கங்காரியா & ஹேம்குண்ட் மலையேற்றம்


Hemakund trek,,ghangaria,himalayas

ஹேம்குண்ட் மலையேற்றத்தின் போது பார்த்த இயற்கை காட்சி.

உத்திரகாண்டில் உள்ள பூக்களின் பள்ளத்தாக்கு நந்தாதேவி தேசிய பூங்காவில் உள்ளது. விதவிதமான வண்ண மலர்களை காண்பதற்கு இந்தியாவில் உள்ள ஒரு முக்கியமான இடம் இந்த பூக்களின் பள்ளத்தாக்கு. அவ்விடம் செல்வதற்கு முதலில் நாங்கள் ஹரித்வார் சென்றடைய வேண்டும். அங்கிருந்து பேருந்தில் ஜோஷிமத் என்ற இடம் சென்றடைய வேண்டும்.அதன் பிறகு ஜோஷிமத்தில் இருந்து கோவிந்த்காட் என்ற இடம் சென்றடைய வேண்டும். பிறகு அவ்விடத்திலிருந்து நடை பயணம் ஆரம்பித்து கங்காரியா சென்றடைய வேண்டும். பிறகு அங்கிருந்து நடை பயணம் செய்து பூக்களின் பள்ளத்தாக்கு சென்றடைய வேண்டும். வெகுதூர பயணமென்பதால் நாங்கள் வெகு நாட்கள் இந்த பிரயாணத்திற்கு திட்டமிட்டிருந்தோம். ஒருவழியாக நெடுநேர பயணத்திற்கு பிறகு ஜோஷிமத் சென்றடைந்தோம்.

கங்காரியா மலையேற்றத்திற்கு நாங்கள் கிளம்பிய நாளன்று வானம் தெளிவாக இருந்தது. இந்த உயரத்தில் உள்ள ஊர்களில் வானிலை திடீரென்று மாறிவிடும். மழையில் மலையேறுவது மிகக்கடினம். அதிகாலையில் 5 மணிக்கே ஜோஷிமத்தில் நாங்கள் தங்கியிருந்த  ஹோட்டலில் இருந்து டாக்சி ஸ்டாண்ட் சென்று விட்டோம். எங்களை தாண்டி சென்ற உள்ளூர்காரர்கள் இவ்வளவு காலை குளிரில் எங்கே செல்கிறார்களென்று எங்களை வியப்பாக பார்த்துக்கொண்டு சென்றார்கள். 6.30 மணிக்கு முன்னால் ஒரு வண்டியும் கோவிந்த்காட் கிளம்பாது என்று நாங்கள் டாக்சி ஸ்டாண்டுக்கு வழி கேட்டபோதுதான் தெரிந்தது. அதனால் வேறு வழியில்லாமல் குளிரில் ஒரு மணிநேரம் குருவிகளையும்,புறாக்களையும் பார்த்துக்கொண்டு காத்திருந்தோம். ஒருவழியாக ஓட்டுநர் வந்தபின் கிளம்புவார் என்று பார்த்தால், இன்னும் நிறைய ஆட்களை ஏற்றுவதற்காக காத்திருந்தார். எங்கள் நல்ல காலம் கூட்டம் சட்டென்று நிரம்பியதால் வண்டி உடனே கிளம்பியது.

wild river,uttaranchal,ghangaria,ஆலாலகண்டா,Aaalalakanda river

இந்த பொங்கி வரும் ஆற்றின் பெயர் ஆலாலகண்டா. எங்கு திரும்பினாலும் நீர் ஓடும் சத்தம் கேட்டது மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சி கொடுத்தது.

அழகான இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டே வந்ததால் 45 நிமிடம் பயணத்தில் போனதே தெரியவில்லை. கங்காரியா செல்வதற்கு பாலத்தை கடந்து மலையேற ஆரம்பித்தோம். முதல் 4 கி.மீக்கு தார் சாலை இருந்ததால் வண்டிகள் சென்றன. ஆனால் நாங்கள் முழுவதும் நடக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதால் நடக்க ஆரம்பித்தோம். வெகுதூரத்தில் மலை முகட்டில் ஒரு பிணந்தின்னி கழுகு அமர்ந்திருந்தது. அவ்வளவு தூரத்தில் இருந்தாலும் எங்கள் கண்ணுக்கு அப்பறவை தெரிந்தது.  

