நார்த் மானிட்டோ தீவு


சில இடங்களை கதைகளில் மட்டுமே படித்து கற்பனை செய்திருப்போம். அந்த மாதிரி இடங்கள் உலகத்தில் இருக்க வாய்ப்பு மிகவும் சிறியதாக இருக்கும். அம்மாதிரி இடத்தை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு இடம் தான் இந்த நார்த் மானிட்டோ தீவு. சிறுவயதில் நான் படித்த புதையல் வேட்டை கதைகளில் எல்லாம் அருகே உள்ள தீவுக்கு சிறுவர்கள் சென்று வீரதீர செயல்கள் செய்து புதையல் கண்டுபிடிப்பார்கள்.கூட்ட நெரிசலில் உள்ள இந்தியாவில் வளர்ந்த எனக்கு ஆளில்லாத ஊர்,தீவு என்பதே ஒரு கற்பனை தான். அதனால் நார்த் மானிட்டோ தீவு ஒரு ஆளில்லாத தீவு என்றும் ஒரு சில மாதங்களே சுற்றுலா பயணிகள் அங்கே அனுமதிக்கப்படுவார்கள் என்று கேள்விப்பட்டவுடன் அங்கே செல்லலாம் என்று முடிவு செய்துவிட்டோம்.

North manitou expedition,leland jetty

வினோத் படகுக்கு காத்திருக்கும்போதே ஜாக்கெட் அணிந்து கொண்டார்.எங்களுக்கு மூன்று நாட்கள் தீவில் தங்குவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் இந்த இரண்டு பைகளுக்குள் அமுக்கி விட்டோம்.

அந்த வருடம் பனிக்காலம் ஏப்ரல் மாதம் வரை இருந்ததால்,மே மாதம் தான் படகுகள் நார்த் மானிட்டோ தீவுக்கு செல்ல ஆரம்பித்தன. மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் இந்த தீவுக்கு செல்வதற்கு உள்ள அனுமதி டிக்கெட்டுகளை வலைதளத்தில் முதலிலேயே வாங்கி விட்டோம். டென்ட்,தேவையான உணவு பொருட்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு லேலண்ட் என்ற இடத்தில் உள்ள படகுத்துறைக்கு சென்றோம். வெயில் காலத்தில் தீவுக்கு செல்கிறோம் என்ற நினைப்பில் வெயிலுக்கு ஏற்ப உடைகள் அணிந்திருந்தேன். படகில் ஏறி மேல் தளத்தில் நின்று கடல் மாதிரி இருந்த மிச்சிகன் ஏரியை பார்த்தோம். ஒருவரை தவிர வேறு யாரும் படகின் மேல்தளத்திற்கு வரவில்லை. படகு புறப்பட ஆரம்பித்த பின் தான் காரணம் புரிந்தது.அப்படி ஒரு குளிர் காற்று ! எனக்கு பல் டைப்ரைட்டிங் அடிக்க ஆரம்பித்து விட்டது. ஒருவேளை இரவு குளிருமோ என்று ஜாக்கெட் எடுத்து வைத்திருந்தது நல்லதா போச்சு.

North manitou island,Lake Michigan

நார்த் மானிட்டோ தீவுக்குள்ளே நுழையும் சகபயணிகள். இவர்களையெல்லாம் அன்று பார்த்ததோடு சரி!

நாங்கள் இரண்டு பேரும் நார்த் மானிட்டோ தீவு சென்று சேரும் வரை குளிராய் இருந்தாலும் மேல் தளத்திலேயே நின்று ஏரியை பார்த்து ரசித்துக்கொண்டே சென்றோம். தீவு சென்றடைந்ததும், அங்கே தனி படகில் வந்திருந்த வனஅலுவலர்கள் சுற்றுலா பயணிகளின் விவரங்களை வாங்கிக் கொண்டனர். வன அதிகாரி ஒருவர் அனைவருக்கும் தீவை பற்றி விவரங்கள் கூறி விட்டு, உணவு பொருட்களை மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க மரத்தில் தொங்கவிட அறிவுறுத்தினார். தீவில் எங்கு வேண்டுமென்றாலும் சென்று டென்ட் அமைத்துக்கொள்ளலாம் என்று கூறினார். ஹங்கர் கேம்ஸ் படத்தில் வருவது போல அனைவரும் ஒவ்வொரு திசையில் காட்டுக்குள் ஓட ஆரம்பித்தோம். நாங்கள் காட்டு பாதையில் உள்ளே நடக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ஆள் அரவம் நின்று விட்டது. நாங்கள் தான் முதலில் செல்கிறோம் என்ற பெருமையான நினைப்பில் நடையை தொடர்ந்தோம். நல்ல அடர்ந்த மரங்கள் வந்தவுடன் டென்ட் போடுவதற்கு இடம் தேட ஆரம்பித்தோம்.

