சிடியா டப்பில் ஒரு நாள் 


யணத்தின் கடைசி நாள் அதிகாலையிலேயே நாங்கள் தங்கியிருந்த (Ixire resort) இக்சிர் ரிசார்ட்டில் இருந்து எங்கள் பைகளை தூக்கி கொண்டு டிவிஎஸ் ஜூபிட்டரில் சிடியா டப்புக்கு (Chidiya tapu) சூரிய உதயத்தை பார்க்க கிளம்பிவிட்டோம். அதிகாலை நான்கு மணிக்கு கூட சிரித்த முகத்துடன் ரிசார்ட் ஊழியர்கள் எங்களுக்கு எளிய காலை உணவை குடுத்து அனுப்பி வைத்தார்கள்.

Ixire resort,Andaman birding,mount harriet stay

அதிகாலையில் இக்சிர் ரிசார்ட்(Ixire resort).

சிடியா டப்பு பறவைகள் (Birds in Chidiya tapu)

இருட்டில் உடைந்த சாலையில் பார்த்து பார்த்து ஒட்டி கொண்டிருக்கும்போது நாங்கள் ஆந்தை வேறு தேடினோம். ஆனால் பிரவுன் கூகல் (Brown Coucal) சாலை ஓரமாக ஓடியதை தான் பார்த்தோம். வெளிச்சம் இல்லாததால் படம் பிடிக்க முடியவில்லை. ஒரு வழியாக சூரியன் உதிக்கும்போது கடற்கரை அருகே வந்துவிட்டோம்.சிடியா டப்பு (Chidiya tapu) அருகே காட்டு பகுதிக்குள் நுழைந்தவுடனே பறவைகளின் சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. ஹில் மைனா (Hill Myna) கும்பலாக உட்கார்ந்து மரங்களில் இருந்து பெரிகளை சாப்பிட்டு கொண்டிருந்தன.chidiya tappu,andaman birding,hill myna,Gracula religiosa

சிடியா டப்பில் (Chidiya tapu) மரம் முழுவதும் காய்கள் இருந்ததால் ஹில் மைனாக்களுக்கு கொண்டாட்டம்

வண்டிகள் அதிகம் வராத சாலை என்பதால் புறாக்கள் தரையில் ஓடிக்கொண்டிருந்தன.

Red collared dove,andaman birding,chidiya tappu,endemic birds

சிடியா டப்பில் (Chidiya tapu) சிவப்பு காலர் டோவ் (Red collared dove) தரையில் கிடந்த உணவை கும்பலாக பொறுக்கிக்கொண்டிருந்தன.

வெளிச்சம் இன்னும் பளிச்சென்று வராததால் பறவைகளை தெளிவாக பார்க்க முடியவில்லை. அதனால் நேரே சிடியா டப்பு கடற்கரைக்கு சென்றோம். ஆனால் அங்கே ராணுவ வீரர்களும் அவர்களின் உயர் அதிகாரி குடும்பமும் தண்ணீரில் இறங்க தயாராகி கொண்டிருந்தார்கள். உள்ளே அனுமதி 9 மணியில் இருந்துதான் என்ற அறிவிப்பு தொங்க விட்டிருந்தது. எங்களுக்கு காத்திருக்க பொறுமையில்லாமல் வந்த வழியில் திரும்பி சென்று பறவைகளை பார்க்கலாம் என்று கிளம்பினோம்சாலையில் இருந்து கடற்கரையை பார்த்தவாறு வண்டியில் சென்றபோது திடீரென்று ஒரு புறா பறந்து வந்தது. நம்ம ஊருன்னா ஓ புறா தானேனு தாண்டி போயிடுவோம். ஆனால் அந்தமானில் உள்ள பறவைகளில் பெரும்பாலும் அந்த தீவில் மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கும்.அதனால் வண்டியை நிறுத்திவிட்டு பறந்து வந்து மரத்தின் உச்சியில் அமர்ந்த பறவையை பார்த்தால் அது அந்தமான் வுட் பிஜியன் (Andaman Wood Pigeon).