எங்கு திரும்பினாலும் உயர்ந்த மலை சிகரங்கள் கண்ணில் தெரிந்தன. இயற்கை வளங்களை ரசித்துக்கொண்டே நடந்தபோது ஒரு வண்ணமிக்க தேன்சிட்டு ஒரு மலரிலிருந்து மற்றோரு மலருக்கு மிக வேகமாக பறந்து கொண்டிருந்தது. இமாலய தேன்சிட்டுகள் மிகவும் வண்ணமிக்கதாக இருக்கும்,எளிதில் பார்க்கவும் கடினம் என்பதால் வினோத் அந்த தேன்சிட்டை புகைப்படம் எடுப்பதற்கு அதன் பின்னே முதுகில் இருந்த கனமான பையுடன் ஓட ஆரம்பித்து விட்டார். இப்பொழுது தான் நடை பயணத்தையே ஆரம்பித்திருக்கிறோம், அதில் இப்படியெல்லாம் ஓடி என் தெம்பை வீணாக்கினால் நான் கங்காரியா சென்று சேர்வது கடினம் என்று நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். சும்மா நின்று கொண்டிருந்தாலும்,நம் கண்கள் சும்மா இருக்காதல்லவா? ஒவ்வொரு செடியையும்,மரத்தையும் பார்த்து நின்று கொண்டிருந்த எனக்கு ஒரு மரத்தில் இலைகளின் பின்னால் ஒரு புறா அமர்ந்திருந்தது தெரிந்தது. பிஜியன்கள்(Pigeons) பொதுவாக கும்பலாக இருக்குமென்பதால் வேறு புறாக்கள் கண்ணில் படுகிறதா என்று தேட ஆரம்பித்தேன். அம்மரம் முழுவதுமே பச்சை வண்ண வெட்ஜ் டைல்ட் புறாக்கள்(Wedge Tailed Green Pigeons) அமர்ந்திருக்கின்றன என்று அவ்வளவு உற்று பார்த்தபின்பு தான் தெரிந்தது.

Wedge tailed green pigeon,Himalayan birds,Himalayan foothills pigeon,Ghangaria trek birds

பச்சை வண்ண வெட்ஜ் டைல்ட் புறா அழகாக அத்தி பழத்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தது.

தேன்சிட்டை புகைப்படம் எடுக்க துரத்தி சென்ற வினோத்,தேன்சிட்டு படாரென்று செடிகளுக்குள்ளே டைவ் அடித்து சென்றுவிட்டதால் புகைப்படம் எடுக்க முடியாமல் திரும்பி வந்தார்.நான் நின்ற இடத்திலேயே இருந்து இருபதுக்கும் மேற்பட்ட இமாலயத்தில் காணப்படும் புறாக்களை பார்த்துவிட்டதால் வினோத்துக்கு மொக்கையாகி விட்டது. இருந்தாலும் புதிய பறவைகளை பார்த்த சந்தோஷத்தில் வினோத் புறாக்களை படம் எடுக்க ஆரம்பித்தார்.நாங்கள் மலையேற்றத்தில் அடிக்கடி நிற்கக்கூடாது என்று முடிவு செய்திருந்தோம், ஆனால் இவ்வளவு அருகில் பறவைகள் இருக்கும்போது எப்படி நின்று பார்க்காமல் வர முடியும்.

நாங்கள் பறவைகள் பார்க்க நேரம் செலவழித்ததால் வேறு எங்கும் அமராமல் நடந்துகொண்டே இருந்தோம். நாங்கள் மனிதர்கள் தங்கும் இடம் இல்லாமல் காட்டில் நடப்பதற்காகத்தான் இவ்வளவு தூரம் கிளம்பி வந்தோம். ஆனால் ஏறக்குறைய மலையேற்றம் முடியும் வரை வீடுகளும்,கடைகளும் இருந்தது எங்களுக்கு ஏமாற்றம் தான்.

Ghangaria trek,uttarakhand,valleyofflowers,food stalls,packet foods

வண்ண வண்ணமாக மலர்களையும், பறவைகளையும் பார்க்க சென்றால் இங்கேயும் வண்ண வண்ணமாக பாட்டில்களும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும் தான் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லை.

