கோபாலஸ்வாமி பெட்டா


மைசூரிலிருந்து 75 கி.மீ தூரத்தில் இருக்கும் இந்த கோபாலஸ்வாமி சிகரம் பந்திப்பூர் தேசிய பூங்காவில் உள்ள உயரமான சிகரமாகும்.பந்திப்பூர் செல்லும்போதோ மைசூரிலிருந்து விடுமுறை நாளில் எங்காவது செல்லலாம் என்றால் செல்வதற்கோ ஏற்ற இடம் இந்த ஹீமவட் கோபாலஸ்வாமி பெட்டா.

நாங்கள் பந்திப்பூர் சென்றிருந்தபோது மழை காரணமாக பறவைகளை பார்க்க இயலவில்லை. மேப்பில் கோபாலஸ்வாமி சிகரம் மிக அருகில் இருந்ததால் அங்கே செல்லலாம் என்று காரில் கிளம்பினோம். பந்திப்பூரை விட்டு வெளியே வந்தவுடன் மழை இல்லை. நல்ல சுவையான தர்பூசணி பழங்களை சாலையோரம் விற்று கொண்டிருந்தார்கள். பழத்தை வாங்கி சுவைத்துக் கொண்டே திரும்பினால் வானத்தில் வல்லூறுகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

Egyptian Vulture,Tamilnadu Vulture

25 வருடங்களுக்கு முன் கூட லட்சக்கணக்கில் இருந்த பிணந்தின்னி கழுகுகள் இப்பொழுது அழிந்து போகும் நிலையில் இருப்பதால் இக்கழுகுகளை பார்ப்பது எப்பொழுதுமே எங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.

பொழுதுபோக்குக்காகத்தான் கோபாலஸ்வாமி சிகரம் செல்லலாம் என்று கிளம்பியதால் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் எங்களுக்கு இல்லை. ஆனால் சிகரம் செல்லவேண்டிய சாலை திரும்பியவுடன் போக்குவரத்து அதிகம் இல்லாத ஒரு விவசாய பூமியும் தூரத்தில் சிகரமும் தெரிந்தது. மண் சாலையை எதிர்பார்த்து சென்ற எங்களுக்கு தார் சாலையை பார்த்ததே அதிசயம். ஏனென்றால் நாங்கள் சென்னையிலேயே எல்லா இடத்திலும் உடைந்த சாலைகளை தான் பார்க்கிறோம்.

Gopalswamy betta road,Paulmathi Vinod,Scenic Road Karnataka

இந்த புகைப்படத்தை பார்க்கும்பொழுது தென்னிந்தியாவில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?

ஆண்,பெண் விவசாயிகள் இந்த வருடம் நல்ல மழை என்பதால் உற்சாகத்துடன் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். மஞ்சள் செடிகள்,அடுக்கு செண்டு மலர்கள் எல்லாம் தோட்டங்களில் செழித்து வளர்ந்திருந்தன. விவசாயி ஒருவர் மூட்டை மூட்டையாக மலர்களை பறித்து குவித்துக்கொண்டிருந்தார். நாங்களும் அவருக்கு உதவி செய்யலாம் என்று ஒரு ஐந்து நிமிடம் அவருக்கு உதவியிருப்போம். அதற்குள் விரல் நுனியெல்லாம் வலிக்க ஆரம்பித்துவிட்டது. பூ பறிப்பதற்கு கூட அனுபவம் நிறைய தேவை போல. எங்கள் இரண்டு பேருக்கும் காட்டு பூக்களை மனிதர்கள் பறிப்பது சுத்தமாக பிடிக்காது. ஏனென்றால் அந்த பூக்களெல்லாம் வனஉயிர்களுக்கு உரிமையானது. ஆனால் மனிதர்கள் தோட்டத்தில் வளர்க்கும் பூக்கள் பெரும்பாலும் அலங்காரத்திற்கு மட்டுமே உபயோகப்படும், அதை பறித்து அலங்காரம் செய்வதில் எந்த தவறும் இல்லை.

Gopalswamy betta,Samanthi Marigold garden karnataka

ஆரஞ்சு வண்ண சாமந்தி மலர்கள் மலர்ந்திருந்தது அவ்விடத்தின் அழகை இன்னும் அதிகரித்தது.

நமக்கு என்றுமே காட்டு மலர்கள் தான் பிரியம் என்பதால் சாலையோரம் காடு ஆரம்பித்தவுடன் காட்டு மலர்களை தேட ஆரம்பித்தோம். மைசூர் அர்கிரியா (Mysore Argyreia) செடி பர்ப்பிள் நிற மலர்களுடன் பூத்துக் குலுங்கி கொண்டிருந்தது. தரையில் உற்று பார்த்தால் ஏகப்பட்ட சிறிய மலர்கள். சமீபத்திய மழையினால் அனைத்து செடிகளும் கொண்டாட்டத்தில் இருந்தன. மலர்களை பார்த்து முடித்தவுடன் சிகரம் ஏறுவதற்குள்ள கொண்டை வளைவு ஆரம்பிக்கும் நுழைவிடத்திற்கு செல்லலாம் என்று கிளம்பினோம்.

