ஏலகிரி குன்று (Yelagiri Hills)
ஏலகிரி (Yelagiri) 3643 அடியில் இருப்பதால் சென்னையை விட வெப்ப நிலை கொஞ்சம் குறைவாக இருக்கும். சென்னையில் இருந்து 4 மணி நேரத்தில் சென்று விடலாம் என்பதால் எங்களுக்கு சென்னையின் வெப்பம் தாங்க முடியவில்லையென்றாலோ நீலமுக செண்பகம்,கருஞ்சிவப்புச் சிலம்பன் போன்ற பறவைகளை பார்க்கலாம் என்று தோன்றினாலோ உடனே நாங்கள் ஏலகிரி (Yelagiri) கிளம்பிவிடுவோம். எப்பொழுதுமே எங்கள் பயணம் எல்லாம் சட்டென்று முடிவு செய்து கிளம்புவதாகத்தான் இருக்கும். ஆனால் இந்த பயணம் ரொம்பவே சட்டென்று கிளம்பினோம். எங்கள் தோழி சாந்தி அவர்களின் விடுமுறை வீடு ஏலகிரியில் (Yelagiri) உள்ளது. நான் காலையில் சமைத்துக்கொண்டிருக்கும்போது போன் செய்தார்கள். அவர்கள் ஏலகிரியில்(Yelagiri) மலையையும் மழையையும் ரசித்துக்கொண்டு இருக்கிறேன் என்னுடன் சேர்ந்து ரசிக்க நீங்கள் வருகிறீர்களா என்று கேட்டார்கள். ஏற்கனவே அம்மா வேறு நாகர்கோயிலில் ஒரே மழை என்று என்னை வெறுப்பேத்திக்கொண்டிருந்தார்கள். என்னடா இது நம்ம வியர்வையில் நனைந்து என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றியவுடன் அவ்வளவு தான், சமைத்து வைத்திருந்த சாம்பார், பீட்ரூட்,கீரை பொரியல்களை டப்பாவில் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டோம்.ஏலகிரியின் (Yelagiri) வளைவு நெளிவு சாலைகளுக்குள் நுழைந்தவுடனே வெப்பநிலை மிதமாகிவிட்டது.
கொண்டை ஊசி வளைவுகளில் கார் பயணம்
ஆம்பூர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு மலைப்பாதை செல்லலாம் , புல்லெட் ஓட்டிக்கொண்டு மலைப்பாதை செல்லலாம் என்று வருபவர்கள் என்று நிறைய சுற்றுலா பயணிகளை விடுமுறை நாட்களில் பார்க்கலாம். நாங்கள் வாரநாளில் சென்றதால் சாலை அமைதியாக இருந்தது. சிறிய மலை என்பதால் 14 கொண்டை ஊசி வளைவுகள் மட்டுமே உண்டு. ஒவ்வொரு கொண்டை ஊசிக்கும் ஒரு கவிஞர் பேர் வைத்திருப்பது மிகவும் சிறப்பு. தமிழ் பெருமை அறிந்தவர்களுக்கு பாரி,காரி,ஓரி,கம்பன் என்று 14 கவிஞர் பெயர்களை கொண்டை ஊசி வளைவுகளில் பார்க்கும்போதே மனம் குளிர்ந்து விடும். சுற்றுலா பயணிகளிடம் உணவு வாங்கி பழகிக்கொண்ட குரங்குகளையும் இந்த வளைவுகளில் பார்க்கலாம்.
மழை இதமாக தூறிக்கொண்டிருந்தது. யூக்கலிப்டஸ் மரங்கள் அடர்ந்த இடத்தை தாண்டி காரில் செல்லும்போது அப்படி ஒரு நறுமணம். இந்த காலத்தில் நகர்களில் புகைக்கு பயந்து நாம் எப்பொழுதுமே கார் கண்ணாடியை மூடிக்கொண்டே சென்று பழகிவிட்டோம். ஆனால் கொஞ்சம் மரங்களுள்ள இடங்களுக்கு சென்றுவிட்டால் கூட போதும், காற்று சுத்தமானதாகிவிடும். அப்பொழுது வண்டியில் ஏ.சியை அணைத்துவிட்டு, கண்ணாடியை இறக்கி கொண்டு வண்டியை மெதுவாக ஓட்டி செல்லுங்கள்.பறவைகளின் சத்தங்களும், இந்த மாதிரி மரங்கள்,பூக்களின் நறுமணங்களும், இதமான தென்றலும் மனதில் எவ்வளவு பாரம் இருந்தாலும் அப்படியே அனைத்தையும் மறக்க வைத்து ஒரு அமைதியான நிலைக்கு மனதை எடுத்து சென்றுவிடும்.சாந்தியின் வீடு சென்றடைந்து, அவர்களிடம் உரையாடிக்கொண்டே அங்கே உள்ள தோட்டத்து மலர்களை எல்லாம் பார்த்து ரசித்த பின் வீட்டின் பின்னால் உள்ள குன்றுக்கு சென்றோம்.