North Manitou forest,forest trek island

டென்ட் போடுவதற்கு இடம் தேடி காட்டினுள்ளே அலைந்து கொண்டிருந்தோம்.

தரை சமமாக இருக்கும் இடம் பார்த்து,பாதையிலிருந்து கொஞ்சம் விலகி மரங்களிடையே டென்ட் போட்டோம். மனிதர்கள் இத்தீவில் வசிக்கவில்லை என்பதால் தண்ணீர்,சாப்பாடு அனைத்தும் நாங்களே எடுத்து வந்திருந்தாலோ, செய்துகொண்டாலோ தான் உண்டு.நாங்கள் தீவில் சென்று சமைத்து கொண்டிருந்தால் நேரம் அதிலேயே செலவாகிவிடும் என்று நம்ம ஊர் சிறப்பான எலுமிச்சை சாதம் மற்றும் நாங்களே செய்துகொண்ட பர்கர் மாதிரி உணவு பொருட்களை கொண்டு சென்றிருந்தோம். தீவை சுற்றியும் ஏரி இருப்பதால் அதிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தோம். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு தீவை சுற்றி வரலாம் என்று கிளம்பினோம். தீவுக்குள் நுழைந்து  இந்த பாதையில் உள்ளே வந்ததிலிருந்து ஒரு ஆளை கூட பார்க்கவில்லை.

Indian Lemon Rice,Trekking Food,North Manitou Island

தீவில் சமைத்தால் அதிலேயே நேரம் சென்றுவிடும் என்பதால்,கெட்டுப்போகாத உணவு பொருட்களை கொண்டு வந்திருந்தோம். இம்மாதிரி பயணங்களில் எங்கள் முதல் விருப்பம் எலுமிச்சை சாதமாகத்தான் இருக்கும்.

58 ஸ்ஃ.கிமீ பரப்பளவில் உள்ள இந்த தீவில் கரடி போன்ற பெரிய மிருகங்கள் எதுவும் கிடையாது. கயோட்டீ,பீவர்,மான் போன்ற விலங்குகளும் விதவிதமான பறவைகளும் இந்த தீவில் வசிக்கின்றன. நாங்கள் நடந்து வந்த பாதையில் தொடர்ந்து நடக்கலாம் என்று நடக்க ஆரம்பித்தோம்.பறவைகளின் கானம் மட்டும் ஆங்காங்கே கேட்டது. ரோஸ் பிரேஸ்ட்டட் கிராஸ்பீக் பறவை மரத்தில் அழகாக உட்கார்ந்து கொண்டிருந்தது. அழகிய வண்ணத்தில் இருக்கும் இந்த சிறு பறவையை அடர்த்தியான மரங்களிடையே பார்ப்பது சிரமமான காரியம்.

Rose breasted grosbeak, Pheucticus ludovicianus,North Manitou Birding

ரோஸ் பிரேஸ்ட்டட் கிராஸ்பீக் பறவை மரக்கிளையில் அழகாக அமர்ந்திருந்தது.

வெகு தூரம் நடந்து வந்தபின் ஒரு ஆப்பிள் தோட்டத்தை வந்தடைந்தோம். மே மாதம் என்பதால் மரங்களில் ஆப்பிள் பழங்கள் எதுவும் இல்லை. தொடர்ந்து நடந்த பின் ஒரு சகதி நிறைந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஆனால் கொஞ்சம் தூரத்தில் வண்ண மலர்கள் தெரிந்தன. மலர்களை பார்த்தவுடன் அருகில் செல்லாமல் விடுவோமா நாங்கள்? சகதிக்குள் நடந்து சென்று பூக்கள் அருகில் சென்றோம்.ட்ரிலியம்,ப்ளாக்ஸ்,வயோலா மலர்கள் தரையை அலங்கரித்திருந்தன. சூரிய அஸ்தமனத்தை பார்க்கலாம் என்று கிளம்பிய நாங்கள் பறவைகளையும்,மலர்களையும் பார்த்துக்கொண்டு நேரத்தை கவனிக்காமல் விட்டுவிட்டோம். நாங்கள் காட்டினுள்ளே நடந்ததால் கரையையே இன்னும் பார்க்கவில்லை. அதனால் இனி கரையை தேடி செல்ல நேரமிருக்காது என்று திரும்பி நடக்க ஆரம்பித்தோம்.

