இலங்கை (Srilanka) – மழை மழை மழை பயணம்
எங்களுக்கு மழை மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த பயணத்தில் நாங்களே மழை கொஞ்சம் நிற்காதா என்று யோசிக்கிற அளவுக்கு மழை எங்கள் பிரயாணத்தை சொதப்பி விட்டது. எங்களுடைய முதல் வெளிநாட்டு பயணம் ஒரு தமிழ் பேசும் நாடாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். மலேசியா,இலங்கை நாடுகளை பற்றி தேடிக்கொண்டிருந்த போது, இலங்கை (Srilanka) செல்ல இந்தியர்கள் தனியாக விசா எடுக்க வேண்டியதில்லை என்பதால் இலங்கை செல்லலாம் என்று முடிவு செய்தோம். இந்த பயணத்திற்கு நான்,வினோத் மற்றும் வினோத்தின் நான்கு நண்பர்கள் தயாரானோம். சின்ஹராஜா தேசிய பூங்கா பறவை ஆர்வலர்களுக்கு இலங்கையில் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம். அதனால் நாங்கள் இருவரும் சின்ஹராஜாவிற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும், அதை தவிர மற்றவர்கள் விரும்பும் சுற்றுலாதலங்களுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். வினோத்தின் தோழர் ஒருவரின் சொந்தக்காரர் கொழும்பூவில் இருந்ததால் எங்களுக்கு ஊர் சுற்றுவதற்கு ஒரு வண்டி ஏற்பாடு செய்திருந்தார். ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் வண்டி ஓட்டுனர் வந்து கூட்டி சென்று விடுவார் என்று சொல்லியிருந்ததால் நாங்கள் ஓட்டுனருக்காக காத்திருந்தோம். ஒரு மணிநேரம் காத்திருந்தும் ஓட்டுனர் கண்ணில் படாததால் பூத்தில் போய் ஓட்டுனருக்கு போன் செய்தால் அருகிலேயே நின்று கொண்டிருந்த ஒருவர் போனில் பேசினார். ஏன் எங்களை கண்டுபிடிக்கவில்லை என்று கேட்டால், ஒரு பெண்,5 ஆண்கள் என்று சொல்லியிருந்தார்கள், ஆனால் பெண் கண்ணிலே படவில்லை அதனால் வேறு ஏதோ கூட்டமென்று நினைத்துக்கொண்டேன் என்று கூறினார். இலங்கையில் இறங்கியவுடன் இப்படி ஒரு அவமானமா எனக்கு !! அனைவருக்கும் பயணம் முழுவதும் கிண்டலடிக்க இந்த ஒரு சம்பவம் போதுமே.
கொழும்பூ பின்னவாலா யானைகள் காப்பகம் 87 கி.மீ தூரத்தில் தான் உள்ளது. சின்ஹராஜா தேசிய பூங்கா செல்கின்ற வழியில் இம்மாதிரி சுற்றுலா தலங்களை பார்த்துக்கொண்டே செல்லலாம் என்று வண்டி ஓட்டுநர் கூறினார். மழையினால் பார்க்கும் இடமெல்லாம் மிகவும் அழகாக இருந்தது. ஒரு சாலை வளைவில் மஞ்சள் பூக்கள் நிறைந்த மரங்கள் மூடுபனியில் மிகவும் அழகாக தெரிந்தன.
பின்னவாலா யானைகள் காப்பகம்
நாங்களும் சந்தோஷமாக தலையாட்டிவிட்டு உற்சாகமாக வெளியே பார்த்துக்கொண்டே வண்டியில் சென்றோம். பின்னவாலா யானைகள் காப்பகம் சென்றடைந்ததும் நுழைவு கட்டணம் செலுத்த சென்றோம். இலங்கைவாசிகளுக்கு 100 இலங்கை (Srilanka) பணமும் வெளிநாட்டவருக்கு 2500 இலங்கை (Srilanka) பணமும் என்று கூறினார்கள். இந்தியாவில் இம்மாதிரி கட்டணம் வித்தியாசம் இருக்கும்போது சந்தோஷமாக இருக்கும். ஆனால் முதன்முறையாக வெளிநாட்டவர் வகையில் நாங்கள் இருப்பதால் கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டுமென்றபோது மொக்கையாக இருந்தது. அதிலும் ஐரோப்பாவோ ரஷ்யாவோ சென்றிருந்தால் பரவாயில்லை, கன்னியாகுமரிக்கு அந்த பக்கமா இருக்கும் நாட்டுக்கு இவ்வளவு கட்டணம் அதிகம் கொடுக்கவேண்டுமா என்று புலம்பிக்கொண்டே டிக்கெட் வாங்கினோம்.