போன தடவை வந்திருந்தபோது நட்மெக் மரமொன்றில் ஒரு ஆர்க்கிட் செடி பார்த்து வைத்திருந்தோம். இந்த தடவையாவது பூத்திருக்கிறதா என்று பார்த்தோம், இப்பொழுதும் பூக்கவில்லை. குன்று செல்வதற்கு உள்ள ஒற்றையடி பாதையின் இருபக்கமும் லண்டனா மலர்கள் அடர்ந்து பூத்திருந்தன. எனக்கு மலர்கள் என்றால் மிகவும் பிரியம் என்பதால் வினோத்தும் சாந்தியும் சுற்றி இவ்வளவு லண்டனா மலர்கள் பூத்திருக்கிறதே, ஏன் அதை நீ கண்டுகொள்ளவில்லை என்று என்னை கிண்டல் அடித்துக்கொண்டு வந்தார்கள். திரைப்படம் நிறைய பார்ப்பவர்கள் திரைப்பட வரிகளை வைத்தே நகைச்சுவை பேசுவார்கள், திரைப்படம் பார்க்காதவர்களுக்கு அந்த நகைச்சுவையின் முழுஅர்த்தம் புரியாது. அது மாதிரி எங்களை போல காடு மேடு சுற்றுபவர்களுக்கு தான் லண்டனாவை வைத்து நகைச்சுவையாக ஏதாவது சொன்னால் புரியும். சுற்றுலா பயணிகள் குறிஞ்சி பூ அருகே நின்று படம் பிடிப்பது போல லண்டனா அருகிலும் நின்று படம்பிடித்து சென்று விடுவார்கள்.
லண்டனா ஒரு ஊடுருவி களை என்பதால் வேறு எந்த செடியையும் வளர விடாது. அடர்ந்த புதராக வளரும் இந்த செடியை நீக்குவது ஒரு பெரிய போராட்டம். இந்த போரில் ஏலகிரியை வென்று விட்டது லண்டனா செடிகள். சுவாமிமலை தொடங்கி ஏலகிரியில் இருக்கும் அனைத்து காட்டுபகுதிகளிலும் லண்டனா மட்டுமே மலர்ந்திருக்கும். வேறு எந்த மலரையும் பார்க்கமுடியாததால் நான் பறவைகளை மட்டுமே தேடிக்கொண்டிருந்தேன். தேன்சிட்டு,தையல் குருவி, செம்மார்பு குக்குறுவான்,பச்சை பஞ்சுருட்டான்,சிவப்பு மீசை சின்னான் போன்ற பறவைகள் பறந்து கொண்டிருந்தன. ஆட்டுக்குட்டிகளின் சத்தம் இந்த பறவைகளின் சத்தத்தை தாண்டி கேட்டுக்கொண்டிருந்தது.
மேலே நடந்துகொண்டே இருந்தபோது ஆட்டுகுட்டிகளின் சத்தம் மிக அருகில் கேட்டவுடன் எங்கே என்று தேடினால் ஒரு பாறையின் மேல் இரண்டு ஆட்டுக்குட்டிகள் இருந்து மே,மே என்று அலறிக்கொண்டிருந்தன. அருகே சென்று கீழே போவதற்கு துரத்தி விடலாம் என்று பார்த்தால், எங்களை பார்த்து குட்டிகள் ரொம்பவும் பயந்துவிட்டன. சரி, பயப்படுத்தவேண்டாம் என்று நாங்கள் மேலே தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் ஆடுகளின் சத்தம். என்னடா இது,ஆட்டுகுட்டிகள் எங்களை தொடர்ந்து ஓடி வந்துவிட்டதா என்று பார்த்தால் நாங்கள் மேலே செல்லும் பாதையில் இரண்டு பெரிய ஆடுகள் நின்று கத்திக்கொண்டிருந்தன. எங்களை பார்த்ததும் பயந்து போய் இன்னமும் அலற ஆரம்பித்தன. நாங்கள் வழியை மறித்து நிற்க வேண்டாம் என்று ஒதுங்கி நின்றால், கொஞ்சம் நேரம் மேமே என்று கத்திவிட்டு லண்டனா புதர்களுக்கு உள்ளே குதித்து அதனூடே புகுந்து கீழே நடக்க ஆரம்பித்தன. இனியாவது பறவைகளை பார்க்கலாம் என்று கொஞ்ச நேரம் எப்பொழுதும் பார்க்கும் சில பறவைகளை பார்த்து கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தோம்.
