ராமேஸ்வரம்
பழங்கதைகளில் இலங்கையையும் தமிழ்நாடையும் இணைக்கும் இடமாக ராமேஸ்வரம் இருந்தது.இந்து புராணங்களில் இந்த இடம் முக்கியமான பங்கு வகிக்கின்றது, முக்கியமாக ராமாயணம். இந்த ஊர் இந்து யாத்திரையில் மிக முக்கியமான இடம். இந்தியா முழுவதும் உள்ள இந்து பக்தர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது ராமேஸ்வரத்திற்கு வந்துவிடவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
ராமநாதசுவாமி கோவில் தவிர, ராமேஸ்வரம் புயலுக்கு சூறாவளிக்கும் பிரபலமானது.1964இல் வந்த சூறாவளி தனுஷ்கோடியை முழுவதும் அழித்து,மனிதர்கள் வாழ முடியாத இடமாக ஆக்கி விட்டது. இயற்கை தன் சீற்றத்தை காட்டும் இடமாக இருந்தாலும், இந்தியாவில் முதல் கடல் பாலம் பாம்பன் பாலம் இங்கே தான் கட்டப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கோவிலுக்கு பிரபலமாக இருந்தாலும் அங்கே வாழும் மக்களுக்கு மீன் பிடிப்பது தான் தொழில்.
நாங்கள் ராமேஸ்வரத்துக்கு அழகான கடற்கரைகள்,பறவைகள்,தீவில் உள்ள பவளப்பாறைகள், மனிதர்களற்ற தனுஷ்கோடி பார்ப்பதற்காக சென்றோம். கடல் என்பதால் அதோடு சேர்த்து கண்டிப்பாக சூர்யோதயமும்,சூர்ய அஸ்தமனமும் பார்க்காமல் நாங்கள் விடமாட்டோம்.
கோவிலின் அருகே இருந்த கடற்கரை மிகவும் கூட்டமாக இருந்தது, ஆனால் கிராமங்களின் அருகே இருந்த கடற்கரைகள் மிகவும் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தது. உள்ளூர்க்கார மீனவர்கள் கடற்கரையில் வலம் வந்து கொண்டே இருப்பதால் பகல் நேரத்தில் பாதுகாப்பாக நடந்து வரமுடிந்தது.

சுத்தமான இம்மாதிரி கடற்கரைகளை இந்தியாவில் வெகு இடத்தில் பார்க்க முடியாது.
டீமோனிடைசேஷன்(Demonetization) தருணத்தில் நடந்த பயணம்
கோவிலின் அருகே சபரிமலை பக்தர்கள் நிரம்பி இருந்தார்கள்.உணவு விடுதிகள் எல்லாம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தன. நாங்கள் ஒவ்வொரு உணவு விடுதியாக கார்டு ஒத்துக்கொள்வார்களா என்று கேட்டு சுற்றினோம். வியக்கும்வகையில் ஒரு விடுதி கூட கார்டு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அடுத்து ஏடிஎம் மெஷின் தேடி அலைந்தோம். டீமோனிடைசேஷன்(Demonetization) தருணத்தில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்று நாம் அனைவரும் அனுபவப்பட்டிருப்போம். இரண்டு ஐரோப்ப சுற்றுலா பயணிகள் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சி செய்து திட்டிக்கொண்டே சென்றார்கள். நாங்கள் மூன்று தடவை முயற்சி செய்த பின் அதிர்ஷ்டவசமாக ஏடிஎம் வேலை செய்து எங்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டது.மூன்றாவது முறை மறுபடியும் நடந்து உணவு விடுதியை கண்டுபிடித்து உணவருந்தி,புதிய 2000ரூபாயை மாற்றி வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
ராமேஸ்வரம் அருகே மனிதர்கள் வாழாத சிறிய தீவுகள் நிறைய உள்ளன. அந்த தீவுகளுக்கு மீனவர்களின் உதவியுடன் செல்லலாம்.

கல்ஃ ஆஃ மன்னார் கீழ் வருவதால் இந்த தீவுகளுக்குள் வருவதற்கு முன்னனுமதி வாங்க வேண்டும்.
சில தீவுகளுக்கு வனஅதிகாரி அனுமதியும் தேவைப்படும். நாங்கள் ஒரு வனஅதிகாரி மற்றும் மீனவர் ஒருவருடன் அத்தகைய தீவுக்கு படகில் சென்றோம்.
கடல்காகங்களும் ஆலாக்களும் பறந்துகொண்டிருந்தன. தீவின் அருகில் வந்தவுடன் தெள்ள தெளிவான தண்ணீரில் குதித்து நாங்கள் கரை வரை நடந்தே சென்றோம். விதவிதமான சங்குகள் கரையோரம் கிடந்தன.

அழகான ஸ்டக் ஹார்ன் பவளப்பாறை மீன்பிடி படகுகளால் உடைந்திருந்தது. புகைப்படத்தில் அவுட் ஆப் போக்கஸ் ஆக நிற்பது நான்!
நாங்கள் மனிதர்கள் இல்லாத தீவு என்பதால் நிறைய பறவைகள் பார்க்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் பறவைகள் எதுவுமே கண்ணில் படவில்லை. பறவைகள் எதுவும் கண்ணில்படாததால் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. தீவு அழகாய் இருந்ததால் அதை ரசித்துக்கொண்டு,மீனவர் குடுத்த அருமையான உணவை உண்டுவிட்டு திரும்பினோம்.
நூறு வருட பழமையான பாம்பன் பாலம் அவ்வளவு பழையதாகவே தெரியவில்லை. கடலிலிருந்து பார்க்கும்போது மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. படங்களில் எப்பொழுதுமே மனிதன் அல்லது இயற்கையால் சீரழிவு வரும்போது முதலில் பாலங்கள் தான் உடையும். ஆனால் இந்த பாலம் 1964இல் தனுஷ்கோடியை அழித்த சூறாவளியையே தாங்கிவிட்டது.

தனுஷ்கோடியில் நாயுடன் சூரியோதயம்!
மறுநாள் சூரிய உதயத்தை நாங்கள் தனுஷ்கோடி செல்லும் வழியில் பார்த்தோம். ஸ்டார்லிங் பறவைகள் கும்பலாக வானத்தில் பேசிக்கொண்டே பறந்து கொண்டிருந்தன. கொஞ்சம் தூரத்திலிருந்த ஒரு தீவில் நிறைய பூநாரைகள் இருந்தன. உப்புகொத்திகள் கடற்கரையில் மேய்ந்து கொண்டிருந்தன. அலை வரும்போதெல்லாம் இந்த பறவைகள் ஓடுவதை எத்தனை நேரம் பார்த்தாலும் அலுக்காது. தனுஷ்கோடி டவுன் இன்னும் கட்டிக்கொண்டிருப்பதால் கடைசி வரைக்கும் வண்டி ஓட்டி செல்ல முடியவில்லை.

எப்பொழுதும் பார்க்கும் கள்ள பருந்தாக இருந்தாலும் ஜோடியாக போஸ் கொடுத்தால் எல்லாமே அழகுதான்.
நம் மறைந்த அப்துல் கலாம் அவர்கள் பிறந்த ஊர் ராமேஸ்வரம் என்பதால்,பல தெருக்களுக்கு அவர் பெயர் வைத்திருந்தனர். தனுஷ்கோடியில் இருந்து திரும்பி வரும்போது கிராமத்துக்குள் இருக்கும் ஒரு சாலைக்குள் சென்றோம். சில நிமிடங்களில் கடல் தெரிந்தது. கரையோரம் பனைமரங்களும் அதை சுற்றி பனை உழவரான்(Palm Swift) பறவைகளும் பறந்து கொண்டிருந்தன. ஆவாரம் பூ(Senna auriculata) எல்லா இடங்களிலும் மலர்ந்திருந்தன. பருந்துகள் மேலே பறந்து கொண்டிருந்தன. காட்சிகள் அழகாக இருந்தாலும், மதியம் ஆகிவிட்டதால் வெயில் கண்ணை கூச வைத்தது. அதிகாலையில் வந்திருந்தால் இந்த இடம் இன்னும் அழகாக கண்ணுக்கு தெரிந்திருக்கும். ஒரே நாள் அதிகாலையில் எத்தனை இடங்களில் தான் இருக்க முடியும்!

வெண்கழுத்து நாரைகள் கூட்டமாக இறக்கையை காய வைக்க நின்று கொண்டிருந்தது பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
நாங்கள் இந்த பயணத்தில் கள்ள பருந்து(Black kite),செம்பருந்து(brahminy kite),ஓணான் கொத்தி கழுகு(Short-toed snake eagle), விரால் அடிப்பான்(Osprey),வெண்கழுத்து நாரை(Woolly necked stork) பார்த்தோம். பக்தர்களுக்கும் முதியவர்களுக்கும் கோவில், குழந்தைகளுக்கு கடற்கரையும்,படகு பயணமும், மற்ற வயதினருக்கு பாம்பன் பாலமும்,மேற்குறிய அனைத்து இடங்களும் என்று அனைத்து வயதினருக்கும் பார்ப்பதற்கு ஏற்ற இடமென்பதால், ஒரு இரண்டு நாள் விடுமுறையில் சென்று சுற்றி வருவதற்கு ஏற்ற இடம் ராமேஸ்வரம்
Related post
தமிழில் மேலும் படிப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்