பழனி மலையில்(Palani Hills) குறிஞ்சி மலர்கள்
நீலகிரி மலை தொடர்ச்சியில் குறிஞ்சி மலர்களை பார்த்த பின் பழனி மலை(Palani Hills) தொடர்ச்சியையும் ஒரு பார்வை பார்த்து விடலாம் என்று கிளம்பினோம். பழனி மலை(Palani Hills) தொடர்ச்சியில் இன்னும் காடுகள் அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக குறிஞ்சி மலர்களை பார்த்து விடலாம் என்று எதிர்பார்ப்புடன் கிளம்பினோம். எதிர்பார்த்த வண்ணமே கொடைக்கானல் செல்லும் குண்டூசி வளைவுகளில் குறிஞ்சி மலர்கள் ஆங்காங்கே பூத்துக்கிடந்தன. ஆனால் எங்களை ஆச்சர்யப்படவைத்தது இந்த பூக்களை விட கொடைக்கானல் உள்ளே நுழையும்போது ஆங்காங்கே கண்ணில் தென்பட்ட பேனர்கள். கொடைக்கானல் குறிஞ்சி மலர் காட்சியை பார்ப்பதற்கு தமிழக அரசு பேனர்கள் வைத்திருந்தன.

நம் தமிழ்நாடு என்று தான் பேனர் வைத்து தற்பெருமை பேசுவதை நிறுத்தப்போகிறதோ ?
இயற்கை சீற்றம் வந்தால் பொறுப்பேற்றுக் கொள்ளாத அரசு இயற்கையால் கிடைக்கும் பரிசுகளுக்கு மட்டும் அவர்கள் பெயரை உபயோகித்துக் கொள்கிறார்கள்.
காவேரி பொங்கியதும் எங்களால் தான் குறிஞ்சி மலர் பூப்பதும் எங்களால் தான் என்று கூறுவார்கள் போல!
ஊரின் நடுவே இருக்கும் கோக்கர்ஸ் பூங்காவில் குறிஞ்சி மலர்களை பார்க்கலாம் என்று கேள்விப்பட்டவுடன் முதலில் அங்கு சென்றோம். அங்கேயும் நம் அரசின் பேனர் தான் வரவேற்றது.சுற்றுலா பயணிகள் நடப்பதற்கு வசதியாக பாதை போடப்பட்டிருந்தது. பாதைக்கு ஒருபுறம் கடைகளும் மறுபுறம் சரிவில் குறிஞ்சி செடிகளும் இருந்தன.மலை மலையாக பார்க்கவேண்டிய மலர்களை கம்பிகளின் இடையே பார்ப்பதற்கு எங்களுக்கு எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் சுற்றுலா பயணிகள் குறிஞ்சி மலர்களை எளிதாக பார்ப்பதற்கு ஏற்ப இருந்தது இந்த பூங்கா. இந்த வருடம் கொடைக்கானலில் தொடர் மழை என்பதால் மற்ற இடங்களை விட இங்கே மலர்கள் சீக்கிரமாக மலர்ந்து விட்டன போலும்.

கோக்கர்ஸ் வாக் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடம். பூக்கள் இல்லை என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை,செல்பி படம் எடுத்துக்கொண்டே எல்லோரும் சுற்றி கொண்டிருந்தார்கள்!
ஏகதேசம் அனைத்து செடிகளும் மலர்ந்து முடித்திருந்தன. ஆனால் என்னுடைய பிரச்சனையெல்லாம் அங்கேயும் வளர்ந்திருந்த லேன்டனா செடிகள். செஞ்சிலம்பன் (Rufous Babbler) ஜோடியாக லேன்டனா மலர்கள் மேல் குதித்துக்கொண்டிருந்தாலும் வருங்காலத்தில் அனைத்து செடி வகைகளையும் அழித்துவிட்டு இந்த லேன்டனா செடிகள் மட்டும் தான் வளர்ந்து கிடக்குமோ என்று எனக்குள் ஒரு பெரிய கேள்விக்குறி.
கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை என்ற கிராமத்திற்கு செல்லும் வழி அழகாக இயற்கை வளம் நிறைந்த இடமாக இருக்கும். அவ்வழியில் குறிஞ்சி மலர்கள் ஆங்காங்கே அழகாக மலர்ந்து கிடந்தன. ஊரில் யாரோ இறந்துவிட்டார் போலும், எக்கோ அடித்து மலை முழுவதும் ஒப்பாரி பாடல் தான் கேட்டது. ஒப்பாரி பாடலை கேட்டுக்கொண்டே குளிரில் குறிஞ்சி மலர்களை பார்த்துக்கொண்டு வேறு மலர்கள் இருக்கிறதா என்று தேடிய போது எங்களுக்கு பிடித்தமான கோப்ரா லில்லி செடிகளின் இடையே மறைவாக இருந்ததை கண்டுபிடித்தோம்.

