பூக்களின் பள்ளத்தாக்கு ( Valley of Flowers )
பூக்களின் பள்ளத்தாக்கு ( Valley of Flowers ) உத்திரகாண்டில் உள்ள நந்தாதேவி மலைத்தொடர்ச்சியின் ஒரு பகுதி. இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோ உலக ஹெரிட்டேஜ் என்று 2004ல் அறிவிக்கப்பட்டது. 12000 அடியில் இருக்கும் இந்த பூங்கா வனத்துறையின் கீழ் வருவதால், பூங்கா செல்வதற்கு முன் அனுமதி வாங்கி செல்லவேண்டும்.
பூக்களின் பள்ளத்தாக்கு ( Valley of Flowers ) மலையேற்றம்
நாங்கள் கங்காரியா வந்த மறுநாளே இந்த பூங்கா செல்லவிருந்தோம். ஆனால் மழையினால் மூன்று நாட்கள் இந்த பூக்களின் பள்ளத்தாக்கு ( Valley of Flowers ) செல்ல அனுமதி இல்லை. மழை கொஞ்சம் குறைந்திருந்த நாளன்று காலையில் முதல் ஆளாக பூங்காவின் உள்ளே சென்றுவிட்டோம். நுழைவுசீட்டு வாங்கும் இடத்தில் பறவைகளின் அதிகாலை கானங்களை கேட்டுக்கொண்டு வனஅதிகாரிக்காக காத்திருந்தோம். ஒருவேளை இன்றும் பூங்கா திறக்கவில்லையோ என்ற சந்தேகத்துடன் வினோத் நிலவரம் அறிய மறுபடியும் வந்த வழியே சென்றார். கொஞ்ச நேரம் கழித்து வினோத் ஒரு வன ஊழியருடன் திரும்பி வந்தார். அந்த பெரியவர் எங்களை அங்கேயே காத்திருக்க சொல்லிவிட்டு, அவர் உள்ளே சென்று பாதை ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன் என்று சென்றார். அரை மணி நேரத்திற்கு பிறகு வனஅதிகாரி வந்து எங்களுடைய விவரங்களையும் 150ரூபாய் நுழைவு கட்டணத்தையும் வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல அனுமதி கொடுத்தார்.
சமீபத்திய மழையினால் நீர் அதிகமான வலிமையுடன் ஓடையில் ஓடிக்கொண்டிருந்தது. ஓடைகளை கடப்பதற்கு சிறிய பாலங்கள் கட்டப்பட்டிருந்தன. கொஞ்சம் நீர் அளவு அதிகமானால் கூட ஓடைகளை கடப்பது கஷ்டமாகிவிடும். இந்த பூங்காவில் குதிரை பாதை இல்லாததால் மிகக் குறைந்த சுற்றுலா பயணிகள் தான் வருவார்கள். நாங்கள் பூக்கள் நிறைந்திருக்கும் பூக்களின் பள்ளத்தாக்கு ( Valley of Flowers ) செல்வதற்காக வேகமாக நடந்தோம். போகின்ற வழியில் பைன்(pines) மரங்களும் சில புதிய பூக்களும் பார்த்தோம்.
நாங்கள் இருவர் மட்டும் தான் அந்த பாதையில் நடந்து கொண்டிருந்தோம். சந்தோஷமாக அந்த அமைதியை அனுபவித்து சென்றாலும் செல்லும் பாதையில் கவனமாக இருந்தோம். முதலில் வந்த வன ஊழியர் மறுபடியும் வந்தார், இந்தியில் நிறைய பேசினார். எங்களுக்கு கொஞ்சம் தான் புரிந்தது. கடைசியில் பாதையை காட்டி ஏதோ சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். எங்களிடம் அவர் பணம் எதுவும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் பத்திரமாக போய்க்கொண்டிருக்கிறோமா என்று மட்டும் பார்த்துவிட்டு கிளம்பிவிட்டார். நாங்கள் கஷ்டப்பட்டு நடந்த பாதையை அவர் ஒரு நாளைக்கு 10 தடவை நடப்பார் போல !
கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலர்கள் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டோம். 6கி.மீ தூரத்துக்கு வண்ண வண்ண மலர்களை பார்க்கலாம். மலைகளையும் மலர்களையும் பார்த்துக்கொண்டு நாங்கள் கொண்டுவந்த சாண்ட்விச்சை உண்டோம். எங்களை தவிர ஒரு பெரியவர் மட்டும் வந்திருந்தார். அவர் வித விதமான இடங்களுக்கு பல வருடங்களாக தனியாக பிரயாணம் செய்வதாக கூறினார். முதன்மை பாதையிலிருந்து கொஞ்சம் திரும்பி மற்றொரு பாதையும் கண்ணில் பட்டது. அந்த பெரியவர் அந்த பாதையை எடுக்கலாம் என்று கூறினார். நாங்கள் மலர்கள் பார்க்க வந்திருக்கிறோம், எவ்வளவு தூரம் நடக்கிறோமோ அவ்வளவுக்கு வேறு மலர்களை பார்க்கும் வாய்ப்பு அதிகம். அதனால் நாங்களும் ஒத்துக்கொண்டு அந்த பாதையில் நடக்க ஆரம்பித்தோம். ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பாதை மிகவும் ஏற்றமாக இருக்கிறது, அதனால் நான் முதன்மை பாதை செல்கிறேன் என்று அந்த பெரியவர் திரும்பி விட்டார்.
அந்த பாதையில் உள்ள சில செடிகள் நாங்கள் பார்க்காத வகைகளாக இருந்ததால், நாங்கள் தொடர்ந்து நடக்க முடிவு செய்தோம். புல்பின்ச்(Bullfinch) பறவைகள் புதர்களுக்குள்ளே பறந்து கொண்டிருந்தன. கொஞ்ச நேரத்தில் மறுபடியும் ஒரு ஓடை வந்தது. பாலம் எதுவும் கட்டப்படவில்லை. திரும்பி வருவதற்குள் நீர் அதிகமாகிவிட்டால் கடப்பதற்கு கஷ்டமாகிவிடும், அதோடு யாரும் எங்களை இந்த பாதையில் தேட மாட்டார்கள். முதன்மை பாதைக்கு திரும்பிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த போது ஓடைக்கு மறுபக்கம் நாங்கள் நெடுநாட்களாக தேடிக்கொண்டிருந்த மாங்க்ஸ் ஹூட் மலரை பார்த்தோம். தேலா மலையேற்றத்தில் இந்த செடி மலரவில்லை,ஹேம்குண்ட் மலையேற்றத்தில் தூரத்தில் இருந்த பாறையில் பூத்திருந்தது. அதனால் கடைசியில் இங்கு இந்த மலரை பார்த்தவுடன் அருகில் செல்லாமல் எப்படி திரும்ப முடியும்? சலசலவென்று ஓடிக்கொண்டிருந்த ஓடையில் மெதுவாக கால் வைத்து நடந்து மறுபக்கம் சென்றுவிட்டோம்.மாங்க்ஸ் ஹூட் மலரை நன்கு அருகில் பார்த்தோம்.கொஞ்ச தூரம் அந்த வழியே நடந்துவிட்டு திரும்பி முதன்மை பாதை செல்லலாம் என்று நடக்க ஆரம்பித்தோம்.
இனுலா மலர் (Showy Inula), பிலீஸ் மலர் (Himalayan Fleeceflower), ஜெரேனியம் (Hill Geranium), லார்க்ஸ்பர் (Royle’s Larkspur), அனிமோனே (River Anemone), காரிடேலிஸ் (Horned Corydalis), சிங்க்பாயில் (Himalayan cinquefoil), பார்ஸ்லீ (Milk Parsley) போன்ற பல்வேறு வகை மலர்கள் கண்ணை கவரும் வண்ணம் மலர்ந்து கிடந்தன.பிங்க் வண்ண இமாலய பிரேக்ரன்ட் ஆர்க்கிட் (Himalayan Fragrant Orchid) மலர்கள் வேறு ஆங்காங்கே மிக அழகாக மலர்ந்திருந்தன. பச்சை நிற மெலாக்சிஸ் ஆர்க்கிட் (Fly Bearing Malaxis) மலர்கள் உற்று பார்த்தால் தான் தெரிகின்ற மாதிரி செடிகளுடன் ஒன்றோடு ஒன்றாக கிடந்தன. இந்த அழகிய மலர்களை பார்த்துக்கொண்டே வெகு தூரம் நடந்துவிட்டோம்.மேலே மழை துளி விழுந்த பின் தான் ஓடையில் தண்ணீர் ஏறி இருக்குமோ என்று பயம் வந்தது.காடுகளில் மலைகளில் பெய்யும் மழையினால் காட்டாற்று வெள்ளம் சட்டென்று வந்துவிடும்.நாங்கள் கடகடவென்று திரும்பி நடக்க ஆரம்பித்தோம். மழையில் கொஞ்சம் நனைந்தவுடன் குளிர வேறு ஆரம்பித்துவிட்டது.நாங்கள் பயந்ததுபோல் ஓடையில் நீர் கொஞ்சம் அதிக அளவு ஓட ஆரம்பித்திருந்தது. நாங்கள் படபடவென்று ஓடையை கடந்து மறுபக்கம் வந்து சேர்ந்தோம். மறுபடியும் முதன்மை பாதைக்குள் வந்து சேர்வதற்குள் மழை நின்றிருந்தது,ஆனால் பனிமூட்டமாக இருந்தது. பனிமூட்டத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலர்களே தெரிந்தது ஏதோ தேவலோகத்திற்கு வந்தது போல் இருந்தது.
முதன்மை பாதையில் கொஞ்சம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தார்கள். இமாலய நாட் வீட் (Himalayan knotweed-Polyganum polystachum) பள்ளத்தாக்கை நிரப்பி இருந்தன.வேறு வகை மலர்களை பார்க்காததினால் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. 1கி.மீ பிறகு கொஞ்சம் வேறு மலர்களை பார்த்தோம்.அதன் பிறகு கண்ணுக்கெட்டிய தூரம் வரை பிங்க் பால்சம்(Pink balsam) மலர்கள் மலர்ந்திருந்தன. பால்சம் செடிகள் உயரமாக வளர்ந்திருந்தால் எங்களுக்கு பள்ளத்தாக்கின் முழு காட்சியும் தெரியவில்லை. அதனால் பாதையை நேராக பிடித்துக்கொண்டு நடந்தோம். திடீரென்று என் கண் முன்னால் ஒரு வண்ணமிக்க பட்டாம்பூச்சி வந்தது. உயரமான இடங்களில் மட்டுமே பார்க்கக்கூடிய இந்த அப்போல்லோ பட்டாம்பூச்சியை வினோத் ரொம்ப நாள் பார்க்க ஆசைப்பட்டிருந்தார்.
பட்டாம்பூச்சி பிரியரான வினோத்தின் மேல் பொதுவாக பட்டாம்பூச்சிகள் வந்து அமரும், ஆனால் இந்த உயரத்தில் இருக்கின்ற அப்போல்லோ பட்டாம்பூச்சியும் வந்து அமரும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. வினோத்தின் மேல் அமர்ந்த பூச்சி நகரவில்லை. வினோத் பொறுமையாக கையில் எடுத்து அருகில் உள்ள இலையில் விட்டுவிட்டு வந்தார்.பூங்காவின் எல்லைக்கு வந்துவிட்டோம். உயரமான மலைகள், ஆற்றில் தெள்ளத்தெளிவான நீர்,வண்ணவண்ண மலர்கள் உள்ள இடத்திற்கு உலகத்தில் உள்ள அனைவராலும் வந்து விடமுடியாது. அத்தகைய ஒரு இடம் இந்தியாவிலேயே இருந்து அதை பார்க்கவும் முடிந்ததால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். இப்படி ஒரு இடத்தில் இருக்கும் போது மனம் எவ்வளவு அமைதி அடைகிறது!
பனிமூட்டம் விலக ஆரம்பித்தபோது கண்ணில் முன்னால் இருந்த இயற்கை காட்சி இன்னும் வண்ணங்கள் ஏற்றி விட்டது போல பளிச்சென்று தெரிந்தது. இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே பூங்காவின் எல்லை சென்றடைந்தோம். ஓடும் தூய நீரை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு சிறிய பறவை பறந்து சென்று ஒரு பாறை மேல் அமர்வதை பார்த்தோம்.இவ்வளவு உயரமான மலைகளில் இருக்கும் அனைத்து பறவைகளுமே நாம் எளிதாக பார்க்க முடியாத பறவைகளாகத் தான் இருக்க முடியும்.அதனால் உடனே வினோத் ஒரு பாறை மறைவில் நின்று அப்பறவையை படம் எடுத்தார்.அது ப்ரவுன் டிப்பர்(Brown Dipper) பறவையின் குஞ்சு என்று படம் எடுக்கும் போது தான் தெரிந்தது.
திரும்பி நடந்து வரும்போது மலர்களை பொறுமையாக பார்த்துக்கொண்டு வரலாம் என்று நினைத்தால் மறுபடியும் பனிமூட்டம் வந்து மழையும் மெதுவாக தூற ஆரம்பித்துவிட்டது. கேமராக்களை பைகளுக்குள் வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தோம். ஒரு போர்ட்டர் காலுடைந்த ஒரு ட்ரெக்கரை தூக்கிக்கொண்டு செல்வதை பார்த்து எனக்கு பீதியாகிவிட்டது. நடக்கும் பாதை வேறு வழுக்க ஆரம்பித்துவிட்டது.அதனால் கீழே இறங்கி வந்து சேரும்வரை நடப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினோம்.
15கி.மீ மேல் நடந்திருந்தாலும் மிகவும் சுத்தமான காற்று,நீர் உள்ள இடத்திற்கு சென்று வந்ததால் நாங்கள் களைப்படவேயில்லை. கீழே வந்து சேர்ந்தபின் மழை இல்லை. அதனால் அங்கே புதரின் பின்னால் குதித்துக்கொண்டிருந்த த்ரஷ்(laughing thrush) பின்னால் ஓட ஆரம்பித்தோம்.