குறிஞ்சி ( kurunji ) மலர்களை தேடி ஒரு பயணம்
சில மலர்கள் தினமும் மலரும், சில மலர்கள் இரவில் மட்டுமே மலரும், சில மலர்கள் வெப்பநிலைக்கேற்ப மலரும்,ஆனால் ஒரு மலர் மட்டுமே 12 வருடத்திற்கு ஒருமுறை மலரும். அந்த மலர் நம் தென்னிந்தியாவில் மலைகளையே நீல வண்ணமாக்கும் வகையில் மலருமென்றால் எத்தனை சிறப்பு பெற்றது நம் மேற்கு தொடர்ச்சி மலைகள். உலகில் சில பனை வகை மரங்கள் 80 வருடத்திற்கு ஒருமுறை மலரும் ஆனால் உலகில் வேறு எந்த செடியும் நம் குறிஞ்சி ( kurunji ) போல் 12 வருடத்திற்கு ஒருமுறை கூட்டம் கூட்டமாக மலைகளின் வண்ணத்தை மாற்றுமளவுக்கு மலராது.
துல்லியமாக ஒவ்வொரு 12 வருடமும் கொத்து கொத்தாக மலரும் இந்த நீலக்குறிஞ்சி மலர்களை வைத்து பழங்குடியினர் அவர்களின் வயதை கணித்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், எவ்வளவு அதிசயமான செடி நம் தென்னிந்தியாவில் இருக்கிறதென்று ! பல வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் மரங்கள் சில இருந்தாலும் அவை எதுவுமே கூட்டம் கூட்டமாக மலராது. அத்தகைய சிறப்புமிக்க நீலக்குறிஞ்சி செடி தாவிர ஆராய்ச்சியாளர்களையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. ஆனால் உலக அளவில் சிறப்புமிக்க இந்த செடியை நாம் பாதுகாக்காமல் விட்டுவிட்டோமே என்று பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
பல வகை குறிஞ்சி மலர்கள்
மூணாறில் 2017 ஆம் ஆண்டிலிருந்தே 2018 ஆகஸ்ட் மாதத்தில் குறிஞ்சி ( kurunji ) மலர்கள் மலைகளை நிரப்பப்போகிறது என்று வனஅலுவலர்கள் கூறியிருந்தார்கள். நான் ஜூலை மாதத்திலிருந்தே இரவிக்குளம் தேசிய பூங்காவிலுள்ள அலுவலர்களிடம் குறிஞ்சி பூக்க ஆரம்பித்துவிட்டதா என்று கேட்க ஆரம்பித்துவிட்டேன்.ஆகஸ்ட் 15க்கு மேல் வந்தால் குறிஞ்சி மலர்கள் கொத்து கொத்தாக மலர்ந்திருப்பதை பார்க்கலாம் என்று கூறினார்கள். ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத மழையினால் கேரளா பெரும் அவதிக்கு உண்டானது. மழை அதிகமாக இருந்ததால் இரவிக்குளம் தேசிய பூங்காவையும் மூடிவிட்டார்கள். தமிழ்நாட்டில் நீலகிரியிலும் பழனி மலை தொடர்ச்சியிலும் குறிஞ்சி மலர்களை பார்க்கலாம் என்று கேள்விப்பட்டிருந்தோம்.
நீலகிரி என்று குறிஞ்சி ( kurunji ) மலரினால் பெயர் வந்த மலையில் எப்படி குறிஞ்சி செடி இல்லாமல் இருக்க முடியும் என்று நாங்கள் நீலகிரிக்கு கிளம்பினோம்.
நீலகிரியின் வரைபடத்தை வைத்துக்கொண்டு எங்கேயெல்லாம் பச்சை தெரிகிறதோ,எங்கேயெல்லாம் மலைப்பாதை தெரிகிறதோ அங்கேயெல்லாம் வண்டியில் சென்றோம்.
