கியோலாடியோ தேசிய பூங்கா-ராஜஸ்தான்
கியோலாடியோ தேசிய பூங்கா மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஈரநிலம். இந்த பூங்கா இயற்கையாக உருவானது அல்ல என்றாலும் 230 பறவை இனங்களும், பல்வேறு உயிரினங்களும் இந்த இடத்தில் வசிக்கின்றன.250 வருடங்களுக்கு முன் உருவான இந்த பூங்கா மஹாராஜாக்களின் வேட்டையாடும் இடமாக இருந்தது. அத்தகைய பூங்கா இப்பொழுது பறவைகளின் சரணாலயமாக மாறி இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.பறவைகள் குளிர் காலத்தில் இடம்பெயரும்போது இந்த பூங்காவில் இருக்கும் தண்ணீரை பார்த்து வந்துவிடுவதால் விதவிதமான வெளிநாட்டு பறவைகளை இங்கே பார்க்கலாம். உலகம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்கள் இந்தியா வந்தால் இந்த பூங்கா செல்லாமல் இருக்க மாட்டார்கள். எங்கள் தோழி சாந்தி ஏற்கனவே இந்த பூங்கா வந்திருந்ததால், பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க இரண்டு நாட்கள் கண்டிப்பாக வேண்டும் என்று கூறியிருந்தார்கள். பூங்காவின் அருகே உள்ள ஒரு விடுதியில் இரண்டு நாட்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு எங்களின் பறவைகள் தேடலை ஆரம்பித்தோம்.
பூங்காவில் ரிக்ஷாவும் சைக்கிளும் வாடகைக்கு கிடைக்கும். தேவைக்கேற்ப வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பூங்காவை சுற்றி வரலாம். நாங்கள் பறவைகளை மிகவும் பொறுமையாக பார்த்து ரசிப்பவர்கள் என்பதால் நடந்தே பூங்காவை சுற்றினோம்.ரிக்ஷா ஓட்டுனர்கள் தொடர்ந்து பூங்காவிலேயே இருப்பதால் அவர்களுக்கும் சில பொதுவாக பார்க்கும் பறவைகளின் பெயர் தெரிந்திருந்தது.சுற்றுலா பயணிகளிடம் பூங்காவில் அதிகம் தென்பட்ட கிளி,கொக்கு,வாத்துகளை காட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். ஒரு ரிக்ஷா ஓட்டுனர் அம்மாதிரி ஒரு காதல் ஜோடியிடம் பறவையை காட்டிக்கொண்டிருந்தார். காதல் ஜோடிகளுக்கு பறவைகளா கண்களில் தெரியப்போகிறது ! தாண்டி நடந்து செல்லும்போது என்ன பறவையென்று பார்த்தால் எங்களுக்கு மிகவும் பிடித்த ஆந்தைகள் ஜோடியாக உட்கார்ந்திருந்தன.
கியோலாடியோ பறவைகள்
எல்லா மரங்களிலும் கிளிகள் இருந்தன. கொஞ்ச தூரம் உள்ளே நடந்து சென்ற பிறகு சதுப்பு நிலங்கள் கண்ணில் பட ஆரம்பித்தது.அதுக்கு முன்னாடியே எங்கேயோ பழக்கமான குவாக் சத்தம் கேட்டது. நாங்கள் கூந்தங்குளத்தில் பார்த்த பட்டைத்தலை வாத்து (Bar-headed Goose) கும்பலாக இருந்து சத்தம் போட்டு கொண்டிருந்தன. இந்த பறவையின் உயரமாக பறக்கும் திறனும் கடும் தட்பவெட்பத்தை தாங்கும் திறனும் விஞ்ஞானிகளையே வியப்படைய வைத்துள்ளது.
சுற்றுலா பயணிகள் இருந்த சாலையில் கண்டிப்பாக பொதுவாக பார்க்கும் பறவைகளை தாண்டி எதையும் பார்க்க முடியாது. நாங்கள் பல வருடங்களாக பறவைகள் பார்த்துக்கொண்டிருப்பதால் எளிதில் பார்க்க முடியாத பறவைகளை பார்ப்பதற்கு தான் இவ்வளவு தூரம் பயணம் செய்தோம்.கொஞ்ச தூரம் நடந்த பின் சுற்றுலா பயணிகள் குறைய ஆரம்பித்தார்கள். ஒரு இடத்தில் சிறிய சாலை ஒன்று பிரிந்தபோது,நாங்கள் அந்த ஆளில்லாத சிறிய சாலையில் நடக்க ஆரம்பித்தோம்.கொஞ்ச தூரம் அந்த குறுக்கு பாதையில் நடந்து கொண்டிருந்தபோது சாலையின் ஒரு பக்கத்தில் நீர்தேக்கம் இருந்தது,மற்றொரு பக்கம் வெறும் கட்டாந்தரையாக கிடந்தது. கட்டாந்தரையாக இருந்த இடத்தில் மாடு ஒன்று இறந்து கிடந்தது,அதனால் மஞ்சள் திருடிகள் (Egyptian Vulture) உயரத்தில் நிறைய பறந்து கொண்டிருந்தன.
பறவைகள் கீழே இறங்கும் வரை காத்திருக்கலாம் என்று நீர் தேக்கத்தை பார்த்து கொண்டு அமர்ந்தோம்.நீர்தேக்கத்தில் தூரத்தில் கொஞ்சம் வாத்துகள் தெரிந்தன.
பைனாகுலரில் பார்த்தால் அவையெல்லாம் கருட தாரா(Ruddy shelduck) வாத்துகள். நீர்தேக்கத்தில் ஆங்காங்கே மணல் திட்டுகள் இருந்தன.ஒரு மணல் திட்டில் பாறை கிடக்கிறது என்று நினைத்தால் பாறை நகர்ந்தது. வினோத் சாப்ட் ஷெல் டர்டில்(Softshell turtle) என்று கூவினார். நம் இந்தியாவில் ஏகதேச அனைத்து நீர்நிலைகளிலும் ஆட்கள் குளிப்பதற்கு,மீன் பிடிப்பதற்கு என்று உபயோகிப்பதால் நீர் ஆமைகளையெல்லாம் விட்டுவைக்கவே மாட்டார்கள்.அதனால் எங்களுக்கு சாப்ட் ஷெல் டர்டிலை இங்கே பார்த்தது மிகவும் வியப்பாக இருந்தது.
அரை மணிநேரமாகியும் மஞ்சள் திருடிகள் மேலே வட்டமிட்டு கொண்டே இருந்தன.கொஞ்ச நேரம் கழித்து ஒரே ஒரு பறவை மட்டும் கீழே இறங்கியது. ஆனால் அந்த மஞ்சள் திருடியும் மாட்டை உண்ணவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு வேறு எந்த பறவையும் கீழே இறங்காததால் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம்.
நாங்கள் இந்த பூங்காவிற்கு வந்ததற்கு முக்கியமான ஒரு காரணம் சாரஸ் க்ரேன் என்ற பறவையை பார்ப்பதற்காக. இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் அடுத்த நீர்நிலை வரும்,அங்கே சாரஸ் க்ரேன் இருக்கிறது என்று பூங்காவிற்கு வந்திருந்த மற்றொரு பறவை ஆர்வலர் கூறினார். என்னதான் இங்கு நீர்நிலைகளும்,மரங்களும் இருந்தாலும் இந்த இடம் ராஜஸ்தானில் இருப்பதால் மதியம் ஆனதும் வெயில் கொளுத்தியது. க்ரேனை மட்டும் பார்த்துவிட்டு திரும்பிவிடலாம் என்று தொடர்ந்து நடந்தோம். இந்த நீர்நிலை அருகில் ஒரு கண்காட்சி கோபுரம் இருந்தது. அதில் ஏறி பார்த்தால் சாரஸ் க்ரேன்,கருங்கழுத்து நாரை போன்ற அரிய வகை பறவைகளெல்லாம் தூரத்தில் இருந்தன. வெயில் ஏறியதால் ஒரு பறவையும் நகர்வதாய் இல்லை. சிறிய சீழ்கை சிறகி(Lesser whistling duck) பொதுவாகவே இந்தியாவிலுள்ள எல்லா குளங்களிலும் கண்ணில் தென்படக்கூடியவை. அவை தான் கும்பலாக அருகில் நின்றன.
பறவைகளை பார்த்துக்கொண்டே நடந்த தூரம் தெரியாமல் 10கி.மீ நடந்துவிட்டோம். மறுபடியும் 10கி.மீ நடக்க வேண்டும்.ஏற்கனவே களைப்படைந்து விட்டோம்.அதனால் திரும்பி நடக்க ஆரம்பித்தோம். கிளிகளையும் வாத்துகளையும் பார்த்துக்கொண்டு நடந்தோம். பாதி வழி சென்றடைந்ததும் படகு முகாம் அறிக்கை பலகை இருந்தது. படகு சவாரி இருந்தால் மறுநாள் செல்லலாமே,விசாரித்துவிட்டு செல்லலாம் என்று சென்றோம். உள்ளே ஒரு படகு மட்டும் இருந்தது,ஆனால் குளத்தில் நீரே இல்லை.இப்படி ஒரு ஏமாற்றமா என்று நினைத்துகொண்டே திரும்பியபோது சிகப்பு தொண்டை ஈபிடிப்பான் எங்களை கண்டுகொள்ளாமல் அருகே இருந்த மரக்கிளையில் வந்து அமர்ந்தது. உள்ளே வந்ததற்கு இது ஒரு பரிசு போல என்று குதித்து பூச்சி பிடித்துக்கொண்டிருந்த பறவையை ரசித்துவிட்டு திரும்பினோம்.
விடுதி சென்று சேர்வதற்குள் எனக்கும் சாந்திக்கும் கால்கள் நன்றாக வலிக்க ஆரம்பித்துவிட்டது. தங்கியிருந்த விடுதியில் ஒரு திருமணம் இருந்ததால் நடுராத்திரி வரை பாட்டு சத்தத்தில் எங்கள் யாராலும் தூங்க முடியவில்லை.மறுநாள் களைப்பாக இருந்தாலும் சாரஸ் க்ரேனை பார்க்கும் உற்சாகத்தில் பூங்காவிற்கு கிளம்பினோம்.
எனக்கு இங்கே செடிகள் பார்க்கும் வாய்ப்பு இல்லாததால், நான் இந்த பயணத்தில் எப்பொழுதும் காட்டும் சுவாரசியத்தை காட்டவில்லை. ஆனால் முந்தைய நாள் பார்த்த பறவைகளின் எண்ணிக்கையை பார்த்து நானும் முழு உற்சாகத்தில் கிளம்பினேன். காலையில் கியோலாடியோ பூங்காவின் உள்ளே நுழைந்ததுமே நேரே கடைசி நீர்நிலைக்கு நடக்க ஆரம்பித்தோம். ஆனால் பாதிவழியிலேயே ஒரு நீர்நிலையில் சாரஸ் கிரேன் ஜோடியாக நின்று கொண்டிருந்தன. அதிகாலையில் பனிமூட்டத்தின் நடுவே இந்த அழகான பறவைகள் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தன.
சாரஸ் க்ரேனை பார்த்த உற்சாகத்தில் மாடு இறந்து கிடந்த குறுக்கு சாலைக்கு மறுபடியும் சென்றோம். பறவைகள் எதுவும் மாடை உண்ணவில்லை. ஆனால் எதிரே இருந்த நீர்தேக்கத்தில் கருட தாரா(Ruddy shelduck) ஜோடியாக அருகில் இருந்தன.காலையில் வந்தால் எல்லா பறவைகளையும் ஜோடியாக பார்க்க முடிகிறதே என்று மகிழ்ச்சியுடன் நடந்தோம்.பூங்காவின் இறுதிவரை சென்றுவிட்டு கொஞ்சம் இளைப்பாறலாம் என்று ஒரு இடத்தில் அமர்ந்தோம்.
பறவைகளை பார்த்த சந்தோஷத்தை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக் கொண்டிருந்தபோது எதிரே இருந்த மரத்தை நான் பார்த்து கொண்டேயிருந்தேன்.மெல்லிய அசைவு ஒன்று தெரிந்தது. மறுபடியும் சில வினாடிகள் உற்று பார்த்தபின் தான் நான் பட்டை கழுத்து சின்ன ஆந்தையை பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று எனக்கு புரிந்தது.பறவை ஆர்வலர்களுக்கு தெரியும் இந்த ஆந்தையை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமென்று. எங்கள் மூவருக்கும் கைகால் புரியவில்லை. ஒருவழியாக ஆசைதீர ஆந்தையை பார்த்து,படம் எடுத்து முடித்தவுடன் அங்கே இருந்து கிளம்பினோம்.
கண்ணில் பட்டும் அருகில் பார்க்கமுடியாத கருங்கழுத்து நாரையை தவிர மற்ற பறவைகளையெல்லாம் அருகில் பார்த்த சந்தோஷத்துடன் கிளம்பினோம். ஊரில் உள்ள மாடுகள் எல்லாம் தண்ணீரை தாண்டி சில இடங்களில் மேய்ந்து கொண்டிருந்தன. நன்றாக உற்று பார்த்தால் மான்களும் அதோடு சேர்ந்து மேய்ந்து கொண்டிருந்தன.
நாங்கள் இதுவரை இவ்வளவு உயிர் வாழ்வதற்கு இடம் கொடுக்கும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கியோலாடியோ பூங்காவிற்கு சென்றதே இல்லை! இந்தியாவிலுள்ள பறவை ஆர்வலர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் இந்த கியோலியடோ தேசிய பூங்கா.
தமிழில் மேலும் படிப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்