Great White trillium,Trillium grandiflorum,wild blue phox,Phlox divaricata,North Manitou flora

ட்ரிலியம்,ப்ளாக்ஸ் மலர்கள் தீவில் ஆங்காங்கே கொத்துகொத்தாக மலர்ந்திருந்தது கண்களுக்கு குளிர்ச்சி அளித்தது.

திரும்பி நடக்க ஆரம்பித்த போது மறுபடியும் நன்றாக குளிர ஆரம்பித்துவிட்டது. குளிர் இருந்ததால் சீக்கிரமாக இருட்டிவிட்டது. நாங்கள் வேகவேகமாக நடந்தோம்,இருந்தாலும் இருட்டில் ரொம்ப தூரம் நடப்பது போல இருந்தது. இந்த தீவில் பாம்புகள் அதிகமாக உண்டு என்று கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் குளிரில் இந்த பாதையில் சுற்றி கொண்டு இருக்காது என்ற நம்பிக்கையில் நடந்தோம். ஏறக்குறைய டென்ட் இருந்த இடத்தின் அருகில் வந்துவிட்டோம் என்று தெரிந்தது. ஆனால் நாங்கள் தான் நன்றாக மரங்களின் நடுவே டென்ட் போட்டு வைத்திருந்ததால் இருட்டில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

North Manitou Island,North Monitou tent stay,North manitou forest

பகலில் பளிச்சென்று தெரிகிற மாதிரி தெரிந்தாலும் இரவில் இந்த டென்டை கண்டுபிடிக்க பட்ட பாடு!!

ஏற்கனவே நான் குளிரில் நடுங்க ஆரம்பித்து விட்டேன், டென்ட் இல்லாமல் இரவில் தூங்கவே முடியாது. வினோத் என்னை பாதையிலேயே நிற்க சொல்லிவிட்டு மரங்களினிடையே டென்டை தேட சென்றார். எவ்வளவு நேரம் காத்திருந்தேன் என்றே தெரியாது, வினோத்தின் குரல் கேட்ட பின் தான் உயிர் வந்தது. குடுகுடுவென்று இரண்டு பேரும் டென்ட் இருந்த இடத்திற்கு ஓடி சென்று,கொண்டு வந்திருந்த போர்வைகளை நன்றாக போர்த்திக்கொண்டு சூடான பின்பு டென்டை கண்டுபிடிக்காமல் போயிருந்தால் என்ன ஆகியிருப்போம் என்று பேசிக்கொண்டே உறங்கிப்போனோம்.

North Manitou Island,Shore trekking,Lake Michigan shore

கரையோரம் விதவிதமான செடிகள் வளர்ந்திருந்தாலும் எல்லாமே காய்ந்து போயிருந்தன.

மறுநாள் அதிகாலை சூரியன் உதிப்பதை ஏரியோரம் நின்று பார்க்கலாம் என்று டென்டிலிருந்து கிளம்பினோம். பயங்கர குளிராய் இருந்ததால் நாங்கள் நடுங்கிக்கொண்டே இருட்டில் நடந்தோம். ஒருவழியாக வழி கண்டுபிடித்து கரையோரம் சென்று விட்டோம். இன்னும் இருட்டாக இருந்ததால் ஏரியை பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்தோம். மெதுவாக சூரியன் மேலே எழ ஆரம்பித்து எங்களை சூரிய ஒளியில் குளிக்க வைத்தது. சூரிய கதிர்கள் எங்கள் மேல் விழுந்த போது குளிரில் உறைந்து போயிருந்த கைகளுக்கு அவ்வளவு இதமாக இருந்தது. சூரியன் உதிக்க ஆரம்பித்தவுடன் அதனுடன் சேர்ந்து அதுவரை உறங்கிக் கிடந்த தீவும், பறவைகளின் கானங்களுடன் முழித்தது.