கீழே இறங்கி வரும்போது மறுபடியும் ஆடுகளின் சத்தம். இன்னுமா இதுங்க வீடு போய் சேரவில்லை என்று நினைத்துக்கொண்டே போனால் பெரிய ஆடுகள் இரண்டும் வழியில் நின்றுகொண்டு கத்திக்கொண்டிருந்தன. அவர்கள் கத்தி முடித்ததும் பதிலுக்கு கீழே பார்த்த குட்டிகள் கத்துகின்றன. எங்களை பார்த்தவுடன் பெரிய ஆடுகள் வேகமாக கீழே ஓட ஆரம்பித்தன. ஒருவழியாக பெரிய ஆடுகள் குட்டிகளை பாறையில் பார்த்து பாறை மேல் தாவியது. எங்களை பார்த்து குடும்பமே பயந்து போய் நின்றுகொண்டிருந்தது.
ஒருவேளை ஆம்பூர் அருகில் இருப்பதால் பிரியாணி ஆகிவிடுவோமோ என்று இந்த ஆடுகள் இவ்வளவு பயப்படுகிறதோ என்னவோ!
நாங்களும் ஆடுகளுக்கு தொல்லை கொடுக்காமல் சென்றுவிடலாம் என்று கீழே நடக்க ஆரம்பித்தோம். கொஞ்ச நேரத்தில் குடும்பமாக மறுபடியும் எங்கள் பின்னே வந்து நின்றன. என்னடா இது வம்பா போச்சுன்னு ஒதுங்கி நின்று வழி விட்டாலும் போகவில்லை. நாங்கள் மூன்று பேரும் ஆடுகளை உற்சாகப்படுத்தி,சைகையில் பேசி மூன்று ஆடுகள் எங்களை தாண்டி ஓடி விட்டன. ஒரு குட்டிக்கு மட்டும் தைரியம் வரவில்லை. அப்புறம் கீழே இருந்து அம்மா ஆடு கூப்பிட்ட பின்பு லண்டனா பாதைக்குள் அடித்து பிடித்து சென்று கீழே ஓடியது. குடும்பம் ஒன்று சேர்ந்ததும் நால்வரும் குதித்து ஓடி விட்டனர்.
எதற்கு இந்த கதையை இவ்வளவு விரிவாக சொல்கிறேனென்றால் இந்த மாதிரி சம்பவங்கள் தான் காடுகளுக்கு செல்லும்போது நடக்கும். இத்தகைய சம்பவங்களை பார்க்கும்போது தான் மனிதர்கள் மட்டும் தான் குடும்பம், பாசம் என்று இருக்கிறார்கள் என்றில்லாமல் மற்ற உயிரினங்களும் ஒன்றொன்றுக்கு மிகவும் பிரியமாக இருக்கும்,பயப்படும்,அவர்களுக்குள் அவர்கள் பாஷையில் பேசிக்கொள்ளுவார்கள் என்று பல விஷயங்கள் நமக்கு புரியும். நாம் தொலைக்காட்சியில் அனிமல் பிளானட்டில் புலி,சிங்கம்,கரடி,யானை போன்ற பெரிய விலங்குகளை மட்டும் பார்ப்போம், ஆனால் அவர்களையும் புரிந்து கொள்ள மாட்டோம். நான் சாந்தியிடம் இதுவே ஒரு ஓநாயோ புலியோ அதன் குடும்பத்தோடு சேர்ந்திருந்தால் பெரிய கதையாகியிருக்கும், ஆடுகள் குடும்பத்தோடு பேசி இப்படி சேர்வதை யாராவது தொலைக்காட்சியில் காட்டுவார்களா, காட்டினால் தான் மக்கள் பார்ப்பார்களா என்று சொல்லிக்கொண்டே வீடு போய் சேர்ந்தோம் .மறுநாள் அதிகாலையில் இதமான குளிர் காற்றில் நாங்கள் எப்பொழுதும் பறவைகள் பார்க்க செல்லும் காட்டு பாதைக்கு சென்றோம்.பொன்முதுகு மரங்கொத்தி(Greater Flameback Woodpecker), கருந்தலை குயில் கீச்சான்(Black-headed cuckooshrike),மஞ்ச சிட்டு(Common iora) போன்ற பல பறவைகளை இங்கே பார்க்கலாம். முற்புதர்கள் வழியே தாண்டி சென்றால் கீழே செல்லும் வழி அடைக்கப்பட்டிருந்தது. அருகே புதிதாக குடிசைகள் வந்திருந்தன.
காட்டையும் ஆக்கிரமித்து விட்டார்களா என்று யோசித்துக்கொண்டே சென்றபோது, அந்த குடிசையிலிருந்த ஒரு பெண்மணி வந்து எங்களிடம் பறவை சுட என்று வந்திருக்கிறீர்களா என்று கேட்டார். கைகளில் கேமரா தான் வைத்திருந்தோம், படம் பிடிப்பதை தான் இப்படி கேட்கிறார்களா என்று கேட்டால், இல்லை குருவி சுட வந்திருக்கீர்களா என்று மறுபடியும் கேட்டார். எங்களுடைய இத்தனை வருட பயணத்தில் இப்படி ஒரு கேள்வி எங்களை பார்த்து யாரும் கேட்டதில்லை. பறவைகளை பார்க்க வந்திருக்கிறோம் என்றால் சுத்தமாக புரியவில்லை. இன்னொரு வழியாக சென்றால் கீழே நாங்கள் போகவேண்டிய இடத்துக்கு செல்லலாம் என்று கூறினார். இவர்கள் இந்த நிலத்தின் சொந்தக்காரர்களாக இருக்கமாட்டார்கள். ஏதாவது ஒரு பெரும்புள்ளி இடத்தை வளைத்து தற்காலிகமாக இவர்களை தங்க வைத்து விட்டு ஐந்து வருடங்களுக்குள் இந்த இடத்தில் ஒரு ரிசார்ட் வந்துவிடும் என்று புலம்பிக்கொண்டே சென்றோம்.
மற்றொரு வழியாக கீழே சென்று சேர்ந்தோம். ஒரு பறவை கூட கண்ணில் படவில்லை. தரை முழுவதும் பார்த்தீனியம்(Parthenium hysterophorus-congress grass) செடிகள் வளர்ந்து கிடந்தன.
இந்த செடிகள் வேறு எந்த செடிகளையும் வளர விடாது, அது தவிர மண்ணும் செழிப்பற்றதாகிவிடும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்து, இந்தியா வறுமையில் இருந்தபோது அமெரிக்காவிலிருந்து கோதுமை விதைகள் இறக்குமதி செய்தார்கள். அந்த விதைகளுடன் இந்த பார்த்தீனியம் விதைகளும் வந்து ஏக்கர் கணக்கான விளைநிலங்களை பாழாக்கிவிட்டது. காங்கிரஸ் ஆட்சியின் போது இதை சரி பண்ண நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் இந்த செடிக்கு காங்கிரஸ் புல் என்று பெயர் வந்தது. நான் இந்த வருடம் குறிஞ்சி பூ பார்க்கும் ஆர்வத்தில் இருந்தேன். இங்கே என்னவென்றால் லண்டனா மலர்களும் பார்த்தீனியம் மலர்களும் தான் கிடக்கின்றன. பறவைகளும் கண்ணில் படாததால் நானும் சாந்தியும் வீட்டுக்கதை பேச ஆரம்பித்துவிட்டோம். வினோத் மட்டும் நம்பிக்கை தளராமல் பார்த்தீனியம் மலர்களின் உள்ளே நின்று பறவைகளை தேடிக்கொண்டிருந்தார். பார்த்தீனியம் செடிகளுக்குள் நின்றதால் வினோத் நாள் முழுவதும் உடல் அரிப்பில் கிடந்தது தனிக்கதை!