Andaman wood pigeon,chidiya tappu,andaman birding,andaman endemic birds

அந்தமான் வுட் பிஜியன் ஏகதேசம் மரத்தின் நிறத்தில் இருப்பதால் கொஞ்சம் கண்டுபிடிப்பதற்கு சிரமமாக இருக்கும். நம் மேல் கொஞ்சம் அச்சம் நீங்கி விட்டால் நம்மளை கண்டுகொள்ளாது, இல்லையென்றால் உடனே பறந்து விடும்.

திரும்பி காட்டு வழியாக வந்தபோது இன்னும் நிறைய பறவைகளின் சத்தம் கேட்க ஆரம்பித்திருந்தது. நாங்கள் மொத்த பயண உடைமைகளையும் எங்களுடன் வைத்திருந்ததால் கைகளில் கேமரா வைத்துக்கொண்டு முதுகில் பைகளை மாட்டிக்கொண்டு பறவைகளின் பின்னால் ஓட ஆரம்பித்துவிட்டோம்.ராக்கெட் டைல்ட் ட்ராங்கோ (Racket tailed drongo) அதனுடைய  நீண்ட வாலை ஆட்டிக்கொண்டு வேறு பறவைகளின் சத்தத்தை மிமிக் பண்ணிக்கொண்டிருந்தது. தரையில் இலைகளை ஏதோ பறவை கிளறிக்கொண்டிருந்ததை பார்த்து அருகே சென்றால் அது நம்ம ஆரஞ்சு ஹெட்டட் த்ரஷ் (Orange headed thrush).

Orange headed thrush,chidiya tappu,andaman birding

ஆரஞ்சு ஹெட்டட் த்ரஷ் (Orange headed thrush) தரையில் ஓடும் பறவை. தரையில் காய்ந்த இலை சருகுகளை புரட்டிக்கொண்டு கீழே கிடக்கும் புழு,பூச்சிகளை சாப்பிடும் பழக்கம் உள்ளது.

கிளிகள் உரத்த குரலில் சத்தம் போட்டுகொண்டு தாண்டி சென்றது. பைனாகுலரில் பார்த்தால் முகத்தில் சிகப்பும் கருப்பு கோடும் உள்ள நீல வால் கிளி (Long tailed parakeet). அருகில் ஏதாவது மரத்தில் அமருமா என்று ஆர்வமாக நாங்கள் பார்த்தோம், ஆனால் அந்த கும்பல் அப்படியே தாண்டி சென்று விட்டது.பழுப்பு கீச்சான் (Brown Shrike) தான் அமைதியாக ஒவ்வொரு செடியாக தாவி பூச்சி பிடித்து கொண்டிருந்தது.

Brown shrike,Lanius cristatus,chidiya tappu,andaman birding

பழுப்பு கீச்சான் அடுத்து என்ன பூச்சியை பிடிக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தது.

அதனால் நமக்கு போஸ் குடுக்கும் பறவையை படம் எடுக்காமல் விட கூடாது என்று அதை படம் எடுத்து விட்டு கிளம்பலாம் என்று பார்த்தால் மரத்தில் ஜோடியாக இரண்டு பறவைகள் அதன் கூடு அருகே அமர்ந்து உச்ச ஸ்ருதியில் கதை பேசிக்கொண்டிருந்தன. அந்த நாளுக்குள்ள வேலை எல்லாவற்றையும் புருஷனிடம் செய்வதற்காக சொல்லி அனுப்பி விட்ட மாதிரி இருந்தது இந்த ஸ்டார்லிங் பறவைகளின் செய்கைகள்.

Aplonis panayensis,Asian glossy starling,chidiya tappu birding,andaman birding

ஸ்டார்லிங் பறவைகள் ஜோடியாக காலையில் என்ன பண்ணலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தன.

