கரிமலை மலையேற்றம்


Karimala peak,Parambikulam Tiger Sanctuary,Trekking

4720 அடியில் உள்ள கரிமலை கோபுரம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பெரிய சிகரம். இந்த கரிமலை பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் உள்ளது.

வினோத்துக்கும் எனக்கும் காடுகள்,வனவிலங்குகள் பிடிக்குமென்பதால் திருமணமானதிலிருந்து பல முறை சென்ற இடம் பரம்பிக்குளம் புலிகள் காப்பகம். தீவு வீடு ,மரவீடு,டென்ட் என்று வித விதமான தங்கும் இடங்கள் காட்டில் வேறு வேறு இடங்களில் உள்ளன. நாங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்தில் தங்கி அந்த இடத்தின் அருகே உள்ள இயற்கை காட்சிகளை பார்த்துவிட்டு வருவோம். அப்படி ஒரு தடவை சென்றிருந்தபோது அங்கே எதிரே தெரிந்த மலையை பற்றி கூட வந்திருந்த வன பாதுகாவலர் கூறிக்கொண்டிருந்தார். அந்த மலையின் பெயர் கரிமலை என்றும், மேகம் சூழ்ந்திருக்கும் அந்த மலையின் உச்சியிலிருந்து பார்க்கும் வியூகம் மிகவும் அழகாக இருக்குமென்றார். நாங்கள் எந்த மாசம் அங்கே செல்லலாம் என்று விசாரித்துக்கொண்டு அடுத்த முறை வரும்போது இந்த மலை ஏறுகிறோம் என்று முடிவு செய்துவிட்டு கிளம்பினோம்.

Parambikulam tiger sanctuary,water reservoir,karimala peak

391 கி.மீ 2 பரப்பளவில் உள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பகம்.பரம்பிக்குளம்,துணக்கடாவு,பெருவாரிபள்ளம் என மனிதர்களால் உருவாக்கப்பட்ட மூன்று நீர்தேக்கங்கள் இந்த பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் உள்ளன.

அட்டைகள் அதிகமாக இருக்குமென்பதாலும், மண் சரிவு காரணமாகவும் மழைக்காலத்தில் கரிமலை மலையேற்றம் செல்ல அனுமதி கிடையாது. அதனால் நாங்கள் வெயில் காலத்தில் கரிமலை மலையேற்றம் செல்ல பரம்பிக்குளம் சென்றோம். இந்த பயணத்தில் எங்களுடன் வினோத்தின் சகோதரர் செந்திலும் வந்திருந்தார். முதல் நாள் டென்டில் தங்கினோம். வன ஊர்தியில் இரவு விலங்குகள் பார்க்க சென்றோம். யானைகள் கூட்டத்தை கண்டோம். திரும்பி டென்டில் வந்து நன்றாக உணவு கொண்டிருந்தபோது அங்கே ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒருவர் பேச திணறி கொண்டிருந்தார். நாங்கள் அவர்களுக்கு மொழி பெயர்த்து கொடுத்தபின் அந்த பெண்மணியுடன் பேசியபோது , அவர் பெயர் ஈவ்,கனடாவிலிருந்து வந்திருக்கிறாரென்று தெரிந்தது. கனடாவிலிருந்து வேலையை விட்டுவிட்டு இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருந்த அவர்களின் சுற்றுலா அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். கேரளாவை சுற்றிப்பார்த்தபின் திருவண்ணாமலை வருவதற்கு திட்டம் இருந்ததால் நாங்கள் எங்கள் சென்னை வீட்டிற்கு வரும்படி கேட்டுக் கொண்டோம். இந்த பயணத்தில் எனக்கு இப்படி ஒரு புதிய தோழி கிடைப்பாள் என்று நான் நினைக்கவில்லை. அவள் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயான பின்பும் எங்கள் நட்பு இன்றும் தொடர்கிறது. மறுநாள் காலை மலையேற்றத்திற்கு தேவையான முன்திட்டங்களை செய்துவிட்டு டென்டில் உறங்க சென்றோம்.

Parambikulam tiger sanctuary,tent stay,karimala trek

செந்தில்,ஈவ்,நான்,வினோத் டென்டில் தங்கியிருப்போருக்கான உணவு அறையில் அமர்ந்திருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம். நல்லவேளை மலையேறுவதற்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மலையேறிய பின் எங்கள் முகத்தை பார்த்திருக்கவேண்டும் 😛

கரிமலை மலையேற்றத்திற்கு செல்லும் நுழைவு இடத்திற்கு அருகில் வரை வனபாதுகாவலர்களுடன் வண்டியில் சென்றோம். செல்லும் வழியில் முந்திய நாள் பார்த்த அதே யானைகள் கூட்டத்தை பார்த்தோம். குடும்பமாக சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்த யானைகளை கொஞ்ச நேரம் ரசித்தோம்.எனக்கும் வினோத்துக்கும் யானைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.காலையிலேயே யானைகள் சந்தோஷமாக இருப்பதை பார்த்ததும் எங்களுக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. தும்பிக்கையால் மண்ணை வாரி போட்டுகொண்டு யானைகள் சாலையை கடந்து சென்ற பின் நாங்கள் வண்டியை ஓட்டி சென்றோம்.

Elephant group,parambikulam wildlife sanctuary

எல்லா வயதிலும் இருக்கும் யானைகள் குடும்பம். அந்த யானை குட்டி மண்ணை வாரி தலையில் போட்டு கொண்டிருந்தது. மனித குழந்தையாயிருந்தால் அந்த நேரம் பெற்றோரிடம் இருந்து ஒரு அடி கிடைத்திருக்கும். ஆனால் சூரிய கதிர்கள்,பூச்சி கடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள யானைகளுக்கு மண் குளியல் மிகவும் முக்கியம்.

எங்களுடன் இரண்டு வனபாதுகாவலர்கள் மற்றும் வனபாதுகாவலரின் தோழர் ஒருவரும் வந்தார்கள். போகும் வழியில் முன்தினமே சாப்பாடு ஏற்பாடு செய்திருந்ததால் அங்கே சென்று அதை வாங்கிக்கொண்டு மலையேற்றத்தின் தொடக்க புள்ளிக்கு சென்று சேர்ந்தோம்.

கடினமான ஏற்றம் உள்ள மலையேற்றம் என்பதால் வனக்காவலர்கள் முதலிலிருந்தே வேகமாக செல்ல ஊக்குவித்தார்கள். முதலில் உற்சாகமாக,வேகமாக நடந்த நாங்கள் ஏற்றம் செல்ல செல்ல சோர்வடைந்தோம். கொஞ்சம் உயரம் வந்தவுடன் சில இடங்களில் இயற்கை காட்சி மிகவும் அழகாக இருந்தது. நாங்கள் இந்த மலையேற்றத்திற்கு முன் வெகு சில எளிதான மலையேற்றங்களே செய்திருக்கிறோம். இந்த மலையேற்றத்தின் போது நானும் வினோத்தின் சகோதரர் செந்திலும் நல்ல உடல்நிலையில் இல்லை. இரண்டு பேருக்கும் இழுப்பு வருவதால் ஏற்றத்தில் ஏறுவது மிகுந்த சிரமமாக இருந்தது.

Karimala trek,parambikulam tiger reserve, trail path,tall green trees

கரிமலை உச்சிக்கு செல்லும் பாதை அடர்ந்த மரங்கள் செடிகளுடன் அழகாக இருந்தது.பாதையிலிருந்து கொஞ்சம் விலகிவிட்டால் கூட வழி கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.

ஒரு கட்டத்தில் மிகவும் களைப்பாகி அப்படியே உட்கார்ந்துவிட்டோம். வினோத் எங்கள் இரண்டு பேரின் நிலைமையை பார்த்துவிட்டு பேசாமல் திரும்பிவிடலாம் என்று கூறினார்.

நான் மலையின் உச்சியில் மேகத்தின் நடுவே இருப்பதை பற்றி நிறைய கற்பனை செய்துகொண்டு வந்திருந்தேன். இவ்வளவு தூரம் வந்துவிட்டு மலை உச்சி செல்லாமல் திரும்பினால் மிகவும் வருத்தமாக இருக்கும். மனதில் உறுதிகொண்டால் கண்டிப்பாக நடந்துவிடலாம் என்று முடிவு செய்து நான் வனபாதுகாவலர்களுடன் முன்னே நடக்க ஆரம்பித்தேன். அந்த உத்வேகமும் இயற்கையின் மேல் இருந்த ஆர்வமும் தான் என்னை பிற்காலத்தில் நிறைய மலையேற்றம் செய்ய வைத்தது. வினோத் செந்திலுக்கு துணையாக பின்னால் நடந்து வந்தார். வெயில் ஏற ஆரம்பித்து அனைவரும் தாகத்தில் இருந்தோம். நாங்கள் கொண்டுவந்த தண்ணீர் பாதியாகியிருந்தது. போகின்ற வழியில் ஒரு இடத்தில் தண்ணீர் நிரப்பிக்கொள்ளலாம் என்று வனபாதுகாவலர் கூறியபோது நானும் செல்லும் வழியில் ஒரு அழகான குளம் இருக்கப்போகிறது என்று கற்பனை செய்துகொண்டேன்.

Parambikulam Tiger Reserve, Karimala Trekking, natural water,forest walk

அக்வாபினா நீர் தான் சுத்தமான நீர் என்று நம்பி வளரும் இந்த கால மக்களுக்கு , காட்டில் இந்த மாதிரி இடத்தில் உருவாகி வரும் ஊற்றிலிந்து தான் சுத்தமான நீர் வருகிறது என்று தெரியுமா?

கொஞ்ச தூரம் மேலே சென்றபின் ஒரு வனப்பாதுகாவலர் தண்ணீர் எடுத்து வருகிறேன் என்று சென்றபோது எங்கே தண்ணீர் எடுக்கிறார்கள் என்று பார்த்தால் மலையிலிருந்து சொட்டுசொட்டாக நீர் வழிந்து கொண்டிருந்த இடத்திலிருந்து தண்ணீர் நிரப்பினார்கள். கண்ணில் பார்ப்பதற்கு நீர் சிறிது கலங்கியதாக தெரிந்தாலும் மிகவும் சுத்தமான சுவையான நீர். நீர் எடுக்கும்போது நாங்கள் கொஞ்ச நேரம் அங்கே இருந்த திறந்தவெளியில் செடிகளை பார்த்துக்கொண்டிருந்தோம். நிறைய பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. நீல டைகர் பட்டாம்பூச்சிகள் ப்ளம்பகோ,கோட் வீட் போன்ற செடிகளை மொய்த்துக்கொண்டிருந்தன.

Tirumala limniace,Blue Tiger,karimala trek,parambikulam tiger reserve,goat weed,Epimedium

நீல டைகர் பட்டாம்பூச்சி கோட் வீட் மலர்களில் உட்கார்ந்து தேன் குடித்து கொண்டிருந்தது.

உயர்ந்த மரங்களிலிருந்து பறவைகளின் கானம் கேட்டது. சீகார்ப் பூங்குருவி(Malabar Whistling Thrush) மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தது.சுத்தமான நீரும் பருகியதால் களைப்பெல்லாம் கொஞ்சம் நீங்கி  புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து ஏற ஆரம்பித்தோம். வனபாதுகாவலர்கள் நன்றாக ஊக்குவித்து எங்களை கூட்டி சென்றார்கள். வனபாதுகாவலர்கள் அங்கே உள்ள பழங்குடியினர் என்பதால் அவர்களுக்கு காடு,விலங்குகள் மேல் பயம் இல்லாமல் ஒரு புரிதல் இருந்தது.

Flame throated bulbul,karimala trek,parambikulam tiger reserve, Pycnonotus gularis,western ghats

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே பார்க்கக்கூடிய சிவப்பு தொண்டை சின்னான் மரத்தில் அமர்ந்து கானம் பாடி கொண்டிருந்தது.

மலை உச்சி கொஞ்சம் கண்ணுக்கு தெரிந்தவுடன் எப்படியும் மேலே நடந்து விடலாம் என்று உற்சாகம் வந்துவிட்டது. கொஞ்சம் வெயில் அதிகமான காலம் என்பதால் மலை உச்சியில் மேகம் சூழ்ந்திருக்கவில்லை. ஆனால் மேலே சென்று சேர்ந்ததும் தெரிந்த இயற்கை காட்சி மற்ற விஷயங்களை மறக்கடித்தது. நான் இளைப்பாறி நடந்தால் களைப்பு அதிகமாகும் என்பதால் வனபாதுகாவலர்களுடன் வேகமாக நடந்து முதலில் சென்று சேர்ந்துவிட்டேன்.  நாங்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை நீங்கள் மலை உச்சி வரை வந்து சேர்வீர்கள் என்று மலைஉச்சியை சென்று சேர்ந்ததும் வனபாதுகாவலர்கள் சொன்னார்கள். இவ்வளவு மூச்சு திணறலிலும் விடாமுயற்சியுடன் நடந்து விட்டீர்கள், போன தடவை 4 திடகாத்திரமான இளைஞர்களே பாதி தூரம் வரை வந்து நடக்க முடியவில்லை என்று திரும்பிவிட்டார்கள் என்று கூறியவுடன் அவ்வளவு தான் எனக்கு பெருமை தாங்கவில்லை.

Karimala trek,parambikuam tiger reserve, dam water,reservoir,parambikulam reservoir,parambikulam dam

கரிமலை உச்சியிலிருந்து தெரியும் இயற்கை காட்சி.

வினோத்தும் செந்திலும் சிறிது நேரம் கழித்து வந்து சேர்ந்தார்கள். மேலே இருந்து பார்க்கும் போது மலைகள் சூழ நடுவில் இருக்கும் பரம்பிக்குளம் அணை முழுவதும் தெரிந்தது. இவ்வளவு பெரிய காடு என்பதால் புலிகள்,கரடிகள்,யானைகள்,காட்டுமாடுகள் மனிதர்களின் தொந்தரவு அதிகமாக இல்லாமல் வாழலாம். ஏதாவது விலங்குகள் ஒருவேளை துரத்தினால் வேகமாக கீழே ஓடிவிடுங்கள் என்று வனகாவலர்கள் கூறியிருந்தனர். நாங்கள் அப்பொழுது இருந்த நிலைமைக்கு ஏதாவது மிருகங்கள் வந்திருந்தால் பேசாமல் கடிச்சுக்கோ என்று கூறுகிற அளவுக்கு நாங்கள் தளர்ச்சியடைந்து அமர்ந்திருந்தோம்.

Parambikulam tiger reserve,karimala trek,tomato rice,senthilkumar sadhasivan

சோறு சாமி சோறு !

கொஞ்சம் களைப்பு நீங்கியதும் கொண்டு வந்த சாப்பாடை பிரித்தோம். நம் ஊரில் சாப்பாடு மட்டும் குறைவாக கொடுக்கவே மாட்டார்கள். கேரளா என்பதால் குண்டு சாதத்தில் தக்காளி சாதம் செய்து கொடுத்திருந்தார்கள். காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாததால் உணவை பார்த்தவுடன்தான் எவ்வளவு பசியில் இருக்கிறோம் என்று தெரிந்தது. உணவு நிஜமாக சுவையாக இருந்ததா என்று தெரியாது ஆனால் எங்களுக்கு தேவாமிர்தமாக இருந்தது. வனபாதுகாவலர்கள் எங்களிடம் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள் அருகே சென்று வருகிறோம் என்று கூறி சென்றார்கள்.எந்த இடம் கிடைத்தாலும் உடனே படுத்து தூங்கும் பாக்கியம் உள்ள செந்தில் அப்படியே பாறையில் படுத்து தூங்கிவிட்டார். நானும் வினோத்தும் அருகே இருந்த செடிகொடிகளை பார்த்துக்கொண்டிருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து வந்த வனஅதிகாரிகள் அருகே உள்ள மலையை காட்டி அங்கே தான் சென்று வந்தோம் என்று கூறினார்கள். அடப்பாவிகளா, ஒரு மலை ஏறியதையே பெரிய சாதனை என்று பெருமைபட்டுக்கொண்டிருக்கும்போது இவ்வளவு எளிதாக அடுத்த மலை ஏறி வந்துவிட்டார்களே என்று எண்ணினேன். ஆனால் மலை,காடுகளில் சுத்தமான காற்று,தண்ணீருடன் வளர்ந்த பழங்குடியினரிடம் நாம் ஒப்பிட்டு கூட பார்க்கக் கூடாது.