Female American Redstart,North Manitou birding, Setophaga ruticilla

முள்ளின் அளவையும் இந்த பெண் ரெட்ஸ்டார்ட் பறவையின் அளவையும் பார்த்தால் தெரியும்,இந்த பறவை எவ்வளவு சிறியதென்று !

வெளிச்சம் வந்தவுடன் ஏரியில் தூரமாக தெரிந்த பறவைகளை பார்க்க ஆரம்பித்தோம். மெர்கென்ஸர் வாத்துகள் எங்களை கவனிக்காமல் கொஞ்சம் அருகில் கூட்டமாக வந்திறங்கின. சில நிமிடங்கள் கழித்து ஒரு வாத்து எங்களை பார்த்துவிட்டது. அவ்வளவுதான் அது கொடுத்த அலார்ம் சத்தத்தில் அனைத்து வாத்துகளும் பறந்துவிட்டன. கொஞ்சம் உப்புகொத்திகள் மட்டும் எதையும் கண்டுகொள்ளாமல் கரையோரம் ஓடிக்கொண்டிருந்தன. கரையோரம் கொஞ்ச நேரம் உலாவி விட்டு டென்டுக்கு திரும்பினோம். மறுபடியும் ஆப்பிள் தோட்டம் வழியாக நடந்தபோது நிறைய உடைந்த வீடுகளை பார்த்தோம். இன்று இங்கே டென்ட் போட்டுவிட்டு இந்த இடங்களை சுற்றி பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.

common merganser (North American) ,goosander,Mergus merganser,North manitou birding

மெர்கென்ஸர் வாத்துகள் மிச்சிகன் ஏரியை பார்த்துக்கொண்டு அழகாக வந்து அமர்ந்தன.

ஓடு உடைக்காத அவித்த முட்டைகள் 4 நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். அதனால் பொதுவாக எங்களுடைய நீண்ட பயணங்களில் இந்த உணவு கண்டிப்பாக இருக்கும். காலை முட்டையையும் ரொட்டியையும் சாப்பிட்டுவிட்டு டென்டை கழற்றி பையில் கட்டிக்கொண்டு,உடைந்த வீடுகள் இருந்த இடம் பக்கமாக சென்றோம். ஒரு வீட்டின் அருகே டென்டை அமைத்த பின் தீவை சுற்றி வர கிளம்பினோம்.

North Manitou Island,North Manitou Cottages

தீவில் உள்ள எல்லா வீடுகளும் யாரும் உபயோகிக்காததால் பழுதடைந்துவிட்டன.

19,20ஆம் நூற்றாண்டில் இந்த தீவில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்டி டிம்பர் கம்பெனி உபயோகித்திருக்கிறார்கள். மரங்களை வெட்டி தீர்த்த பின், தீவில் இருந்த மக்கள் விவசாயம், ஆப்பிள்,பீயர் பயிர் செய்ய ஆரம்பித்தனர். மான்களை இறக்குமதி செய்திருக்கிறார்கள். பணக்காரர்கள் கோடை விடுமுறைக்கு வந்து தங்குவதற்கு இங்கே காட்டேஜ் கட்டியிருக்கிறார்கள். ஆனால் 1940க்கு பிறகு தீவிலிருந்து பெரிய லாபம் கிட்டாததால் அனைத்து நிலங்களும் மறுபடியும் அரசிடமே வந்து சேர்ந்தது. முதலில் உணவு இல்லாததால் மான்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. ஆனால் மனிதர்கள் வசிக்காததால் எந்த இடையூறும் இல்லாமல் மரங்கள் வேகமாக வளர்ந்து காட்டை மறுபடியும் உயிர்ப்பித்தன. காடு உயிர்பெற்றவுடன் மான்களுக்கும் உணவு கிடைக்க ஆரம்பித்தது. இப்பொழுது மான்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் காடு அவ்வளவு அடர்ந்து விட்டதால், மான்கள் கண்ணில் படுவது அவ்வளவு அரிது. எங்கள் அதிர்ஷ்டத்துக்கு மான் ஒன்று பாதையோரம் மிக அழகாக நின்றுகொண்டிருந்ததுஇவ்வளவு அழகான மானை நாங்கள் பார்த்ததேயில்லை.மானை ரசித்துவிட்டு தொடர்ந்து நடந்தோம்.

