இரவிக்குளம் (Eravikulam) பூங்காவில் 2017-ஆம் ஆண்டிலிருந்தே 2018-ஆம் ஆண்டில் குறிஞ்சி மலர்கள் மலரப்போகிறதென்று ஒரே தடபுடல். நாங்களும் ஜூலை மாதத்திலிருந்து பூங்காவிற்கு போன் செய்து குறிஞ்சி மலர்ந்து விட்டதா என்று கேட்டுக்கொண்டே இருந்தோம். பூங்காவிற்குள் நேரே சென்று எளிதாக குறிஞ்சி மலர்களை பார்த்துவிட்டு திரும்பிவிடலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் இவ்வருடம் தான் சரித்திரத்தில் காணாத மழையை கேரளா கண்டு சிக்கி தவித்தது. சாலைகள் எல்லாம் உடைந்து விட்டதால் இரவிக்குளம்(Eravikulam) பூங்காவையும் மூடிவிட்டார்கள். ஒரு மாதம் கழித்து பூங்காவை மறுபடியும் திறந்த போது தான் குறிஞ்சி மலர்களும் மலர ஆரம்பித்திருந்தன. நாங்கள் செப்டம்பர் முதல் வாரம் மூணாருக்கு கிளம்பினோம். நீலகிரி மலையிலும் பழனி மலை தொடர்ச்சியிலும் அலைந்து திரிந்து குறிஞ்சி மலர்களை பார்த்ததால் மூணாறில் இரவிக்குளம்(Eravikulam) பூங்காவில் எளிதாக பார்த்துவிடலாம் என்று நினைத்திருந்தோம். நாங்கள் சின்னாறு வன சரணாலயம் வழியாக மூணாறு சென்றோம். தூரத்தில் தெரிந்த மலை ஊதா நிறத்தில் தெரிந்தவுடனே எங்கள் உற்சாகம் அதிகமானது.
மூணாறு செல்லும் பாதை வெள்ளத்தினால் மிகுந்த சேதத்திற்கு உண்டாயிருந்தது. நில சரிவுகளையும் சாலையில் உள்ள குண்டு குழிகளையும் பார்த்து பொறுமையாக வண்டி ஓட்டி செல்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.2017-ஆம் ஆண்டு நாங்கள் மூணாறுக்குள் நுழையும்போது எப்படி இருந்ததோ அதற்கு நேர் மாறாக இருந்தது.பாலம் உடைந்து போய் இருந்தது, மரங்கள் எல்லாம் முறிந்து கிடந்தன,சாலைகளெல்லாம் சேதமடைந்திருந்தன.
நெடுநேர பயணத்தினால் நாங்கள் களைப்படைந்து ஹோட்டலில் நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்கிவிட்டோம். நடுராத்திரி மழை ஆரம்பித்து விட்டது. நாங்கள் ஆன்லைனில் ஏற்கனவே பூங்காவிற்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தோம். எப்பொழுதும் போல முதல் வண்டி 7.30க்கே நாங்கள் பதிவு செய்திருந்ததால் மழை நிற்காவிட்டால் என்ன பண்ணுவது என்று யோசனையுடன் மறுபடியும் தூங்கி போனேன்.
மறுநாள் அதிகாலையில் மெல்லிய மழை தூறலுடன் மூணாறு அழகாக கண் விழித்தது.
நாங்கள் பூங்காவில் கூட்டத்தில் வாகனத்தை நிறுத்தி சிரமப்படவேண்டாம் என்று ஆட்டோவில் சென்றோம்.நாங்கள் மழையை ரசித்துக்கொண்டு சென்றாலும் ஆட்டோ ஓட்டுநர் மறுபடியும் மழையா என்று புலம்பிக்கொண்டே வந்தார். அவரிடம் வெள்ளத்தை பற்றி கேட்டபோது, அப்படி ஒன்றும் பெரிய மழை எல்லாம் இல்லை,இருந்தாலும் ஏன் இவ்வளவு சீரழிவு என்று எங்களுக்கு புரியவில்லை என்று கூறினார். ஆனால் ஒருவேளை பெண்களை சபரி மலைக்கு செல்லலாம் என்று பேசிக்கொள்கிறார்களே அதனால் தான் இந்த இயற்கை சீற்றம் நடக்கிறதோ என்னவோ என்று அவர் கூறியவுடன் நாங்கள் கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டோம். இரவிக்குளம்(Eravikulam) பூங்காவில் நாங்கள் தான் முதல் ஆளாக சென்று இறங்கினோம். நாங்கள் கூட்டம் அதிகமாக இருக்குமென்று ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தோம். இங்கே பார்த்தால் வந்தவர்களும் மழை பெய்கிறதென்று திரும்பி சென்று கொண்டிருந்தார்கள். மழை நிற்கிற மாதிரி இல்லை என்றவுடன் கேமராவை பாதுகாப்பதற்காக பூங்காவில் இருந்த கடையில் மற்றொரு குடை வாங்கிக்கொண்டோம்.
இரவிக்குளம்(Eravikulam) பூங்கா
டிக்கெட்டை சரி பார்த்துவிட்டு எங்களை வண்டி ஏறும் இடத்திற்கு செல்ல கூறினார்கள். நாங்கள் ஆர்வத்துடன் வண்டியில் ஏறி அமர்ந்தோம். வண்டியில் இருந்து எட்டி எட்டி மலர்களை பார்த்துக்கொண்டு வந்தோம். வண்டியை நிறுத்தி நடை பயணத்தை ஆரம்பிக்கும் இடத்திலும் ஒரு கடை இருந்தது. அங்கே இன்னும் சிலர் குடை வாங்கினார்கள். வன அலுவலர் குறிஞ்சி மலர்களை பறித்தால் அபராதம் என்று எச்சரிக்கை குடுத்தார். நாங்கள் உற்சாகமாக குடையை பிடித்துக்கொண்டு குறிஞ்சியை பார்க்க நடக்க ஆரம்பித்தோம். ஆங்காங்கே குறிஞ்சி மலர்களை பார்த்தோம் ஆனால் எங்கேயும் தொடர்ந்து கண்ணில் படவில்லை.கடைசியில் உள்ள மலை பகுதியில் இருக்குமென்ற நம்பிக்கையில் தொடர்ந்து நடந்தோம். கடந்த தடவை வந்தபோது பார்த்த ஆர்க்கிட் செடிகளை தேடினோம்,ஒன்றிரண்டை தாண்டி அவையும் கண்ணில் படவில்லை. இந்த வெள்ளத்தினால் எவ்வளவு விஷயம் தான் மாறி விட்டது என்று யோசனையுடன் நடந்தோம். மழை பெய்து கொண்டே இருந்ததால் வரைஆடும் கண்ணில் படவில்லை. மலை சரிவில் கொஞ்சம் குறிஞ்சி மலர்கள் கண்ணில் பட ஆரம்பித்தன.
சில நிமிடங்களில் மலை முழுவதும் குறிஞ்சி மலர்கள் மலர்ந்திருப்பதை பார்க்க போகிறோம் என்று வேகமாக நடந்தோம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.Dicranopteris linearis,Odontosoria sp,Blechnum orientala பெர்ன் வகைகளை பார்க்க ஆரம்பித்தாலே அந்த காடு மனிதனால் சிதைக்கப்பட்டது என்று தெரிந்துவிடும்.இந்த பெர்ன்கள் மலை முழுவதும் வளர ஆரம்பித்து,குறிஞ்சி செடிகளையும் மற்ற செடிகளையும் அழித்துவிட்டன. வன அலுவலகம் சார்பாக பெர்ன் வகைக்கு பெயர் பலகை போட்டு வைத்திருக்கிறார்கள். 12 வருடம் கழித்து இந்த வருடம் தான் இரவிக்குளத்தில் குறிஞ்சி பூ மலர போகிறதென்று கூறிய போதே இவ்வளவு தான் என்றால் இன்னும் 12 வருடம் கழித்து என்ன மிஞ்ச போகின்றது. குறிஞ்சி மலர் படம் போட்டு குடை விற்ற வன அலுவலகம் குறிஞ்சி செடி பூங்காவில் என்னவாயிற்று என்று பார்க்காதா?
வேதனையும் கோபமும் வந்தாலும் இவ்வளவு தூரம் வந்துவிட்டதால் மற்ற மலர்களையாவது பார்க்கலாம் என்று தேட ஆரமபித்தோம். நேபால் சடேரியம் என்ற பிங்க் நிற ஆர்க்கிட் நிறைய இடங்களில் அழகாக மலர்ந்திருந்தது. சன் டியூ என்ற கார்னிவோரோஸ்(carnivorous) வகையை சார்ந்த செடி பாறைகளின் இடையே வளர்ந்திருந்தது எப்படி தான் வினோத்தின் கண்ணில் பட்டதோ!மிகவும் சிறிய செடி என்பதால் தாண்டி செல்பவர்களுக்கு நாங்கள் ஏதோ பாறையை உற்று படம் எடுப்பது போல் தெரிந்ததால் எங்களை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு சென்றார்கள்.