Parambikulam tiger reserve,karimala trek,elephant face rock,hobbits rock giant

யானை முகம் போல் இருப்பதால் இந்த மலையை யானை மலை என்று பழங்குடியினர் கூறுவார்களாம். ஹாபிட்ஸ் படத்தில் மலைகள் எல்லாம் கல் ராட்சதர்கள் என்பது போல இந்த மலையும் திடீரென்று எந்திரித்தால் எப்படி இருக்கும்!

கீழே இறங்குவது கொஞ்சம் எளிதாக இருக்கும் என்று நினைத்தால்,மிகவும் சரிவாக பாதை இருந்ததால் பார்த்து கால் வைத்து நடக்க வேண்டியதாக இருந்தது. கொஞ்சம் வேகமாக நடக்கலாம் என்று நினைத்தால் கூட அந்த அளவு பழக்கம் இல்லாததால் வழுக்கி விழுந்து கொண்டிருந்தோம். மழைக்காலத்தில் தான் அட்டை நிறைய இருக்குமென்று கூறியிருந்தார்கள். உயர்ந்த மரங்கள் இருந்த இடத்தில் அந்த அளவு வெயில் படாததால் அங்கே எல்லாம் அட்டைகள் நிறைய இருந்தன. மழைகாலத்தில் இந்த பாதையில் நடக்கவே முடியாது என்று மட்டும் தெரிந்தது. கீழே இறங்குவதற்குள் எல்லாருடைய கால்களிலும் அட்டைகள் கடித்து ரத்தமாக இருந்தது. ஏகதேசம் மலை அடிவாரத்தை சென்று சேரும்போது முன்னே சென்ற வனபாதுகாவலர் அமைதியாக நிற்க சைகை காட்டினார். மரங்களினூடே காட்டுமாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் கழித்து காட்டுமாடுகள் கொஞ்சம் நகர்ந்தவுடன் சத்தம் போடாமல் அனைவரும் பொறுமையாக கீழே இறங்கி சென்றோம்.

Parambikulam tiger reserve,parambikulam tent stay,karimala trek

பரம்பிகுளத்தில் தங்கிய குடில் காட்டுக்குள் அழகாக அமைந்திருந்தது

டென்ட் வந்து சேர்ந்து அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற பின் எங்கள் மலையேற்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டோம். டென்ட்டில் தங்கினால் அங்கேயே சாப்பாடும் வழங்குவார்கள். சுவையான அந்த உணவை உண்டு,படுக்கையில் சென்று படுத்தவுடன் அனைவரும் உறங்கி விட்டோம்.

இந்த மலையேற்றம் என் வாழ்க்கையில் ஒரு பெரிய மைல்கல். இந்த மலையேற்றம் தான் எனக்கு தன்னம்பிக்கை குடுத்தது. இந்த கரிமலையை ஏறிவிட்டோம், அடுத்து என்ன மலை தென்னிந்தியாவில் ஏறலாம் என்று தேடி நிறைய மலைகள் ஏற ஆரம்பித்தோம். அதில் ஆரம்பித்த மலையேற்றம் தான் பிற்காலத்தில் என்னை தேலா, ஹேமகுண்ட் போன்ற கடினமான இமாலய மலைகளையும் ஏறுவதற்கு தன்னம்பிக்கை கொடுத்தது. நிறைய மலைகள் ஏறிய பின் மறுபடியும் ஒருமுறை கரிமலை ஏற வேண்டும், இப்பொழுது கொஞ்சம் எளிதாக ஏறிவிடுவோமா என்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் கரிமலை மலையேற்றத்தை மொத்தமாக வனத்துறை நிறுத்திவிட்டது. அதனால் இந்த கரிமலை மலையேற்ற அனுபவம் இன்னும் சிறப்புமிக்கதாகிவிட்டது.


Related Post

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.