சின்னாறு வன சரணாலயம்
சின்னாறு வன சரணாலயம் (chinnar wildlife sanctuary) முன்னாறு அருகில் இருந்தாலும்,சின்னாறு வனம் இருக்குமிடம் மழை மறைவு பிரதேசம். 90 ஸ்ஃ.கிமீ பரப்பளவிலுள்ள இந்த சரணாலயம் மழை மறைவு பிரதேசம் என்பதால் சின்னாறு வனம் செழிப்பாக இருக்காது. முன்னாறில் மழை அதிகம் என்பதால் பொதுவாக மேக மூட்டமாகவும், பாறைகளிலிருந்து நீர் ஊறும் காட்சிகளை பார்க்க முடியும். ஆனால் சின்னாறில் பளிச்சென்று வெயிலும்,வறண்ட மரங்களையும் தான் பார்க்கமுடியும். முன்னாறில் பெருமளவு மழை பெய்தால்,மலையிலிருந்து வரும் நீரால் சின்னாறும் செழிப்பாகும். நாங்கள் அம்மாதிரி ஒரு சமயத்தில் தான் சின்னாறு சென்றோம்.

நீர் மருது பொதுவாக 80 அடி வரை வளரும். அதுவும் நதியருகே வளரும் மரங்கள் விரிந்து வளருமென்பதால் பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும்.
சின்னாறில் (chinnar wildlife sanctuary) தங்குவதற்கு வனத்துறை சில இடங்களில் குடில்கள் கட்டியிருந்தனர். குடில்கள் எளிமையாக இருந்தாலும் அருகே மலையை அல்லது நதியை பார்ப்பதற்கு ஏற்ப அமைத்திருந்தது நன்றாக இருந்தது. நாங்கள் நதி அருகே இருந்த குடிலை தேர்வு செய்தோம். அந்த குடில் சென்று சேர்வதற்கு நதியோரமாக கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். எங்களுடன் துணைக்கு வரும் வன காவலர்கள் இரவில் அங்கேயே சாப்பாடும் சமைத்துக் கொடுத்து விடுவார்கள்.
குடிலுக்கு மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் செல்லலாம் என்பதால் நாங்கள் சாலையோரமாக கொஞ்ச நேரம் நடக்கலாம் என்று நடக்க ஆரம்பித்தோம். மினிவேட்,மீன்கொத்தி,மரங்கொத்தி போன்ற பறவைகளை பார்த்துக்கொண்டே நடந்தோம். கொஞ்ச தூரத்தில் மஞ்சள் பட்டாம்பூச்சிகள் நிறைய பறந்து கொண்டிருந்தன. அருகே சென்றால் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள் தரையில் தாது உப்பை உறிந்து கொண்டிருந்தன. காடுகளில் நீர் ஊறியிருக்கும் இடங்களில் பட்டாம்பூச்சிகள் இம்மாதிரி தரையில் தாது உப்பை உறிவதை பார்க்கலாம்.
சின்னாறில் பட்டாம்பூச்சி வலசை

பட்டாம்பூச்சிகளை புகைப்படம் பிடிப்பது பொதுவாக கடினம். ஆனால் தாது உப்பை உறியும்போது இம்மாதிரி அழகாக புகைப்படம் எடுத்துவிடலாம்.
பட்டாம்பூச்சிகளை பார்த்துவிட்டு மறுபடியும் வரவேற்பு மையத்திற்கு சென்றோம். இரண்டு 19 வயது பழங்குடியை சேர்ந்த வாலிபர்கள் எங்களுடன் குடிலுக்கு வருவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நதியின் ஓரம் வழியாக நடக்க ஆரம்பித்தோம். நல்ல உயர உயரமாக இருந்த நீர் மருது மரங்களின் இடையே நடப்பது இனிமையாக இருந்தது.எங்களுடன் வந்த வன காவலர்களுக்கு பறவைகளை பற்றி எதுவும் தெரியவில்லை,கடமையே என்று எங்களுடன் நடந்து வந்தார்கள்.குடில் வந்தடைந்ததும்,இடத்தை சுத்தப்படுத்தினார்கள். எங்கள் உடைமைகளை குடிலுக்குள் வைத்துவிட்டு அருகே ஓடிக்கொண்டிருந்த நீரில் சென்று நீராடினோம். மாலை மலையேற்றத்திற்கு புத்துணர்ச்சியுடன் கிளம்பினோம்.

