கிஹிம் (Kihim) – ஜெட்டி பயண அனுபவம்
சில நேரங்களில் மறக்க முடியாத அனுபவங்கள் மலை பிரதேசங்களின் நடுவே மட்டுமே நிகழாது , ஒரு இடத்திற்கு செல்லும் பயணமே அனுபவம்தான் . அதிலும் இனிதாக நடந்த பயணங்களை விட நம்மை போட்டு வதக்கிய பயணங்களே நெடு நாட்கள் மனதில் நிற்கும் . பல பயணங்களில் போது நாங்கள் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால் , போட்டு வதக்கிய பயணங்கள் அன்றைய தினம் எரிச்சலை கொடுத்தாலும் , நாள் போக்கில் அவைகள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும் கதைகளாக உருவெடுக்கின்றன . அந்த வகையில் உள்ள கதை இது. ஒரே நாளில் விமான பயணம்,படகு பயணம்,ரயில் பயணம் மற்றும் ஆட்டோ,டாக்ஸி,பேருந்து பயணம் செய்தது இதுவே முதல் தடவை. கூட்டத்தில் நசுங்கிய ஒரு பயணம், எனினும் அழகிய பறவைகளுடன் பயணித்த பயணம். ரோட்டிலேயே படுத்துவிடலாம் என்று வெறுத்து பேசிய பயணம் இது , ஆனால் இப்பொழுது யோசித்து யோசித்து சிரித்து அனுபவிக்கும் பயணமாக மாறி விட்டது.
நாங்கள் நாகர்கோவில்காரர்கள் என்பதால் எங்களுடைய முதல் படகு பயணம் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றதுதான். அமெரிக்காவில் படகுகளில் சென்று தீவுகளில் தங்கிய அனுபவங்கள் இருந்தாலும் இந்தியாவில் மீனவர்களுடன் படகில் சென்று ஆமைகள்,மீன்கள் பார்க்க சென்றதை தவிர வேறு படகு அனுபவங்கள் கிடையாது. அதனால் எங்கள் தோழி சாந்தி கிஹிம் (Kihim) என்ற ஊரில் அவர்களின் தோழிக்கு கடற்கரையோரமாக வீடு இருக்கிறது என்றும், கடற்கரை பறவைகளை பார்ப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்று சொன்னதும்,சென்றுதான் பார்க்கலாமே என்று கிளம்பினோம். மும்பை சென்று அங்கே இந்தியாவின் நுழைவுவாயிலில் இருந்து கிளம்புகிற படகில் 1.30 மணிநேரம் பயணம் செய்து, அதன்பிறகு பேருந்தில் ஏறி கொஞ்ச தூரம் சென்று,பிறகு ஆட்டோவிலோ,நடந்தோ கிஹிமில் நாங்கள் தங்கும் வீட்டுக்கு போய் சேரலாம் என்று சாந்தி கூறியவுடன் எங்கள் ஆர்வம் அதிகமாகியது.
விமானத்தில் மும்பை சென்று சேர்ந்தவுடன் எங்களுக்கு நகரத்தை சுற்றி பார்க்க எப்பொழுதுமே ஆர்வம் கிடையாததால் நேராக படகு முகாமுக்கு சென்றோம். அங்கே மால்டர் கட்டமரன் படகில் மேல் தளத்துக்கு அனுமதி சீட்டுகள் வாங்கிக்கொண்டு படகுக்காக காத்திருந்தோம். காத்திருந்தவேளையில் கடல் காகங்களையும்,ஆலாக்களையும் பார்த்து கொண்டிருந்தோம்.
இந்தியாவின் நுழைவுவாயில்
இந்தியாவின் நுழைவுவாயில் கண் முன்னாடியே பெரிதாக இருந்ததால் அதையும் பார்த்துக்கொண்டோம். தமிழ் படங்களில் எப்பொழுதும் மும்பையை காட்டினால் இந்தியாவின் நுழைவாயிலையும்,புறாக்களையும் தான் காட்டுவார்கள். மும்பையை குறிக்கும் மிக முக்கிய சின்னமென்பதால் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்து கொண்டிருந்தனர்.
ஒருவழியாக நாங்கள் செல்லும் படகு வந்தது.காலை நேரமானதால் மாண்டவாவிலிருந்து நிறைய பேர் மும்பைக்கு வேலைக்கு வருவதால் படகு கூட்டமாக இருந்தது.ஆனால் நாங்கள் மும்பையிலிருந்து மாண்டவா சென்றதால் படகில் சில காதல் ஜோடிகளை தவிர வேறு யாருமில்லை. படகில் மேல் தளத்திற்கு சென்றோம். அழகான,அமைதியான கடலை ரசித்துக்கொண்டே சென்றோம்.மும்பையில் வடாபாவ் பிரபலமான உணவு என்பதால் அதை ருசித்து பார்க்கலாம் என்று வாங்கி சாப்பிட்டு பார்த்தோம்.உணவை ருசித்து கொண்டு,கடல் காற்றை அனுபவித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெரிய எண்ணை கிணறு கடலில் இருந்தது. தரையில் உள்ள எண்ணை கிணறை அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் பார்த்திருக்கிறோம், ஆனால் கடலில் இவ்வளவு பெரிய அமைப்பை இப்பொழுது தான் முதல் முறை பார்க்கிறோம்.ஏதாவது கடல் பறவைகளை பார்க்கமுடியுமா என்று நாங்கள் தேடிக்கொண்டிருந்தபோது மறுபடியும் ஆலா பறவைகளும்,கடல் காகங்களும் தான் கண்ணில்பட்டன. கடலில் மீன் பிடிக்க வருகின்றன போல என்று பார்த்தால் எங்கள் படகு கூடவே பறந்து வந்துகொண்டிருந்தன.
இப்பறவைகளை இவ்வளவு அருகில் பறக்கும்போது பார்ப்பது அரிதாகையால் வினோத் படகில் ஒவ்வொரு பக்கமாக ஓடி பறவைகளை விதவிதமான கோணங்களில் எடுத்துக்கொண்டிருந்தார்.பறவைகள் வெகு தூரம் எங்களுடன் பயணித்ததால் எங்களுக்கு படகில் ஏதாவது மீன் எடுத்துவந்து கொண்டிருக்கிறார்களோ என்று சந்தேகித்தோம். பறவைகளும் எதையோ பிடிப்பது போல் குதித்து குதித்து பறந்து கொண்டிருந்தன. கீழ்தளத்திற்கு சென்றால் ஏதாவது கண்ணில்படுகிறதா என்று பார்க்க கீழே சென்றோம். ஒரு ரொம்ப நல்ல உள்ளம் கொண்டவர் ஏதோ நொறுக்கு தீனியை எறிந்து கொண்டிருந்தார். அதை பிடிப்பதற்காக தான் இந்த பறவைகள் படகை தொடர்ந்து வந்து கொண்டிருந்திருக்கின்றன. அந்த நொறுக்கு தீனி என்னவென்று பார்த்தால் குர்குரே!! நாம் மட்டும் இந்த மாதிரி தீனிகளை சாப்பிட்டு கெட்டது பத்தாது!! தீனி தீர்ந்ததும் பறவைகளெல்லாம் திரும்பி செல்ல ஆரம்பித்துவிட்டன.
மாண்டவா சென்று சேர்ந்ததும் அங்கே இருந்த அரசு பேருந்தில் ஏறி 30 நிமிடத்தில் கிஹிம்(Kihim) சென்றடைந்தோம். பிறகு ஆட்டோவில் ஏறி வீடு போய் சேர்ந்தோம். கடற்கரையோரத்தில் அமைந்திருந்த இந்த வீடு தோட்டத்துடன் மிகவும் அழகாக இருந்தது. வீட்டை சுற்றி பார்த்துவிட்டு நேரே வீட்டின் பின்னே இருந்த கடற்கரைக்கு சென்றோம். உச்சி வெயில் ஏறி இருந்தாலும் கடல் காற்று நன்றாக இருந்தது. ஆங்காங்கே பறவைகள் கரையில் அமர்ந்திருந்தன.
சாந்தி அவர்களுடைய புது கண்ணாடியை மும்பையில் அவர்கள் தோழியின் வீட்டில் மறந்து விட்டு வந்திருந்ததால், பழைய கண்ணாடியை அணிந்திருந்தார்கள். அவர்கள் அதை வைத்து சமாளித்து கொள்ளலாம் என்று நினைத்தார்கள், ஆனால் இந்த கடல் பறவைகளையே பார்க்க சிரமப்பட்டதால், வினோத் மும்பைக்கு மறுபடியும் சென்று வரலாம் என்று கூறினார். வேறு வழி இல்லாததால் சாந்தியும் ஒருவழியாக ஒத்துக்கொண்டார்கள். மதியம் மறுபடியும் ஆட்டோ ஏறி,பேருந்து ஏறி,மாண்டவா சென்றடைந்து,அனுமதி சீட்டு வாங்கி,படகில் ஏறினோம்.
மதிய நேரமாகையால் பறவைகள் எதுவும் கண்ணில் தென்படவில்லை. மும்பை சென்றடைந்ததும் எப்படி சாந்தியின் தோழி வீட்டுக்கு செல்வது என்று மூவரும் பேசி ஒரு திட்டம் போட்டுக்கொண்டோம். மும்பை ஜெட்டி சென்றடைந்ததும் அங்கே இருந்து மெட்ரோ ரயிலுக்கு சென்றோம். இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தவுடன் அங்கே இறங்கி டாக்ஸி பிடித்து சாந்தியின் தோழி வீட்டுக்கு சென்றடைந்தோம். நானும் வினோத்தும் அருகிலுள்ள கடைக்கு சென்று டோக்ளா, வடாபாவ் தின்பண்டங்களை வாங்கி ருசித்தோம். சாந்தி புது கண்ணாடியை அணிந்துகொண்டு சந்தோஷமாக வந்தவுடன் நாங்கள் மறுபடி ஆட்டோவில் ஏறி மெட்ரோ ரயில் நிலையம் சென்று ரயில் ஏறினோம். மும்பை மக்கள் வேலையை முடித்து திரும்பும் நேரமானதால் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
மும்பை ரயில் பயணம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பதால் மிகவும் கவனமாக இருந்தோம்.மறுபடியும் ஜெட்டி வந்து சேர்ந்து,அனுமதி சீட்டு வாங்க சென்றால் அவ்வளவு கூட்டம். நெருக்கடியில் படகு ஏறி கீழ் தளத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டோம். வைகறை மெல்லொளியில் கடல் மிகவும் அழகாக இருந்தது.
காலையில் படகில் சென்ற போது 1.30 மணிநேரம் போனதே தெரியவில்லை. இப்பொழுது என்னடாவென்றால் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மணி பார்த்து கொண்டிருந்தோம். ஒருவழியாக மாண்டவாவில் இறங்கி கூட்டத்தினிடையில் பேருந்தும் ஏறிவிட்டோம்.பெரும்பயணத்தை முடித்து ஒரு வழியாக வீடு போய் சேர்ந்து விடுவோம் என்று பார்த்தால் பேருந்து 5 நிமிடத்தில் பழுதாகி நின்றுவிட்டது. மற்றவர்களெல்லாம் உள்ளூர்காரர்கள் என்பதால் கொஞ்ச நேரம் பொறுத்திருந்துவிட்டு தொலைபேசியில் வீட்டினரை கூப்பிட்டுவிட்டனர். ஒவ்வொருவராக அவரவர் வீட்டிலிருந்து வண்டி வந்தவுடன் கிளம்பிவிட்டார்கள்.நாங்கள் மூன்று பேர் மட்டும் நடுவீதியில் நின்று கொண்டிருந்தோம். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அடுத்த படகில் உள்ள ஆட்களை ஏற்றி வந்து கொண்டிருந்த பேருந்தில் நசுங்கி பிசுங்கி வீடு வந்து சேர்ந்தோம்.
மும்பை ஊருக்குள் செல்லாமல் அப்படியே கிஹிம் (Kihim) வந்து சேர்ந்து கடற்கரையோரம் அமைதியாக இருக்கலாம் என்று பார்த்தால் விதியை வெல்ல முடியாது என்று இன்று தெளிவாக புரிந்தது. நாங்கள் மிகவும் களைப்புடன் வீடு போய் சேர்ந்தாலும், கடல் காற்றை அனுபவித்துக்கொண்டே கடற்கரையோரம் அமர்ந்து அன்றைய எங்கள் நடவடிக்கைகளை பற்றி பேசி சிரித்தபோது நகரத்தில் உள்ள படபடப்பு எல்லாம் காணாமல் போய் மனதில் ஒரு அமைதி உண்டானது.ஹிந்தி தெரிந்தவர்கள் வடநாட்டில் போய் சுற்றுவது பெரிய விஷயமல்ல, எங்களை போல ஹிந்தி தெரியாதவர்கள் மும்பை நகரத்தில் அனைத்து ஊர்திகளிலும் ஏறி பவனி வந்தது சாதாரணமான காரியமல்ல. பறவைகளை பார்க்க ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த பயணம் ஒரு மறக்க முடியாத அனுபவமாகிவிட்டது.