நீலக்குறிஞ்சி செடி மலையிலுள்ள புல்வெளியில் வளருகின்ற செடி. ஆனால் ஊட்டியில் யூக்கலிப்டஸ்,வாட்டில் மரங்கள் புல்வெளிகளை ஏற்கனவே அழித்துவிட்டதால் குறிஞ்சி செடிக்கு சாத்தியமே இல்லாதது போல் இருந்தது.வெள்ளையர்கள் இந்தியாவை ஆக்கிரமித்திருந்தபோது தென்னிந்திய மலைகளில் உள்ள அனைத்து புல்வெளிகளையும் அழித்து அவர்களுக்கு லாபம் தரும் செடிகளை வளர்க்க வைத்தார்கள். அவர்கள் நாட்டின் வெப்பநிலைக்கு வளராத தேயிலை,காபி செடிகளையும் காகித நிறுவனங்களுக்கு தேவையான யூக்கலிப்டஸ்,வாட்டில் மரங்களையும் தென்னிந்திய மலைகளிலும் காடுகளிலும் நம் பழங்குடியினரை வைத்தே வளர்க்க வைத்தார்கள். வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினாலும் அவர்களால் நம் காடுகளுக்கு வந்த கேடுக்கு இன்று வரை விடுதலை கிடைக்கவில்லை.
எவ்வளவு தான் மனிதர்கள் இயற்கையை அழித்தாலும், உலகம் மிகப்பெரியது என்பதால் ஒவ்வொரு மூலையிலும் சென்று மனிதர்களால் அழிக்க முடியாது என்ற ஒரு அற்ப நம்பிக்கையில் தொடர்ந்து காட்டு பாதைகளில் சென்றோம்.சாலை ஓரத்தில் இருந்த சில பாறைகளில் ஊற்று நீர் மெல்லிசாக சொட்டிக்கொண்டிருக்கும் இடங்களில் பிங்க் வண்ண பால்சம் மலர்கள் மலர்ந்து கிடந்தன. குறிஞ்சி ( kurunji ) மலர் ஸ்ட்ரோபிலன்தஸ் என்ற வகையை சார்ந்தது. பால்சம் மலர்கள் அருகே ஸ்ட்ரோபிலன்தஸ் வகையை சேர்ந்த கருங்குறிஞ்சி பூத்திருந்தது.இச்செடிகளும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் மலருமென்றாலும் குறிஞ்சி மலர் மாதிரி கொத்துக்கொத்தாக ஒரே நேரத்தில் மலராது.பொதுவாக நாங்கள் இந்த காட்டு மலர்களை பார்த்தாலே மகிழ்ச்சியடைந்து விடுவோம். ஆனால் இம்முறை குறிஞ்சியை தேடி வந்ததால் எங்கள் தேடல் முடியவில்லை.
நீலகிரி ஈபிடிப்பான்,வெள்ளை கண்ணி,மலபார் அணில் எல்லாம் ஆங்காங்கே கண்ணில் தென்பட்டுக்கொண்டிருந்தது. ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களில் எல்லாம் பலகைகளில் மட்டும் நீல குறிஞ்சி மலரின் படத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைகளை உடைத்து ரிசார்ட் கட்டியிருந்தார்களே தவிர குறிஞ்சி செடிக்கான அறிகுறியே இல்லை. இருப்பினும் ஸ்ட்ரோபிலன்தஸ் வகையினத்தில் உள்ள வேய்ட் குறிஞ்சி மலர்களை வழியில் பல இடங்களில் கண்டோம்.
குறிஞ்சி மலர்களால் நீலகிரி என்று பெயரை பெற்ற இடத்திலேயே குறிஞ்சியை தேடி அலைய வேண்டிய நிலைமை என்றால் மற்ற காட்டு செடிகளின் நிலைமை எப்படி இருக்கும் என்று வருத்தப்பட்டுக்கொண்டே கோத்தகிரி செல்லும் பாதைக்கு அடுத்து சென்றோம். கோத்தகிரியில் முழுவதுமே டீ எஸ்டேட் தான் இருந்தது. ஆனால் ஒரு கொண்டை ஊசி வளைவில் இருந்த ஒரு பெரிய பாறையின் சரிவில் சில காட்டு செடிகள் மலர்ந்திருந்தன. வினோத் வளைவில் வண்டியை கவனமாக ஓட்டிக்கொண்டிருந்தபோது நான் பாறைகளை உற்று பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ஊதா மலர்கள் கண்ணில் பட்டன, குறிஞ்சி மாதிரியல்லவா தெரிகிறது என்று நான் வினோத்திடம் கூறியவுடன் வண்டியை கவனமாக சாலையோரம் நிறுத்திவிட்டு நாங்கள் பாறையருகே ஓடினோம். அங்கே ஒரு சிறிய பகுதியில் குறிஞ்சி பூக்கள் மலர்ந்திருந்தன. எங்களுக்கு மலர்களை பார்த்த சந்தோசம் ஒருபுறம் எவ்வளவு சிறப்புள்ள மலர் இப்படி சாலையோரம் இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றனவே என்ற வருத்தம் ஒருபுறம். வண்டியில் எங்களை தாண்டி சென்றவர்கள் எல்லோரும் எதை பார்த்து இவர்கள் இப்படி குதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே சென்றார்கள் .
கொஞ்சம் மலர்களை பார்த்தவுடன் எங்கள் நம்பிக்கை கொஞ்சம் அதிகமானது.தொடர்ந்து பாறைகளையும்,மலைகளையும் பார்த்துக்கொண்டே சென்றோம். ஒரு மலையின் உச்சியில் ஊதா வண்ண குறிஞ்சி மலர்கள் கொத்து கொத்தாக குத்துச்செடிகளில் மலர்ந்திருந்தது தெரிந்தது, ஆனால் அருகில் செல்ல வழியேதுமில்லை. கொஞ்ச தூரம் சென்ற பின் நாங்கள் இருந்த இடத்திலிருந்து கீழே குறிஞ்சி மலர்கள் தெரிந்தன. அந்த இடத்திற்கு எப்படி செல்லலாம் என்று பார்த்தபோதும் ஒழுங்காக வழி தெரியவில்லை. ஆனால் ஒரு எஸ்டேட்டிற்கு செல்லும் பாதை கண்ணில் தெரிந்தது. அது வழியாக சென்று கண்டுபிடித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டு கடகடவென்று கேமராவை பையில் போட்டுக்கொண்டு கற்பாதையில் நடக்க ஆரம்பித்துவிட்டோம்.
கொஞ்ச நேரத்தில் கற்பாதைகள் முடிந்து விட்டன. தேயிலை தோட்டம் வழியே கீழே பாதை சென்றது.எப்படியும் குறிஞ்சி பூக்கள் அருகே சென்றுவிட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் நாங்கள் நடந்தோம்.கொஞ்ச தூரம் சென்ற பின்,தூரத்தில் ஒருவர் தேயிலை தோட்டத்தில் மருந்தடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. நாங்கள் இரண்டு பேரும் அவர் நிற்கும் இடத்திற்கு ஓடினோம். குறிஞ்சி பூ பார்ப்பதற்கு இவ்வழியில் செல்லலாமா என்று நாங்கள் மூச்சு வாங்கிக்கொண்டே கேட்ட வேகத்தை பார்த்து அவருக்கு ஒரே ஆச்சர்யம். இவ்வளவு கீழே இறங்கியிருக்கீர்களே களைப்பாக இல்லையா என்று அவர் கேட்டபின் தான் கவனித்தோம்,ஆர்வத்தில் எவ்வளவு தூரம் ஓடிவந்து விட்டோம் என்று. இந்த வருடம் தான் இந்த இடத்தில் இருக்கின்ற குறிஞ்சி செடிகள் பூத்திருக்கின்றன, இந்த வழியில் சென்றால் பார்க்கலாம்,ஆனால் ஒரேயடியாக கீழே இறங்கி விடாதீர்கள்,புற்களில் வழி பார்த்து மறுபடியும் மேலே ஏறி வருவது சிரமம் என்று அந்த பெரியவர் கூறினார். பெரியவரின் அறிவுரையை கேட்டுக்கொண்டு, நடக்கலாம் என்று அவர் காட்டிய திசையில் ஒரு எட்டு எடுத்து வைக்கும்போது பெரியவர் ஒரு குண்டை தூக்கிப் போட்டார். பார்த்து காலை வையுங்கள், இப்பொழுது தான் இங்கே ஒரு பெரிய மலைப்பாம்பை பார்த்தேன், அதை தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்றார்.மலை பாம்பு என்று கேட்டவுடன் எனக்கோ கால் உதறல் எடுக்க ஆரம்பித்தது. ஆனால் வினோத்திற்கு பிடித்த பாம்பு மலை பாம்பென்பதால் குறிஞ்சியுடன் மலை பாம்பையும் பார்த்தால் நன்றாயிருக்குமே என்று அவருக்கு ஒரே குஷி.