பாம்பு படம் எடுக்கின்ற மாதிரி இருக்கும் இந்த செடி கோப்ரா லில்லி வகையை சார்ந்தது.
வன அலுவலர்கள் மேற்பார்வையில் வளருகின்ற குறிஞ்சி செடிகளை லேன்டனா செடிகள் அழித்து வருகின்றன. ஆனால் சாலையோரங்களில் தானாக வளரும் குறிஞ்சி செடிகள் நன்றாக வளர்ந்தது மட்டுமில்லாமல் பல வகை காட்டு செடிகளும் அவைகளுடன் வளர்வதை பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும் காதிற்கு இதற்கு மேல் ஒப்பாரி பாட்டை கேட்க முடியாததால் அருகே உள்ள மன்னவனூர்க்கு நேரே வண்டியை ஓட்டினோம்.

சாலையிலிருந்து பார்க்கும்போது கீழே தெரிந்த பூம்பாறை கிராமம். எல்லா வண்ண நிறத்திலும் வீடு கட்டியிருப்பார்கள் போல!
மன்னவனூர் செல்லும் பாதையில் ஒரு சதுப்பு நிலத்தில் பல்வேறு செடிகளை பார்க்கலாம். ஈரப்பதம் அதிகமென்பதால் அவ்விடத்தில் அட்டைகள் நிறைய இருக்கும். வினாடிக்குள் கால்கள் முழுவதும் அட்டை ஏறிவிடுமென்பதால் கவனமாக சாலையோரத்தில் நின்று செடிகளை பார்த்துக்கொண்டிருந்தோம். அமெரிக்காவில் தெருவோரங்களில் நாங்கள் பார்த்த மாத் முலைன் என்ற செடியை நம்மூரில் குளிர் பிரதேசங்களில் மட்டும் பார்க்கலாம். என் உயரத்தில் இருந்த செடிகளையும்,வெல்வெட் மாதிரி இருந்த இலைகளையும்,சிறிய மஞ்சள் மலர்களை தேனீக்கள் மொய்த்துக்கொண்டிருந்ததை நான் ரசித்துக் கொண்டிருந்த வேளையில் சதுப்பு நிலத்தில் மலர்ந்திருந்த ஒரு மலரை பார்ப்பதற்கு வினோத் உள்ளே இறங்கிவிட்டார். புற்களுக்கு இடையே மலர்ந்திருந்த மலரை ஒரு அளவிற்கு மேல் அருகில் சென்று பார்க்க முடியாததால், படபடவென்று ஏறிய அட்டைகளை தட்டிவிட்டு அடுத்த இடத்திற்கு செல்ல தயாரானோம்.

ஏதோ அழகிய புல்வெளியில் வினோத் நிற்பது போல் தோன்றினாலும்,சகதி நிறைந்த இடத்தில் கால் முழுவதும் அட்டை ஏறிக் கொண்டிருந்தது தான் நிஜம்.
மன்னவனூரில் வன இலாகா, சுற்றுலா பயணிகளுக்காக ஏரியை சுற்றி நடப்பதற்கும்,படகு சவாரிக்கும் வசதி செய்து கொடுத்திருந்தது.ஆனால் பராமரிப்பு காரணமாக நாங்கள் சென்ற தினத்தன்று அவ்விடம் மூடப்பட்டிருந்தது. ஏற்கனவே நாங்கள் பல முறை இவ்விடத்திற்கு வந்திருந்தாலும், இயற்கையை பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் வேறு மலர்களையும்,பறவைகளையும் பார்ப்பதால் எங்களுக்கு அதே இடத்திற்கு மறுபடியும் வந்திருக்கிறோமே என்று தோன்றவே தோன்றாது. அதனால் இடம் மூடப்பட்டிருந்தது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. வேறு ஏதாவது இடம் கண்ணில் படுகிறதா என்று பார்க்கலாம் என்று கிளம்பினோம். ஒரு காய்ந்த புல்வெளியில் ஆடுகளின் வாயிலிருந்து தப்பிய சிறு மலர்கள் ஆங்காங்கே கிடந்ததை தாண்டி ஒரு ஈ,காக்கா கண்ணில் படவில்லை.

