறையை கண்டுபிடித்தோம். காரிலிருந்து முகாமிற்கான சாமான்களை எடுக்கும்போது கயோட்டி (Coyote) ஒன்று செல்வதை பார்த்தோம்.
இருட்டாவதற்குள் முகாமை கடகடவென்று போட்டுவிட்டு, எளிதாக ஒரு சமையலையும் செய்து முடித்தோம். வனவிலங்குகள் உலாவும் இடம் என்பதால் உணவு பொருட்களை காரில் வைத்து மூடிவிட்டோம். கூடாரத்தையும் விலங்குகள் எதுவும் உள்ளே வந்துவிடாதவாறு மூடி வைத்துவிட்டு பாலைவனத்திற்குள் நடக்க ஆரம்பித்தோம். தூரமாக சில பாறைகள் தெரிந்தன. அப்பாறைகளில் சாகச விரும்பிகள் ஏறுவார்கள் போல. வெள்ளைக்காரர் ஒருவர் பெரிய பையை மாட்டிக்கொண்டு அப்பாறைகளை நோக்கி சென்று கொண்டிருந்தார். அலுவலகத்தில் உள்ளவர்களையும் இந்த வெள்ளைக்காரரையும் தவிர நாங்கள் எந்த மனிதர்களையும் அந்த தேசிய பூங்காவில் பார்க்கவில்லை.
நாங்கள் எங்கு சென்றாலும் மலர்களை தேடுபவர்கள். பாலைவனத்தில் மிகவும் அழகான மலர்களை பார்க்க முடியும் என்று ஏற்கனவே பிக் பென்டு தேசிய பூங்காவில் அறிந்து கொண்டோம். இந்த மோஜாவே பாலைவனத்திலும் நிறைய மலர்களை பார்த்தோம். வெள்ளை, மஞ்சள்,பிங்க் நிறங்களில் வண்ண வண்ண மலர்களை பார்த்து ரசித்தாலும், செடிகளை தொடுவதில் கவனமாக இருந்தோம். ஏனென்றால் இவ்விடம் ரேட்டில் பாம்பு (Rattlesnake) , தேள் (Scorpion) , பிளாக் விடோ ஸ்பைடர் (Black Widow Spider) போன்ற விஷமுள்ள உயிரினங்களுக்கு பெயர் போனது. ரேட்டில் பாம்பு செடிகளுக்குள்ளே நன்றாக சுருண்டு கிடக்கும் என்பதால், பார்த்து கால் வைத்து நடந்தோம். பாலைவனம் என்பதால் மதிய நேரம் வெப்பம் அதிகமாக இருந்தது. ஜோஷுவா தேசிய பூங்கா மிகவும் பெரிய இடம் என்பதால் நிறைய இடங்களை பார்க்க வேண்டி இருந்தது. அதனால், நாங்கள் வெப்பத்தை பொருட்படுத்தாமல் பூங்காவை சுற்றி வந்தோம்.
இருட்டில் அமர்ந்து சாப்பிட வேண்டாம் என்று மாலையே நாங்கள் சமைத்த உணவை உண்டு விட்டோம். எங்கள் கூடாரத்திற்கு அருகே பெரிய கடி எறும்புகள் சென்று கொண்டிருந்ததால், மறுபடியும் கூடாரத்தின் இடத்தை மாற்றினோம். சுற்றிலும் ஜோஷுவா மரங்களின் இடையே எங்கள் சிறிய கூடாரம் அழகாக இருந்தது. நாங்கள் பாறையில் அமர்ந்து சுற்றி உள்ள இயற்கை காட்சியை பார்த்துக்கொண்டு சிறிது நேரம் இளைப்பாறினோம். அப்படியே ஒரு சாக்லேட் மில்க்ஷேக் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொண்டே தண்ணீரை கொஞ்சமாக பருகிக்கொண்டோம். ஜோஷுவா மரம் தேசிய பூங்கா அலுவலகத்தை தவிர வேறு எங்கும் குடிநீருக்கு வாய்ப்பே இல்லை. மறுபடியும் மலர்களையும், பறவைகளையும் பார்க்க கிளம்பினோம். மாலை மங்க ஆரம்பித்துவிட்டதால் பறவைகளின் நடவடிக்கைகளும் குறைய ஆரம்பித்து விட்டது.
வினோத்திற்கு சூரியோதயம், சூரிய அஸ்தமனம் மிகவும் பிடிக்குமென்பதால், ஒரு பாறையில் ஏறிக்கொண்டு சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசித்தோம். பெரிய பாறைகளின் நடுவே சூரியன் அஸ்தமித்து, அந்த சூரிய கதிர்கள் ஜோஷுவா மரங்களின் வழியாக ஊடுருவி வந்த காட்சி மனதை மயக்கும் வண்ணம் இருந்தது. அதே சமயம் ஒரு கயோட்டியின் ஊளை தூரத்தில் கேட்டது. காட்டின் நடுவே இருக்கும்போது உள்ள அமைதி ஒரு அனுபவமென்றால், பறவைகள், விலங்குகளின் சத்தங்களை கேட்டு அமர்வது வேறு மாதிரி அனுபவம்.
இரவு நேரம் மனிதர்கள் யாருமே இல்லாத காட்டில் இருப்பதும் ஒரு வித்தியாசமான அனுபவம். மாலை நேரத்திலிருந்தே மெதுவாக வெப்பம் குறைந்து குளிர் ஏற ஆரம்பித்திருந்தது. இதமான குளிரில் அந்த வித்தியாசமான சுற்றுசூழலை நாங்கள் வெகுநேரம் ரசித்துவிட்டு, கூடாரத்திற்குள் சென்றோம். இரவில் வானம் முழுவதும் இருந்த நட்சத்திரங்களை கூடாரத்தில் படுத்துக்கொண்டே ரசித்தோம். வெளியே மெதுவாக தலையை நீட்டி பார்த்தால் உறையும் அளவிற்கு குளிராகி இருந்தது. பாலைவனத்தில் உள்ள மிக சுவாரசியமான விஷயங்களில் இந்த வேகமான வானிலை மாற்றமும் ஒன்று, பகல் நேரத்தில் எவ்வளவு கடினமான வெயிலாக இருக்கிறதோ, அவ்வளவு குளிராக இரவு வானிலை மாறிவிடும்.
மறுநாள் காலையில், மலர்ந்திருந்த ஜோஷுவா மலர்களில் ஹம்மிங் பறவைகள் சுற்றும் என்று பார்த்தால், பருந்து ஒன்று அமைதியாக அமர்ந்திருந்தது. காலையில் இன்னும் வெப்பம் அதிகரிக்கவில்லை என்பதால், பருந்து பறக்காமல் ஜோஷுவா செடியின் மேல் அமர்ந்திருந்தது. சிறிது நேரத்தில் பறவைகளின் சத்தம் ஆங்காங்கே கேட்க ஆரம்பித்தது. நாங்கள் குளிருக்கு இதமாக காலையில் கருங்காபியை குடித்துவிட்டு, பறவைகளின் பின்னால் ஓட ஆரம்பித்தோம். ஜோஷுவா தேசிய பூங்காவில் எவ்வளவு சுற்ற முடியுமோ, அவ்வளவு சுற்றிவிட்டு, ஜோஷுவா மரங்களையும் அதன் மலர்களையும் பார்த்த மகிழ்ச்சியுடன் அவ்விடத்திலிருந்து கிளம்பினோம்.