வீட்டிலே வருடம் முழுவதும் இருப்பவர்களுக்கு வருடத்தில் ஒரு முறை சுற்றுலா செல்வது என்றால் மிகவும் புதிய அனுபவமாக இருக்கும்.வருடத்தில் பாதி நாட்களுக்கு மேல் ஊர் சுத்தும் எங்களுக்கு வீட்டில் இருப்பது தான் வேறு மாதிரி அனுபவம். இதில் மணிக்கட்டை உடைத்துக்கொண்டு 3 மாதம் கிட்ட வீட்டுக்குள்ளே கிடந்த நாங்கள் , டாக்டர் எல்லா வேலையையும் செய்ய ஆரம்பிங்கன்னு சொன்னது தான் உண்டு, உடனே அடுத்த நாள் பொன்முடி கிளம்பி விட்டோம். பொன்முடி நாகர்கோவிலில் இருந்து 107 கிமீ தூரத்தில் இருக்கிறது. ஆனால் சாலை வசதிகள் இல்லாததால் 3.30 மணிநேரம் கார் பயணம் ஆகிவிடும். அதனால் நாங்கள் அதிகாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து காரில் கிளம்பினோம். மெல்லிசாக மழை தூறி கொண்டிருந்தது. இதமான பாடல்களை கேட்டு கொண்டு போக்குவரத்து நெரிசல் இல்லாத அதிகாலை நேரத்தில் பொன்முடி நோக்கி எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.
பொன்முடி செல்லும் பாதை பச்சை பசேலென்று இருந்தது. பொன்முடி சென்றடைய முடியாவிட்டாலும் போகும் வழியே திருப்தி கொடுத்தது.
7 மணி அளவில் பொன்முடி செக் போஸ்ட் முன்னால் முதல் வண்டியாக சென்று நிறுத்திக்கொண்டோம். அங்கே காவலில் இருந்தவர்களிடம் எப்பொழுது உள்ளே செல்ல அனுமதி தருவார்கள் என்று கேட்க சென்றபோது தான் தெரிந்தது, சாலையில் கடந்த இரண்டு நாட்களாக பாறை உருண்டு விழுந்து கிடப்பதால் பொன்முடிக்கு போகும் வழி மூடப்பட்டுள்ளது என்று. 3 மணி நேரம் ஓட்டி வந்து உடனே திரும்புவதா என்று யோசித்து கொண்டே அங்கே மழையில் நனைந்திருந்த செடிகளை பார்த்தோம். கொஞ்ச நேரம் செடிகளை ஆராய்ச்சி செய்த பின் முடிவு பண்ணலாம் என்று அந்த சாலையில் நடக்க ஆரம்பித்தோம்.
Globba sessiliflora (Stalkless Swan Flower) மழையில் கொஞ்சம் நசுங்கி இருந்தாலும் அழகாகத்தான் இருந்தது.
Globba sessiliflora (Stalkless Swan Flower) அழகான மஞ்சள் நிற பூக்களை பூத்து சாலையோரத்தை அழகு செய்திருந்தது. Zingiber zerumbet (Shampoo Ginger) காட்டினுள்ளே ரம்மியமாக மலர்ந்து நின்றது. ஹார்ன்பில் காட்டினுள்ளே உயரமான மரத்தில் இருந்து அதனுடைய கூட்டுக்காரரை பாடி அழைத்துக் கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பிடித்தமான அயனி சக்கை பழங்கள் மரத்திலிருந்து விழுந்து சாலையோரம் கிடந்தன. இப்பொழுதெல்லாம் பிக் பாஸ்கெட்,நீல்கிரிஸ் மாதிரி கடைகளில் கிடைப்பது தான் பிரெஷ் காய்கறிகள்,பழங்கள் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டதால் தரையில் கிடக்கும் இப்பழங்களை யாரும் சாப்பிடமாட்டார்கள் போல. சில பழங்களை நாம் கீழே விழுந்தால் சாப்பிடுவது நல்லதல்ல தான், ஆனால் அயனிசக்கையை அழுக்கிலிருந்து பாதுகாப்பதற்கு அயனிசக்கை மேலே உள்ள முற்களே போதும் என்பதால் நான் ஒரு பழத்தை எடுத்து சுவைக்க ஆரம்பித்தேன்!