ஒரு பறவை கூட பார்க்கவில்லையே என்று புலம்பிக்கொண்டே புதர்களின் வழியாக மேலே ஏறி சென்று கொண்டிருந்தபோது அருகே இருந்த புதரிலிருந்து சிட்சிட் என்று சத்தம்.
பேப்லர் பறவைகள் ஜோடியாக ஒரு ஒரு புதராக குதித்துக்கொண்டிருந்தன. இந்த சிறிய பறவைகள் புதர்களுக்குள் துறுதுறுவென்று குதித்து கொண்டே இருப்பதால் பொதுவாக இந்த பறவைகளை பார்ப்பதும் கஷ்டம், புகைப்படம் எடுப்பதும் கஷ்டம். ஒருவழியாக வினோத் அந்த பறவையை புகைப்படம் எடுத்தபின் அடுத்த இடத்திற்கு பறவைகள் பார்க்க சென்றோம். நாங்கள் பறவைகள் பார்க்க சென்ற அடுத்த இடத்தில் ஒரு வியூ பாயிண்ட் உள்ளது, ஆனால் சுற்றுலா பயணிகள் யாரும் இங்கே வரமாட்டார்கள். கொஞ்சம் வெயிலேற ஆரம்பித்திருந்தால் பட்டாம்பூச்சிகளும் பறவைகளும் சுறுசுறுப்பாக பறந்து கொண்டிருந்தன.
செம்முதுகு கீச்சான் (long-tailed shrike or Rufous-backed shrike) மரத்தில் அமர்ந்து பூச்சி சாப்பிட்டுக்கொண்டிருந்தது.கருங்கொண்டை நாகணவாய்(Brahminy starling) ஜோடியாக அமர்ந்து ஒன்றை ஒன்று கொத்திவிட்டுக்கொண்டிருந்தன. பெண் செந்தலை கிளி லண்டனா செடியில் அமைதியாக அமர்ந்திருந்தது. நாங்கள் அருகில் சென்றதும் கீ என்று சத்தம் போட்டுவிட்டு பறந்து சென்றது.
நம் அரசை நம்பி இந்த வியூ பாயிண்ட் எல்லாம் ஏறலாமா கூடாதா என்று யோசித்தேன். வினோத் படியேறி பார்த்து திடமாகத்தான் இருக்கிறது, ஏறுங்கள் என்று சொன்னவுடன் நானும் சாந்தியும் ஏறினோம். மேலே இருந்து கீழே ஊரை பார்க்கும் பார்வை நன்றாக இருந்தது.
தூரத்தில் கருந்தோள் பருந்து(Black Shouldered Kite) வட்டமிட்டு கொண்டிருந்தது. அருகில் ஏதாவது பெரிய கழுகோ ஆந்தையோ வந்தால் நன்றாக இருக்குமே என்று பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் காற்று பலமாக வீச ஆரம்பித்ததும் வியூ பாயிண்ட் டவர் சிறிதாக ஆட்டம் குடுத்தது. கீழே இறங்க வேண்டியதுதான் என்று நினைத்தபோது குதிரை குளம்படி சத்தம் கேட்டது. பளபள பிடரி முடியும், நீண்ட வாலும் வைத்திருந்த திடகாத்திரமான கருப்பு குதிரை வந்து கொண்டிருந்தது. அங்கே மேய்ந்து கொண்டிருந்த நாய்களும்,ஆடுகளும் குதிரையை பார்த்து சிதறி ஓடின. குதிரையை பார்த்துக்கொண்டே இறங்கலாம் என்று திரும்பினால் எங்களுக்கு மிக அருகில் கருங்கழுகு (Black Eagle) தன்னுடைய 6 அடி நீளமுள்ள இறக்கையை விரித்து பறந்து வந்தது.
நாங்கள் மூவரும் ஆவென்று அதை வாயை பிளந்து வியப்புடன் பார்த்து நின்றோம். ஏதாவது மரத்தில் அமருமா என்று நாங்கள் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மரங்களின் பின்னால் பறந்து சென்றுவிட்டது. நாங்கள் கொஞ்ச நேரம் பொறுமையாக காத்திருந்தோம். கழுகு மறுபடியும் கொஞ்சம் அருகில் பறந்து சென்றது. கழுகுகளை பறக்கும்போது இவ்வளவு அருகில் இப்பொழுதுதான் பார்த்திருக்கிறோம்.