திடீரென்று வினோத்துக்கு என்ன தோன்றியதோ அருகே ஒரு கிராமத்துக்கு செல்லும் சாலை வழிக்கு திரும்பினார். முதலில் பெரிய கோழி பண்ணை தான் இருந்தது, இந்த வழியில் என்னடா பார்க்க போகிறோம் என்று நினைத்து கொண்டே சென்றேன்.சற்று நேரத்தில் ஒரு அழகிய கிராமம் வயல்வெளியோடு காட்சிக்கு தெரிந்தது. ஒரு மொட்டை மரத்தில் நாங்கள் மவுண்ட் ஹாரியேட்டில் ஒழுங்காக பார்க்க முடியாமல் போன அந்தமான் செர்பென்ட கழுகு (Andaman Serpent Eagle) மரத்தில் மறைவாக அமர்ந்திருந்தது.

அந்தமான் செர்பென்ட கழுகு (Andaman Serpent Eagle),Spilornis elgini,near threatened eagle,andaman birding,endemic birding,andaman endemic birds,chidiya tappu

அந்தமான் செர்பென்ட கழுகு மறைவாக இருக்கிறது என்று நினைத்து அமர்ந்து கொண்டிருந்தாலும் நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்.

திடீரென்று எடுத்த கிராம பாதையில் இந்த கழுகை பார்த்துவிட்டோமா என்று என்னால் நம்பவே முடியவில்லை. அந்தமான் செர்பென்ட கழுகையும் படம் பிடித்தவுடன், எங்களுக்கு இன்று அதிர்ஷ்டம் இருப்பதால் மதியம் 2 மணி விமானத்தில் ஏறுவதற்குள் இன்னும் நிறைய அந்தமான் பறவைகளை பார்த்து விடலாம் என்று முடிவு பண்ணினோம். எங்கள் முடிவுக்கு துணை போவது போல் வெள்ளை ரம்ப்ட் முனியா(White Rumped Munia) பறவைகள் கூட்டமாக புல்களில் வந்து அமர்ந்தன.

Lonchura striata,வெள்ளை ரம்ப்ட் முனியா(White Rumped Munia) ,chidiya tappu birding,andaman birding

வெள்ளை ரம்ப்ட் முனியா(White Rumped Munia) கும்பலாக வித விதமான கோணத்தில் இந்த மெல்லிய செடியில் குதித்து கொண்டிருந்தன. இந்த பறவைகளெல்லாம் நாள் முழுவதும் குதிப்பதற்கும்,பறப்பதற்கும் எவ்வளவு தான் சக்தி வைத்திருக்குமோ!

சிடியா டப்பு (Chidiya tapu) அருகே இருந்த கடற்கரைகள் சுற்றுலா தளங்கள் இல்லை என்பதால் சுற்றுலா பயணிகள் ஒருவரையும் பார்க்கவில்லை. கடற்கரைகள் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தது. கடற்கரையோரத்தில் உயர்ந்த மரங்கள் இருந்தன. கடற்கரை அருகே செல்வதற்கு வழி தேடும்போது தான் முதலைகள் ஜாக்கிரதை என்ற எச்சரிக்கை பலகை கண்ணில் பட்டது. கோல்டன் பிளவர் (Golden Plover) பறவைகள் கடற்கரையில் மேய்ந்து கொண்டிருந்தன.

கோல்டன் பிளவர் (Golden Plover) ,chidya tappu,andaman sea birding

கோல்டன் பிளவர் (Golden Plover) பறவைகள் கும்பலாக கடற்கரையில் மேய்ந்து கொண்டிருந்தன. இந்த பறவைகளெல்லாம் சீதாக்ஷண நிலைமைக்கேற்ப இடம்பெயறும்.

முதலை எச்சரிக்கை பலகையை பார்த்த பின் கடற்கரையில் பறவைகள் கண்ணில் பட்டாலும் நாங்கள் கீழே இறங்கவில்லை. அங்கே போலீஸ் ரோந்து வண்டி வேறு இருந்தது.

andaman salt water crocodile,andaman birding,chidiya tappu

நல்ல வேளை இந்த எச்சரிக்கை பலகை கடற்கரையோரம் போடப்பட்டிருந்தது,இல்லையென்றால் நாங்கள் கடற்கரையோரம் பறவைகளை தேடலாம் என்று கடல் அருகே நடந்திருப்போம்.