நடந்து வந்த மக்களில் பெரும்பாலோர் ஹேமகுண்ட் கோவிலுக்கு வந்ததால் பெரிய கும்பலாக வந்திருந்தார்கள்ஏறக்குறைய நடப்பவர்கள் அனைவரும் அவர்களுடைய பைகளை குதிரைகள் மேல் ஏற்றி விட்டு சுமையில்லாமல் நடந்து கொண்டிருந்தார்கள். விதவிதமான வைல்ட்கிராப்ட் (WildCraft) பைகளை குதிரைகள் தான் தூக்கிக்கொண்டு வந்தன. அதனால் குதிரைக்காரர்கள் நாங்கள் பை தூக்கி நடந்து வருவதை பார்த்தவுடனே கோடா சாஹியே?”(குதிரை வேண்டுமா) என்று ஹிந்தியில் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

Ghangaria trek,valleyof flowers trek,vof trek,bridal trail india

கங்காரியா மலையேற்றத்தில் குதிரைகளும் செல்வதற்கு ஏற்ப கல்பாதைகள் போடப்பட்டிருந்தன.

அவர்களுக்கு வேண்டாம்,வேண்டாம் என்று பதில் சொல்லி,குதிரைகளுக்கு வழிவிட்டே எங்களின் நடைவேகம் குறைந்தது.

மதிய நேரம் பாதி தூரம் வந்து சேர்ந்திருந்தோம். அருகே ஓடிக்கொண்டிருந்த ஆற்றை பார்த்துக்கொண்டு ஸ்பைசி எலுமிச்சை ஜூஸ் குடித்துவிட்டு எங்கள் நடையை தொடர்ந்தோம். கங்காரியா 10,003 அடியில் உள்ளது, கோவிந்த்காட் 5997 அடியில் உள்ளது.இதுவரைக்கும் ஏற்றமாகவும்,சமமாகவும் இருந்த பாதை இனி ஏற்றமாக மட்டுமே இருக்குமென்பதால் நாங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். அழகழகான மலர்கள் கண்ணில் பட ஆரம்பித்தன, ஆனால் இன்று கங்காரியா சென்று சேர்வதுதான் நோக்கம் என்பதால் நடப்பதில் மட்டும் கவனம் செலுத்தினோம். 1கி.மீ மைல்கல் கண்ணில் பட்டவுடன் தான் கொஞ்சம் இளைப்பாறலாம் என்று சுடசுட நூடுல்ஸ் வாங்கி உண்டோம்.

Ghangaria trek,valley of flowers trek,uttarakhand

கங்காரியா நுழைந்ததும் தெரிந்த மனதை மயக்கும் இயற்கை காட்சி. உயர்ந்த மலைகளும், மரங்களும் எங்களை மலைக்க வைத்துவிட்டது.

கடைசி 1 கி.மீ மிகவும் ஏற்றமாக இருந்தது.கங்காரியா கண்ணில் தெரிய ஆரம்பித்தவுடன் எங்கள் களைப்பெல்லாம் போய் உற்சாகம் ஆகிவிட்டோம். உயர்ந்த மலைத்தொடர்ச்சிகள்,நீர்வீழ்ச்சிகள்,வண்ணவண்ண மலர்கள் எல்லாம் கண்கள் முன் தெரிந்தபோது ஏதோ மாய உலகத்திற்கு வந்தது போல் தோன்றியது. சில இடங்களின் பிரம்மாண்டத்தை வெறும் புகைப்படத்தில் காட்ட முடியாது. அதனால் கங்காரியாவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியை வீடியோ எடுத்தோம். நீர்வீழ்ச்சியின் அழகை பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.  

 

 

நாங்கள் கங்காரியா நடுவில் உள்ள ஒரு விடுதியில் ஒரு மாதம் முன்பே முன்பதிவு செய்திருந்தோம். விதவிதமான உணவகங்களையும், சுற்றுலா பயணிகளையும் தாண்டி எங்கள் தங்கும் விடுதியை சென்றடைந்தோம். மறுநாளே பின்னால் தெரியும் மலைகளில் ஏறுவதற்கு மனதில் உற்சாகத்துடன் இருந்தோம்

உயரமான மலைப்பகுதிகளில் வானிலை மாறிக்கொண்டே இருக்குமென்பதால், மறுநாளே பூக்களின் பள்ளத்தாக்கு (Valley of flowers) சென்றுவிடலாம் என்று முடிவு செய்திருந்தோம். பூக்களின் பள்ளத்தாக்கு (Valley of flowers),ஹேம்குண்ட் சாஹிப்(Hemkund sahib) இரண்டுக்குமே முதல் 1கி.மீ ஒரே பாதை தான். 1கி.மீ முடிந்து பிரிவு வரும் இடத்தில் ஒரு காவலாளி அன்றைய மலையேற்ற பாதையின் நிலவரத்தை கூறுவார். பூக்களின் பள்ளத்தாக்கு (Valley of flowers) பாதையில் யாருமே செல்லாததால் அவரிடம் சென்று கேட்டபோது,பாறைகள் விழுந்து பாதை அடைக்கப்பட்டதால் பூக்களின் பள்ளத்தாக்கு (Valley of flowers) செல்ல முடியாது என்று கூறிவிட்டார்.