Eastern Whitetail deer,Odocoileus virginianus,North Manitou Fauna,Magical animals

சூரிய ஒளியில் மின்னிய இந்த மான் ஏதோ மாய உலகத்தில் உள்ள விலங்கு போல காட்சியளித்தது.

அழகழகான பறவைகள் பறந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே வண்ண மலர்கள் மலர்ந்திருந்தன. மனிதர்கள் நடமாட்டம் இல்லையென்றவுடன் எப்படி ஒரு முழுவதும் அழிந்த காடு கூட மறுபடியும் புத்துயிர் பெற்று இத்தனை உயிரினங்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்க முடிகிறது என்று எங்களுக்கு மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.எங்கள் சாப்பாட்டையெல்லாம் தூக்கி சென்று விடும் என்று வார்டன் சொன்ன ஈஸ்டர்ன் சிப்மங்க் அதுபாட்டுக்கு மரம் தாவிக் கொண்டிருந்தது. நாங்களெல்லாம் எங்கள் கையிலிருந்தே சாப்பாடை பிடுங்கிக்கொண்டு ஓடும் குரங்குகள் இருக்கும் இடத்தில் வளர்ந்த இந்தியாக்காரர்கள். அமெரிக்காவில் அணில் வகையறாவில் உள்ள சிப்மங்க் கூட மிகவும் தொல்லை கொடுக்கும் விலங்கு என்று கூறுகிறார்களே என்று பேசிக்கொண்டே கடலைமிட்டாயை உண்டோம்.

Eastern Chipmunk,Tamias striatus,North Manitou fauna

இந்த சிப்மங்க் யாரிடமோ காதில் கடி வாங்கியிருக்கிறது!

கடலை மிட்டாய் மாதிரி உணவுகள் தான் குறைவாக சாப்பிட்டாலும் நல்ல சக்தி கொடுக்கும். கடலை மிட்டாய் சாப்பிட்டால் பட்டிக்காடு,எனர்ஜி பார் உண்டால் மாடர்ன் என்று விளம்பரங்கள் கூறுவதால் மக்கள் ட்ரெக்கிங் செல்லும்போது எனர்ஜி பாருக்கு மாறிவிட்டார்கள்.அந்த எனர்ஜி பாரிலும் இதே நிலக்கடலை தான் இருக்கும்!

மாலை நேரம் மறுபடியும் சூரிய அஸ்தமனத்தை கரையோரம் அமர்ந்து ரசித்துவிட்டு டென்டுக்கு செல்ல கிளம்பியபோது கொஞ்ச தூரத்தில் பறவைகள் கூட்டமொன்று கரையோரம் வந்திறங்கின. பறவைகளை அருகில் பார்க்கலாம் என்று நடக்க ஆரம்பித்தபோது காஸ்பியன் டர்ன் பறவை ஒன்று வந்ததால் வினோத் அதை பார்த்துக்கொண்டு நின்றுவிட்டார்.

Hydroprogne caspia,Caspian tern,Lake Michigan Shore birds

காஸ்பியன் டேர்ன் கண்ணில் உள்ள பட்டையை பாருங்கள், ஏதோ கடல் பைரட் மாதிரி.

நான் தொடர்ந்து நடந்தேன். பறவைகளின் அருகில் சென்றதும், கொஞ்சம் மறைவாக நின்றுகொண்டு பறவைகளின் நடவடிக்கைகளை கவனித்தேன். எப்பொழுதும் பார்க்கும் உப்புகொத்திகள் இருந்தாலும் அதில் ஒரு பறவை மட்டும் கொஞ்சம் வேறாக தெரிந்தது. அந்த பறவை மட்டும் என் திசை நோக்கி நடந்து வந்தது. எனக்கு மிக அருகில் வந்ததும் என் கண்ணை நேராக பார்த்தது அந்த சிறிய பறவை. நான் அதன் கண்ணை பார்த்தவுடன் மகிழ்ச்சியடையாமல் ஏனோ மிகவும் சோகமடைந்தேன். வினோத் என் அருகில் பறவை இருப்பது தெரியாமல் வேகமாக வந்தவுடன், அந்த பறவை பறந்துவிட்டது. வினோத், “இது வேகமாக அழிந்துகொண்டுவரும் பைப்பிங் பிளவர் பறவை அல்லவாஎன்று கூறினார்.ஏனோ அவர் கூறுமுன்பே அந்த பறவை ஒரு அழிந்துவரும் பறவையினம் என்று எனக்கு தெரிந்தது. அந்த பறவையை நாங்கள் புகைப்படம் எடுக்காவிட்டாலும் இன்றும் அந்த பார்வை எனக்கு மறக்கவில்லை.