வினோத் சன் டியூ செடியை மேக்ரோ எடுத்துக்கொண்டிருந்த போது நான் அருகே மலர்ந்திருந்த ஒரு குறிஞ்சி செடியை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த குறிஞ்சி செடி முழு கொத்தாக மலர்ந்திருந்ததாலும் சாலையோரமாகவே இருந்ததாலும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அதன் அருகே நின்று ஒரு செல்ஃபீ எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களை பார்த்துக்கொண்டே மேலே ஒரு பாறையை பார்த்தால் ராணி மாதிரி வெள்ளை ஆர்க்கிட் ஒன்று பாறையில் தனியாக இருந்தது. பூங்கா முழுவதும் வேற்று செடிகள் வந்து விட்டதே என்று கவலையில் இருந்த எனக்கு இந்த ஆர்க்கிடை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
சுற்றுலா பயணிகள் அனைவரின் கைகளிலும் நாங்கள் வாங்கிய அதே குடை தான் இருந்தது.வன அதிகாரிகள் எதை விற்றார்களோ இல்லையோ அன்று நிறைய குடை மட்டும் விற்பனை செய்திருக்கிறார்கள்.மழையும் விடுகிற பாடாய் இல்லை. மழையாய் இருந்தாலும் நாங்களும் மலர்களை தேடுவதை விடுவதாய் இல்லை.அவ்வளவு பெரிய குடையை பிடித்துக்கொண்டு மழையில் நடந்தாலும் கொஞ்சம் ஈரம் மேலே பட்டுக்கொண்டிருந்ததால் குளிரெடுக்க ஆரம்பித்தது. நாங்களும் பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். குளிருக்கு இதமாக காஃபியின் நறுமணமும் கேக் மணமும் வந்தவுடன் கால்கள் நேராக மணம் வந்த திசை நோக்கி சென்றன.
கடையிலிருந்த மஃபினை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு அங்கேயிருந்த தகவல் நிலையத்திற்கு சென்றோம். இரவிக்குளத்தின் வரலாறை பற்றியும் சரணாலயத்தில் உள்ள உயிரினங்களை பற்றியும் புகைப்படங்களும் விபரங்களும் இருந்தன. அதில் ஒரு புகைப்படத்தை சுற்றுலா பயணி ஒருவர் அவரின் தாயாரிடம் காட்டி இப்படித்தான் குறிஞ்சி மலர்கள் மலையில் முன்னொரு காலத்தில் மலர்ந்திருந்தன போலும் என்று கூறினார். இப்பொழுதே நாம் புகைப்படத்தில் தான் ஒரு காட்சியை பார்ப்பது போல் நிலைமை ஆகிவிட்டது,இன்னும் 12 வருடம் கழித்து நம் குழந்தைகளுக்கு நாம் என்ன காட்டுவோம்,120 வருடம் கழித்து என்ன நிலைமை இருக்கும்??
குறிஞ்சி தேடல் முடிந்து விட்டதால் சுற்றுலா தளங்கள் சில சென்று விட்டு நாகர்கோவில் கிளம்பிவிடலாம் என்று முடிவு செய்தோம். டாப் ஸ்டேஷன் செல்லும் சாலை பெரிதாக பழுதடையாததால் மறுநாள் அதிகாலையில் மூணாறிலிருந்து டாப் ஸ்டேஷனுக்கு கிளம்பினோம். வழி முழுவதும் அணைகளும்,எஸ்டேட்டுகளும் இருந்தாலும் சுற்றுலாதளம் என்பதால் சாலையோரமெல்லாம் கடைகளும் குப்பைகளுமாய் இருந்தது. இருப்பினும் மிகவும் அதிகாலை நாங்கள் செல்லும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் சுற்றுலா தளமாக இருந்தாலும் ஆளே இல்லாமல் அமைதியாக இருந்தது. சாலையை கடந்து ஓடிய வீட்டு பூனையை காட்டு பூனையாக இருக்குமோ என்று கிண்டலடித்துக்கொண்டு சாலையோரம் மலர்ந்திருந்த இஞ்சி,பால்சம் மலர்களை ரசித்துக்கொண்டு டாப் ஸ்டேஷன் சென்றடைந்தோம்.