பின்னவாலா யானைகள் காப்பகத்தில் நிறைய யானைகள் இருந்தன. ஒரு யானை கூட்டம் சகதியில் விளையாடிக்கொண்டிருந்தன. அதில் ஒரு யானை கூட்டத்தை அருகே இருந்த ஆறில் குளிப்பதற்கு அழைத்து வந்திருந்தார்கள். ஆற்றில் காட்டாற்று வெள்ளம் அடித்து ஓடிக்கொண்டிருந்தது. கரை ஓரத்தில் நின்று யானைகள் சந்தோஷமாக குளித்தன. நாங்கள் ஆற்றின் ஓரத்தில் உள்ள பாறைகளில் அமர்ந்து இந்த நிகழ்வுகளை பார்த்து ரசித்தோம். காட்டாறை பார்த்தபோது மற்ற இடங்களில் கனமழை பெய்துகொண்டிருக்கிறதென்று எங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.
அடுத்ததாக கண்டி சென்றோம். போகின்ற வழியெல்லாம் பச்சைபசேலென்று நம் கேரளா மாநிலம் போல் இருந்தது. கண்டியில் உள்ள கோவிலுக்கு செல்ல மற்றவர்கள் ஆசைப்பட்டதால் டெம்பிள் ஆப் சேக்ரட் சென்றோம். கோவிலின் அருகே கண்டி ஆறு இருந்தது. எனக்கும் வினோத்துக்கும் கோவிலுக்கு செல்ல இஷ்டமில்லாததால், மற்றவர்கள் கோவிலுக்கு சென்றபோது, நாங்கள் கண்டி ஆற்றை பார்க்கலாம் என்று கிளம்பினோம். கொஞ்சம் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம்.சிங்கள மொழியையும்,இலங்கை (Srilanka) தமிழ் மொழியையும் இலங்கைவாசிகள் பேசுவதை கேட்டு ரசித்துக் கொண்டே நடந்தோம்.கண்டி ஆற்றை அடைந்ததும் ஆற்றின் அருகே இருந்த நடைபாதையில் நடந்தோம். திடீரென்று பெரிதாக ஏதோவொன்று கரையோரமாக அசைவது தெரிந்தது. என்னடா இது, ஊருக்குள் உள்ள ஆற்றில் முதலை எல்லாம் இருக்கிறதா என்று பார்த்தால் காபரகோயா என்று சிங்களத்தில் சொல்லப்படும் நீர் உடும்பு (Asian Water Monitor Lizard) கரையோரம் படுத்துக் கிடந்தது.
ஆறு அடி இருக்கும் இந்த பெரிய உடும்பு அமைதியாக படுத்துக் கிடந்தது. அங்கே நடந்து கொண்டிருந்த மற்ற நபர்களும் அதை கண்டுகொள்ளவில்லை. ஒன்று இந்த காபரகோயா எப்பொழுதும் அங்கேயே படுத்து எல்லோருக்கும் பழகிவிட்டது இல்லையென்றால் யாரும் இந்த காபரகோயா அங்கே படுத்திருப்பதை கண்டுபிடிக்கவில்லை. நாங்கள் காபரகோயாவை இதுதான் முதல்முறை பார்க்கிறோம், அதுவும் இவ்வளவு அருகில். நாங்கள் குஷியாக காபரகோயாவை பார்த்துவிட்டு வண்டிக்கு சென்றபோது மற்றவர்கள் எல்லோரும் ஏற்கனவே வந்திருந்தார்கள். என்ன அதற்குள் கோவிலுக்கு சென்று வந்துவிட்டீர்களா என்று கேட்டால், கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு திரும்பிவிட்டதாக கூறினார்கள். நல்லவேளை நாங்கள் கோவிலுக்கு செல்லவில்லை, இல்லையென்றால் காபரகோயாவை பார்த்திருக்க முடியாது.
யானைகளையும், உடும்பையும் பார்த்து ரசித்ததோடு வண்டி ஏறியது தான், அதன் பிறகு வண்டியில் எவ்வளவு நேரம் இருந்தோம்,எங்கே சென்று கொண்டிருந்தோம் என்று யாருக்கும் தெரியாது.