Zingiber zerumbet (Shampoo Ginger) ஷாம்பூ ஜிஞ்சர் பூக்கள் முற்றியவுடன் அதனுள்ளிருந்து ஒரு வழுவழுப்பான சாறு வரும். அந்த சாறை தலைக்கு உபயோகித்து குளித்தால் முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
இந்த ரம்மியமான காட்சிகளை விட்டுவிட்டு திரும்பி போய் உட்கார்ந்து அதே பேட்மேன்,சூப்பர்மேன் பார்க்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அங்கே செக் போஸ்டில் இருந்த காவலாளி சிரித்து கொண்டே கிளம்ப மனமில்லையா என்று கேட்டார். ஆமாம் என்று நாங்கள் கோரஸாக சொன்னவுடன், அப்படியென்றால் அருகே கள்ளார் மீன்முட்டி அருவி உள்ளது, அங்கே செல்லுங்கள் என்றார்.
நாங்கள் உடனே வண்டியை எடுத்துக் கொண்டு அருவி நுழைவு வாசலுக்கு சென்றோம். அங்கே இன்னும் 30 நிமிடம் ஆகும் என்றார்கள். காலை உணவை சாப்பிட்டு கொண்டு வந்தால் சரியாக இருக்கும் என்று வந்த வழியில் இருந்த ஒரு உணவகத்துக்கு சென்றோம். கேரள மாநிலம் என்பதால் காலை உணவுக்கு புட்டு மட்டும் இருந்தது.
என்னதான் புட்டு,பயிறு,அப்பளம்,சீரக தண்ணி எல்லாம் இருந்தாலும் நம்ம நெய் பொங்கல்,வடை,சாம்பார் போல வராது.
புட்டு தயாராகி வரும் வரை உணவகத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த நதியை பார்க்கலாம் என்று சென்றோம். அழகான, சுத்தமான அந்த நதியை பார்த்து ரசித்து கொண்டிருந்தபோது ஒரு ஹார்ன்பில் பட படவென்று இறக்கையை அடித்து கொண்டு அருகே இருந்த மரத்தில் வந்து அமர்ந்தது. எதிரிலே இருந்த மொட்டை மரத்தில் இன்னொரு ஹார்ன் பில் பறவை வந்து அமர்ந்தது. அது வேறொரு ஒலி எழுப்பியவுடன் அருகே இருந்த ஹார்ன்பில் மற்றும் வேறு சில ஹார்ன்பில்கள் அனைத்தும் அந்த ஒற்றை மொட்டை மரத்தில் வந்து அமர்ந்தன. காலையில் உள்ள தங்க நிற சூரிய ஒளியில் இந்த பறவைகள் அனைத்தும் சேர்ந்து அமர்ந்திருந்த காட்சி மிகவும் நன்றாக இருந்தது. சில தருணங்களை நேரில் பார்த்து மட்டுமே சந்தோஷமடைய முடியும்.அந்த தருணங்களை புகைப்படம் எடுத்து நேரத்தை வீணாக்க கூடாது.
புட்டு சாப்பிட்ட பின்பு மீன்முட்டி நீர்வீழ்ச்சி சென்றோம். நுழைவு கட்டணத்தை செலுத்தி விட்டு வண்டியை உள்ளே ஓட்டி சென்றோம். வண்டி போகின்ற மண் பாதையில் ஒரு ஓணான் போஸ் குடுத்து கொண்டிருந்தது.
எப்பொழுதும் சாலைக்கு நடுவில் தான் தண்டால் எடுப்பது !
சரி, இவ்வளவு கொடுக்கிறதே என்று அதை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு வண்டியை நிறுத்த வேண்டிய இடத்துக்கு சென்றோம். உயர்ந்த அடர்ந்த மரங்களின் நடுவே இருந்த நடைபாதையில் நடக்க ஆரம்பித்தோம். சில ஏற்ற இறக்கங்களை தாண்டி எளிதான ட்ரெக் தான்.
மீன்முட்டி அருவிக்கு போகின்ற ட்ரெக்கிங் பாதை
மீன்முட்டி அருவி நிறைந்து கொட்டிக் கொண்டிருந்தது. அருவியின் சாரலில் அமர்ந்து மீன்முட்டி அருவி யின் அழகை ரசித்தபின் திரும்பி நடக்க ஆரம்பித்தோம்.
சிறியதோ, பெரியதோ அருவி என்றாலே அழகு தான். நம் ஊரில் குளிக்க அனுமதி இல்லாத அருவிகளில் தான் இப்படி அமைதியாக அருவியை ரசிக்க முடியும்.
கருமேகங்கள் சூழ ஆரம்பித்தன. கொஞ்ச நேரத்தில் பட படவென்று மழை கொட்ட ஆரம்பித்தது. நாங்கள் வேக வேகமாக அருகே இருந்த ஒரு பெரிய பாறையின் அடிவாரத்தில் சென்று நின்றோம். அரை மணி நேரம் அங்கு வந்த அனைவரும் பொறுத்து பார்த்தோம். மழை குறைவதாக இல்லை.
கூட்டத்தில் ஒவ்வொருவராக மழையில் நனைய முடிவு செய்து நடக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் அதுவரை கைபேசி, கேமராவை பாதுகாக்க பொறுமையாக நின்றோம். அதன் பிறகு நாங்களும் பொறுமை இழந்து மழையில் நடக்க ஆரம்பித்தோம். என்னவென்றாலும் மழையில் காட்டுக்குள் நடப்பது ஒரு தனி சுகம் தானே !!
பெப்பாரா அணை (Peppara Dam View)
முழுவதுமாக நனைந்து காரில் ஏறி திரும்ப சென்றால் வந்த வழியெல்லாம் தண்ணி அடித்து செல்கிறது. அங்கே உள்ள வன ஊழியர்கள் நின்று வண்டி வெளியேற உதவியதால் பிரச்சனை இல்லாமல் வெளியே வந்து சேர்ந்தோம். பெப்பாரா அணை அங்கிருந்து சிறிது தூரத்தில் தான் இருப்பதால் அங்கேயும் போய் பார்த்து விடலாம் என்று சென்றோம். அணைக்கு செல்லும் வழி மிகவும் அமைதியான மரங்கள் அடர்ந்த சாலை. அணையின் உள்ளே கேமரா அனுமதி இல்லை ஆனால் கைபேசிக்கு அனுமதி உண்டு. நாங்கள் ஏற்கனவே முழுவதும் நனைந்திருந்தாலும் ஒரு குடையை பேருக்கு பிடித்துக்கொண்டு அணையில் உள்ள பாலத்தில் நடந்தோம்.
கொட்டும் மழையில் பெப்பாரா அணை!
மழையாய் இருந்ததால் கூட்டம் குறைவாக இருந்தது. மீன்முட்டியில் பார்த்த நிறைய குடும்பத்தார்கள் தான் இங்கேயும் இருந்தார்கள். அவர்களும் ஏற்கனவே முழுவதும் நனைந்திருந்ததால் இங்கே மழையை கண்டு கொள்ளாமல் நடந்தார்கள். புதிதாக நனைபவர்கள் எல்லாம் அவர்களிடம் இருந்த கவர் வரைக்கும் மேலே போர்த்திக் கொண்டு மழையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார்கள்.
சில மாதங்கள் வீட்டுனுள்ளே முடங்கி கிடந்த எங்களுக்கு இந்த மழையுடன் சேர்ந்த பயணம் புத்துணர்ச்சி ஊட்டியது. காலையில் பொன்முடி நோக்கி வந்து அதை பார்க்க முடியாமல் போனது கூட எங்களுக்கு குறையாய் தெரியவில்லை. இப்பொழுது திரும்பி இந்த ஈரத்துணியுடன் 3.30 மணிநேரம் உட்கார்ந்து வீடு போய் சேர வேண்டும் !!!