ஹேம்குண்ட் 15,200 அடியில் உள்ளது, பூக்களின் பள்ளத்தாக்கு (Valley of flowers) 12000 அடியில் உள்ளது. அதனால் ஹேம்குண்ட் செல்வது இன்னும் கடினமான மலையேற்றம். பிரம்மகமல் மலர்கள் ஹேம்குண்ட் செல்லும் பாதையில் பார்க்க முடியுமென்பதால் அங்கே செல்லலாம் என்று முடிவு செய்தோம்.

போகும் வழியில் பார் த்ரோட்டேட் ஷிவா, யுஹினா (Barthroated shiva,Yuhina)  போன்ற வண்ண வண்ண பறவைகள் பறந்து கொண்டிருந்தன.

Red bullfinch,himalayan birds,hemkund trek

சிவப்பு தலை புல் பின்ச்(Red Headed Bullfinch) ஹேம்குண்ட் செல்லும் பாதையோரத்தில் இருந்த மரத்தில் ஒரு சில விநாடிகள் அமர்ந்துவிட்டு பறப்பதற்குள் சட்டென்று ஒரு கிளிக்

நீல வண்ண பாப்பி மலர்கள் எங்கும் மலர்ந்திருந்தன. ஒரு பாப்பி திடீரென்று கண் முன்னால் காணாமல் போனது. என்னவென்று பார்த்தால் இந்தியன் பிக்கா( Indian Pika) கையில் இருக்கிறது அந்த பாப்பி. அது என்னை கண்டு பயப்படாமல் ஜாலியாக பூவை சாப்பிட்டுவிட்டு அதன் வீட்டுக்குள் ஓடி விட்டது. என்ன வாழ்க்கைடா!!

Indian Pikka,Hemkund trek,Ghangaria,Uttarakhand trek,valley of flowers trek,wildlife hemkund

இந்தியன் பிக்கா அழகாக பாப்பி மலரை சாப்பிட்டு கொண்டிருந்தது.

ஏற்றத்திலே முழுவதும் நடந்து கொண்டிருந்தாலும் சுற்றியிருந்த இயற்கை காட்சிகள்,சலசலவென்று ஓடும் நீர், வண்ண மலர்கள்,பறவைகள் எங்களை களைப்படையாமல் நடக்க வைத்தன. ஆனால் இந்த பாதையில் உள்ள பிரச்சனைகள் குதிரைகளின் சாணி, புதிதாய் குதிரையில் ஏறுபவர்கள்,குதிரை சாணியை சுத்தம் செய்பவர்கள். கோவிலுக்கு செல்லும் பாதையென்பதால் நிறைய முதியோர்கள் இந்த மலையேற்றத்திற்கு குதிரையில் வருவார்கள். மற்றவர்களும் பாதிதூரம் வந்து மிகுந்த களைப்படைந்தவுடன் குதிரையில் சென்றுவிடுவார்கள்.குதிரைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வழி பாதை முழுவதும் சாணி நிரம்பி கிடக்கும். பார்த்து பார்த்து கால் வைத்து நடக்க வேண்டும். அங்கே சுத்தம் செய்பவர்களும் பாவம் தான், இந்த மாதிரி இடங்களில் எவ்வளவு தான் சுத்தம் செய்ய முடியும். அதற்காக அவர்கள் ஒவ்வொரு திருப்பத்திலும் நின்று பெரிய பாட்டு பாடி காசு கேட்பது, நடப்பதற்கு பெரும் இடையூறாக இருந்தது. நிறைய சுற்றுலா பயணிகள் இந்த பயணத்தில் தான் முதலில் குதிரையில் ஏறியிருப்பார்கள். அதனால், குதிரை வளைவுகளில் திரும்பும்போதெல்லாம் இவர்கள் பயந்து போய் அலறுகின்ற அலறல் இருக்கிறதே! இந்த இடர்பாடுகளில் இருந்து நாங்கள் தப்பிப்பதற்கு ஏற்றாற் போல பாதி தூரத்திற்கு பிறகு நடை பாதையும் குதிரை வழி பாதையும் இரண்டாக பிரிந்தது.