North Manitou Sunset, Lake Michigan Sunset

இயற்கை தினம் தினம் வானில் வரையும் வரைபடம்! வாழ்வில் என்றும் அலுக்காத காட்சிகள்.

மறுநாள் அதிகாலை மறுபடியும் டென்டை கழற்றி பையில் கட்டிக்கொண்டு கரையோரம் தங்கலாம் என்று நடக்க ஆரம்பித்தோம். தோளில் பை கனமாக இருந்தாலும் தீவின் மற்றொரு முனை வரை பொறுமையாக நடந்தோம். பரந்த புல்வெளியில் கடலை பார்த்துக்கொண்டு இருக்கிற மாதிரி ஒரு அழகான இடத்தை கண்டவுடன் அதில் எங்கள் டென்டை அமைத்துக்கொண்டோம்.மெல்லிய காற்றுடன் கரையோரத்தில் நடப்பதற்கு ஏற்ப வெப்பநிலை இருந்ததால் நாங்கள் கரையோரம் கிளிஞ்சல் சிப்பிகளை பார்த்துக்கொண்டே நடந்தோம்.தீவுக்குள் நுழைந்த பின் எங்களுடன் வந்த 10 சக பயணிகளை பிறகு பார்க்கவேயில்லை.கரையோரம் கண்டிப்பாக பார்ப்போம் என்று நினைத்தோம்,ஆனால் இங்கேயும் ஒருவரும் கண்ணில் தென்படவில்லை.

Lake Michigan Shore,North Manitou Island

இன்னும் முழு பச்சையாக மாறாத புற்களும் செடிகளும் இவ்விடம் இன்னும் குளிராக இருக்கிறது என்பதற்கான அறிகுறி.

கரையில் விதவிதமான வடிவத்திலும்,வண்ணத்திலும் கற்கள் கிடந்தன. ஹார்ஸ் டெய்ல் புல்கள் ஏரி மணலில் அழகாக வளர்ந்திருந்தன. இந்த புல்கள் டைனோசர் காலத்துக்கும் முன் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மறுபடியும் டென்ட் வந்து சேர்ந்தபோது நான் இரண்டு கை கொள்ளாமல் கிளிஞ்சல் சிப்பிகளையும்,கற்களையும் எடுத்து வந்திருந்தேன்.

Horsetail grass,North Manitou Island plants,Sony Photography,Vinod Sadhasivan

ஹார்ஸ் டெய்ல் புற்கள் மணலில் இவ்வளவு சிறிதாகத்தான் இருந்தன. ஆனால் கேமராவில் கிளோஸ்அப் எடுக்கும்போது அதே புற்களில் எத்தனை நுணுக்கமான விவரங்கள் தெரிகின்றன. மெழுகுவர்த்தி மாதிரியோ,சிறிய கோபுரம் மாதிரியோ தெரிகிறதல்லவா ?

நான் கற்களை ரசித்து கொண்டிருந்தபோது,வினோத் ஏரியில் இருந்து நீர் எடுத்து வர சென்றார். தீவின் உள்ளே நுழைந்தபோது,அங்கே இருந்த ரேஞ்சர் ஸ்டேஷனில் மட்டும் தான் குடிநீர் கிடைக்குமென்று வார்டன் கூறினார். சுற்றி ஏரி நீர் இருக்கும்போது இப்படி சொல்கிறார்களே என்று நினைத்துக்கொண்டே அங்கே உள்ள நீரை பாட்டில்களில் நிரப்பிக்கொண்டு தான் வந்திருந்தோம். ஏரி நீர் சுத்தமானதாக இருந்தாலும், அலைகளில்லாமல் அமைதியாக இருந்ததால் நீரின் மேல் கொஞ்சம் பாசி படர்ந்திருந்தது.

Lake Michigan,Michigan Drinking Water, Vinod sadhasivan

மிச்சிகன் ஏரி நீரை வடிகட்டி வினோத் எடுத்து வந்தார்.

