ஆடி பெருக்கு .. பொங்கும் காவேரி
தமிழகத்தில் இந்த வருடத்தில் ஒரே மோசமான நிகழ்வுகள். நிறைய போராட்டங்கள், நிறைய குரங்கணி போல விபத்துக்கள், கற்பழிப்பு போன்ற நிகழ்வுகளையே கேட்டு வெறுத்து போய் இருந்த தருணத்தில் மற்ற இடங்களில் பெய்த நல்ல மழை அளவினால் ஓகேனக்கல் அருவியில் 1 லட்சம் கன அடி நீர் வீழ்கிறது என்று கேட்டவுடன் இந்த பொங்கி வரும் காவேரியாவது தமிழ்நாட்டுக்கு விடிவுகாலத்தை தராதா என்று நினைத்தேன். சரி, நான்கு வருடங்கள் கழித்து இவ்வளவு நீர் காவேரியில் பொங்கி வரும் காட்சியை நேரில் பார்க்காமல் உலகம் சுற்றுவதில் என்ன இருக்கிறது என்று நினைத்து ஓகேனக்கல் கிளம்ப முடிவு செய்தோம். ஆனால் நம்ம சந்தர்ப்பவாதி அரசியல்வாதிகள் இந்த நல்ல விஷயமும் தங்களால் தான் நடந்தது என்று பேர் எடுத்து கொள்ள வேண்டும் அல்லவா, அதனால் மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் முதல் ஆளாக ஓடி வந்து விட்டார்.
நாங்கள் கிளம்புவதற்குள் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியின் அளவு 65000 கன அடியாக குறைந்துவிட்டது. இருந்தாலும் அதுவே நிறைய நீர் என்பதால் நாங்கள் பயணத்துக்கு தயாராகிவிட்டோம். இந்த பயணத்தில் எங்கள் கூட்டுக்காரர்கள் ரவிகுமார் மற்றும் அசார். ரவிகுமார் பாம்பு மீட்பு, விலங்குகள் துன்புறுத்தலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விலங்குகளை காப்பாற்றுவது மற்றும் கேட்டரிங் தொழிலில் இருப்பவர். கேட்டரிங் தொழிலில் இருப்பதால் பயணத்திற்கு நிறைய தின்பண்டங்கள் கொண்டு வந்து விடுவார். அசார் விலங்கியலில் பட்டம் வாங்கி விலங்கினங்களை காப்பாற்றும் பல விஷயங்களில் மிகுந்த ஈடுபாடுடன் பணியாற்றி வருகிறார்.
ரவிகுமாருடன் நாங்கள் வீட்டிலிருந்து அதிகாலை 3 மணிக்கு கிளம்பினோம். அசாரை விக்கிரவாண்டியில் அவருடைய வீட்டில் சென்று ஏற்றி கொண்டோம். ஒருத்தருக்கொருத்தர் ஒகேனக்கல் சென்ற பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, அசார் படித்த பள்ளிக்கூடத்தை பார்த்துக்கொண்டு சென்றோம். ரவி எப்பொழுதும் செல்லும் உணவகம் வந்தவுடன் காலை உணவு உண்ண அங்கே சென்றோம்.
ஒருவழியாக வழி முழுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முகத்தை பார்த்துவிட்டு மேட்டூர் அணைக்கு காலை வெயில் ஏறும் நேரத்தில் சென்றடைந்தோம்.
இராக்கொக்குகளும், சின்ன கொக்குகளும் மரங்களில் கூடு கட்டிக்கொண்டிருந்தன. பரிசல்களின் ஓரத்தில் சும்மா வலை கட்டி போட்டிருப்பதிலேயே நிறைய மீன்கள் மாட்டிக்கொண்டிருந்தன. நீர் நிரம்பி ஓடி கொண்டிருந்தது.நம்ம ஊர் பழக்கவழக்கத்தில் தண்ணீரை பார்த்தவுடன் ஒன்று குளிக்க வேண்டும் இல்லையென்றால் துணி துவைக்க வேண்டும். பெண்களெல்லாம் துணிகளை அள்ளிக்கொண்டு வந்து துவைத்துக் கொண்டிருந்தார்கள்.அது என்னவோ இத்தனை நாள் குளிக்காமல் இங்கே வந்தால்தான் சுத்தமாக குளிப்பது போல் இருக்கின்ற சோப்பு,ஷாம்பூ அனைத்தையும் உபயோகித்து குளிப்பார்கள். துணி துவைக்கும் பொது அடி அடி என்று அடித்து, இருக்கின்ற சலவை பொடிகள் அனைத்தையும் உபயோகித்து துவைப்பார்கள்.