கழுகை பார்த்த சந்தோஷத்தில் அடுத்து நல்ல மரத்தின் கீழே அமர்ந்து சாப்பிடலாம் என்று சென்றோம். வீட்டுக்கு செல்லும் ஒரு பாதையில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது, அதன் கீழே அமர்ந்து பறவைகள் பார்த்துக்கொண்டே உண்ணலாம் என்று சாந்தி கூறியவுடன் நாங்கள் அங்கே சென்றோம். ஒரு பள்ளியின் அருகில் இந்த மரம் இருக்கிறது. முழுவதும் பூத்திருந்த மரத்தின் கீழே வண்டியை நிறுத்திவிட்டு ஆலமரம் இருந்த இடத்திற்கு நடந்து சென்றால் அங்கே அந்த ஆலமரம் வேரோடு பிடுங்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பறவைகள் இருக்கும் இடமும் இப்படி பறிக்கப்பட்டால் பறவைகள் எங்கே இருக்கப்போகின்றன என்ற மனவருத்தத்தில் வீடு திரும்பினோம்.
மாலையில் மற்றொரு காட்டு பாதைக்கு சென்றோம். இந்த பாதை சாந்தி பல வருடங்களுக்கு முன் சென்றது என்று கூறியதால் உள்ளே செல்ல ஆரம்பித்தோம். இங்கும் இருபக்கமும் லண்டனா புதர்கள் கிடந்தன. ஆனால் நிறைய பறவைகள் பறந்து கொண்டிருந்தன. கொஞ்ச தூரம் கல் பாதை போடப்பட்டிருந்தது. ஆனால் எந்த அறிவிக்கை பலகையும் இல்லை. யூக்கலிப்டஸ் மரங்களடர்ந்த காடு ஆரம்பித்தவுடன் ஒற்றையடி மண் பாதை மட்டும் இருந்தது. கொஞ்ச தூரம் சென்றவுடன் ஒரு நீர் படுகை இருந்தது. அதை தாண்டி பாதை தெளிவாக இல்லை.
போகும் இடம் முழுவதும் சரக்கு பாட்டில்கள். நம் மக்களுக்கு ஏன் காட்டில் போனால் தான் குடிக்க தோன்றுமோ தெரியவில்லை! எனக்கும் வினோத்துக்கும் விலங்குகளை கண்டு பயம் கிடையாது, இந்தமாதிரி மனிதர்களை கண்டால் தான் பயம். இடிஇடித்து மழை பெய்ய ஆரம்பித்தவுடன் வீடு திரும்பலாம் என்று கிளம்பினோம்.
மறுநாள் அதிகாலை கொஞ்ச நேரம் பாறையில் அமர்ந்து கொண்டு கதையடித்தபின் நானும் வினோத்தும் சென்னை கிளம்பினோம். வண்டியில் செல்ல ஆரம்பித்தபின் மேப்பில் அருகே ஜவ்வாது மலை தொடர்ச்சி காட்டியது. அந்த வழியே சென்று பார்க்கலாம் என்று கிளம்பினோம். வைனு பப்பு ஆய்வுமையம் காட்டுசாலையில் இருப்பதால் அதை நோக்கி சென்றோம். போகும் வழியெல்லாம் விதவிதமான பட்டாம்பூச்சிகள். நீல டைகர் பட்டாம்பூச்சிகள் செடிகளை மொய்த்துக்கொண்டிருந்தன. ஆய்வுமையம் சனிக்கிழமை மட்டும்தான் பார்வையாளர்களுக்கு அனுமதி என்பதால் நாங்கள் அப்படியே போளூர் காட்டுப்பகுதி செல்ல ஆரம்பித்தோம். உயர்ந்த காட்டு மரங்களான ஈட்டி,ஐயன்வுட் போளூர் பகுதியில் இருந்தன.
பகல் நேரத்தில் கூட வண்டிகள் அதிகம் செல்லாத சாலை என்பதால் மலை பகுதிகளை ரசித்துக்கொண்டே மெதுவாக வண்டி ஓட்டி சென்றோம்.
நாங்கள் பலமுறை ஏலகிரி (Yelagiri) சென்றிருந்தாலும் இந்த பாதையில் வருவது இதுவே முதல் தடவை. ஒவ்வொரு பயணத்திலும் ஏதாவது ஒரு முதல் அனுபவம் இருக்கிறவரையில் பயணங்கள் எப்பொழுதும் அலுக்கவே அலுக்காது !