வினோத் துணியை வடிகட்டியாய் உபயோகித்து நீர் எடுத்து வந்தார். அன்றிரவு டென்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென்று மிக அருகில் ஒரு பறவை சத்தம். வெளியே லைட் அடித்தவுடன் வாயை மூடிவிடும். சிறிது நேரம் கழித்து மறுபடியும் சத்தம் போடும். இன்று தூக்கம் அவ்வளவு தான் என்று குளிரில் நாங்கள் வெளியே கொஞ்ச நேரம் முழு நிலவை பார்த்து ரசித்தோம்.

Lake Full Moon,North Manitou Island

முழுநிலவை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால் என் பெயரிலேயே நிலா இருப்பதால் முழுமதிக்கும் எனக்கும் எப்பொழுதுமே ஒரு தனி இணைப்பு உண்டு.

மறுநாள் பைகளை எடுத்துக்கொண்டு ஜெட்டி செல்ல தயாரானோம். சாப்பாடு எல்லாம் முடிந்த பின் கனம் குறையாமல் ஏன் ஏறி இருக்கிறது என்று வினோத் கேட்டபோது நான் திருட்டு முழி முழித்தேன். வினோத் பையை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த கற்களை பார்த்து, வீடு கட்ட போகிறாயா என்ன என்று கேட்டார். இங்கே மணலில் அழகாக கிடக்கும் கற்களை வீட்டுக்கு எடுத்து சென்று ஒரு டப்பாவில் போட்டு வைக்க போகிறாயா என்றவுடன், என் தவறு புரிந்து திரும்பி கரையோரம் நடந்தபோது கற்களை போட்டுக்கொண்டே ஜெட்டி இருக்குமிடம் வந்து சேர்ந்தோம்.

North Manitou Island,Lake Michigan Stones, Lake Shore Shells stones

மிச்சிகன் ஏரி கரையில் கிடந்த வழுவழுப்பான கற்கள்.

சகபயணிகளை ஏன் பார்க்கவில்லை என்று அப்போது புரிந்தது. அவர்கள் யாரும் அந்த கரையை தாண்டி உள்ளே எங்கும் செல்லவில்லை.ஏரியில் குளித்து,அங்கேயே சமைத்து சாப்பிட்டு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்தியர்கள் வராத இடத்திற்கு நாங்கள் சென்றிருந்ததால் எங்களை வியப்பாக பார்த்தவர்கள், இப்பொழுது இன்னும் அழுக்கு மூட்டையாக வந்திறங்கிய எங்களை அவர்களால் என்னவென்றே கணிக்க முடிந்திருக்காது.

North Manitou Forest,Camera and trekking baggages,Vinod Sadhasivan

வினோத் இவ்வளவு மூட்டைகள் தூக்கிக்கொண்டு வந்தாலும் வழியில் ஒரு பறவை வந்துவிட்டால் போதும், அது பின்னாடியே கேமராவை தூக்கிக்கொண்டு ஓடி விடுவார்.

ஒரே இடத்துக்கு சென்றிருந்தாலும்,அந்த தீவில் மற்றவர்களின் அனுபவங்களும் எங்களுடைய அனுபவங்களும் முழுவதும் வேறு. நானும் வினோத்தும் சேர்ந்தே சுற்றினாலும், அந்த தீவில் எனக்கு மிகவும் பிடித்த தருணங்கள் பைப்பர் பிளவர் பறவையை பார்த்ததும் வித விதமான கற்களை கரையோரம் பார்த்ததும் என்றால் வினோத்தின் மறக்கமுடியாத அனுபவங்கள் மனிதர்களையே பார்க்காமல் மூன்று நாள் கழித்ததும்,வடிகட்டி தண்ணீர் பிடித்ததும்,இரவில் சத்தம் போட்ட பறவையை வெகு நேரம் தேடியதுமாகும்கதைகளில் புதையல் என்றாலே பொற்காசுகளும் வைரமும் தான் காட்டுவார்கள். எங்களை பொறுத்தவரை நல்ல நினைவுகள் தான் பொக்கிஷம். அந்த வகையில் இந்த பயணத்தில் நாங்கள் பொக்கிஷ வேட்டையில் வெற்றி பெற்றுவிட்டோம்.

Please follow and like us: