தேரிக்காடு – தமிழகத்தின் பாலைவனம்

நானும் வினோத்தும் என்ன இல்லை நம் இந்தியாவில் என்று எப்பொழுதும் பெருமையாக கூறுவோம். மழை காடுகள்,பாலைவனம், பனி மலைகள் என்று விதவிதமான சுற்றுசூழலை கொண்டது நம் பாரத நாடு. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் கடற்கரைகள், பச்சை காடுகள் என்று தனித்துவமான சுற்றுசூழலை கொண்டுள்ளது. அதில் சிறிய சிவப்பு பாலைவனமும் உள்ளது என்று பலருக்கு தெரிந்திருக்காது. தூத்துக்குடி,திருநெல்வேலி,திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த சிவப்பு பாலைவனம் ஒரு நல்ல சுற்றுலா தளம். என் அம்மா,மாமா அனைவரும் இந்த தேரிக்காடில் தான் ஓடி விளையாடி இருக்கிறார்கள்.

THERIKAADU,KAYAMOLI,TIRUCHENDUR,RED DESERT,VINOD SADHASIVAN, தேரிக்காடு
செவ்வானம் தான் பார்த்திருக்கிறேன், கண்ணுக்கெட்டியதூரம் வரை செம்மணல் பார்ப்பது இதுவே முதல் முறை.

12,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள தேரிக்காடு திருச்செந்தூரில் இருந்து 15கி.மீ தூரத்தில் உள்ளது. 2018ஆம் ஆண்டில் இவ்விடங்களில் நல்ல மழை என்பதால் நானும் வினோத்தும் திருச்செந்தூரை சுற்றி பறவைகளை பார்க்க செல்லலாம் என்று முடிவு செய்திருந்தோம். மழைக்கு பிறகு தேரிக்காடில் வெல்வெட் பூச்சிகளாக ஓடும் என்று என் அம்மா கூறியிருந்தார்கள். எங்கள் தோழர் ரவிக்குமார் விசிறி தொண்டை பல்லியை இந்த தேரிக்காடில் காணலாம் என்று கூறியிருந்தார். திடீரென்று தேரிக்காடில் பார்க்க வேண்டியவை நிறைய இருந்ததால், அந்த பரபரப்பான நாளை அதிகாலையிலேயே தொடங்கினோம்.

தேரிக்காடு, THERIKAADU,KAYAMOLI,TIRUCHENDUR,RED DESERT, TAMILNADU TOURIST SPOTS,TAMILNADU HIDDEN PLACES, HIDDEN WONDERS
சிவப்பும் பச்சையுமாக இருக்கும் இந்த தேரிக்காடு மிகவும் தனித்துவம் வாய்ந்த இடம்.

தேரிக்காடில் மணல் மேடுகளில் ஏறி,சறுக்கி விளையாடியதை என் அம்மா பலமுறை கூறியிருக்கிறார்கள். அதனால் நான் சிவப்பு மண் தெரிய ஆரம்பித்தவுடனே மணல் மேடுகளை ஆர்வமாக தேட ஆரம்பித்தேன். ஆனால் என் எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக மணல் மேடுகள் எதுவும் இல்லாமல் தரை மட்டமான இடங்கள் மட்டுமே இருந்தன. அந்த சிவப்பு மணல் திடல்கள் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் மாதிரி காட்சி அளித்தது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. தேரிக்காடில் பனைமரங்களும் கொல்லாமரங்களும் தான் உண்டு என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் இவ்விடத்தில் பல்வேறு மரங்கள் வளர்ந்திருந்தன, அதிலும் அவை வன அலுவலர்களால் நடப்பட்டிருக்கிறது என்று தெரிந்தபோது கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ஆனால் இந்த நிலப்பரப்பை பற்றி எங்களுக்கு பெரிதாக எதுவும் தெரியாதென்பதால் நாங்கள் பறவைகளை தேட ஆரம்பித்துவிட்டோம்.

புள்ளி ஆந்தைகள்(Spotted Owlet) ஜோடியாக பனைமர பொந்தில் இருந்து எட்டி பார்த்துக்கொண்டிருந்தன.

THERIKAADU,KAYAMOLI,TIRUCHENDUR,RED DESERT, TAMILNADU TOURIST SPOTS,TAMILNADU HIDDEN PLACES, HIDDEN WONDERS,SPOTTED OWLET,PALM TREE OWLS
பனை மரங்களில் உள்ள ஓட்டையை உற்று பார்த்தால் ஏதாவது ஒன்றிலாவது புள்ளி ஆந்தைகளைக் காணலாம்.

மரங்கொத்தி(Black Rumped Flameback Woodpecker) ஒன்று மற்றொரு பனைமரத்தில் குதித்துக் குதித்து கொத்திக்கொண்டிருந்தது. பச்சை பஞ்சுருட்டான்கள் (Little Green Bee-eater)பூச்சிகளை பிடிப்பதற்காக பறந்து கொண்டிருந்தன.நீலமுக செண்பகம் (Blue-faced Malkoha) புதர்களின் பின் அமைதியாக குதித்துக்கொண்டிருந்தது. கௌதாரிகள் (Grey Francolin) கூட்டமாக தரையில் ஓடிக்கொண்டிருந்தன. நீல டைகர்(Blue Tiger Butterfly),ப்லேய்ன் டைகர்(Plain Tiger Butterfly) பட்டாம்பூச்சிகள் ஒரு செடியில் தேன் உறிந்துக்கொண்டிருந்தன. இந்த தேரிக்காடில் இவ்வளவு வன நடவடிக்கைகள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

ஜனவரி மாதம் சென்றதால் தேரிக்காடு கொஞ்சம் குளுமையாக இருந்தது. வெப்பம் ஏறினால் தான் பல்லிகளின் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். செம்மணல் மேடுகள் இல்லாவிட்டாலும் செம்மண் மிகவும் அழகாக இருந்ததால் மரங்களின் இடையே சிறிது தூரம் நடந்து சென்றோம். ஒரு படர் கொடியின் மீது கால் வைத்த போது பல்லி ஒன்று அதிலிருந்து துள்ளி குதித்து அருகே இருந்த செடியின் மேல் சென்று அமர்ந்தது. இந்த பல்லியின் தொண்டையில் விசிறி இல்லாவிட்டாலும் முதுகில் இருந்த வடிவமைப்பு வேறு விதமாக இருந்தவுடன் அதையும் ஒரு படம் எடுத்துக் கொண்டேன்.

THERIKAADU,KAYAMOLI,TIRUCHENDUR,RED DESERT, TAMILNADU TOURIST SPOTS,TAMILNADU HIDDEN PLACES, HIDDEN WONDERS,TAMILNADU LIZARD
மழை குறைவான இடங்களில் பல்லி வகைகள் பொதுவாக அதிகமாக இருக்கும்.

தமிழ்நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் உள்ள மக்கள் தேரிக்காட்டில் உள்ள கோவில்களுக்கு வருவார்கள். தேரிக்காடை சுற்றி பெரும்பாலும் அய்யனார் கோவில்களே உள்ளன. வெயிலேறியதும் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு சென்றோம். இக்கோவில் மிகவும் அழகான இடத்தில் உள்ளது. கோவிலை சுற்றி உயர்ந்த வயதான மரங்கள் உள்ளன. கோவிலை சுற்றி இருந்த குளம் நிரம்பி,அல்லி மலர்கள் மலர்ந்து கிடந்த காட்சி மனதிற்கு மிகவும் அமைதி தரும் வகையில் இருந்தது. தமிழில் ரமணிச்சந்திரன் அவர்களின் நாவல் படித்தவர்களுக்கு இந்த கோவிலை பற்றி தெரிய வாய்ப்பு உள்ளது. ரமணிச்சந்திரன் அவர்கள் மிகவும் அழகாக இந்த சுனைக்கோவிலை வர்ணித்திருப்பார்கள்.

THERIKAADU,KAYAMOLI,TIRUCHENDUR,RED DESERT, TAMILNADU TOURIST SPOTS,TAMILNADU HIDDEN PLACES, HIDDEN WONDERS,CRIMSON TIP BUTTERFLY,Colotis danae
செம்மண்ணிற்கு ஏற்றது போல வண்ணம் உள்ள க்ரிம்சன் டிப் பட்டாம்பூச்சி தேரிக்காடிற்கு மேலும் அழகை கொடுத்தது.

கோவிலின் பின்புறத்தில் ஒரு சிறிய நடை பாதை இருந்தது. அவ்வழியாக சென்றபோது காம்புல் கோழி(White Breasted Waterhen) புதருக்குள் ஓடிக்கொண்டிருந்ததையும், குளத்துக் கொக்கு(Pond Heron) இரைக்காக காத்துக்கொண்டிருந்ததையும், செம்பருந்து (Brahminy Kite) பறந்து கொண்டிருந்ததையும், மஞ்சள் சிட்டு (Common Iora) கானம் பாடிக்கொண்டே மரக்கிளைகளுக்குள் குதித்துக்கொண்டிருந்ததையும் கண்டோம். இந்த மனம் கவரும் அழகிய காட்சிகளை பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்த போது திடீரென்று காலில் ஏதோ கடிப்பது போல் இருந்தது. என்னவென்று பார்த்தால் சிவப்பு கடி எறும்புகள் ஒரு கூட்டமே என் காலில் ஏறிக்கொண்டிருந்தன. படபடவென்று காலை தட்டிவிட்டு வேகமாக வந்த வழியே திரும்பி ஓடிவிட்டேன். காடுகளுக்கு செல்லும்போது புலி,பாம்பு பார்த்து ஓடுகிறோமோ இல்லையோ, இந்த சிறிய எறும்புகள்,அட்டைகள், உண்ணி பூச்சிகளிடம் இருந்துதான் தப்பித்து ஓட வேண்டியதாக இருக்கிறது.

THERIKAADU,KAYAMOLI,TIRUCHENDUR,RED DESERT, TAMILNADU TOURIST SPOTS,TAMILNADU HIDDEN PLACES,ARUNJUNAI KAATHA AYYANAAR TEMPLE, ARUNCHUNAI KAATHA AYYANAR KAYAMOLI
அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு அருகில் உள்ள அழகான குளம்.

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் 

கால்களை நன்றாகக் கழுவிவிட்டு கோவிலுக்குள் நுழையும்போது ஒரு சிறுவன் மிகவும் மகிழ்ச்சியாக வந்து எங்களுக்கு லட்டு கொடுத்தான். என்ன விசேஷம் என்று கேட்டபோது, எங்கள் வீட்டில் டேட்சன் கோ கார் புதிதாக வாங்கியிருக்கிறோம் என்று கூறினான். அவனுக்கு வாழ்த்து கூறிவிட்டு அழகான அய்யனாரை பார்க்க சென்றேன். தென்னிந்திய கலாச்சாரம் பொதுவாகவே மிகவும் வண்ணமிக்கதாக இருக்கும்.புடவையில் இருந்து வீடு வரைக்கும் அனைத்திலும் பளிச் வண்ணங்கள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். அந்த கலாச்சாரத்தில் உள்ள நாம் கடவுளை விட்டு வைப்போமா. இந்த வண்ணமிக்க அய்யனார் கோவில் மற்ற கோவில்கள் அளவிற்கு விதிகள் கிடையாததால், பக்தர்கள் அய்யனாருடன் செல்ஃபீ எடுத்துக்கொண்டிருந்தார்கள். சில குழந்தைகள் அய்யனாருடன் குதிரையிலேயே ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். நான் பூசாரியிடம் தேரிக்காடை பற்றி விசாரித்தபோது, அவர் தேரிக்குடியிருப்பு என்ற ஊருக்கு அருகில் உள்ள தேரிக்காடில் செம்மணல் மேடுகள் உள்ளன என்று கூறினார்.

THERIKAADU,KAYAMOLI,TIRUCHENDUR,RED DESERT, TAMILNADU TOURIST SPOTS,TAMILNADU HIDDEN PLACES,ARUNJUNAI KAATHA AYYANAR TEMPLE,SOUTH INDIAN TEMPLES, SOUTH INDIAN STATUES
வண்ணமிக்க அருஞ்சுனை காத்த அய்யனாரும் அவருடைய குதிரையும் மிகவும் கம்பீரமாக இருந்தனர்.

