பிக் பென்ட் தேசிய பூங்கா

காய்ந்த செடிகளும் கட்டாந்தரையுமாக உள்ள பிக் பென்ட் பாலைவனம். ஆனால் உற்று பாருங்கள், மஞ்சள் நிறத்தில் தரையை ஒட்டி மலர்கள் பூத்திருக்கின்றன!
பிக் பென்ட் தேசிய பூங்கா அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது. நாங்கள் வசித்த இடத்திலிருந்து மிகவும் தொலைவில் இருந்தது இந்த பூங்கா. ஆனால் இந்த பூங்காவில் தான் நிறைய விதமான கள்ளி (cactus) செடிகளை பார்க்க முடியும். பல வண்ணங்களில் மலரும் கள்ளிப்பூக்களை பார்க்க ஏற்ற மாதமான மார்ச் மாதத்தில் பிக் பென்ட் தேசிய பூங்காவிற்கு கிளம்பினோம்.
என் தோழி ராஜஸ்ரீ டெக்ஸாசில் இருந்ததால் அவளை பார்த்துவிட்டு பிக் பென்டுக்கு கிளம்பினோம். அவள் அந்த பூங்காவில் உங்களுக்கு உண்ணுவதற்கு ஒன்றுமே கிடைக்காது என்று பல விதமான சாப்பாடுகள் எங்களுக்கு தயார் பண்ணி கொடுத்தாள். அவளுடைய கணவருக்கா கடைசியில் எனக்கு இப்படியாவது இவ்வளவு இந்திய உணவு கிடைக்கிறதே என்று சந்தோஷம். ஆனால் என் ஆருயிர் தோழி அதெல்லாம் அவர்களின் பயணத்துக்கே பத்தாது உங்களுக்கு பாஸ்தா தான் என்று சொல்லிவிட்டாள். அவள் கணவர் எங்களை பார்த்த பார்வையில் நாங்கள் கடகடவென்று சாப்பாடு மூட்டையை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டோம்.
எட்டு மணி நேர பயணத்திற்கு பின் பிக் பென்ட் தேசிய பூங்காவை சென்றடைந்தோம். இந்த பூங்காவின் பெரும்பகுதியில் சிஹுஹுன் (chihuahuan) பாலைவனம் உள்ளது. நாங்கள் பார்க்கும் முதல் பாலைவனம் இதுதான்.சிஸோஸ் மலை தொடர்ச்சி(Chisos Mountain Range) தூரத்தில் தெரிந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை முற்புதர்களும் கள்ளிச்செடிகளும் கிடந்தன. ஆனால் சில இடங்களில் ஒரு மாதத்திற்கு முன்னால் பெய்த மழையினால் வண்ண மலர்கள் பூத்துக் கிடந்தன.

சாலையோரத்தில் பூத்து குலுங்கிய நீல நிற லூபைன்(Big bend bluebonnet-Lupinus havardi)மலர்கள் பாலைவனத்தை வண்ணமயமாக்கின.
முயல்கள் அந்த பூக்களை பறித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன. எங்களுக்கு மலர்களையும் முயல்களையும் கண்டவுடன் 8 மணி நேரம் பயணம் செய்த களைப்பெல்லாம் காணாமல் போய் விட்டது. கொஞ்ச தூரம் வண்டி ஓட்டி சென்ற பின் சாலையின் ஓரத்தில் லூப்பைன்(Big bend bluebonnet-Lupinus havardi) மலர்கள் பூத்துக் குலுங்கி கொண்டிருந்தன.

முயலின் அதிகாலை உணவு!
நாங்கள் வெறும் கள்ளி செடி மலர்களை தேடி வந்தோம். இங்கு என்னடாவென்றால் விதவிதமான மலர்கள் கண்ணில் பட்டன, ஆனால் இன்னும் கள்ளிச்செடி மலர்களை பார்க்கவில்லை. 10அடிக்கு இருந்த யுக்கா (Yucca rostrata) செடிகள் அடுக்கடுக்காக மலர்கள் பூத்திருந்தன.

பாலைவனத்தில் அழகாக மலர்ந்துள்ள யுக்கா(Yucca rostrata) மலர்கள்
மறுநாள் அதிகாலையில் நாங்கள் எமோரி பீக் (Emory Peak) சென்று அங்கே உள்ள கேம்ப்சைட்டில் தங்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். அதற்கு தேவையான அனுமதி சீட்டுகளை வாங்கி கொண்டு நாங்கள் அங்கே உள்ள மற்ற இடங்களை பார்க்க சென்றோம். நிறைய கள்ளி செடிகள் பார்த்தோம், ஆனால் எதுவுமே பூக்கவில்லை. என்னடா இது, தப்பான மாதத்தில் கிளம்பி வந்துவிட்டோமா என்று யோசித்துக்கொண்டே சென்ற போது திடீரென்று மஞ்சளாக பாறை மேல் ஒரு பூ தெரிந்தது. வண்டியை நிறுத்தி கிட்டே சென்று பார்த்தால் கள்ளி பூ! அதன் பிறகு தொடர்ந்து பல விதமான கள்ளி செடிகளையும்,பூக்களையும் பார்த்தோம்.

கள்ளி செடியும் நானும்
பாலைவனம் என்பதால் சில இடங்களில் மட்டுமே நீர் தேக்கம் இருக்கும். அதனால் அந்த இடங்களில் நிறைய உயிரினங்களை பார்க்கலாம். நாங்கள் வெயில் ஏறிய பின் சென்றதால் ஒரு பறவையை கூட பார்க்க முடியவில்லை. கண்களை கூசிய வெயிலில் அங்கே இருந்த பிரம்மாண்டமான பள்ளத்தாக்குகளை மட்டும் பார்த்துவிட்டு திரும்பினோம்.

பள்ளத்தாக்கை உற்று பாருங்கள்.ஆங்காங்கே மனிதர்கள் தெரிகிறார்களா? இப்பொழுது புரிகிறதா எவ்வளவு பெரிய பள்ளத்தாக்கு என்று!!
சூரியன் அஸ்தமிப்பதை பாலைவனத்தில் பார்த்தால் மிக அழகாக இருக்கும் என்பதால் வினோத் அஸ்தமிக்கும் காட்சி முழுமையாக தெரியும் இடத்தை யூகித்து சென்றார். நாங்கள் கொண்டு வந்த கூடாரத்தை கேம்ப்சைட்டில் போட்டுவிட்டு ராஜ்ஸ்ரீ கொடுத்துவிட்ட தர்பூசணி பழத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தோம். மனதை மயக்கும் சூரிய அஸ்தமனத்தை பார்த்துவிட்டு மறுநாள் மலையேற்றத்துக்கு தேவையான பொருட்களை பைகளில் எடுத்துவைத்துவிட்டு உறங்க சென்றோம். பாலைவனத்தில் பகலில் எவ்வளவு சூடாக இருக்கிறதோ அந்த அளவுக்கு இரவில் நடுங்கும் குளிராக இருக்கும்.

இப்படி ஒரு இடத்தில உட்கார்ந்து சுவையான தர்பூஸ் சாப்புடுற சுகமே தனி.
எமோரி பீக் (Emory Peak) மலையேற்றம்
மறுநாள் அதிகாலை குளிரில் சிஸோஸ் மலை தொடர்ச்சி (Chisos mountain range) கீழே இருந்து எமோரி பீக் (Emory Peak) நடக்க ஆரம்பித்தோம். இரவு அங்கே உச்சியில் கேம்பிங் பண்ணுவதால் அதற்கு தேவையான பொருட்களை எல்லாம் ஆளுக்கொரு பையில் எடுத்துக்கொண்டோம். பறவைகளையும் பூக்களையும் தேடிக்கொண்டு உற்சாகமாக நடக்க ஆரம்பித்தோம்.

ட்ரெக் ஆரம்பிக்கும்போதே மானெல்லாம் (White tailed deer) பார்த்துட்டு போனா சகுனம் நல்லாத்தான் இருக்கும்
இந்த மலை பகுதி அருகே ஒரு தங்கும் விடுதி உள்ளது. அங்கே தங்கி இருந்த ஒரு முதிய ஜோடியும் எங்களுடன் மலையேறினார்கள். அவர்களின் வயதில் நமக்கெல்லாம் ஏற தெம்பிருக்குமா என்று எங்களுக்குள் பேசிக்கொண்டே ஏறினோம். விடிய ஆரம்பித்தவுடன் நிறைய பேர் ட்ரெக்கிங் வந்தார்கள். இந்தியர்கள் பெரும்பாலும் இந்த மாதிரி இடத்திற்கு வர மாட்டார்கள் என்பதால் அங்கே வந்திருந்த பலர் எங்களை ஆச்சர்யமாக பார்த்தார்கள். அதிலும் நாங்கள் மட்டும் தான் இவ்வளவு பெரிய பை தூக்கிக்கொண்டு நடந்து கொண்டிருந்தோம். மற்றவர்கள் எல்லோருமே ஒரு வேளைக்கு தேவையான உணவை மட்டுமே தூக்கிக்கொண்டு நடந்து கொண்டிருந்தனர். எங்களிடம் சிலர் விசாரித்தபோது கேம்ப் பண்ண போகிறோம் என்று நாங்கள் சொன்னவுடன், இங்கேயா கேம்ப் எல்லாம் பண்ணலாமா என்று அவர்கள் ஆச்சர்யமாக கேட்டதை பார்த்து எங்களுக்கு குழப்பமாகி விட்டது. ஒருவேளை நாம்தான் தப்பாக நினைத்துவிட்டோமா என்று ரசீதை மறுபடியும் சரிபார்த்தோம். அதில் குறிப்பிட்டிருந்த பெயர்களை பார்த்துக்கொண்டு சரி, முதலில் கேம்ப் சைட்டை கண்டுபிடித்து பைகளை அங்கே வைத்து விட்டு உச்சிக்கு செல்லலாம் என்று நடக்க ஆரம்பித்தோம்.

எமோரி பீக் உச்சியிலிருந்து தெரிகின்ற சிஸோஸ் மலைத்தொடர்ச்சி
வேறு சில கேம்ப்சைட்டுகள் கண்ணில் பட ஆரம்பித்தன. ஆனால் எங்களுக்கு அளித்த பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை. திரும்பி வந்து கண்டுபிடித்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அருகே இருந்த ஒரு மரத்தில் மறைவாக எங்கள் பைகளை வைத்துவிட்டு மலையேறுவதை தொடர்ந்தோம். ஒருவழியாக 7,825 அடியில் உள்ள எமோரி பீக்கை(Emory Peak) அடைந்தோம். அவ்வளவு உயரத்திலிருந்து மற்ற மலை தொடர்ச்சிகளை பார்க்கும்போது உலகமே வேறு விதமாக கண்ணில் தெரிந்தது.
கடகடவென்று நாங்கள் பை வைத்திருந்த இடத்திற்கு சென்றடைந்தோம். அருகே எங்கும் எங்களுக்கு அளித்த கேம்ப்சைட்டின் பெயரை காணவில்லை. அந்த கேம்ப்சைட்டுக்கு யாரும் வருவதாக தெரியவில்லை. அதனால் அங்கேயே நாங்கள் கூடாரம் அமைத்தோம். வெயிலுக்கு பழங்கள் தேவை படுமே என்று அதை வேறு தூக்கிக்கொண்டு வந்திருந்தேன். அருகே கரடி பெட்டி(Bear Box) வைத்திருந்தார்கள்.பழங்களை எல்லாம் எடுத்து அதற்குள் வைத்துவிட்டு எங்கள் உணவை திறந்தோம். தயிர் சாதமும்,ஊறுகாயும்!!!

8 கி.மீ ஏற்றத்தில் நடந்தபின் பாலைவனத்தின் நடுவே இப்படி ஒரு சாப்பாட்டின் அருமை தென்னிந்தியர்களுக்கு தான் தெரியும்.
எங்களுக்கு மிகவும் பிடித்த உணவு, அதனால் கடைசியாக சாப்பிட வைத்திருந்தோம். ராஜஸ்ரீ குடுத்த மற்ற சாத வகைகளை ஏற்கனவே உண்டு முடித்துவிட்டோம். ஏனோ சூடாக இருந்தாலும் அங்கே உள்ள சீதாக்ஷண நிலைக்கு உணவு பொருட்கள் எதுவும் கெட்டு போகவில்லை!

எமோரி பீக்கிலிருந்து சூரிய அஸ்தமனம்! சூரியன் மலையிலிருந்து உருள்வது போல் இருக்கிறது இல்லையா?
முந்தைய நாள் பாலைவனத்தில் சூரிய அஸ்தமனத்தை பார்த்தோம்.இன்று மலை உச்சியில் இருந்து மொத்த பாலைவனத்தை சூரிய அஸ்தமனத்தில் பார்க்கிறோம். ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் இந்த மாதிரி இடங்களில் பார்த்தாலே போதும், மனதில் ஒரு அமைதி வந்துவிடும். நாங்கள் மலை உச்சியில் இருந்ததால் மாலை நேரத்தில் பயங்கர காற்று. இரவில் அடித்த காற்றை எப்படித்தான் எங்கள் கூடாரம் தாங்கியதோ தெரியவில்லை. பாலைவனத்தில் தான் ஒரே நாளில் மூன்று வேளையும் வெவ்வேறு காலநிலையை அனுபவிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

கரடிகள் நடமாடும் இடத்தில் இப்படி ஒரு கூடாரம் போட்டு உறங்கினோம்.இப்பொழுது யோசித்து பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது.
அதிகாலையில் குடுகுடுவென்று கீழே சென்று விட்டால் நாங்கள் அடுத்து செல்ல வேண்டிய ரியோ கிராண்டேக்கு(Rio Grande) சீக்கிரம் செல்லலாம் என்று கிளம்பினோம்.

மலையேறியபோது இந்த கள்ளியில் மொட்டு தான் இருந்தது.மறுநாள் இறங்கி வரும்போது இந்த சிகப்பு கள்ளி பூ திறக்க ஆரம்பித்துவிட்டது.
கீழே இறங்கியபின் எங்கும் பறவைகளின் சத்தங்கள், சிவப்பு நிறத்தில் கள்ளி பூக்கள். காலையை இனிதாக தொடங்குவதற்கு வேறு என்ன வேண்டும்!
இந்த பயணத்தில் நினைத்தது போல விதவிதமான கள்ளி பூக்களையும், பாலைவன பறவைகளையும் பார்த்தோம். அதிலும் ரோடு ரன்னர்(Road Runner) போன்ற பறவைகளை எல்லாம் நேரில் பார்ப்பேன் என்றே நினைக்கவில்லை. இந்த பயணத்தில் பார்த்த பூக்களையும் பறவைகளையும் பற்றி தெரிந்துகொள்வதற்கு இந்த பக்கத்திற்கு செல்லுங்கள்.