திறந்தவெளியில் மலை உச்சியில் நின்றதால் காற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது.குளிரும் அதிகமாக இருந்ததால் வெகு நேரம் அங்கு நின்று அந்த இயற்கை காட்சிகளை ரசிக்க முடியவில்லை.
தேனி வழியாக நாகர்கோவில் செல்லலாம் என்று கிளம்பிய பின் தான் தெரிந்தது, அந்த வழியில் சாலை வேலை நடந்து கொண்டிருப்பது. புழுதி பறந்து கொண்டிருந்த சாலையில் மெதுவாக போக்குவரத்தில் நின்று செல்ல வேண்டியதாகி விட்டது. இந்த வழியாக வந்தால் மலைகளையும் சாலையோரத்தில் வளர்ந்த செடிகளையும் பார்த்துக்கொண்டே செல்லலாம் என்று நினைத்திருந்தோம்.ஆனால் பெரிய பெரிய இயந்திரங்களை தான் பார்த்தோம். நான்கு வழி சாலை வந்துவிட்டால் நாடு முன்னேறி விடும் என்ற நோக்கத்தில் அரசு சென்று கொண்டிருக்கும் போது சாலையோர செடிகளை பற்றி கவலைப்பட்டால் நாம் தான் பைத்தியக்காரர்கள்.
எங்களுடைய பிரச்சனை என்னவென்றால் இரண்டு நாட்கள் நாங்கள் தேடிய போது கிடைக்காத பூக்கள் எல்லாம் இப்போது கண்ணில் படுகின்றன. இதில் சில செடிகளை அவ்விடங்களில் மட்டுமே பார்க்க முடியும்,சில செடிகள் அழியும் தருவாயில் இருப்பவை. இவ்வனைத்து செடிகளும் எங்களுக்கு சாலையோரத்தில் இருந்த பாறைகளில் கண்ணில் பட்டன. ஒரு பாறையில் பால்சம் மலர்கள் மிக அழகாக மலர்ந்திருந்ததை பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு அருகில் சென்றோம். அருகில் சென்றவுடன் இன்னும் நிறைய வேறு வகை மலர்கள் இருப்பதை பார்த்தோம். அருகில் உள்ள பாறைகளை எல்லாம் ஏற்கனவே உடைத்துக்கொண்டிருந்தார்கள்.
அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக இந்த பாறையை பார்க்கமுடியாது என்று உணர்ந்த போது மிகவும் வருத்தமாக இருந்தது.
சாலை வேலை செய்து கொண்டிருந்தவர்களும் அங்கே அடுத்து வெடி போட போகிறோம்,இடத்தை காலி பண்ணுங்கள் என்றார்கள்.படத்தில் காட்டுவது போல நாங்களும் பாறையை கட்டிப்பிடித்து மறியல் செய்ய முயற்சி செய்தால் வெடியை எங்கள் மேலே தான் போடுவார்கள்.
இதற்கு மேல் இந்த சாலையில் செல்ல வேண்டாமென்று மேப்பில் காட்டிய ஒரு சிறிய சாலை வழியாக செல்ல ஆரம்பித்தோம். கிராமங்களுக்கு போகும் சிறிய சாலை என்பதால் புழுதி இல்லாமல் அமைதியாக அழகாக இருந்தது.ஏலக்காய் தோட்டங்கள் நிறைய இருந்தன. பராமரிப்பு இல்லாத சாலை என்பதால் மெதுவாக தான் செல்ல முடிந்தது,ஆனால் சுற்றி புல்வெளிகளும் மலைகளும் கண்ணில் தெரிந்தன.
நாம் வேகமாக காரில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு நான்கு வழி சாலை தேவை. ஆனால் அந்த சுகத்திற்கு நாம் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க வேண்டும். பொறுமையாக வாழ்க்கையை ஓட்டுவதற்கு நாங்கள் சென்ற சிறிய சாலை போதும்.வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியையும் பணமாக நினைக்கும் இந்த கால கட்டத்தில் இந்த விஷயங்களை எல்லாம் எங்கே பேச முடியும்.
நீலகிரி தொடங்கி பழனி தொடர்ச்சி சென்று மூணாறில் முடிவடைந்தது எங்கள் குறிஞ்சி தேடல். குறிஞ்சி மலர்களை பார்த்து ரசித்த சந்தோஷ தருணங்கள் நிறைய இருந்தாலும் அவற்றின் வருங்காலத்தையும் மற்ற உயிரினங்களின் வருங்காலத்தையும் பற்றி யோசிக்கும்போது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது!!