வனகாவலர்கள் எங்கள் கேமராவை உபயோகப்படுத்தி பறவைகளை தேடினர். அப்பொழுது பறவைகள் தேடிக்கொண்டிருந்த எங்களையும் ஒரு கிளிக்.
கிளிகள் க்ரீச்சிற்று பறந்தன. ட்ராங்கோ வித விதமான குரலெழுப்பி கத்திக் கொண்டிருந்தன. காடைகள் கூட்டமாக எங்களை கண்டவுடன் சிதறி ஓடின. இந்த விதவிதமான காட்சிகளை ரசித்துக்கொண்டே காட்டில் நடந்தோம். கொஞ்ச தூரம் நடந்த பிறகு ஒரு கண்காணிப்பு கோபுரம் கண்ணில் பட்டது. அதன் மேல் ஏறி தூரத்தில் ஏதாவது மிருகங்கள் தெரிகிறதா என்று பார்த்தோம். எதிர்பார்த்தவாறே தூரத்தில் ஒரு யானை ஒன்று இருந்தது. எங்களுடன் வந்த வனக்காவலர்கள் அதை பார்த்த பிறகு அந்த யானை செய்த சேட்டைகளை விவரித்தனர். கதை கேட்டுக்கொண்டே கீழே இறங்கினோம். இருட்டும் முன் குடிலுக்கு வந்து சேர்ந்தோம்.

கண்காணிப்பு கோபுரத்திலிருந்து மொத்த சரணாலயமும் தெரிந்தது. வனகாவலர்கள் தூரத்திலிருக்கிற மிருகங்களை கூட கண்டுபிடித்துவிடுவார்கள்.
இரவு நேரம் காட்டின் ஒலிகளுக்கு நடுவே அமைதியான தூக்கம் கிடைத்தது . எப்பொழுதும் போல காலை விடிவதற்கு முன்பே விழித்துக்கொண்டோம். பறவைகளின் சத்தம் கேட்ட உடனே வெளியே கிளம்ப தயாராகினோம் , ஆனால் பையை எடுத்தால் பெரிய ஓட்டை . காட்டில் தங்கும் போது பையில் உணவு பொருட்கள் வைத்தால் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். எலிகள் அங்கும் இங்கும் அலையும் போது சுவையாக எதாவது கிடைத்தால் போதும் உடனே பை காலிதான். ஒரு ஆப்பிளை எங்கள் பையில் வைத்ததால் எங்கள் பை கோவிந்தா ! சரி , கேமரா பிழைத்ததே என்று எண்ணிக் கேமராவை தூக்கிக் கொண்டு பறவைகள் பார்க்க கிளம்பினோம். குடிலின் மிக அருகிலேயே தேன்சிட்டு ஒன்று வாயில் உணவை வைத்துக்கொண்டு புதரின் உள்ளே போய் போய் வந்து கொண்டிருந்தது.

சின்னாறில் மழை குறைவென்பதால் அடர்ந்த மரங்கள் இல்லாமல் இம்மாதிரி திறந்த காடாக இருந்தது.
குஞ்சு உள்ளே இருந்தால்தான் பறவைகள் இவ்வாறு நடந்து கொள்ளும். தேன்சிட்டு உணவு எடுக்க மறுபடியும் பறந்து சென்ற போது மெதுவாக புதருக்குள் எட்டி பார்த்தோம்.தேன்சிட்டே குட்டியோண்டு இருக்கும்,அதனுடைய குஞ்சு ரொம்ப குட்டியாக இருந்தது. அதிகாலையிலேயே தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். ஆங்காங்கே இந்த அழகிய முள்செடி பூத்திருந்தது.

இந்த மஞ்சட்செம்முள்ளி குத்துச்செடி ஆங்காங்கே பூத்துக்கிடந்தது மிகவு அழகாக இருந்தது.
அருகே இருந்த ஒரு சிறிய மலை உச்சிக்கு நடந்து சென்றோம். எப்பொழுதும் பார்க்கும் சில பறவைகளை தாண்டி வேறு எந்த அரவமும் இல்லை. எங்களுடன் வந்த வனகாவலர்கள் சென்னையில் வேலை கிடைக்குமா என்று கேட்டார்கள். நாங்கள் திகைத்துப்போய், இவ்வளவு அழகான இடத்தை தேடி நகரவாசிகள் எல்லாம் ஓடி வருகிறோம்,நீங்கள் என்னடாவென்றால் இப்படி கேட்கிறீர்களே என்றோம். இங்கு வேலை மிகவும் கடினம், அதற்கு கிடைக்கும் சம்பளம் எங்களுக்கு மிகவும் குறைவு. நாங்கள் பள்ளியில் படித்ததால் எங்களுக்கும் விலங்குகளுக்கும் பெரிய தொடர்பு கிடையாது, அதனால் தினமும் நாங்களே பயந்து தான் காட்டுக்கு வருகிறோம் என்று கூறியதை கேட்டு எங்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
பொதுவாக வன காவலர்களாக பணியாற்றும் பழங்குடியினர்கள் காடுடன் இணைந்த வாழ்க்கை வாழ்பவர்கள். ஆனால் நாங்கள் இதுவரை காடுகளில் சென்று பழகிய பழங்குடியினர்கள் எல்லாம் நடுத்தர வயதினரும்,வயதானவர்களும் தான். இந்த முறை தான் முதல் தடவையாக பள்ளி சென்ற பழங்குடியினரிடம் பேசியிருக்கிறோம்.இவர்களுக்கே இந்த நிலைமை என்றால் நாள் முழுவதும் டிவி,வீடியோ கேம்ஸில் மூழ்கிக்கிடக்கும் நகர குழந்தைகளுக்கு காடுடன் என்ன தொடர்பு இருக்க போகிறது! வன அலுவலர்களிடம் கதை பேசிக்கொண்டே நடந்தபோது, அருகே இருந்த புதரிலிருந்து ஒரு உருவம் மெதுவாக நடந்து சென்றது. காடுகளில் பார்ப்பதற்கு கொஞ்சம் சிரமமான ஸ்டார் ஆமை நடந்து செல்வதை பார்த்ததும் அனைவரும் உற்சாகமாகி விட்டோம்.