ஆடு மேய்ந்து மிச்சம் விட்ட பூக்களை தேடி தேடி படம் எடுத்துக்கொண்டிருந்தேன்.
மழை வேறு பெய்ய ஆரம்பித்தவுடன் வேறு வழியில்லாமல் சீக்கிரமாகவே வீடு திரும்பிவிட்டோம். வினோத் பொழுதுபோகாமல் வீட்டின் அருகே மலர்ந்திருந்த டான்டேலியன் மலர்களை படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

பொழுதுபோகாமல் வீட்டை சுற்றி வளர்ந்திருந்த டான்டேலியன் பஃப் பந்தை வினோத் படம் எடுத்துக்கொண்டிருந்தார். எனக்கு இந்த பஃப் பந்தை எங்கே பார்த்தாலும் பறித்து ஊத தான் தோன்றும்.
மறுநாள் மிகவும் குளிராக இருந்தாலும் மழை இல்லை. அதனால் வீட்டிலிருந்தே டால்பின் நோஸ் வரை நடந்து செல்லலாம் என்று கிளம்பினோம்.குளிர் பிரதேசங்களில் அதிகாலையில் ஆளில்லாத சாலையில் மலர்களையும் பறவைகளையும் பார்த்துக்கொண்டு நடப்பது ஒரு இனிமையான அனுபவம். நீலகிரி ஈப்பிடிப்பான் (Nilgiri Flycatcher) மரக்கிளையில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தது. சுற்றுலா பயணிகள் வர ஆரம்பிப்பதற்கு முன்னரே நாங்கள் சென்று விட்டதால் சுற்றுலா தளமாக இருந்தாலும் மிகவும் அமைதியாக இருந்தது டால்பின் நோஸ்.இந்த இடத்தில் மேகங்கள் தவழ்வதை அருகிலிருந்து அழகாக ரசிக்க முடியும்.அதே நேரத்தில் பள்ளத்தாக்கை பார்க்கும்போது பீதியாகவும் இருக்கும். மலையின் சரிவில் குறிஞ்சி மலர்கள் அழகாக மலர்ந்திருந்தன.

பளிச்சென்று வண்ணத்தில் இல்லாவிட்டாலும் ஒரு இதமான ஊதா வண்ணத்தில் உள்ள இந்த மலர்கள் கொத்து கொத்தாக மலர்ந்து அவ்விடத்தை அலங்கரித்திருந்தன.
சிக்காடா சத்தத்தை தவிர எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்த அந்த இயற்கை வளம் வாய்ந்த இடத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது தூரத்தில் சிவப்பு நிறத்தில் தரையில் பளிச்சென்று ஏதோ தெரிந்தது.என்னவென்று அருகில் சென்று பார்த்தால் அழகான ஒரு சிவப்பு நிற காளான் முளைத்திருந்தது. தவழ்கின்ற மேகங்கள்,வண்ண குறிஞ்சி மலர்கள், சிவப்பு நிற காளான் எல்லாவற்றையும் ஒரு சேர பார்க்கும்பொழுது அலிஸ் இன் வன்டர்லேன்ட் மாதிரி தான் தோன்றியது.