Hemkund trek,Hemkund no horse trail,Paulmathi Vinod,Ghangaria Hemkund Valley of flowers

மனிதர்கள் அதிகம் செல்லாத பாதை என்றவுடன் குப்பை இல்லாமல் மலர்கள் மட்டுமே பாதையோரம் மலர்ந்திருந்தன.

நாங்கள் சந்தோஷமாக குறுகிய படிகள் உள்ள பாதையில் குதிரைகள் இடையூறு இல்லாமல் செல்ல ஆரம்பித்தோம். மலையில் நல்ல உயரத்திற்கு வந்துவிட்டதால் நாங்கள் பிரம்மகமல் தேட ஆரம்பித்தோம். ஒரு குன்றின் மேல் ஒரு பிரம்மகமலை கண்டுபிடித்தோம், ஆனால் அருகே செல்ல முடியவில்லை.கோவில் அருகே வந்தவுடனே பஜனை சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. கோவிலில் எல்லோருக்கும் இலவச சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் உணவு மணம் வந்தவுடனே எங்கள் வயிறு சத்தம் போட ஆரம்பித்துவிட்டது. சுட சுட பருப்பு சூப்பும் டீயும் கொடுத்தார்கள்.

Hemkund trek,dhal soup hemkund,hemkund temple

சூடான பருப்பு சூப் !

கோவிலில் இருந்து வெளியே வந்தவுடன் அருகே இருந்த ஒரு பாறையின் சரிவில் பிரம்மகமலும் வேறு பல மலர்களும் பூத்துக் கிடந்தன.பிரம்மகமல் மலர்கள் உயர்ந்த மலை சிகரங்களில் மட்டுமே மலரும் என்பதால் அம்மலரை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். நமக்கெல்லாம் அவை மிகவும் அரிய மலர்களாக இருந்தாலும், அங்கே வாழும் மக்களுக்கு அவை எங்கே திரும்பினாலும் மலர்ந்து கிடக்கின்ற வசந்த கால மலர்கள். அதனால் அங்கே வசந்த கால திருவிழாவிற்கு இந்த பிரம்மகமல் மலர்களை பறித்து பூஜை செய்வார்களாம்!

VInod Sadhasivan,Brahmakamal flower,hemkund brahmakamal,hemkund wildflowers,colorful flowers hemkund,valley of flowers uttarakhand

வினோத்தும் பிரம்மகமலும்!

பூக்களை நன்றாக பார்த்தபின் நாங்கள் கீழே இறங்க ஆரம்பித்துவிட்டோம். சட்டென்று பனிமூட்டம் ஆகிவிட்டது.நிறைய பேர் இப்பொழுதுதான் மேலே ஏறிக் கொண்டிருந்தார்கள். நல்ல வேளை நாங்கள் சீக்கிரமாக வந்ததால் ஹேம்குண்டை பளிச்சென்று பார்த்துவிட்டோம். கீழே பாதி தூரம் இறங்கி வந்தபின் பனி மூட்டம் விலகியிருந்தது. மறுபடியும் இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டே நடந்தோம். மலையில் இதமான தூறலில் நனைந்துகொண்டு பறவைகளை தேடிக்கொண்டே நடந்தோம்

Hemkund trek,himalaya mountains,vinod sadhasivan,ghangaria,uttarakhand trek

பல்லாயிரக்கணக்கான வருடங்கள் இருக்கும் இந்த பெரிய மலைகளிடையே நாமெல்லாம் ஒரு சிறிய புள்ளிதான் !

இரண்டு நாட்கள் தொடர்ந்து நாங்கள் மலையேறி இருந்தாலும் உயர்ந்த சிகரங்கள் ,வண்ண பறவைகள் ,வண்ண மலர்கள் அதிலும் பிரம்மகமல் அனைத்தையும் பார்த்ததால் உடம்பு சிறிது களைப்படைந்திருந்தாலும் மனம் களைப்படையவே இல்லை. மறுநாள் பூக்களின் பள்ளத்தாக்கும் சென்றுவிட வேண்டும் என்று உற்சாகத்துடன் பேசிக்கொண்டே தங்கியிருந்த விடுதி சென்றடைந்தோம்.

பூக்களின் பள்ளத்தாக்கு

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.