இந்த நட்சத்திர ஆமை பார்க்க அழகாக இருந்தாலும் இதை செல்லப்பிராணியாக வளர்க்க ஏன் ஆசைப்படுகிறார்கள் என்றே புரியவில்லை.
இந்த ஆமையை செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கு பலர் ஆசைப்படுவதால்,காட்டில் இந்த ஆமையை கடத்தி நல்ல விலைக்கு விற்று விடுவார்கள். அதனால் இந்த ஆமை இனம் அழிந்து விடும் அபாயத்தில் உள்ளது.25000 வரை விலை போகும் இந்த நட்சத்திர ஆமையை சின்னாறு வன சரணாலயத்தில் கடத்த வந்தவர்களை எப்படி வன காவலர்கள் வளைத்து பிடித்தார்கள் என்ற கதையை கேட்டுக்கொண்டே தொடர்ந்து நடந்தோம். கொஞ்ச தூரம் ஒரு கழுகை பார்த்துக்கொண்டே நடந்து சென்றபோது, ஒரு வன காவலர் எங்களை சைகையில் அமைதியாக நிற்க சொன்னார். அவர் காட்டிய திசையில் ஒரு ஒற்றை யானை மேய்ந்து கொண்டிருந்தது. யானையை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வந்த வழியிலேயே திரும்பி நடந்து சென்றோம்.

யானைகளை காட்டில் பார்த்தால் தான் கெத்து. சர்வ சாதாரணமாக மரக்கிளைகளை யானை உடைத்து சாப்பிடும்போது அதனுடைய பலத்தின் கிட்டே கூட நாம் வரமுடியாது என்று புரியும்.
மலையேற்றத்தை சீக்கிரமே முடித்துவிட்டதால் குடில் அருகே இருந்த நதியில் வந்து அமர்ந்தோம். எதிரே இருந்த மரத்தில் அத்தி பழங்கள் காய்த்திருந்ததால் நிறைய பறவைகள் மரத்தில் குதித்துக்கொண்டிருந்தன. திடீரென்று மரத்தில் பெரிய அசைவு ஏற்பட்டவுடன் என்னவென்று பார்த்தால் க்ரிஸ்ஸில்ட் அணில்(Grizzled Squirrel) அத்தி பழம் சாப்பிட வந்திருந்தது.எப்பொழுதுமே மலபார் அணில் தான் பார்ப்போம், இந்த அணிலை இது தான் முதல் தடவையாக பார்க்கிறோம்.

இந்த பெரிய அணில் எவ்வளவு அழகாக அத்தி பழத்தை சாப்பிடுகிறது பாருங்கள்.
அணிலை பார்த்தபின் குடிலிலிருந்து கிளம்ப வேண்டிய நேரமாகிவிட்டதால் பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.
இந்த பயணம் சிறியதாக இருந்தாலும் மிகவும் இனிமையான பயணம். காட்டுப் பாதையிலிருந்து மெயின் சாலை சென்றடைந்தபோது அம்பாசடர் கார்கள் வரிசையாக சென்று கொண்டே இருந்தன.
அனைத்து வண்டியிலும் வயதான வெளிநாட்டு தம்பதியினர் இருந்தனர். அம்பாசடரில் கேரளாவை சுற்றலாம் என்று சுற்றுலா கம்பெனி எதுவோ கிளப்பிவிட்டிருக்கிறது போல!காட்டில் வியப்பான காட்சிகளை பார்த்து முடித்து வெளியே வந்தவுடன் விசித்திரமான காட்சிகளை எல்லாம் பார்க்கிறோமே என்று எண்ணிக்கொண்டே எங்கள் வண்டியை ஓட்டிக்கொண்டு காட்டை விட்டு ஊருக்குள் வந்தவுடன் அங்கே எங்கள் முன்னால் இருந்த வண்டியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை பார்த்து அசந்து விட்டோம்.நீங்களே கீழே பாருங்கள் அது என்ன ஸ்டிக்கர் என்று!
ஒரு நாள் பயணமாக இருந்தாலும் இந்த சின்னாறு (chinnar wildlife sanctuary) பயணத்தில் நிறைய புதிய விஷயங்களை பார்த்தும்,கேட்டும் தெரிந்துகொண்டோம்.
தமிழில் மேலும் படிப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்