எப்படித்தான் துணிகள் கிழியாமல் இருக்கின்றனவோ !!
அசாருக்கு குளிக்க ஆசை வந்து விட்டது. வினோத்தும் அவனுக்காக தண்ணீரில் இறங்கினார். நீரின் வலு மிகவும் அதிகமாக இருந்ததால், பாசி மிகுந்த பாறைகளில் பார்த்து கால் வைத்து சென்றார்கள். கொஞ்ச நேரம் தண்ணீரில் விளையாடி, வழுக்கி விழுந்து, மேலே குதித்து வந்த மீன்களை பார்த்துவிட்டு திரும்பி வந்தார்கள். அங்கே தூண்டிலை சும்மா தூக்கி போட்டாலே ஒரு இருபது மீன்கள் வந்து விழுந்து விடுகின்றன.
கொஞ்ச தூரம் மீன் கடைகளை தாண்டி சென்றவுடன் ஒரு பூங்கா இருக்கின்றது. அங்கே கேமராக்கு அனுமதி கிடையாது என்றார்கள். அதனால் அங்கு செல்லாமல் பவள விழா கட்டிடத்துக்கு சென்றோம். கட்டிடத்தின் மேலே உள்ள காட்சிக்கோணத்திற்கு படியில் செல்வதற்கு 5 ரூபாயாம், மின்தூக்கியில் செல்வதற்கு 20 ரூபாயாம்!! இந்த மாதிரி விஷயங்களில் தான் தமிழக சுற்றுலா நிர்வாகம் ரூம் போட்டு யோசிப்பார்களா என்று தோன்றும். கட்டிடத்தில் மேலே உள்ள கண்ணாடிகள் உடைந்து சிதறி கிடந்தன. இவர்களை நம்பி மின்தூக்கியில் கூட ஏற முடியாதென்று படி ஏறி சென்றோம். மேலே அழுக்கடைந்த கண்ணாடி வழியாக மேட்டூர் அணையை பார்த்துவிட்டு கீழே வந்து மேட்டூர் அணையை பார்த்தோம்.
நிறைந்திருந்த மேட்டூர் அணையை பார்த்துவிட்டு ஓகேனக்கல் செல்ல கிளம்பினோம்.
மரங்களடர்ந்த காட்டு பாதையில் ஒகேனக்கலுக்கு சென்றோம். ஏதாவது விலங்குகளோ பறவைகளோ கண்ணில் படுமா என்று பொறுமையாக சென்றோம். திடீரென்று சாலையின் நடுவே பச்சையாக ஒன்று வீரமாக நின்று கொண்டிருந்தது. வண்டிகள் போகின்ற வேகத்தில் அடிப்பட்டு சப்பி விடுமென்று, நாங்கள் வண்டியை நிறுத்தி இந்த அழகான பச்சோந்தியை சாலையோரத்தில் உள்ள மரத்தில் விட்டு விட்டு கிளம்பினோம்.
ஒகேனக்கல் சென்றடைந்தவுடன் மதிய உணவுக்கு ரெஸ்டாரன்டை தேடினோம். அங்கே உள்ள ஊர்காரர்களிடம் அசார் சென்று கேட்டபோது அனைவரும் சாந்தி மெஸ்க்கு செல்லுங்கள் என்று சொன்னார்கள். நாங்களும் அந்த உணவகத்துக்கு சென்று புகை நிரம்பிய அறையில் அமர்ந்து உணவு உண்டோம். ஒன்று அந்த ஊரில் மற்ற உணவகம் எல்லாம் இதை விடவும் சுமாரான சாப்பாடு கொடுக்கிறார்கள் அல்லது ஊரில் ஆங்காங்கே ஆள் வைத்து வருகிற சுற்றுலா பயணிகளை ஏமாற்றி இங்கே அனுப்பிவிட்டு விடுகிறார்கள். மேள தாள சத்தம் அருவியின் சத்தத்தையும் மீறி கேட்டது. எங்கடா இந்த இடத்தில் இப்படி ஒரு சத்தம் என்று பார்த்தால் அங்கே உள்ள கோவிலில் மேளம் அடித்து கொண்டிருந்தார்கள். ஆடிப்பெருக்கை ஊர்மக்கள் தீச்சட்டி எல்லாம் எடுத்து கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.
பொன்னியின் செல்வனில் படித்த காவேரி
பொன்னியின் செல்வன் படித்தவர்கள் காவேரியை பற்றி ஒரு கற்பனை செய்திருப்பார்கள். அதிலும் வந்தியத்தேவனின் பயணத்தை பற்றி படிக்கும்போது நாமும் இப்படி செல்ல வேண்டும் என்று தோன்றும். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பொன்னியின் செல்வனை முழுவதும் படித்து விட்டேன். அதன் பிறகு பல முறை படித்திருப்பேன். ஆனால் பெரிதான பின்பு ஹாரி பாட்டர்,ஹாபிட்ஸ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்து நம் பழங்காலத்தை மறந்துவிட்டேன். காவேரி பொங்கி வருவதை பார்த்தபோது தான் எனக்கு பொன்னியின் செல்வனெல்லாம் மறுபடியும் ஞாபகத்திற்கே வந்தது. திரும்பி சென்றதும் பொன்னியின் செல்வன் மறுபடியும் படிக்க வேண்டுமென்று முடிவு பண்ணிவிட்டு மறுபடியும் காவேரியை ஆவென்று பார்க்க ஆரம்பித்தேன். நீர் அளவு மிகவும் அதிகமானதால் அருவியின் அருகே கூட செல்ல முடியவில்லை. ஆனால் இவ்வளவு வேகமாக நீர் அடித்துச்செல்லும் போதும் அசராமல் நிற்கும் நீர் மருது மரத்தின் சிறப்பும் இன்று தான் கண் முன்னே தெரிந்தது.
பெரிய நீர்க்காகங்கள் (Great cormorant – Phalacrocorax carbo)) மரங்களில் கூடு கட்டிக்கொண்டிருந்தன.
ஒரு பெரிய நீர்காகம் தண்ணிக்கு மிக அருகே பறந்து உள்ளே தொபுக்கடீர் என்று விழுந்துவிட்டது. நான் பதறிப் போய் வினோத்திடம் ஐயோ அந்த பறவை முங்கிவிட்டது என்றேன். வினோத் பதறாமல், கவனித்துக்கொண்டே இரு , சிறிது நேரத்தில் கொஞ்சம் தள்ளி மேல எழும்பி வந்து விடும் என்றார். நான் நம்பாமல்,பயந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். வினோத் சொன்ன மாதிரியே அந்த பறவை கொஞ்சம் தள்ளி வாயில் மீனுடன் தலையை மேலே நீட்டி வெளியே வந்தது. இவ்வளவு வேகமாக வரும் தண்ணீரில், இந்த பறவை இப்படி மீன் பிடிக்குமென்று இன்று தான் நேரில் கண்டேன்.
ஆடிப்பெருக்கு ஒரு தனித்துவமான தென்னிந்திய தமிழ்ப் பண்டிகை. தமிழ் மாதம் ஆடி (ஜூலை நடுப்பகுதியில்) 18 வது நாளில் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கின் போது காவேரி படுக்கை மற்றும் இதர முக்கிய நீர் ஆதாரங்களில் வசிக்கும் மக்கள் நதி தேவதைகளுக்கு பூஜைகளை வழங்குவர். இத்தகைய சிறப்புமிக்க பண்டிகையின் முக்கியம் முழுமையாக நமக்கு புரிந்திருந்தால் நாம் தமிழ்நாட்டின் நதிகளை சாக்கடையாக மாற்றியிருக்க மாட்டோம். இப்பொழுது என்னவென்றால் ஆடியென்றாலே “ஆடித்தள்ளுபடி” என்று ஆகி விட்டது. மக்களுக்கு வாழ்க்கையில் அதனால் எதுவெல்லாம் தள்ளுபடியாகிவிட்டது என்றே புரியாமல் போய்விட்டது. ஆனால் எங்களுக்கு இந்த ஆடி புது அர்த்தத்தை கொடுத்துவிட்டது. இனி ஒவ்வொரு ஆடியும் நிஜமான ஆடிப்பெருக்காக இருக்கட்டும் என்று எண்ணிக்கொண்டு கிளம்பினோம். நான் திரும்பியவுடன் பொன்னியின் செல்வன் புத்தகத்தை மறுபடியும் எடுத்து படிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்!!
தமிழில் மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்