கோடியக்கரை வன சரணாலயம் (Point Calimere)
கோடியக்கரை வன சரணாலயம் (Point Calimere) சென்னையிலிருந்து 360 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனால் நான்கு வழி சாலைகள் இல்லாததால் கோடியக்கரை சென்று சேர்வதற்கு 9 மணிநேரம் ஆகிவிடும். சாலைகள் ஒழுங்காக இருந்தால் ஒரு நாள் பயணத்திற்கு ஏற்ற இடம் இந்த கோடியக்கரை வன சரணாலயம். 21 ஸ்ஃ.கிமீ பரப்பிலுள்ள இந்த வன சரணாலயம் அழிந்துவரும் வெளிமான் இனத்தை பாதுகாப்பிற்காக 1967-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அக்டோபர் – ஜனவரி மாதம் வரை வெப்பம் குறைவாக இருப்பதாலும் பிற கண்ட பறவைகள் வருவதாலும்,இந்த மாதங்களே இந்த சரணாலயம் செல்வதற்கு உகந்த மாதங்களாகும்.

இரவு முழுவதும் தூங்காமல் பயணம் செய்திருந்தாலும்,வெளிமானை பார்க்கும் ஆர்வத்தில் நான் இருந்தேன்.
நாங்கள் வெளிமானை பார்ப்பதற்காக வெயிலாக இருந்தாலும் பரவாயில்லை என்று கோடியக்கரை சரணாலயத்திற்கு (Point Calimere) மே மாதம் கிளம்பினோம். கோடியக்கரையில் ஹோட்டல்கள் எதுவும் கிடையாது என்பதால் நாங்கள் உணவு முழுவதையும் தயார் செய்துவிட்டோம். அதிகாலையில் கோடியக்கரை சென்று சேர்வதற்கு ஏற்ப சென்னையிலிருந்து கிளம்பினோம். காலை ஆறு மணிக்கு நாங்கள் கோடியக்கரை சென்று சேர்ந்துவிட்டாலும்,வன சரணாலயம் 9 மணிக்கு தான் திறக்கப்படும் என்பதால் அருகே கிராமத்து மக்கள் உபயோகித்துக்கொண்டிருந்த கடல் பகுதிக்கு சென்றோம்.

ராவணன் மீசை(Spinifex littoreus) கடற்கரையில் வளர்ந்திருந்தது அழகாக இருந்தது.
பல மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்,சிலர் குடும்பத்துடன் வந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.நாங்கள் காரிலிருந்து இறங்கி கரையோரம் வளர்ந்து கிடந்த ராவணன் மீசை(Spinifex littoreus) என்ற புற்களை பார்த்துக்கொண்டு நின்றபோது, ஒருவர் எங்களிடம் டீ குடிக்க காசு கேட்டார். நாங்கள் அந்த இடத்திலிருந்து கிளம்பும் வரை காசு கேட்டுக்கொண்டே இருந்தார். நாங்கள் கடைசி வரை காசு கொடுக்கவே இல்லை. அத்தனை மீனவர்கள் அதிகாலையிலிருந்து கஷ்டப்பட்டு மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள், இவருக்கு மட்டும் சும்மாவே காசு கிடைக்க வேண்டும்,கிடைத்தவுடன் டாஸ்மாக் சென்றுவிடுவார்.
மீன்காரர்களுடன் சேர்ந்து மீன் பிடிப்பதற்கு கடல் ஆலாக்களும் முயற்சி செய்துகொண்டிருந்தன. ஆனால் எங்களை அந்த இடத்தில் ஈர்த்தது மட் ஸ்கிப்பர் என்ற நிலத்திலும் நீரிலும் வாழும் மீன்.

நீல புள்ளி மட்ஸ்கிப்பர் எப்படி துள்ளுகிறது பாருங்கள்.டேவிட் அட்டேன்போர் வீடியோவில் தான் இந்த மீன்களை பார்த்திருக்கிறோம். நம்மூரை சுற்றி பார்த்தால்தான் நம் நாட்டிலேயே எவ்வளவு அதிசயமான உயிரினங்கள் இருக்கின்றன என்று தெரியும்.
சகதியில் கண்கள் மட்டும் தெரிகிற மாதிரி கிடந்த ஒரு மட் ஸ்கிப்பரை பார்த்தவுடன் எங்கள் கண்கள் அருகில் இருந்த மற்ற மட் ஸ்கிப்பர்களையும் காட்டிக் கொடுத்தன. சில மட் ஸ்கிப்பர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன,சில சகதிக் குளியல் எடுத்துக் கொண்டிருந்தன,சில அமைதியாக கண்ணை மூடிக்கொண்டு கிடந்தன.திடீரென்று ஒரு தனி உலகமே கண்ணில் தெரிந்தது.மட் ஸ்கிப்பர்களை நன்றாக ரசித்தபின் கோடியக்கரை வன சரணாலயத்திற்கு சென்றோம்.
கோடியக்கரை வன சரணாலயத்தில் அனுமதி கட்டணம் செலுத்திய பின்னர் வன அலுவலர், கேமராவிற்கு தனி கட்டணம் செலுத்த கூறினார். SLR கேமராவை பார்த்துவிட்டு வீடியோ கேமராவிற்கான கட்டணத்தை செலுத்த கூறினார்.எங்களுக்கு கட்டணம் செலுத்துவதை பற்றி பிரச்சனை எதுவும் இல்லை, ஆனால் அவரிடம் இது வீடியோ கேமரா அல்ல என்று புரிய வைக்கலாம் என்று நினைத்தோம். அவரோ ஏற்கனவே தண்ணி இல்லாத காட்டில் என்னை வேலை செய்ய வைத்துவிட்டார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார். அவரிடம் போய் கேமராவை பற்றி பேசி கடுப்பேத்தவேண்டாம் என்று கட்டணத்தை செலுத்தி விட்டு சரணாலயத்திற்குள் சென்றோம். சரணாலயம் தண்ணீரில்லாமல் காய்ந்து வறண்ட நிலையில் இருந்தது.
இதில் என்ன வன உயிரினங்களை பார்க்கப்போகிறோம் என்று யோசித்துக்கொண்டே மண் பாதையில் வண்டியை ஓட்டி சென்றோம். ஆனால் எங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக ஐந்தாவது நிமிடத்திலேயே செம்பருந்தையும், குதிரையையும்(Feral Pony) பார்த்தோம். வெறும் கட்டாந்தரையாக இருந்ததால் தூரத்தில் விலங்குகள் நடப்பது தெளிவாக தெரிந்தது. கீரிப்பிள்ளை(Indian Grey Mongoose) தூரத்தில் நின்று எங்களை பார்த்துக்கொண்டிருந்தது.
சீமைக்கருவேலை மரம் நிறைய இடங்களை ஆக்கிரமித்திருந்தது. கொஞ்ச தூரத்தில் நாங்கள் எதிர்பார்த்து வந்த வெளிமான் நின்று கொண்டிருந்தது. வண்டியை பார்த்தவுடன் ஓடாமல் எங்களை பார்த்துவிட்டு அதுபாட்டுக்கு மேய ஆரம்பித்துவிட்டது. இந்த சரணாலயத்தில் இந்த மான்கள் உண்மையிலேயே பாதுகாப்புடன் இருக்கின்றன என்பதற்கு இதுவே ஒரு ஆதாரம். ஒரு மானை பார்த்ததே அதிர்ஷ்டம் என்று நாங்கள் நினைத்தால் அடுத்தது வளைந்து நெளிந்த கொம்புடன் வெளிமான் ஒரு புதரருகே நின்று கொண்டிருந்தது.
வெளிமான்

சரணாலயத்தின் முடிவில் வண்டியை நிறுத்திவிட்டு கடற்கரை சென்றோம். கடல் அருகே செல்வதற்கு இடையில் இருந்த நீர்தேக்கத்தை தாண்டி தான் செல்லவேண்டும். ஏற்கனவே மட் ஸ்கிப்பர் படம் எடுப்பதற்காக சகதிக்குள் நடந்து எங்கள் உடைகளையும் ஷூக்களையும் அழுக்காகி இருந்தோம். அதனால் யோசிக்காமல் தண்ணீரில் இறங்கி சகதிக்குள் காலை வைத்து நடக்க ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் நடப்பதை பார்த்து சுற்றுலா வந்திருந்த கல்லூரி மாணவர்கள் சிலரும் தண்ணீரில் இறங்க முயற்சி செய்து சகதியில் வழுக்கி விழுந்தார்கள்.
எங்களுடைய சகதி முழுக்கிய கால்கள். சகதிக்குள் என் கால்கள் மாட்டிக்கொண்டன.
குப்பையில்லாமல் கடற்கரை சுத்தமாக மிக அழகாக இருந்தது. நான் எப்பொழுதும் போல கடற்சிப்பிகளை பொறுக்கிக் கொண்டு நடந்தேன். சரணாலயம் என்பதால் நாய்கள் இல்லை,அதனால் கடற்பறவைகள் பயமில்லாமல் தண்ணீர் அருகே அமர்ந்திருந்தன.
கடல் காகங்களும்,கடல் ஆலாக்களும் வெயிலேறி விட்டதால் கரையோரம் அமைதியாக அமர்ந்திருந்தன.
உச்சிவெயில் ஆகிவிட்டாலும் கடல் காற்று இதமாக இருந்தது. நேரம் போனதே தெரியாமல் கடற்கரையில் வெகு நேரம் நடந்தோம். எங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கிய வன அலுவலர் வினோத்தின் போன் நம்பர் வாங்கியிருந்தார்.சுற்றுலா பயணிகள் யாரும் இவ்வளவு நேரம் சரணாலயத்தில் சுற்ற மாட்டார்கள் போல, அதனால் அவருக்கு சந்தேகம் வந்து எங்களுக்கு போன் செய்தார். வேறு வழியில்லாமல் கடற்கரையிலிருந்து கிளம்பினோம்.திரும்பி வரும்போது உச்சிவெயிலில் ஒரு விலங்கையும் பார்க்க மாட்டோம் என்று நினைத்தால் முயல் ஒரு பக்கம் ஓடுகிறது,நரி ஒரு புதர் அருகே அமர்ந்திருந்தது,

வெளிமான்கள் கூட்டமாக அமர்ந்திருந்தன. இந்த விலங்குகளை எல்லாம் பகல் நேரத்தில் இந்தியாவில் பார்த்ததே இல்லை. என்ன தான் வெயில் கொளுத்தினாலும் வெளிமான்களையும் பார்த்த சந்தோஷத்தில் , மறுபடியும் மழைக்காலத்தில் இந்த சரணாலயத்திற்கு வரவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு கிளம்பினோம்.