இன்னும் சில கோவில்களை கடந்த பின், ஒரு அய்யனார் கோவிலின் பின்னால் சிவப்பு மணல் மேடுகள் கண்ணில் பட்டன. சிவப்பு பாலைவனத்தை வந்தடைந்தவுடன், அந்த சிவப்பு மணலுக்குள் கால்கள் மூழ்க மூழ்க நடந்தோம். இந்த செம்மண்ணில் கார்னெட், இல்மெனைட், ஹெமெடைட் நிறைந்து உள்ளது. கார்னெட்டில் இருந்து உருவாகும் ஹெமெடைட் கனிமத்தினால் தான் இவ்விடத்தில் உள்ள மண் சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்த சிவப்பு மணல் மேடுகளில் மயில்கள் ஓடுவது மனதை கவரும் வண்ணம் இருந்தது. என் கண் எட்டும் தூரம் வரை செம்மண்ணே தெரிந்தது. பனை மரங்களும் கொல்லா மரங்களும் தேரிக்காட்டின் அழகை ஏற்றிக் காட்டின.செம்மண்ணும் பச்சை மரங்களுமாய் இருந்த தேரிக்காடு சூரியக்கதிரில் தகதகவென்று மின்னியது.

தேரிக்காடு, THERIKAADU,KAYAMOLI,TIRUCHENDUR,RED DESERT, TAMILNADU TOURIST SPOTS,TAMILNADU HIDDEN PLACES, HIDDEN WONDERS, THERIKAADU,KAYAMOLI,TIRUCHENDUR,RED DESERT, TAMILNADU TOURIST SPOTS,TAMILNADU HIDDEN PLACES,PAULMATHI VINOD
இப்படி ஒரு நிலப்பரப்பை இவ்வுலகத்தில் எத்தனை இடங்களில் காண முடியும் !!

சிவப்பு வல்லூறு(Kestrel) பனை மரத்தில் அமர்ந்திருந்தது.இந்த தேரிக்காடில் இறந்த மரங்கள் கூட அழகாக இருந்தன. சோளக்குருவிகள் (Rosy Starling) கூட்டமாக பறந்து கொண்டிருந்ததை பார்ப்பதற்கு நடனமாடுவது போலவே இருந்தது. ஜனவரி மாதம் பறவைகளின் வலசை காலம் என்பதால் நிறைய பறவைகளை பார்த்தோம். திருச்செந்தூரில் தெருவுக்கு தெரு மயில்களை (Peacock) பார்த்ததால், வினோத் செம்மண்ணின் நடுவே மயில்களை அழகாக படம் பிடிக்கலாம் என்று ஆசைப்பட்டார். ஆனால் தேரிக்காடில் எங்களை பார்த்து மயில்கள் ஓட்டம் போட்டதால் மயில்களின் கால் தடங்கள் மட்டும் தான் எங்கள் கண்ணில் பட்டன.

வண்ணமிக்க பெரிய பறவையை படம்பிடிக்க முடியாமல் போனவுடன் நாங்கள் சிறிய வண்ணமிக்க விசிறி தொண்டை பல்லியை தேட ஆரம்பித்தோம். நான் ஏதோ சிவப்பு மணலில் பளிச்சென்று விசிறியை விரித்து அமரப் போகிறது என்று நினைத்தேன், ஆனால் சிறு தேடலுக்கு பிறகு ஒரு புதரின் உள்ளே கண்டுபிடித்தோம். வண்ணமிக்க அந்த பல்லியை ரசித்துவிட்டு தேரிக்காடில் இருந்து கிளம்பினோம்.

THERIKAADU,KAYAMOLI,TIRUCHENDUR,RED DESERT, TAMILNADU TOURIST SPOTS,TAMILNADU HIDDEN PLACES,FAN THROATED LIZARD,Sitana ponticeriana
ஒருவழியாக விசிறி தொண்டை பல்லியை கண்டுபிடித்துவிட்டோம்.

இந்த தேரிக்காடிற்கு வந்துவிட்டு செம்மணலை தவிர இங்கு என்ன இருக்கிறது என்று சலித்துவிட்டு கிளம்பலாம், இல்லையென்றால் இந்த தனித்துவமான இடத்தையும், அதை நம்பி வாழும் உயிரினங்களையும் பார்த்து பிரமிக்கலாம். தமிழ்நாட்டில் இருக்கும் இம்மாதிரி மறைவான அழகிய இடங்களை நினைத்து பெருமைப்படலாம். இவை அனைத்துமே நாம் உலகை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதை பொறுத்தே உள்ளது. இந்த தனித்துவம் நிறைந்த தேரிக்காடின் மதிப்பை உணர்ந்து எவரும் இவ்விடத்தையும் கட்டிடம் கட்டும் இடமாக மாற்றி விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் கிளம்பினோம்.

இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள பாலைவனத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இந்திய பறவைகளின் அழகிய கானங்களை கேட்க இந்த வீடியோவை பாருங்கள்