மைசூர் அர்கிரியா,Mysore Argyreia,Mysore wildflower,karnataka flora

மைசூர் அர்கிரியா மலர்கள் காட்டின் வண்ணத்தையே மாற்றி இருந்தன.

கிராம அலுவலர்களிடம் நுழைவு கட்டணம் ஏதாவது உண்டா என்று கேட்கப் போனபோது தான் எங்களுக்கு ஞாபகம் வந்தது,நாங்கள் கர்நாடகாவின் உட்பகுதிக்கு வந்துவிட்டோம்,இங்கே யாருக்கும் தமிழ் தெரியப்போவதில்லை என்று. சைகையில் பேசியபோது தனியார் வண்டிகள் செல்ல அனுமதி கிடையாது,அரசு பேருந்தில் மட்டுமே செல்லமுடியும் என்று தெரிந்தது. எங்கள் காரை பார்க் செய்துவிட்டு அங்கே முதல் சவாரிக்கு நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறினோம். ஒரு நபருக்கு ஒரு வழி பயணத்திற்கு பேருந்து கட்டணம் 20 ரூபாய். டிரைவர்,கண்டக்டர் ஒரே நபர் தான். அவரும் சைகையில் எங்களிடம் கட்டணத்தை கூறினார். நான் குடுத்த புது 10 ரூபாய்களை பார்த்து டிரைவர்/கண்டக்டருக்கு ஒரே சந்தோசம். அவர் தொழிலில் சரியான சில்லறைகளை பார்ப்பது தான் அவருக்கு குஷி போல !

கோபாலசுவாமி,Gopalswamy betta temple,misty gopalswamy betta

கோபாலசுவாமி சிகரத்தில் உள்ள பழங்கோவில்.

கோபாலசுவாமி சிகரம் செல்லும் வழி மிகவும் அழகாக இருந்தது.வேறு எந்த வண்டியும் வராததால் ஹார்ன் சத்தம் கூட இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது அந்த பேருந்து பயணம். உயரம் ஏற ஏற குளிர் காற்று அடிக்க ஆரம்பித்தது. புதுமண தம்பதியினர்,முதிய தம்பதியினர், கல்லூரி தோழர்கள் கூட்டம், நடுத்தர வயது தோழிகள்,காதலர்கள் என்று எல்லா வகையினரும் எங்களுடன் பேருந்தில் உற்சாகமாக வந்தனர். உச்சி சென்றடைந்ததும் பனி மூட்டத்தின் நடுவே ஒரு பழங்கோவில் தெரிந்தது. வண்டி 15 நிமிடம் நிற்கும் என்று கூறியவுடன் சிலர் கோவிலுக்குள் சென்றனர், சிலர் இயற்கை காட்சிகளை ரசித்தனர்,சிலர் செல்பி எடுக்க ஆரம்பித்தனர். நாங்கள் எப்பொழுதும் போல பறவைகளையும் செடிகளையும் தேட ஆரம்பித்தோம்.

Ferns mosses gopalswamy betta,mysore bangalore tourist spot

இவ்விடம் இவ்வளவு பச்சையாக இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் ஆர்க்கிட் மலர்கள் எதுவும் கண்ணில் மாட்டவில்லை.

சீகர் பூங்குருவி(Malabar whistling thrush) காட்டினுள்ளிருந்து அழகாக பாடிக்கொண்டிருந்தது. 4757 அடியில் இருக்கும் இந்த சிகரம் நல்ல அடர்ந்த மரங்களுடன் இருப்பதால் நிறைய மழை பெற்று பச்சை பசேலென்று இருந்தது. மரங்களின் மேல் பாசியும் பன்னமும்(Mosses and ferns) வளர்ந்திருந்ததை கண்டு சாலையிலிருந்து இறங்கி மரங்கள் அருகே சென்றேன். ஒரு சில நிமிடங்கள் அங்கே நிற்பதற்குள் அட்டைகள் காலில் ஏற ஆரம்பித்துவிட்டன.

பனிமூட்டம் மெதுவாக நகரத் தொடங்கியவுடன் கீழே பந்திப்பூர் ஊரும் சிகரத்தில் உள்ள இயற்கை காட்சிகளும் தெளிவாக கண்களில் தெரிந்தன.

Gopalswamy betta viewpoint,bangalore mangalore mysore karnataka tourist spot

மேகமூட்டம் கலைந்து வித விதமான பச்சை வண்ணங்கள் நிறைந்த காட்சி கண் முன் தெரிய ஆரம்பித்தபோது மிகவும் பிரமிப்பாக இருந்தது.

நாங்கள் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தபோது கோவில் மணி சத்தம் கேட்டது.பூஜை முடிந்து ஒவ்வொருவராக வெளியே வர ஆரம்பித்தவுடன் நாங்களும் புறப்படத் தயாரானோம்கோபாலஸ்வாமி பெட்டா ஒரு சுற்றுலா தளமாகி குப்பையாகியிருக்கும் என்று எண்ணியிருந்த எனக்கு மாசுபடாத சிகரத்தை பார்த்து வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு நாள் பயணத்திற்கு ஏற்ற இந்த சிகரத்தை மைசூர்,பந்திப்பூர்,ஊட்டி சென்றால் கண்டிப்பாக பார்க்க செல்லுங்கள்.

Please follow and like us: