கம்போடியா – ஆங்கோர் வாட் கோவிலும் பறவைகளும்

கம்போடியா என்றவுடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆங்கோர் வாட். 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்ட இந்த கோவில் உலகிலேயே உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகும்.162 ஹெக்டர் பரப்பளவில் உள்ள இந்த கோவில் வளாகம், கோவில் கட்டமைப்புக்கு மட்டுமில்லாமல் பறவைகளுக்கும் பிரசித்தி பெற்ற இடம். கோவில்களை சுற்றி மரங்களும் நீர்நிலைகளும் இருப்பதால் ஆங்கோர் வாட் கோவில் வளாகம் பல வகை பறவைகளுக்கு உறைவிடமாக இருக்கின்றது.

 

தென் தமிழகத்திற்கும் ஆங்கோர் வாட் கோவிலுக்கும் நிறைய இணைப்பு இருப்பதால் நாங்கள் கோவிலையும் பறவையையும் சேர்த்து பார்க்கலாம் என்று கம்போடியா கிளம்பினோம். இந்தியர்களுக்கு கம்போடியாவில் வருகை விசா இருப்பதால் பெரிய பயண சிரமமில்லாமல் கம்போடியா சென்றடைந்தோம். ஆங்கோர் வாட் கோவிலுக்கான நுழைவு சீட்டையும் வாங்கிக்கொண்டு கோவிலையும் பறவைகளையும் பார்ப்பதற்கு தயாரானோம்.

கோவிலை பார்ப்பதற்கு நாம் தான் கிளம்பி செல்ல வேண்டும், ஆனால் பறவைகள் நாம் இருக்கும் இடத்திலேயே பார்க்க முடியுமென்பதால் நாங்கள் தங்கிய ரிசார்ட்டில் பறவைகளை தேட ஆரம்பித்தோம். சிக்காடாக்களின் இசை முழக்கம் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. புதிய நாட்டில் புதிய பறவைகளை பார்ப்பது எப்பொழுதுமே ஒரு இனிமையான அனுபவம். எங்கள் அறையின் அருகிலேயே வந்து அமர்ந்த பிலித் ஈபிடிப்பான் தான் கம்போடியாவில் நாங்கள் பார்த்த முதல் பறவை.

தென்கிழக்கு ஆசிய பறவைகள்

பிலித் ஈபிடிப்பான் , ஜெஸிபெல், லெப்பர்ட் லேஸ்விங் பட்டாம்பூச்சிகள், சிலையின் மேல் அமர்ந்திருந்த சிக்காடாக்கள்

அதன் பிறகு வண்ண பட்டாம்பூச்சிகள், புல்புல், தேன்சிட்டு, தையல்சிட்டு போன்ற பறவைகளை பார்த்தோம். பறவைகளை பார்த்துக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ப்ஹனோம் பேக்கங் (Phnom Bakheng) கோவில் தளத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் அழகாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருந்ததால், மாலை ஆங்கோர் வாட் கோவில் வளாகத்திற்கு கிளம்பினோம். உள்ளூர்வாசிகள் உபயோகிக்கும் டுக்டுக் வண்டியில் கோவில் வளாகத்திற்கு சென்றோம். ஆங்கோர் வாட் கோவிலை பார்த்த பிரமிப்பில்  ப்ஹனோம் பேக்கங் (Phnom Bakheng) கோவில் செல்லவேண்டிய நாங்கள் ஆங்கோர் வாட் கோவிலிலேயே இறங்கிவிட்டோம். பலமுறை ஆங்கோர் வாட் கோவிலின் புகைப்படத்தை வலைதளத்தில் பார்த்திருந்தாலும் நேரில் பார்த்தபோது தான் அதன் பிரம்மாண்டம் புரிந்தது.

Angkor Wat Temple

ஆங்கோர் வாட் பிரதான கோவிலை பார்த்த பிரமிப்பில் நான்! பழங்காலத்து கோவில்களின் சிறப்பே தனி.

கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது வானத்தில் கழுகு ஒன்று பறப்பது தெரிந்தது. உடனே பைனாகுலரில் பார்த்தால் அது கருப்பு பாசா (Black Baza).  கோவிலின் வெளிவட்டத்தில் அப்படியே அந்த பறவையை பார்த்து நடக்க ஆரம்பித்தோம். கோவிலை சுற்றி நிறைய மரங்கள் இருந்ததால் விதவிதமான பறவைகளின் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல் எங்களுக்கு கோவிலுக்கு உள்ளே செல்ல ஆசை, ஆனால் பறவைகளையும் பார்க்க ஆசை. எங்கள் குழப்பத்தை தெளிவாக்குவதற்கு வந்தது போல வெண் தொண்டை ராக் த்ரஷ் (White-throated rock thrush) பறவை எங்களின் அருகே இருந்த மரத்தில் வந்து அமர்ந்தது. மறுநாள் கோவிலுக்குள் சென்று சுற்றிக்கொள்ளலாம் என்று  பறவைகள் தேட ஆரம்பித்துவிட்டோம். கரிச்சான் குருவி (Racket-tailed Drongo), மின்சிட்டு (Ashy Minivet), குக்குருவான் (Coppersmith Barbet), ஆந்தை (Asian Barred Owlet) பறவைகளை பார்த்து ரசித்த பின் சூரியன் மறைவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் இருந்ததால் ப்ஹனோம் பேக்கங் (Phnom Bakheng) சென்று விடலாம் என்று கிளம்பினோம்.

கம்போடியா - ஆங்கோர் வாட் கோவிலும் பறவைகளும்

கருப்பு பாசா , வெண் தொண்டை ராக் த்ரஷ், ஸ்பங்ல்ட் கரிச்சான் குருவி.

ப்ஹனோம் பேக்கங் (Phnom Bakheng) கோவில் கொஞ்சம் ஏற்றத்தில் இருப்பதால் கடகடவென்று ஏற ஆரம்பித்தோம். நாங்கள் வேகமாக மேலே சென்று பார்த்தால் அங்கே ஒரு நீண்ட வரிசை இருந்தது. பழங்காலத்து இடிந்த கோவிலின் உச்சியில் சுற்றுலாவாசிகள் நின்று கொண்டிருந்தனர். கோவிலில் கட்டுமான வேலை நடந்துகொண்டிருந்ததால் 300 பேருக்கு மேல் உள்ளே அனுமதிக்கவில்லை. நீண்ட வரிசையில் நின்று சூரியன் மறைவை பார்ப்பதில் எந்த சுகமும் இல்லை என்பதால் நாங்கள் வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தோம். சூரியன் நன்றாக தெரிந்த ஒரு இடத்தில் நின்று சூரிய அஸ்தமனத்தை பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றும் அந்த சூரிய அஸ்தமனம் பெரிதாக இல்லை. நாங்கள் கன்னியாகுமாரியிலேயே இதை விட அழகான சூரிய அஸ்தமனம் பார்த்திருக்கிறோம்.

சூரிய அஸ்தமனம், டுக்டுக் வண்டி , ப்ஹனோம் பேக்கங் மேலே இருந்து தெரிந்த ஒரு காட்சி.

பறவைகளையும் கோவில்களையும் நாங்கள் பார்க்க ஆசைப்படுவதால் டுக்டுக் வேலைக்கு ஆகாது என்று மொபெட் வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். மறுநாள் அதிகாலையில் பறவைகளையும் கோவில்களையும் பார்க்க கிளம்பினோம். கோவில்கள் 7.30 மணிக்கு தான் திறக்கப்படும் என்பதால் கோவில்களை சுற்றி இருந்த நீர்நிலைகளுக்கு சென்றோம். நாங்கள் சென்றது மார்ச் மாதம் என்பதால் , ஒரு சொட்டு மழை கூட கிடையாது, இருந்தாலும் நீர் நிலைகள் நிரம்பி இருந்தன. ஆனால் ஆங்காங்கே அமர்ந்திருந்த நீர்காகங்கள் தாண்டி வேறு பறவைகள் கண்ணில் படவில்லை. கெமர்(Khmer Kingdom) அரசு, கோவில்கள் மட்டுமல்ல அணைகளும் நிறைய கட்டி இருக்கிறார்கள். பாரே என்றழைக்கப்படும் இந்த நீர்நிலைகள் கெமர் (Khmer) அரசு கோவில்களை விட பிரம்மாண்டமானது. வடக்கு பாரேவில் (Northern Baray) பாலத்தை தாண்டி ஜெயடடக்கா(Jayatataka) கோவிலுக்கு சென்றோம்.