மாலை ஆறு மணிக்கு மேல் கொட்டிக்கொண்டிருந்த மழையில் ஓட்டுனருக்கு பாதை சுத்தமாக தெரியவில்லை.சாலையோரத்தில் இருந்த ஏதோவொரு விடுதியில் ஓட்டுனர் சென்று பேசி எங்களை தங்க வைத்தார். மறுநாள் காலையில் ஓட்டுனரிடம் பேசியவுடன் தான் தெரிந்தது, அவருக்கு சின்ஹராஜா தேசிய பூங்கா எங்கே இருக்கிறது என்று ஒழுங்காக தெரியாது, வழி கேட்டு சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறார். அந்த பூங்கா இருக்கும் திசையில் செல்லும் வரையில் பிரச்சனை கிடையாது,வழியில் கேட்டுக்கொள்ளலாம் என்று கிளம்பினோம். மறுபடியும் செல்லும் வழியெல்லாம் மழை. மழை கொஞ்சம் குறையும்போது எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தில் கொஞ்ச நேரம் இறங்கி நின்று இடங்களை பார்த்துவிட்டு கிளம்பினோம். ஒரு நீண்ட சுரங்கப்பாதை வந்தது. அதன் அருகே வண்டியை நிறுத்தி அனைவரும் டீ அருந்த சென்றபோது, நானும் வினோத்தும் சுரங்கபாதையில் நடந்து வருகிறோமென்று நடக்க ஆரம்பித்தோம்.
சுரங்கபாதை முடிந்தபின் நிறைய தோட்ட மலர்கள் சாலையோரம் பூத்துக்கிடந்தன. மழை நீரை தாங்கி கொண்டிருந்த மலர்கள் அனைத்தும் அந்த மேக மூட்டத்தின் நடுவில் மிகவும் அழகாக தெரிந்தன. தோட்டத்து பூக்கள் நடுவே திடீரென்று பாறை மேல் ஒரு பாம்பூ ஆர்க்கிட் பார்த்தது வியப்பாக இருந்தது.
மறுபடியும் வண்டியில் வெகு தூரம் சென்றோமா என்று தெரியவில்லை ஆனால் வெகு நேரம் சென்றோம். சாலையோரத்தில் நிறைய அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தன. வெயில் காலமென்றால் அருவியில் குளிக்க ஆசை இருக்கும்,ஆனால் அருவியில் தண்ணீர் விழாது. மழை காலத்தில் மழையிலேயே நாள் முழுவதும் நாங்கள் நனைந்திருந்தோம், இதில் தனியாக அருவியில் எதற்கு குளிக்க போகிறோம். அதனால் எங்கேயும் வண்டியை நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று சாலையோரத்தில் ஒரு அழகான சிறிய உணவு விடுதி கண்ணில் பட்டது. கொஞ்சமாவது வண்டியை விட்டு வெளியே வரலாம் என்று அந்த உணவு விடுதியில் இறங்கி மதிய உணவு உண்டோம்.
ஆனால் நாங்கள் செல்ல வேண்டிய சின்ஹராஜா தேசிய பூங்காவிற்கு இன்னும் சென்றடைய முடியவில்லை. உணவு விடுதியின் சொந்தக்காரர் நீங்கள் இந்த மழையில் சின்ஹராஜா சென்றடைவது மிகவும் கடினம் என்று கூறினார். நாங்களும் என்ன செய்வது என்று தெரியாமல் மறுபடியும் வண்டியில் செல்ல ஆரம்பித்தோம். சின்ஹராஜா அருகில் சென்றதும், ஊரில் உள்ளவர்களிடம் வழி கேட்டு ஒரு மண் பாதையில் செல்ல ஆரம்பித்தோம். வழியில் ஒரு பாதிரியாரை பார்த்தோம், அவர் நீங்கள் சின்ஹராஜாவின் மற்றொரு திசைக்கு வந்துவிட்டீர்கள், இங்கே இருந்து நீங்கள் நுழைவுவாயிலுக்கு இரவுக்குள் சென்று சேர முடியாது என்று கூறினார். நாங்கள் என்ன செய்வது என்று முழித்துகொண்டிருந்ததை பார்த்து, அவரே இந்த வழியில் எங்கள் சர்ச் இருக்கிறது. இன்று இரவு அங்கே வேண்டுமென்றால் தங்கி கொள்ளுங்கள் என்று கூறினார். எங்களுக்கும் அதற்கு மேல் அலைய தெம்பும் இல்லை, இந்த ஓட்டுனரை நம்பி செல்வதற்கு தைரியமும் இல்லை. சர்ச் சென்று கன்னியாஸ்திரிகள் குடுத்த உணவை உண்டு இரவை அங்கே கழித்தோம்.
