வசந்த கால மலர்கள் தேடி ஒரு பயணம்
தென்னிந்தியாவில் மழைக்காலமும் வெயில்காலமும் தான் நாம் பெரும்பாலும் அனுபவிக்கின்ற சீதாக்ஷண நிலைகள். மார்கழி மாத குளிருக்கே நாமெல்லாம் தலையில் ஸ்கார்ப் கட்டிக்கொள்வோம். வருடம் முழுவதும் மரங்கள் பச்சையாகவே தான் இருக்கும்.நன்றாக கவனித்துப் பார்த்தால் சில மரங்கள் இலையுதிர் காலங்களில் இலையை கொட்டியிருக்கும், ஆனால் மற்ற மரங்கள் இலையுடன் இருப்பதால் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம். சரக்கொன்றை மரங்கள் ஏப்ரல் மாதத்தில் பூத்துக் குலுங்கும். நாம் இந்த மரங்களை பூக்கும் போது மட்டுமே கவனிப்போம், அதன் பிறகு வருடம் முழுவதும் பச்சை இலைகளுடன் இருக்கும் இந்த மரங்களை பெரிதாக கண்டுகொள்ள மாட்டோம். வசந்த காலம்,இலையுதிர் காலம்,பனி காலம் இருந்தாலும் நமக்கு சுற்றியுள்ள மரங்களிலோ, சீதாக்ஷண நிலையிலோ பெரிய வேறுபாடு இல்லாததால் நம்முடைய வாழ்க்கை முறைகள் வருடம் முழுவதும் ஏகதேசம் ஒரே மாதிரி தான் இருக்கும். மழை காலத்தில் மிஞ்சி போனால் குடை எடுத்து செல்வோம், அதையும் பாதி நேரம் எடுத்து செல்ல மறந்து விட்டு மழையில் சந்தோஷமாக அல்லது கோபமாக நனைவோம்.
வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் மற்ற குளிர் நாடுகளிலும் பனி,வசந்தம்,வெயில்,மழை,இலையுதிர் என்று அனைத்து காலங்களும் தெளிவாக சுற்றுசூழலை மாற்றி விடும், அதனால் அங்கே வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளும் சீதாக்ஷண நிலைக்கு ஏற்ப மாறிவிடும். நான்கு மாதங்கள் உறை பனியில் இருந்தவர்களுக்கு வசந்த காலத்தின் முக்கியமும்,அருமையும் தெரியும். நாங்கள் சுற்றியுள்ள மரங்கள்,பறவைகள், மலர்கள் பார்த்து ரசிப்பவர்கள் என்பதால் பனிக்காலம் முடிந்து வசந்த காலம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்திருப்போம்.
பனியை முதன்முறை பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கும். தினமும் வெளியே வரும்போது கோட்,குல்லா இல்லாமல் வெளியே வர முடியாது, காரின் மேல் விழுந்த பனியை தள்ளி விடாமல் காரை வெளியே எடுக்க முடியாது போன்ற அன்றாட சிக்கல்களை பார்க்கும்போது பனிக்காலத்தின் மேல் எரிச்சல் வர ஆரம்பிக்கும்.
குளிர் நாடுகள் அனைத்தும் வசந்த காலத்தை எதிர்பார்ப்பவர்கள் என்பதால் தான் வசந்த காலத்தை வரவேற்பதற்கு “ஸ்ப்ரிங் பெஸ்டிவல்” நடத்துவார்கள். ஜப்பான் செர்ரி ப்ளோஸ்ஸம் திருவிழாவிலிருந்து ஸ்விட்ஸ்ர்லாண்ட் ஸ்னோ மேனை பட்டாசு வைத்து கொளுத்துவது வரை அனைத்து வசந்த திருவிழாக்களுமே பனிக்காலம் முடிந்ததை கொண்டாடி வசந்த காலத்தை வரவேற்பதற்கே உள்ளன. அத்தகைய வசந்த காலத்தை நாங்கள் அந்த வருடம் நிறைய வசந்த கால மலர்கள் பார்த்து கொண்டாடுவோம் என்று முடிவு செய்தோம்.
பனி உருகி வசந்த காலம் ஆரம்பிக்கும் தருவாயில் சில மலர்கள் மலர ஆரம்பிக்கும். பனி முற்றிலும் உருகிய பின் சில மலர்கள் மலர ஆரம்பிக்கும். சகதி இடங்களில் மலரும் ஸ்கங்க் கேபேஜ்(Skunk cabbage) மலர் வசந்த காலத்தின் முதல் மலராகும். நான்கு மாதங்கள் எந்த மலரையும் பார்க்க முடியாமல் இருந்த எங்களுக்கு இந்த வேறு விதமான வடிவிலும், மணத்திலும் இருக்கின்ற இந்த மலரே கண்ணுக்கு அழகாக தெரிந்தது. சாலையோரம் மலர்ந்து கிடந்த டான்டேலியன்,க்ரோக்கஸ் மலர்களையே உருண்டு புரண்டு புகைப்படம் எடுத்தோம். ஆங்காங்கே வசந்த கால மலர்கள் அழகாக மலர்ந்திருந்தாலும் எங்காவது கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலர்கள் மலர்ந்து கிடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். எல்லோஸ்டோன்(Yellowstone National Park),ராக்கி மௌண்டைன் (Rocky Mountain National Park) தேசிய பூங்காக்களில் வசந்த காலம் மே – ஜூன் மாதங்களில் தான் வரும். ஆனால் ஸ்மோக்கி மலையில் ஏப்ரல் மாதம் வசந்த காலம் வந்துவிடும், அத்தோடு பிரிஞ்சுட் பாசிலியா(Fringed Phacelia) என்ற வெள்ளை மலர் தரை முழுவதும் மலர்ந்திருக்கும் என்று கேள்விப்பட்டவுடன் ஸ்மோக்கி மலை கிளம்பி சென்றோம்.
வசந்த கால மலர்கள் (Spring Blooms in Smoky Mountain National Park)
தரை முழுவதும் மலர்கள் மலர்வதை பார்ப்பது இந்த காலத்தில் காணக்கிடைக்காத காட்சி என்பதால் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடந்த பின்பு தான் அம்மாதிரி காட்சிகளை பார்க்க முடியும். மலர்களை பார்க்கும் ஆர்வத்தில் எங்களுக்கு நடை பயணம் கடினமாக தெரியவில்லை. அதிலும் செல்லும் வழிகள் எங்கும் வித விதமான வடிவங்களில் வண்ண வண்ண மலர்கள்,எங்கள் சந்தோஷத்தை பற்றி அப்புறம் கேட்க வேண்டுமா என்ன?
“வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே” என்ற வரி எப்பொழுதும் என் மனதில் ஒரு மாய காட்சி மாதிரியே தோன்றும், ஆனால் அன்று அதை நேரில் கண்டோம். தரை முழுவதும் வெள்ளை மலர்கள் – வசந்த கால மலர்கள்!
அந்த மலர்களின் தேனை சாப்பிடுவதற்கு சுற்றிக்கொண்டிருந்த தேனீக்களின் சத்தத்தை தவிர அங்கே வேறு எந்த சத்தமும் இல்லை. வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத இயற்கை காட்சிகளை அந்த வசந்த காலத்தில் நாங்கள் கண்டோம். வசந்த காலத்தில் பார்த்த சில மலர்களின் புகைப்படங்களை கீழே கேலரியில் பார்க்கலாம். வசந்த காலத்தின் சிறப்பு செடிகள் மலர்வதிலும்,கீச் கீச்சென்று பறவைகள் பனி முடிந்து விட்டதென்று குதியாட்டம் போடுவதிலும், மரங்களெல்லாம் கொஞ்சம் சூரியன் தெரிகிறதே என்று இலை வைப்பதிலும்,உழவர்கள் செடிகள் பயிர் செய்ய ஆரம்பிப்பதிலும்தான் இருக்கிறது. ஆனால் இயற்கையுடன் ஒன்றாமல் வளரும் இன்றைய காலத்தில் ஸ்ப்ரிங் பெஸ்டிவல் என்று இன்னும் நிறைய ஷாப்பிங் செய்வதற்கான காரணமாக மட்டுமே வசந்த காலம் மாறிவிட்டது.
வசந்த காலத்தின் அருமையை கண் முன்னால் பார்த்தவுடன் இமாலய மலை தொடர்ச்சி இருக்கும் மாநிலங்களில் கண்டிப்பாக வசந்த காலத்தை இதே மாதிரி பார்க்க முடியுமே என்று தோன்றியது. இந்தியா வந்தவுடன் வசந்த காலத்தில் பூக்களின் பள்ளத்தாக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். மனிதர்களால் பார்டர் போட்டு நாடுகள் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும் சீதாக்ஷண நிலையை பொறுத்தே இயற்கை அன்னை உலகத்தை அழகுபடுத்துகின்றது. அந்த வகையில் இங்கே எங்கள் கண்முன்னே உள்ள அழகை நம் ஊரிலும் பார்க்க போகிறோம் என்ற நினைப்பில் உற்சாகத்தோடு மலர்களை விடாமல் தேடினோம் . பல அரிய மலர்களை கண்டு களித்தோம்.
இவ்வளவு பூக்களை பார்த்த பின்பு , ஒரு வருடம் கழித்து , இந்தியாவில் உத்திரகாண்ட் மாகாணத்தில் உள்ள பூக்களின் பள்ளத்தாக்கில் (Valley Of Flowers) பூக்களை பார்ப்பதற்கான உகந்த மாதத்தை கண்டுபிடித்து அங்கே சென்றோம். கடினமான மலையேற்றத்தை முடித்து பூக்களின் பள்ளத்தாக்கை சென்றடைந்தபோது எங்கள் கண்களுக்கு பெரிய விருந்தே காத்திருந்தது. அங்கே பார்த்த நம் நாட்டு வண்ண மலர்களை இந்த வலைப்பதிவில் காணலாம்.
Captivating Floral diversity of Valley of Flowers