ஜெயடடக்கா கோவில் , கப்பாரிஸ் மலர்கள் , வடக்கு பாரே

ஜெயடடக்கா கோவில் , கப்பாரிஸ் மலர்கள் , வடக்கு பாரே

கோவிலை சுற்றி அடர்ந்த மரங்கள் இருந்ததால் நிழலில் அமர்ந்து ரிசார்ட்டில் பேக் செய்து குடுத்த காலை உணவை சாப்பிடலாம் என்று அமர்ந்தோம். அது என்னவோ எப்பொழுதும் நாங்கள் சாப்பிட உட்கார்ந்தால் தான் இந்த பறவைகளுக்கு மூக்கு வேர்த்தது போல வந்து அமரும். உடனே கையிலிருந்த பான்கேக்கை வைத்துவிட்டு காமெராவை தூக்கிக்கொண்டு ஓடினோம். மர உச்சியில் நீண்ட வாலுடன் பச்சை முக செம்பகம் (Green billed malkoha) குதித்துக்கொண்டிருந்தது. இலைமறைவாக குதித்துக்கொண்டிருந்த அந்த பறவை ஒருவழியாக நன்றாக தெரிகின்ற மாதிரி வந்து அமர்ந்தவுடன் அதை படம்பிடித்துவிட்டு காலை உணவை சாப்பிட மறுபடியும் அமர்ந்தோம். 

கம்போடியா - ஆங்கோர் வாட் கோவிலும் பறவைகளும்

பச்சை முக செம்பகம் பொதுவாக புதர்களின் பின்னே குதித்து ஓடிக்கொண்டிருக்கும். சிவப்பு கண்களும்,நீண்ட வாலும் இப்பறவையின் தனித்துவம் .

அதற்கடுத்து ப்ரே கான்(Preah Khan) கோவில் செல்லலாம் என்று கிளம்பினோம். போகும் வழியில் முன்தினம் பார்த்த கருப்பு பாசா(Black Baza) ஜோடியாக மரஉச்சியில் அமர்ந்திருந்ததை கண்டுபிடித்தோம். இந்த அழகான பாசாவை தென்னிந்தியாவில் வலசை காலத்தில் மட்டுமே பார்க்கமுடியுமென்பதால் இப்பறவையை கம்போடியாவில் பார்த்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. வேறு சில பறவைகளையும் பார்த்துவிட்டு ப்ரே கான் செல்வதற்குள் வெயிலில் நாங்கள் களைப்படைந்துவிட்டோம்.

ப்ரே கான்(Preah Khan) கோவில் எதிரே இருந்த ஒரு கடையில் ஒரு இளம்பெண் மிக எளிதாக இளநீர் வெட்டிக்கொண்டிருந்தார். நாங்கள் நாகர்கோவிலில் தென்னந்தோப்பிலே சுற்றி வளர்ந்தவர்களாய் இருந்தாலும் இவ்வளவு பெரிய இளநீரை பார்த்ததில்லை. இளநீரை நன்றாக சுவைத்துவிட்டு ப்ரே கான்(Preah Khan) கோவிலுக்குள் நுழைந்தோம்.

ப்ரே கான் வாசலில் தான் கொஞ்சம் மரங்கள் பச்சைபசேலென்று இருந்தன. சுற்றுலாபயணிகள் இல்லாதபோது ஓடி சென்று எங்களையும் ஒரு கிளிக்.

உயரமான மரங்களும் இடிந்த மண்டபங்களும் அந்த உச்சி வெயிலில் கூட அழகாக தெரிந்தன. சில்க் காட்டன் மரங்கள் மண்டபங்களோடு பின்னிப்பிணைந்து வளர்ந்திருந்தன. 

இங்கே உள்ள ஒரு கட்டிடத்தில் அப்சரஸ் நடனமாடும் பதிவுகள் உள்ளதால் அவ்விடத்தை ஹால் ஆப் டான்சர்ஸ் (Hall Of Dancers) என்று கூறுகிறார்கள். கோவிலை சுற்றி பார்த்து, மரங்களில் ஓடிய பல்லிகள், விதவிதமான மரங்கள் அவற்றின் மலர்கள் என்று அனைத்தையும் பார்த்துவிட்டு திரும்புவதற்குள் இளநீர் குடித்து வந்த தெம்பு முடிந்துவிட்டது. ஐஸ்பெட்டியில் ஸ்லைஸ் செய்து வைத்திருந்த பைனாப்பிள் பழத்தை வாங்கி தின்றுவிட்டு அடுத்து பேயான் (Bayon) கோவில் சென்றோம்.

வினோத் அன்னாசி பழத்தை ஆசையாக பார்க்க, நான் இளநீரை ஆவென்று பார்க்க, வண்டியில் செல்லும்போது இங்கே அங்கேவென்று பறவைகளை பார்க்க, புது இடங்களில் எல்லாமே வியப்பு தான்!

ஆங்கோர் வாட் வளாகத்தில் இதுவரை நாங்கள் பார்த்த கோவில்களை விட இக்கோவில் மிகவும் வித்தியாசமாக இருந்தது. கோவில் முழுவதும் இருநூறுக்கும் மேற்பட்ட சிரிக்கும் முக சிலைகள் உள்ளன. அவை லோகேஸ்வரனின் சிலை என்றும் ஜெயவர்மன் VII ராஜாவின் சிலை என்றும் வேறுபட்ட கருத்து உள்ளது.

திரைப்பட நடிகர்களின் சிலை இல்லாத வரைக்கும் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. பேயான் (Bayon) கோவில் சுற்றிலும் மரங்கள் நன்றாக தெரிகின்ற மாதிரி இருந்ததால் ரெட் பிரேஸ்ட்டேட் கிளிகள் (Red-breasted parakeet) கூட்டமாக கத்திக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்ததை பார்த்து ரசித்துக்கொண்டே கோவிலையும் சுற்றி வந்தோம். கிளிகள் பொதுவாகவே லொடலொடவென்று பேசிக்கொண்டு இருப்பவை, அங்கே மரங்களில் நல்ல பழங்களும் இருந்ததால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் இருந்தாலும் அதையும் தாண்டி கிளிகளின் சத்தம் தான் கேட்டது.

சிவப்பு நெஞ்சு கிளிகள், நீண்ட விழுதுகள் கொண்ட மரம்.

சிவப்பு நெஞ்சு கிளிகள், நீண்ட விழுதுகள் கொண்ட மரம்.

பேயான் (Bayon) கோவில் பார்த்தபின் அருகில் இருந்த வேறு சில கோவில்களுக்கு சென்றுவிட்டு, டா பிராம் (Ta Prohm) கோவிலுக்கு சென்றோம். மிகவும் உயரமான மரங்கள் கோவிலுடன் பின்னிப்பிணைந்து வளர்ந்திருப்பதால் டா பிராம் கோவில் மிகவும் பிரபலமானது. சிட்டான் என்றழைக்கப்படும் சில்க் காட்டன் மரம் இந்தியாவிலும் உள்ளது, ஆனால் எங்கேயும் இவ்வளவு விரிந்து,உயர்ந்து பார்த்ததே இல்லை. டெட்ராமேலேஸ் ந்யூடிபிளோரா (Tetrameles nudiflora) என்ற மரமும் அங்கே பெரிதாக வளர்ந்திருந்தது. இம்மரங்களின் வேர்கள், பெரிய ஊர்வன உயிர்கள் அப்படியே கோவிலை நசுக்குகிற மாதிரி ஒரு பிரம்மையை கொடுத்தது. புராதன கோவில்கள் அனைத்திலுமே வௌவால்களை பார்க்க முடியும். நாங்கள் அனைத்து கோவில்களிலும் வௌவால்களை தேடினாலும் கடைசியில் டா பிராம் (Ta Prohm) கோவிலில் தான் வௌவால்கள் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்தோம்.

கோபுரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வௌவால்கள், உயரமான சில்க் காட்டன் மரங்கள், கோவிலில் உள்ள தூண்கள்.

டா பிராம் (Ta Prohm) கோவில் அழகாக இருந்தாலும் எங்களுக்கு அங்கே இருந்த மரங்கள் தான் பிரமிப்பை கொடுத்தன. மரங்களில் குக்குருவான்கள் குதித்துக் கொண்டிருந்தன. மரங்கள் மிக உயரமாக இருந்ததால் பறவைகள் அதற்கு மேல் கண்ணுக்கு தெரியவில்லை. இக்கோவில் டோம்ப் ரைடர் (Tomb raider) படத்தினால் மிகவும் பிரபலமானது, அதனால் இங்கே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஆங்கோர் வாட் பிரதான கோவிலை சுற்றி பார்ப்பதற்கே சில மணிநேரங்கள் தேவை என்பதால், டா பிராம் (Ta Prohm) கோவிலை பார்த்து முடித்தவுடன் ரிசார்டுக்கு திரும்பிவிட்டோம். கம்போடியா உணவுகளை நன்றாக சாப்பிட்டுவிட்டு ஒய்வெடுத்தோம். மறுநாள் அதிகாலை சூரியோதயத்திற்கு ஆங்கோர் வாட் பிரதான கோவில் சென்றோம்.

ஆங்கோர் வாட் கோவில் சுற்றி உள்ள மதிலை ஒட்டி நிறைய பறவைகள் பார்த்தோம். ஆங்கோர் வாட் கோவிலின் விதவிதமான வடிவமைப்புகள் மிகவும் வியப்பூட்டும் விதமாக இருந்தன.