மரங்களில் திடீரென்று சலசலப்பு. என்னவென்று கவனித்தால் காலையில் கேட்ட அதே கிளியின் குரல். உற்றுப் பார்த்தால் காலையில் படம் பிடிக்க முடியாமல் போன அதே நீல வால் கிளி (Long tailed parakeet)மரத்தில் அமர்ந்திருந்தது. கிளிகளை படம்பிடித்த பின் உற்சாகத்துடன் அந்த இடத்தில் இருந்து கிளம்பினோம்.

நீல வால் கிளி (Long tailed parakeet),Psittacula longicauda,chidiya tappu birding,andaman endemic birds

நீல வால் கிளி (Long tailed parakeet) முகட்டியது தல் முறையாக இங்கே தான் நாங்கள் பார்த்தோம். சிவப்பு முகத்தில் கண்ணில் பேண்ட் கட்டியது போல் டிசைன் இருப்பது முகத்தில் சாயம் போட்டு வரைந்தது போல் இருந்தது.

அந்தமானில் இன்டர்நெட் 3ஜி வேலை செய்யாது. அதனால் மேப் பதிவிறக்கி வைத்ததை உபயோகித்து தான் நாங்கள் அந்தமானில் உலாவிக்கொண்டிருந்தோம். அருகில் இருக்கும் குளங்களை மேப்பில் பார்த்து கூகுள் காட்டிய வழியில் சென்றோம். பாதி வழி போன பின்பு தான் தெரிந்தது, கூகுள் காட்டிய வழியில் ஒரு ராணுவ அமைப்பை தாண்டி தான் செல்லவேண்டும். அந்த வழியில் போக முடியாத காரணத்தினால் திரும்பி நாங்கள் வேறு வழியில் சென்றோம். இந்த புது வழியில் நாங்கள் குளங்கள் எதையும் பார்க்காமல் நேரே போர்ட் பிளேர் போய் சேர்ந்து விட்டோம். அதுவும் போர்ட் பிளேர் ஊருக்குள் உள்ள சிறு சந்துக்குள் போய் சேர்ந்து விட்டோம். எங்கள் பைகளை எல்லாம் வேறு வைத்துக்கொண்டு நாங்கள் சந்துகளுக்குள் ஏற்றத்திலும் இறக்கத்திலும் வண்டியை ஓட்டி ,ஒரு ஏற்றத்தில் சரிந்து விழுந்து இப்படி எல்லா கலவரமும் பண்ணி ஒரு வழியாக ஊருக்கு வெளியே வந்து சேர்ந்தோம்.

andaman birding,chidiya tappu,andaman ducks,andaman endemic birds

வித விதமான அந்தமான் வாத்துகள் சாலையோர குளங்களில் இருந்ததால் வண்டியை நிறுத்தி நிறுத்தி பறவைகளை பார்த்து ரசித்தோம்.

சாலை ஓரங்களில் உள்ள குளங்களில் இருக்கும் நீர்காகம்,மீன்கொத்தி,மூர்ஹென்,நீர்கோழி பறவைகளை பார்த்துக்கொண்டே போன போது ஒரு குளத்தின் அருகே மண்ரோடு சென்றது. அது வழியே உள்ளே சென்று குளத்தின் எல்லை வரைக்கு சென்று பார்த்தோம். குளத்தின் நடுவே ஒரு கல்லில் வெள்ளை வயிற்று கடல் கழுகு (White Bellied Sea Eagle) உட்கார்ந்து மீனை காலில் பிடித்து வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது.

வெள்ளை வயிற்று கடல் கழுகு (White Bellied Sea Eagle),Andaman birding,roadside birding,chidiya tappu

வெள்ளை வயிற்று கடல் கழுகு (White Bellied Sea Eagle) மீனை பிடித்துவிட்டு சாப்பிட இடம் பார்த்துக்கொண்டிருந்தது.

