காஸ் – சொர்க்கத்தில் தொலைந்து போன பயணம்
காஸ் பீடபூமி 1200 சதுர மீட்டர் உயரத்தில் சதாரா அருகே அமைந்துள்ளது. மலை மலையாக வண்ணமிக்க மலர்களை பார்ப்பதற்கு உகந்த மாதங்கள் ஆகஸ்ட்–செப்டம்பர். நாங்கள் இதுவரை மலை மலையாய் மலர்களை பார்த்ததெல்லாம் கடினமான மலையேற்றத்திற்கு அப்புறமாக உயரமான மலைகளில் தான்(வேலி ஆப் பிளார்ஸ் மற்றும் தேலா மலையேற்றங்கள்) . அதனால் இந்த தடவை கொஞ்சம் வேற விதமாக பயணம் செய்து மலர்களை பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். எங்கள் தோழன் ரவிக்குமார் இந்த பயணத்திற்கு எங்களுடன் வந்தான். அவன் கேட்டரிங் மற்றும் வனவிலங்குகளை காப்பாற்றும் பணி செய்கிறான். அவன் ஒரு கல்யாண கேட்டரிங் முடித்துக்கொண்டு எங்களுடன் இந்த பயணத்துக்கு வந்தான், அதனால் உள்ள நன்மை என்னவென்றால் ஒரு டப்பா நிறைய குலாப் ஜாமூன் கொண்டு வந்தான். பூனே ஏர்போர்ட் வாசலில் மைல்ஸ்(Myles car) காருக்கு காத்திருந்த சமயத்திலேயே குலாப் ஜாமூன் சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். அப்பொழுது மணி அதிகாலை 5.30. பயணத்தின் போது எதை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்ற கணக்கே கிடையாது.
நாங்கள் காரை எங்கேயெல்லாம் ஒட்டி செல்ல போகிறோம் என்று தெரிந்தால் மைல்ஸ் எங்களுக்கு கார் கொடுத்திருக்குமா என்று தெரியாது. நாங்கள் எப்பொழுதுமே அதிகாலையில் எழும்பி விடுவதால், மஹாபலேஸ்வரிலிருந்து வெகு சீக்கிரமாகவே மலர்களை பார்க்க கிளம்பிவிட்டோம். கூகுள் மேப் வைத்து காஸ் செல்லும் பாதையில் வண்டியை ஓட்ட ஆரம்பித்தோம்.மிகவும் அழகான சூரியஉதயத்தை மலையின் வளைவுகளில் நின்று பார்த்தோம். சூரியன் அதனுடைய தங்க நிற கதிரை பீடபூமி மேல் மெதுவாக அனுப்பியபோது, பீடபூமி பச்சையிலிருந்து தங்க நிறத்திற்கு மாறியது.
“சூரியஉதயமும் சூரியஅஸ்தமனமும் ஒருபோதும் ஒரே மாதிரி இருந்தது இல்லை ” – கார்லோஸ் சான்டனா
நாங்கள் புதிய இடங்கள் செல்லும்போது ஒரு போதும் சூரியஉதயத்தை பார்க்காமல் விடுவதே கிடையாது. சூரியஉதயம் எப்பொழுதுமே அந்த நாளைக்கு புதிய நம்பிக்கை கொடுக்கும். சென்னையில் இன்று எவ்வளவு கொடுமையாக சூரியன் இருக்கப்போகிறது என்று பார்ப்போம். பெரிய தீ பந்து கடலில் இருந்து உதிக்கும் போது, மலையில் இருந்து உதிக்கும் போது,பரந்து விரிந்த இடத்தில் இருந்து உதிக்கும் போது எப்பொழுதுமே வியப்பாக இருக்கும். சூரியன் உதிப்பதற்கு முன்னும் பின்னும் உலகத்தின் வண்ணம் அப்படியே மாறிவிடுகிறது.
நாங்கள் தொலைந்து போன கதை
காஸ் பீடபூமிக்கு ஓட்டி சென்றது ஒரு இனிமையான அனுபவம். காஸ் செல்லும் வழியில் எங்களை தவிர வேறு யாரும் இல்லை. அதிகாலையில் வந்ததால் அவ்வாறு இருக்கிறது என்று எண்ணினோம், பிறகு தான் காரணம் புரிந்தது. தார் சாலை முடிந்து மண்பாதை ஆரம்பித்தது. கூகுள் மேப் நாங்கள் சரியான வழியில் செல்வதாக காட்டியது. வினோத் கீழே இறங்கி ரவிக்கு மண் பாதையை கடப்பதற்கு வழி கூறினார். மலையின் ஓரத்தை ஒட்டி சென்றதால் நான் கார் கைப்பிடியை இறுக்க பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். வினோத் முன்னால் சென்று இந்த சகதி பாதைக்கு அப்புறம் தார் சாலை தெரிகிறதா என்று பார்த்தார். தார் சாலை இல்லாவிட்டாலும் வண்டி செல்கிறமாதிரி மண் சாலை இருந்தது. அதனால் தொடர்ந்து செல்ல முடிவு செய்தோம். வண்டியை நன்றாக உலுக்கி எடுத்து ஒருவழியாக சகதியை தாண்டிவிட்டோம். சகதியில் மாட்டியிருந்தால் என்னவாகியிருப்போமோ தெரியாது. மண் சாலையில் சிறிது நேரம் ஓட்டிய பின் தூரத்தில் தார் சாலை தெரிந்தது. அப்பாடி,சரியான பாதையில் தான் செல்கிறோம் என்று எங்களை சமாதானப்படுத்திக்கொண்டோம். கூகுள் தவிர வேற யாரிடமாவது வழி கேட்டு கொள்ளலாம் என்று அங்கே காட்டு பாதையிலிருந்து வந்து கொண்டிருந்தவர்களிடம் கேட்டோம். அவர்களும் நாங்கள் சரியாக செல்வதாக தான் சொன்னார்கள். ஒரு சாலை சந்திப்பில் மற்றொரு கம்பெனி வண்டி இந்த தூர இடத்திலிருந்து வேலைக்கு ஆள் கூட்டி செல்வதற்காக வந்திருந்தது.
இருபது நிமிடங்கள் கழித்து நாங்கள் தரை முழுவதும் மலர்கள் இருக்கும் இடத்திற்கு வந்திருந்தோம். நல்ல தார் சாலையும் தெரிந்தது. பனி படர்ந்த காலையை அவ்விடத்தில் ஆனந்தத்துடன் அனுபவித்தோம். எல்லா இடத்திலும் ஹெபெனெரியா(Habenaria heyneana,Habenariarariflora),உட்ரிகுலேரியா (Utricularia arcuata) மலர்ந்திருந்தது.
இந்த மலர்கள் எல்லாம் காசில் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருந்தோம்,அதற்குள் காஸ் வந்துவிட்டோமா, அப்படியென்றால் எங்கே நுழைவு கட்டணம் கட்ட வேண்டும், ஏன் வேறு வண்டிகளையே காணவில்லை என்று குழப்பத்துடன் வண்டியை ஓட்ட ஆரம்பித்தோம்.
டிப்கார்டி(Dipcardi) ,ஸ்ட்ரோபிலன்தஸ்(Strobilanthes callosa) மலர்கள் பூத்து குலுங்கின. கொஞ்ச நேரத்தில் வேலிகள் தெரிய ஆரம்பித்தது. சுற்றுலா பயணிகளிடம் இருந்து பூக்களையும்,செடிகளையும் காப்பாற்றுவதற்கு தான் வேலி போடப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு ஆளை கூட பார்க்கமுடியவில்லை. ஆனால் கூகுள் மேப் இன்னமும் நாங்கள் சரியான திசையில் தான் செல்கிறோம் என்று காட்டியது. நாங்கள் எல்லா பூக்களையும் பார்த்துக்கொண்டே சென்றோம். சற்று நேரத்தில் எதிர் திசையில் ஒரு வண்டி நிறுத்தி இருப்பதை பார்த்தோம்.
பூக்கள் சூழ்ந்த ஒரு அழகிய குளம் இருந்தது. அதில் வன அதிகாரிகள் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் எங்கள் வண்டியை பார்த்தவுடன் வண்டியை நிறுத்த சைகை காட்டினார்.அந்த மனிதர் எங்களிடம் மராத்தியில் பேசினார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னோம். அவர் பேசிய இந்தியும் எங்களுக்கு ஒழுங்காக புரியவில்லை. ஆனால் சைகையை வைத்து அரைகுறையாக புரிந்துகொண்டு நாங்களும் எங்கள் அரைகுறை இந்தியை வைத்து பதில் கூறினோம். அவர் எங்களிடம் எப்படி இந்த வழியில் வந்தீர்கள், இந்த வழியில் வருவதற்கு அனுமதி கிடையாது என்றார். நாங்கள் கூகுளை காட்டி பாருங்கள், இது காட்டிய வழியில் தான் நாங்கள் வந்தோம் என்று கூறினோம். அவரோ இங்கே உள்ள வன அதிகாரிகள் அதை எல்லாம் நம்ப மாட்டார்கள், நான் உங்களுடன் வந்து அவர்களுக்கு புரியவைக்கிறேன் என்றார்.
நாங்கள் அங்கே உள்ள குளத்தின் அருகே சென்று மலர்களை பார்த்துக்கொண்டு அந்த நபர் திரும்பி வருவதற்கு காத்திருந்தோம். குமுதினி(Kumudini), முர்டான்னியா(Murdannia lanuginosa) மலர்கள் பூத்து கிடந்தன.சில நிமிடங்களில் மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே அந்த நபர் வந்துவிட்டதால் வேறு வழியில்லாமல் கிளம்பினோம். அந்த நபர் பேசிக்கொண்டே வந்தார். வன அதிகாரி இல்லை என்று மட்டும் புரிந்தது. பூக்களின் பெயர் சொல்ல ஆரம்பித்தார், நானே நிறைய மலர்களின் பெயர்கள் சொல்ல ஆரம்பித்தவுடன் ஆச்சர்யமாக பார்த்துவிட்டு வேறு ஏதோ பேச ஆரம்பித்துவிட்டார், சாலையின் முடிவில் காவலர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். வழியை பாறைகள் வைத்து வண்டிகள் செல்லாமல் இருக்க மறித்திருந்தார்கள். நாங்கள் கூகுளை நம்பி தலைகீழாக வந்து சேர்ந்திருக்கிறோம். அந்த நபர் காவலர்களிடம் ஏதோ பேசி கற்களை நகர்த்த வைத்துவிட்டு எங்களிடம் 700 ரூபாய் கேட்டார். அவர் ரசீது தரமாட்டார் என்று தெரியும், ஆனால் தெரியாத இடத்தில், புரியாத மொழியில் இதற்கு மேல் பிரச்சனை வேண்டாம் என்று பணத்தை கொடுத்துவிட்டு கார் பார்க்கிங் சென்றோம்.
திறந்தவெளியில் தரையெங்கும் பலவிதமான மலர்கள், பெரும்பாலும் பிங்க் நிறத்தில் இருந்ததால் காஸ் இடமே பிங்காக இருந்தது.நல்ல காற்றாக இருந்ததால் எல்லாருடைய முடியும் எல்லா திசையிலும் பறந்து கொண்டிருந்தது. காற்றையும் சிறு தூறலையும் ரசித்துக்கொண்டு புல்வெளியில் உள்ள மலர்களை பார்த்தோம். தூரத்தில் பிங்க் மலர்களின் இடையே வானம்பாடி மெய்மறந்து பாடி கொண்டிருந்தது. அருகே இருந்த மரத்திலிருந்து ஓணான் கொத்தி கழுகு (short toed snake eagle) பறந்தது.தொலைந்து போவதற்கு ஏற்ற சொர்க்கம்தான், ஆனால் உணவில்லாமல் இருக்க முடியாதல்லவா!
அதனால் திரும்பி ஆலூ பராத்தா எங்கே கிடைக்குமோ அங்கே செல்லலாம் என்று கிளம்பினோம்.