பழவேற்காடு ஏரியில் நாடியுடன் ஒரு நாள் (Pulicat Lake)

நாடி (Lesser Noddy) ஆலாக்களுடன் மணல் திட்டில் அமர்ந்திருக்கிறது
எங்கள் பறவை ஆர்வலர் நண்பர் சத்ய நாராயண் எங்களிடம் இந்த பறவை வருகையை பற்றி கூறினார். மணிக்கட்டு முறிவு காரணமாக நாங்கள் வீட்டில் இருந்ததால் எனக்கு இந்த பறவை பார்க்க ரொம்ப ஆர்வமாக இருந்தது. ஆனால் இந்த கையை வைத்து கொண்டு அவ்வளவு தூரம் பயணம் செய்வது வேண்டாம் என்று வினோத் மறுத்துவிட்டார். சமுத்திர பறவைகள் பொதுவாக கும்பலாக இருக்கும், சரி இந்த பறவையை எல்லாம் அப்படி பார்த்துக்கொள்ளலாம் என்று மனசை சமாதானப்படுத்திக்கொண்டேன்.

வினோத் நீரில் இறங்கி நின்று நாடியை புகைப்படம் எடுத்தபோது இடையே எங்களையும் ஒரு கிளிக்
புலிகட் (பழவேற்காடு) படகு சவாரி
ஒரு மாதம் கழித்து எனக்கு கை கொஞ்சம் சரியாகி விட்டது. எங்கள் சக பறவை ஆர்வலர் சாந்தியும் ஐரோப்பா பயணம் முடித்து திரும்பி இருந்தார்கள். அனைவரும் சேர்ந்து எங்கே பறவைகள் பார்க்க செல்லலாம் என்று சத்யாவிடம் கேட்டால் நாடி பறவை இன்னும் புலிக்கட்டில் இருப்பதாக சொன்னார். உடனே யுவ்ராஜ் என்ற படகோட்டியை கூப்பிட்டு படகு சவாரியை முன்பதிவு செய்து கொண்டோம். மறுநாள் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு, 6 மணிக்கு புலிகட் (பழவேற்காடு) சென்றடைந்தோம். யுவ்ராஜ் உடன் படகில் உள்ளே செல்ல ஆரம்பித்தோம்.

வினோத் நாடி உட்காருமா என்று பார்த்துக்கொண்டிருந்தபோது படகிலிருந்து நான் ஒரு மொபைல் கிளிக்

புலிகட் (பழவேற்காடு) ஏரியும் கடலும் சந்திக்கும் இடம்.
ஏரியின் நடுவே ஒரு மணல் திட்டில் கொஞ்சம் பறவைகள் உட்கார்ந்திருந்தன,அருகே கொஞ்சம் பறந்து கொண்டிருந்தன. வினோத் நாடி என்று கூவினார். நானும் சாந்தியும் எங்கே என்று தேடினோம். உற்று பார்த்தால் வெள்ளை கடல் காகங்களுக்கு இடையே பழுப்பு நிறத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது. முன்நெற்றியில் வெள்ளை கோடு உள்ள அந்த பறவை கடல் காகங்களுடன் போட்டி போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தது. இந்த காக்கா மாதிரி பறவையை பார்க்க எவ்வளவு பேர் இதுவரை கிளம்பி வந்து விட்டீர்கள் என்று சொல்லி யுவ்ராஜ் சிரித்தார்.

எங்களுடைய கதாநாயகன் நாடி (Lesser Noddy)
கொஞ்சம் தள்ளி படகை நிறுத்திக் கொண்டு பறவையை கவனிக்க ஆரம்பித்தோம். வினோத் படகிலிருந்து கீழே இறங்கி படம் பிடிக்க ஆரம்பித்தார். சாந்தி படகிலிருந்து ஆடி ஆடி படம் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். நான் நாடி மட்டும் தனியாக இருக்கிறதே, இது மறுபடியும் இதனுடைய குடும்பத்தாருடன் போய் சேர்ந்து விடுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

கை உடைந்திருந்தால் என்ன கால்களை ஜாலியாக கடலில் நனைக்கலாமே
வினோத் கரையில் உள்ள நண்டுகளை பார்க்க சென்றார். நான் அலைகளின் நடுவில் பொறுமையாக காலை உணவை உண்டேன். கொஞ்சம் தூரத்தில் வெள்ளை அரிவாள் மூக்கன்கள் மணலை கொத்திக்கொண்டிருந்தன.

அரிவாள் மூக்கன்கள் கரையோரம் கும்பலாக மேய்ந்து கொண்டிருந்தன.
மறுபடியும் நாடி இருந்த இடத்திற்கு சென்றோம். நாடி இன்னமும் பறந்து கொண்டே இருந்தது. என்னடா இது உட்காராது போலவே என்று யோசித்துக்கொண்டே மணல் திட்டை பார்த்தால் அங்கே மற்றோரு நாடி உட்கார்ந்து கொண்டிருந்தது. எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆகிவிட்டது. நீங்கள் தான் முதலில் இந்த பறவைகளை ஜோடியாய் பார்க்கிறீர்கள் என்று யுவ்ராஜ் கூறினார். இரண்டையும் ஜோடியாய் ஒரு படம் எடுத்து கொடுங்கள், அப்பொழுது தான் மற்றவர்கள் என்னை நம்புவார்கள் என்று யுவ்ராஜ் கேட்டதால் வினோத் இரண்டு பறவைகளையும் சேர்த்து வைத்து படம் எடுக்க முயற்சி செய்தார். ஆனால் இரண்டு பறவைகளும் சேர்ந்து உட்காரவே இல்லை. கொஞ்ச நேரத்தில் உட்கார்ந்திருந்த பறவை கடலை நோக்கி இரை தேட பறந்து சென்றது. அப்பொழுது தான் கவனித்தோம், பறந்து கொண்டிருந்த பறவையின் இறக்கை சிறிதாக பிய்ந்திருந்தது. அதனால் தான் இந்த பறவை ஓய்வெடுக்க இங்கே வந்திருக்கிறது. ஆனால் அதனுடன் இருக்க ஜோடி பறவையும் வந்திருப்பது ஆச்சரியமாக இருந்தது.

எத்தனை நேரம் பார்த்தாலும் அலுக்காத அழகிய பூநாரைகள்!

கடல் காகங்களின் நடுவே நாடி!
Related post
சிடியா டப்பும் பறவைகளும்