எவெர்க்லேட்ஸ் – அலிகேட்டரும் ஆர்க்கிட் மலர்களும் !
என்னடா இது சுத்தமாக சம்பந்தமே இல்லாத இரண்டு இனங்களை இணைத்து தலைப்பு இருக்கிறதே என்று குழப்பமாக இருக்கிறதா ? அப்படித்தான் இருந்தது எங்களுடைய எவெர்க்லேட்ஸ் ஆர்க்கிட் தேடல். 1,508,538 ஏக்கர் பரப்பளவில் உள்ள எவெர்க்லேட்ஸ் தேசிய பூங்கா பல விதமான ஜீவராசிகளின் வாழ்விடம். பெரும்பாலான பூங்கா சதுப்பு நிலம் என்பதால் முதலை,அலிகேட்டருக்கு பேர் போன இடம். அதே போல வித விதமான ஆர்க்கிட் மலர்களுக்கும் பெயர் போன இடம் இந்த எவர்க்லேட்ஸ் தேசிய பூங்கா. பூ பிரியர்களாகிய நாங்கள் சதுப்பு நிலத்தில் வளர்கின்ற செடிகளையும் தண்ணீரில் ராஜாவான அலிகேட்டரையும் பார்ப்பதற்காக பிளோரிடா மாகாணத்தில் உள்ள எவெர்க்லேட்ஸ் தேசிய பூங்காவிற்கு சென்றோம்.
பொதுவாக அமெரிக்க காடுகளில் ட்ரெய்ல் நன்றாக பராமரித்திருப்பார்கள். போர்ட் வாக்கும் நன்றாக இருக்கும். எவெர்க்லேட்ஸ் தகவல் மைய வாசலிலேயே தண்ணீரில் அலிகேட்டர் இருந்தது.நிறைய மீன்கள் அதை சுற்றி ஓடிக்கொண்டிருந்தாலும் கொஞ்சம் கூட அசையாமல் அந்த அலிகேட்டர் அப்படியே கிடந்தது. நாங்கள் பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு அந்த அலிகேட்டரை வித விதமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.தகவல் மையத்தில் ஆர்க்கிட் மலர்கள் பார்க்க முடிகின்ற இடங்களை பற்றி விவரங்கள் வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.
நிறைய ட்ரைல்கள் 1 கி.மீ, 2 கி.மீ தூரத்திற்கே இருந்தன. அதனால் ஒரு 6 கி.மீ தூரத்திற்குள்ள பாதையை முடிவு செய்தோம். அந்த பாதைக்கு செல்லும் வழியில் சில இடங்கள் மிகவும் அழகாக இருந்ததால் வண்டியை நிறுத்தி அவ்விடங்களை பார்த்து ரசித்தோம். அதில் ஒரு ப்ரோமெலைட் செடி மிகவும் அழகாக இருந்தது. அந்த செடிகளெல்லாம் காற்று செடிகள் (Air Plant) வகையை சார்ந்தது. சதுப்பு நிலத்தில் வளர்கின்ற சைப்ரஸ் மரங்கள் பட்டு போன மரங்கள் மாதிரி தோற்றம் உள்ளது. அதன் மேல் சிகப்பு நிறுத்தில் இந்த ப்ரோமெலைட்(Bromeliad) செடிகள் வளர்வது மிகவும் வித்தியாசமாக இருந்தது. சில இடங்களில் அலிகேட்டர்கள் அமைதியாக தரையில் படுத்துக்கிடப்பதையும் பார்த்தோம்.
எங்களுடைய கேம்பிங் இடம் வேறு திசையில் இருந்ததால் மறுநாள் காலையில் நாங்கள் போக வேண்டிய ட்ரைல் சென்று கொள்ளலாம் என்று திரும்பிவிட்டோம். மறுநாள் அதிகாலையில் நேரே ட்ரைல் சென்று விட்டோம். பொதுவாக ட்ரைல்களில் அடையாளக் குறிகள் இருக்கும்,நாங்கள் போய் நின்ற இடத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சகதியும்,புற்களும்,தூரத்தில் கொஞ்சம் மரங்களும் இருந்தன.உள்ளே நடந்து சென்றால் கண்டிப்பாக வேறு செடிகளை பார்க்கலாம், ஆனால் காலை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை. அலிகேட்டர்கள் எங்கே வேண்டுமானாலும் படுத்திருக்கலாம், மாட்டிக்கொண்டோமானால் அவ்வளவு தான். தண்ணீரில் அலிகேட்டர் தான் ராஜா,நாம் அதற்குள்ள மரியாதையை கொடுத்தாக வேண்டும்.
நாங்கள் ஒன்றும் Man Vs Wild மாதிரி இயற்கையை கைப்பற்றி மனிதன் தான் அனைத்திலும் உயர்ந்தவன் என்று நிருபிக்க செல்லவில்லை.
அதனால் வேறு யாராவது இந்த பாதையில் நடக்க வருகிறார்களா, வந்தால் இந்த இடத்தை பற்றி கொஞ்சம் விசாரித்துவிட்டு என்ன பண்ணுவதென்று பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். ஒரு வண்டியும் அந்த பாதைக்கு வரும் அறிகுறியே இல்லை. உள்ளே நடந்து சென்று மலர்களை பார்ப்பதற்கு ஆசை இருந்தாலும் அலிகேட்டர் மேல் உள்ள பீதியில் அப்படியே திரும்பிவிட்டோம். இவ்வளவு நேரம் அலிகேட்டர்களை பார்த்தாலும் பாதுகாப்பான தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டதால் இப்பொழுதுதான் அதனுடைய பிரம்மாண்டம் தலையில் இறங்க ஆரம்பித்தது.
எவர்கிலேட்ஸ் மாதிரி உள்ள காட்டிற்கு இதுவரை சென்றதே இல்லை. மிகப்பெரிய காடு என்பதால் ஒருபுறம் தண்ணீரும் புற்களும் இருக்கிறது,ஒரு புறம் சைப்ரஸ் மரங்கள் வளர்ந்து கொஞ்சம் காய்ந்த பூமியாக இருக்கிறது, ஒரு புறம் ஏரிகள் இருந்தன. நாம் அங்கே இருக்கும் குறுகிய காலத்திற்குள் இந்த இடத்தை புரிந்து கொள்ள முடியாது. அதனால் மறுபடியும் தகவல் மையத்திற்கு சென்று இந்த தண்ணீர் இருக்கின்ற இடங்களுக்கு எப்படி செல்வது என்று கேட்டோம். அவர்கள் கேனோ அல்லது கயாக் உபயோகித்து செல்லுங்கள் என்று எளிதாக கூறிவிட்டார்கள். ம்க்கும்,தென்னிந்தியாவில் கன்னியாகுமரியில் இருந்து வந்தவர்களுக்கு கேனோவும் கயாக்கும் தான் உபயோகிக்க தெரியப்போகிறது.
நமக்கெல்லாம் பிச்சாவரம்,சுந்தர்பன் காடுகள் எங்கு சென்றாலும் படகோட்டிகள் இருப்பார்கள், இதெல்லாம் என்ன லிப்ட் ஆப்பரேட் பண்ணுவதற்கு,காபி மெஷின் உபயோகிப்பதற்கே நம் இந்தியாவில் நமக்கு இன்னொருவர் வேண்டும்.
கேனோவை வாடகைக்கு எடுத்து முயற்சி செய்து பார்க்கலாமா என்று யோசிப்பதற்குள் அலிகேட்டரின் உருவம் ஞாபகத்திற்கு வந்தது.
தகவல் மைய ஊழியர் நாங்கள் முழிப்பதை பார்த்துவிட்டு அருகில் க்லைட் புட்சர்(Clyde Butcher) கேலரியில் கும்பலாக சதுப்பு நில நடை ஆரம்பிக்க போகிறது, இடம் இருக்கிறதா என்று முயற்சி செய்து பாருங்கள் என்று கூறினார்.
இதை விட்டால் நீரில் நடப்பதற்கு நமக்கு வேறு வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை என்று உடனே க்லைட் புட்சர் கேலரி(Clyde Butcher Gallery) சென்றொம். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கூட்டத்தில் சென்றதால் இங்கேயும் ஓடிப்போய் இடம் பிடித்து விடவேண்டும் என்றே மனம் கூறியது. நமக்கு தட்கல் டிக்கெட்டே வினாடிகளில் முடிந்து விடும், அந்தளவு கூட்டத்தில் இந்தியாவில் வளர்ந்ததால் ஓடிப்போய் இடம் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் வளர்ந்துவிட்டோம். அமெரிக்காவில் யூனிவேர்சல் ஸ்டுடியோவில் கூட்டத்தில் நின்றுருக்கிறோம், ஆனால் காடுகளில் எங்கேயும் கூட்டம் பார்த்தது கிடையாது. இருந்தாலும் ஒருவேளை அலிகேட்டர் பார்க்க கூட்டம் இருக்குமோ என்ற சந்தேகத்தில் முன்பதிவு செய்ய சென்றோம், ஆனால் அங்கே கூட்டம் நிரம்பவில்லை.
நீரில் நடைபயணம்
அடுத்து ஒரு மணிநேரத்தில் உள்ள நடை பயணத்திற்கு பதிவு செய்துவிட்டு அவ்விடத்தில் மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த ஆர்க்கிட் மலர்களையும் மரங்களில் இருந்த நீர்காகங்களையும் பார்த்துக்கொண்டிருந்தோம். நடை பயணத்திற்கான கும்பல் சேர்ந்ததும் கும்பலை நடத்தி செல்பவர் சில அறிவுரைகள் கூறிய பின், எல்லோரையும் அங்கே இருந்த நடைபயணத்திற்கு தேவையான ட்ரெக்கிங் குச்சியை எடுத்துக்கொள்ள கூறினார். வினோத் கையில் கேமராவை சுற்றிக்கொண்டார், அதை தவிர நாங்கள் எந்த உடைமைகளையும் எடுத்துக்கொள்ளவில்லை. தண்ணீரில் நடக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஒரு அலிகேட்டர் அதன் குட்டியுடன் படுத்துக்கிடந்தது.
தண்ணீர் அளவு எனக்கு முழங்கால் அளவுக்கு இருந்தது. தண்ணீர் நிறம் வேறு கறுப்பாக இருந்ததால் கீழே எங்கே கால் வைக்கிறோமென்றே தெரியவில்லை.மரத்தின் வேர் காலில் பட்டால் கூட பீதியாக இருந்தது. சகதி தரை என்பதால் குச்சியை வைத்து வழுக்காமல் பொறுமையாக நடக்க வேண்டியதாக இருந்தது. மரங்களில் பாம்புகள்,சிலந்திகள் இருக்குமென்பதால் கைகளை மரங்கள் மேல் வைத்துவிடாதீர்கள் என்று எங்களுடைய வழிகாட்டி கூறியிருந்தார்.
நம்ம வேறு நிறைய அனகோண்டா மாதிரி படங்கள் பார்த்து வைத்ததால் தண்ணீருக்கு அடியில் ஏதோ வாயை திறந்து கொண்டு நமக்காக காத்திருக்கிற மாதிரியே ஒரு மனப்பிராந்தி. மலைகள்,காடுகள் என்று நாங்கள் சுற்றியிருந்தாலும் இந்த மாதிரி ஒரு இடத்தில் நடந்ததில்லை என்பதால் நான் பொறுமையாக நடந்து வந்து கூட்டத்தில் பின்தங்கி விட்டோம். சுற்றியிருந்த இயற்கை சூழல் வேறு விதமான அழகாக இருந்தாலும் கொஞ்சம் பயமுறுத்தும் வகையிலேயே இருந்தது. வக்கா பறவை மரக்கிளையில் (Night Heron) அழகாக அமர்ந்திருந்தது.
சுற்றியுள்ள மரங்களில் ஆர்க்கிட் தேடலாம் என்று தான் நடக்க ஆரம்பித்தோம், ஆனால் நடப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் நான் அதிலேயே குறியாக இருந்தேன்.வினோத் தான் ஆர்க்கிட் தேடிக்கொண்டே எனக்கும் பார்த்து கால் வைப்பதற்கு வழி சொல்லிக்கொண்டே முன்னால் சென்றார். பாதி தூரம் வந்திருந்தபோது வினோத் ஒரு ஆர்க்கிட் மலரை பார்த்துவிட்டார். எங்கள் வழிகாட்டியை அழைத்து ஆர்க்கிட் மலரை அவருக்கும் எங்களுடன் வந்த கும்பலுக்கும் காட்டினோம்.
யாரும் இவ்வளவு அழகான ஒரு மலரை இந்த பயமுறுத்துகின்ற பிரதேசத்தில் எதிர்பார்க்கவில்லை. எல்லோருக்கும் அந்த ஆர்க்கிட் மலரை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி.ஒரு மலரை பார்க்க ஆரம்பித்தவுடன் வரிசையாக வேறு சில ஆர்க்கிட் மலர்களை பார்த்தோம். நாங்கள் ஆர்க்கிட் மலர்களின் பெயர் சொல்லி மற்றவர்களிடம் காட்டியவுடன் எங்கள் வழிகாட்டிக்கும் எங்களுடன் நடந்த அமெரிக்க குழுவுக்கும் ஒரே ஆச்சரியம். நானும் ஆர்க்கிட் மலர்களை பார்க்க ஆரம்பித்தவுடன் கொஞ்சம் பீதி குறைந்து மலர்களை ரசித்தேன்.
கொஞ்ச தூரம் மலர்களை பார்த்த சந்தோஷத்தில் மரம் அசைகின்ற சத்தத்திற்கெல்லாம் பயப்படாமல் நடந்துகொண்டிருந்தபோது எங்கள் வழிகாட்டி எல்லோரையும் கொஞ்சம் பயப்படாமல் அமைதியாக நிற்க சொன்னார். என்னவென்று பார்த்தால் கொஞ்சம் தூரத்தில் பாம்பு ஒன்று நீந்தி சென்றது. அந்த பாம்பு விஷம் அதிகம் உள்ள பாம்பு என்று வழிகாட்டி கூறியவுடன் எனக்கு மறுபடியும் பீதி ஒட்டிக்கொண்டது. ஆனால் வினோத்திற்கு ஒரே மகிழ்ச்சி.
வழிகாட்டியின் உதவியுடன் பாம்பை தொந்தரவு செய்யாமல் பாம்பை ஒரு புகைப்படம் எடுத்துவிட்டவுடன் வினோத்திற்கு திருப்தி. ஒரு சில இடங்களில் தண்ணீர் தெளிவாக தெரிந்தது, அவ்விடங்களில் அந்த குளிர்ந்த தண்ணீரில் கால் வைப்பதை மகிழ்ச்சியுடன் அனுபவித்தேன். திரும்பி வரும்பொழுது கொஞ்சம் கால் இடத்திற்கு பழகிவிட்டதால் நடப்பதற்கு ரொம்ப சிரமமாக இல்லை. என்ன தான் பயத்துடனே நான் முழுவதும் நடந்தாலும் நடந்து முடித்தவுடன்,நல்ல வேளை இந்த நடை பயணம் செய்தோம், இல்லையென்றால் இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருக்கவே கிடைத்திருக்காது.
அலிகேட்டர்,முதலை,புலி,பாம்புகளுக்கு பயப்படுவது தவறு கிடையாது, ஏனென்றால் அவர்களின் இடத்தில் அவர்கள் தான் ராஜா. அதற்குரிய மரியாதையை கொடுப்பது நம் பொறுப்பு.
இப்படி ஒரு பீதியெழுப்பும் அலிகேட்டர் வாழும் இடத்தில் அழகான ஆர்க்கிட் மலர்களும்,ப்ரோமெலைட் செடிகளும் உள்ள இந்த எவெர்க்லேட்ஸ் தேசிய பூங்காவை பற்றி வியந்துகொண்டே கிளம்பினோம்!
தொடர்ந்து படிக்க வேறு சில பயணங்களில் தொகுப்புகள்
பிக் பென்ட் தேசிய பூங்கா
https://roamingowls.com/2018/08/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/