இன்னைக்கு என்னவோ குறுக்கு சந்துக்குள் நுழைந்தாலே கழுகு பார்க்கும் ராசி போல.

இன்னும் கொஞ்சம் தூரம் சென்றதும் அடுத்த ஒரு குளம் வந்தது. இந்த குளத்தில் நிறைய வாத்துக்கள் இருந்தன. வாத்துக்களை உத்து பார்த்துக்கொண்டிருந்தால் பைலோன் கிரேக் (baillon ‘s crake ), ஸ்னைப் (snipe) எல்லாம் ஜாலியாக குளத்தின் ஓரத்திலே நடந்து கொண்டிருந்தன. அடி ஜாக்பாட் !!! ஏனென்றால் இந்த பறவைகளை எல்லாம் எளிதில் பார்க்கவே முடியாது.

snipe,andaman birding,chidiya tappu

பார்த்தவுடனே அடித்து பிடித்து ஓடும் ஸ்னைப் பறவை அதிசயத்திற்கு எங்களை கண்டுகொள்ளாமல் குளத்தாங்கரையோரமாக இருக்கும் புல்களில் மேய்ந்து கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் திடீரென பின்னே இருந்து ஒரு குரல் . திரும்பினால் நாங்கள் கடற்கரை ஓரத்தில் பார்த்த போலீஸ் ரோந்து வண்டி . நாங்கள் சென்ற பாதை பொதுவாக சுற்றுலா பயணிகள் செல்லாத இடமாக இருந்ததால் போலீஸ் எங்களிடம் இங்கே எல்லாம் வந்து என்ன செய்கிறீர்கள் , நீங்கள் என்ன கல்லூரி ஆராய்ச்சி மாணவர்களா என்று கேட்டார்கள்நாங்கள் கல்லூரி எல்லாம் முடித்து பல வருடங்கள் ஆகி விட்டது என்று மனதில் நினைத்து கொண்டு,அவர்களிடம் சென்னையில் இருந்து பறவைகள் பார்க்க வந்திருக்கிறோம் என்று கூறினோம்போலீசார் அரைகுறை தமிழில் “ஓ நீங்க சென்னை எக்ஸ்பிரஸ் ஆ” னு கேட்டார்அந்த படம் வந்தாலும் வந்தது, வட மாநிலம் எங்கு சென்றாலும் சென்னை என்றவுடனே சென்னை எக்ஸ்பிரஸ் தான்!!

அந்தமானை நன்றாக ரசித்தீர்களா, எங்கெல்லாம் சென்றீர்கள் என்று எங்களிடம் போலீஸ் அக்கறையுடன் பேசிவிட்டு கிளம்பினார்.திரும்பி பறவைகளை பார்த்தவுடன் எங்கள் கண்ணில் பட்டது அந்தமான் சுண்டா டீல் வாத்து ( Andaman Sunda Teal).

அந்தமான் சுண்டா டீல் வாத்து ( Andaman Sunda Teal)

அந்தமான் சுண்டா டீல் வாத்துகளை ( Andaman Sunda Teal) கூட்டமாக ஏர்போர்ட்டுக்கு செல்லுமுன் கடைசி நிமிடங்களில் பார்த்துவிடுவோம் என்று நினைக்கவே இல்லை.

பொதுவாக எந்த இடம் சென்றாலும் பறவைகளை தான் முதலில் தேடுவோம், ஆனால் இந்த பயணத்தில் தான் மீன்களை பார்க்க ஆரம்பித்ததால் இந்த பறவைகளை எல்லாம் கடைசி நாள் பார்த்தோம். ஆனால் ஒரே நாளில் இவ்வளவு புது பறவைகளை பார்ப்போம் என்று நினைக்கவில்லை. சந்தோஷத்துடன் பறவைகளை பார்த்துவிட்டு பயணத்தை இனிதே முடித்தோம்.


Related post

மௌன்ட் ஹாரியேட் தேசிய பூங்கா