தேயிலை தோட்டத்தை தாண்டியவுடன் பெரிய புற்கள் வர ஆரம்பித்தன.புற்களின் இடையே இந்தியன் கோலெஸ் என்ற ஒரு ஊதா மலரை பார்த்தோம். புற்களின் இடையே சிறு சிறு புதர்களாக குறிஞ்சி செடிகளும் மலர்களுடன் இருந்தன. நான் மலை பாம்பு பயத்தை மறந்து மலர்களை ரசிக்க ஆரம்பித்தேன். வினோத் எனக்கு முன்னால் புற்களை அகற்றி நடந்துகொண்டிருந்தவர்,தொடர்ந்து செல்லமுடியுமா என்று பார்த்து வருகிறேன் என்று சென்றார். சில நிமிடங்களில் வினோத்தின் சந்தோஷமான குரல் கேட்டவுடன் நான் அவர் நின்ற இடத்திற்கு சென்றேன். எங்கள் இரண்டு பேருக்கும் கொஞ்ச நேரம் பேச்சே வரவில்லை. கண்களுக்கு தெரிகின்ற தூரம் வரையில் ஊதா நிற குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. இந்த காட்சியை பார்பதற்குத்தானே இத்தனை நாட்கள் அலைந்தோம்.
தனியாக பூவை பார்த்தால் வித்தியாசமான வடிவமெல்லாம் கிடையாது, ஆனால் கொத்துக்கொத்தாக மலைகள் முழுவதும் பூத்து கிடப்பது தான் இந்த குறிஞ்சி பூக்களின் அழகே. ஒவ்வொரு பூவிலும் ஒரு தேனீ இருந்தது. பெரியவர் தேனீக்களுக்கெல்லாம் இந்த வருடம் கொண்டாட்டம் என்று கூறியதின் காரணம் இப்பொழுது புரிந்தது. படங்களில் ஹீரோயின்கள் மலர்களின் நடுவே ஆடுவது மாதிரியெல்லாம் இந்த இடம் இல்லை. புற்களும் குறிஞ்சி செடிகளும் பெரிய கற்களும் காலை தட்டிவிட்டுக் கொண்டேயிருந்தன. பெல் வடிவத்தில் இருக்கும் இந்த குறிஞ்சி மலர்களில் பறவைகள் எதுவும் அமர்ந்து தேன் குடித்து பார்க்கவில்லை.
கொஞ்ச தூரம் குறிஞ்சி செடிகளின் இடையே நடந்து சென்ற பின் அருகே உள்ள அடுத்த மலையும் குறிஞ்சி பூக்களுடன் நீல வண்ணத்தில் தெரிந்தது. காற்றில் ஆடிக்கொண்டிருந்த மலர்களின் அசைவும், மலர்களை சுற்றி தேன் குடித்துக்கொண்டிருந்த தேனீக்களின் அசைவையும் தாண்டி அவ்விடத்தில் வேறு எந்த அசைவுகளும் சத்தங்களும் இல்லை. கண்கள் குளிர குளிர மலர்களை பார்த்துக்கொண்டு ஒரு பாறையில் அமர்ந்தோம். இயற்கை எவ்வளவு அழிவுக்கு உண்டாகியிருக்கிறது என்ற மன உளைச்சலில் இருந்த எங்கள் மனதில் அப்படியே ஒரு அமைதி உருவானது.
12 வருடங்கள் கழித்து நம் வருங்கால சந்ததியினருக்கு இந்த இடங்களை பார்ப்பதற்கு கொடுப்பினை இருக்குமா என்று கேள்விக்குறியுடன் அவ்விடத்திலிருந்து கிளம்பினோம். ஆனால் இப்பொழுது வனத்துறைக்கும் குறிஞ்சி செடிகளின் மகிமை நன்றாக தெரியும், மக்களுக்கும் நன்றாக விழிப்புணர்ச்சி வந்திருப்பதால் கண்டிப்பாக இதற்கு மேல் அழிவை அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மேலே நடக்க ஆரம்பித்தோம். ஆர்வத்தில் வேகமாக கீழே இறங்கி விட்டதால் மேலே ஏறும்போது கஷ்டப்படபோகிறோம் என்று நினைத்தேன்,ஆனால் மனதில் இருந்த உற்சாகத்தால் மேலே ஏறுவது சிரமமாகவே இல்லை. எங்களை பார்த்த அந்த பெரியவர் கூட எப்படி களைப்படையாமல் நடக்கிறீர்கள் என்று மறுபடியும் ஆச்சர்யமாகக் கேட்டார். அரிய மலர்கள் கூட்டத்தை பார்த்த மிதப்பில் நாங்கள் இருந்தோம் என்று அவருக்கு தெரியாதல்லவா!! நீலகிரி தொடர்ச்சியில் குறிஞ்சி மலர்களை பார்த்துவிட்டோம், அடுத்து பழனி மலை தொடர்ச்சி சென்று தேடவேண்டும் என்று உற்சாகத்துடன் கிளம்பினோம்!
இரவிக்குளம்(Eravikulam) பூங்காவில் குறிஞ்சி!