சூரியோதயம் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் தவிர கோவிலை சுற்றி யாரும் இல்லை என்பதால் பறவைகளின் சத்தம் தவிர வேறு எந்த சத்தமும் இல்லாமல் கோவில் வளாகம் அமைதியாக இருந்தது. ஸீப்ரா புறா (Zebra dove) , மாம்பழ குருவி (Black-naped oriole), குக்குருவான் (Lineated barbet), காட்டு வாலாட்டி( Forest wagtail), ஆந்தை( Asian Barred Owlet) போன்ற பல பறவைகளையும் பின்லேசோனி அணில்கள் (Callosciurus finlaysonii) மரங்களில் குதித்தோடுவதையும் பார்த்துக்கொண்டே நடந்தோம். மாம்பழக் குருவிகள் கும்பலாக ஒவ்வொரு மரத்திற்கும் தாவி தாவி பறப்பதை பார்த்துக்கொண்டு நின்றபோது மோட்டின் மேலே கருப்பு வெள்ளை இருவாயன் (Oriental pied hornbill) பறந்து செல்வதை பார்த்தோம். அப்பறவை ஒரு மரத்தின் மேல் அமர்ந்ததும் அதன் கூட்டுக்காரர்கள் இன்னும் சிலர் வந்தனர்.

கம்போடியா - ஆங்கோர் வாட் கோவிலும் பறவைகளும்

ஹார்ன்பில் பறவைகள் எப்பொழுதுமே தனி அழகு, அவற்றை கும்பலாக பார்த்தால் கேட்கவேண்டுமா என்ன?

அப்பறவைகளின் விளையாட்டை பார்த்தபின் கோவில் வளாகத்திற்குள் சென்றோம். அந்நேரத்திற்குள் கோவிலில் கூட்டம் அதிகமாகி இருந்தது. இக்கோவிலில் மாங்க் பூஜை செய்து கொண்டிருந்தார். ஆங்கோர் வாட் கோவில் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தாலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாங்கள் வேகமாக வெளியே வந்துவிட்டோம். முதல் நாள் பார்த்த ராக் த்ரஷ் பறவையை மறுபடியும் பார்த்தோம். வெயிலை எதிர்பார்த்து தான் கம்போடியா வந்தாலும் இவ்வளவு காட்டமான வெயிலை எதிர்பார்க்கவில்லை.அப்படி ஒரு வெயிலில் அவ்வளவு பறவைகளையும் சிக்காடா சத்தத்தையும் கேட்போம் என்றும் நினைக்கவில்லை. நாங்கள் இலங்கை சென்றபோது நாள் முழுவதும் மழையில் மாட்டிக்கொண்டோம், அதனால் கம்போடியாவிற்கு வெயிலில் கிளம்பினோம்.

ஆங்கோர் வாட் பிரதான கோவில் என்பதால் மற்ற கோவில்களை விட இக்கோவிலுக்கு எப்பொழுதுமே கூட்டம் அதிகம்.

ஆனால் ஆங்கோர் வாட் கோவிலின் முழு அழகை மழை காலத்தில் தான் பார்க்க முடியுமென்பதால், கண்டிப்பாக திரும்பி வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஆங்கோர் வாட் கோவிலில் இருந்து கிளம்பினோம். கோவில்களின் கட்டமைப்பில் ஆர்வமுள்ளவர்களும் பறவை ஆர்வலர்களும் கண்டிப்பாக ஆங்கோர் வாட் கோவில் செல்ல வேண்டும்.

ஆங்கோர் வாட் கோவில் வளாகத்தில் நாங்கள் பார்த்த பறவைகளின் வீடியோக்களை பார்ப்பதற்கு கீழே உள்ள  லிங்கை கிளிக் செய்யவும்.

One thought on “கம்போடியா – ஆங்கோர் வாட் கோவிலும் பறவைகளும்

  1. கண்டிப்பாக இந்த கொரோனா பிரச்சனைகள் முடிந்தபின் நீங்கள் இங்கே சென்று இந்த அழகான கோவில்களையும், சிற்பங்களையும் பார்ப்பீர்கள்

  2. அருமை. இடமும், நீங்கள் விவரித்தவையும்.
    இவ்விடம், எனது நீண்ட நாள் ஆசை, இன்று வரை நிறைவேறவே இல்லை.

  3. Mathi says:

    Thank You

  4. Anonymous says:

    Wonderful 👌

Comments are closed.