காலையில் வானம் தெளிவாக இருந்ததால் உடனே சின்ஹராஜா பூங்காவிற்கு கிளம்பலாம் என்று நானும் வினோத்தும் குதித்துக்கொண்டு கிளம்பினோம். ஆனால் அதற்குள் மற்றவர்களுக்கு சின்ஹராஜா பூங்கா செல்வதற்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. நாங்கள் சின்ஹராஜா பூங்காவை பார்க்கத்தான் இலங்கையே வந்தோம்,ஆனால் சூழ்நிலை சரியில்லாமல் போய்விட்டது. எங்களை சுற்றி மரங்கள் இருக்கும்வரையில் நாங்கள் ஏதாவது பறவை,பூ பார்த்துவிடுவோம். நாங்கள் தங்கியிருந்த சர்ச் ஒரு தேயிலை தோட்டத்தின் நடுவில் இருந்தது. இங்கேயே கொஞ்சமாவது பறவைகளை தேடலாம் என்று தேயிலை தோட்டத்தின் நடுவே நடக்க ஆரம்பித்தோம். சாலையின் ஓரத்தில் வாக்கிங் ஐரிஸ் மலர்கள் அழகாக பூத்துக்கிடந்தன. பவுடர் பஃப்(Spiked Powderpuff) மலர்கள் மழையில் சிதைந்து போயிருந்தன, ஆனால் அதிலும் ஒரு மலர் மட்டும் புது மலர்ச்சியுடன் இருந்தது.
மறுபடியும் வண்டியில் பிரயாணம் ஆரம்பித்தது. எனக்கு வேறு ஜன்னலில்லாத கடைசி சீட் கொடுத்துவிட்டார்கள். எங்கே போகிறோமென்று தெரியாமல் இருந்ததால் நான் அப்படியே தூங்கிவிட்டேன். நெடுநேரம் கழித்து வண்டி நின்றதும் இறங்கி பார்த்தால் காலேயில் உள்ள கடற்கரை வந்துவிட்டோம். தீவுக்கு வந்துவிட்டு கடல் பார்க்காமல் செல்வதா! தோழர்கள் எல்லோரும் புத்தர் சிலை வாங்க வேண்டும் என்று சென்றார்கள். நானும் வினோத்தும் மழை தூறலில் கடற்கரையோரம் நடந்தோம்.
சில இடங்களில் கடல் உயிரினங்களை சமைத்து வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். மழையினால் கடல் நீர் கொஞ்சம் கலங்கியிருந்தது போல் தெரிந்ததை தவிர கடற்கரை சுத்தமாக இருந்தது. டிசம்பர்,ஜனவரி மாதங்களில் வந்திருந்தால் பச்சை கடல் ஆமைகள் முட்டை போடுவதை பார்க்கும் வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும். மழை குறைவாக பெய்யும் மாதத்தில் கண்டிப்பாக மறுபடியும் இலங்கை வரவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு கிளம்பினோம்.
இந்த பயணத்தில் நாங்கள் எந்த வனஉயிரினங்களையும் பார்க்கவில்லை. ஆனால் இன்றும் இலங்கை பிரயாணத்தை பற்றி யோசித்தாலே சிரிப்பாக இருக்கும்.
திட்டத்தின்படி அனைத்தும் நடந்த பயணங்களை கூட மறந்துவிடலாம், ஆனால் சொதப்பலான பயணங்கள் என்றும் நினைவில் இருக்கும்.
இந்த பயணத்தில் சீசன் பார்க்காமல் சென்றால் எப்படி மாட்டிக்கொள்வோம் என்று புரிந்துகொண்டோம். சின்ஹராஜா தேசிய பூங்கா செல்வதற்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால் கண்டிப்பாக மறுபடியும் இலங்கை சென்று அங்கே உள்ள வனஉயிரினங்களை பார்ப்போம் என்று நம்பிக்கை இருக்கிறது.