வினோத்திற்கு காளான்கள் என்றால் மிகவும் இஷ்டம், அதிலும் வண்ண நிற காளானை பார்த்தவுடன் ஒரே குஷி.
மாய உலகத்தில் இருப்பது போல இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.மறுபடியும் நடந்து வீடு செல்ல வேண்டுமே என்று ஞாபகம் வந்தவுடன் நடை பயணத்தை ஆரம்பித்தோம்.வரும்போது எவ்வளவு அமைதியாக இருந்ததோ அதற்கு நேர் மாறாக சுற்றுலா வண்டிகள் இங்கும் அங்கும் ஹார்ன் சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தன.போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்து வீடு வந்து சேர்வதற்குள் மாய நிலையிலிருந்து நிகழ்நிலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்.
ஏகதேச இடங்களை கொடைக்கானலில் சுற்றி விட்டதால் எங்கள் பயணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். பழனி(Palani Hills) செல்லும் பாதை வழியாக செல்லலாம் என்று கிளம்பிய எங்களுக்கு போனசாக அங்கேயும் குறிஞ்சி மலர்களை பார்ப்போம் என்று நினைக்கவேயில்லை. கொடைக்கானலில் இருந்து பழனி(Palani Hills) செல்லும் பாதை மிகவும் அழகாக இருந்தது.இயற்கை அழகை ரசித்துக்கொண்டே நாங்கள் மெதுவாக வண்டியில் சென்று கொண்டிருந்தோம்.
குறிஞ்சி மலர்கள்

பழனி(Palani Hills) செல்லும் சாலையில் மலர்ந்திருந்த குறிஞ்சி மலர்கள் அவ்விடத்தையே வண்ணமயமாக்கிவிட்டன.
குறிஞ்சி மலர்கள் ஆங்காங்கே கொத்துக்கொத்தாக மலர்ந்திருந்தன. பாண்டியன் நகரில் இருந்த ஒரு மலை முழுவதும் குறிஞ்சி பூ மலர்ந்திருக்கும் போல,நாங்கள் கொஞ்சம் தாமதமாக சென்றுவிட்டதால் மலை முழுவதும் கருகிய மலர் மட்டுமே கண்ணில் பட்டது.

மலை முழுவதும் மலர்ந்த மலர்களை பார்க்க முடியாவிட்டாலும் இவ்வளவு குறிஞ்சி செடிகள் இந்த மலையில் இருக்கின்றன என்பதே எங்களுக்கு மகிழ்ச்சி.
ஆனால் ஹபனேரியா என்ற வகையை சார்ந்த ஆர்க்கிட் மலர்ந்திருந்தது. அனைத்து பாறைகளிலும் நீர் சொட்டிக்கொண்டிருந்ததால் அதை சுற்றி நிறைய செடிகள் வளர்ந்திருந்தன. அதிலும் பாறைகளில் வளர்ந்திருந்த பால்சம் மலர்கள் மிகவும் அழகாக இருந்தன.

பாண்டியன் நகரில் இருந்த மலையில் ஹபனேரியா ஆர்க்கிட் பார்ப்போம் என்று எதிர்பார்க்கவேயில்லை.நீண்ட வெள்ளை ஆடை உடுத்தியது போல் இருக்கும் இந்த ஆர்க்கிடை புல்வெளிகளில் பார்க்கலாம்.
மலர்களையும் மற்ற இயற்கை வளங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.திடீரென்று கீழே ஊர் தெரிய ஆரம்பித்தவுடன் தான் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் என்று தெரிந்தது. இந்த வருடம் நல்ல மழை பெய்ததால் ஏரிகளும் அணைகளும் நிரம்பி இருந்ததை பார்க்கவே மனதுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

பழனி(Palani Hills) செல்லும் சாலையிலிருந்து பழனி ஊர் தெரிகின்ற காட்சி.
கொண்டை ஊசி வளைவிலிருந்து கீழே ஊரை பார்க்கும்போது அழகாக இருந்தாலும் ஊருக்குள் வந்தவுடன் மறுபடியும் போக்குவரத்து நெரிசலை பார்த்தவுடன் திரும்பி பழனி(Palani Hills)–கொடைக்கானல் சாலைக்கே சென்று விடலாம் என்று தோன்றியது. ஆனால் ஊருக்கு சென்று சேர வேண்டுமே, அதனால் கொஞ்சம் கடலை மிட்டாய்,வடை எல்லாம் வாங்கிக்கொண்டு நீண்ட நகர பயணத்திற்கு தயாரானோம்!