மௌன்ட் ஹாரியேட் தேசிய பூங்கா
மௌன்ட் ஹாரியேட் அந்தமான் தீவில் இருக்கும் மூன்றாவது உயர்ந்த சிகரம். போர்ட் பிளேரில் இருந்து 43 கிமீ தொலைவில் இருக்கிறது. பட்டாம் பூச்சிகள்,மலர்கள்,பறவைகள் நிறைந்து இருக்கும் இந்த சோலைவனத்தை நாங்கள் பார்க்காமல் விடுவோமா! உள்ளே நுழைவு வாசல் அருகிலேயே பட்டாம் பூச்சிகள் பார்க்க ஆரம்பித்து விட்டோம். நுழைவு கட்டணம் 50 ரூபாய் தான், ஆனால் எங்கள் SLR -ஐ பார்த்தவுடனே 200 ரூபாய் கேமராவுக்கு கட்டணம் என்று சொல்லி வாங்கிக் கொண்டார்கள்.
மௌன்ட் ஹாரியேட் நடை பயணம்
மௌன்ட் ஹாரியேட் நுழைவு வாயிலில் இருந்து 3கிமீ தூரத்தில் இருக்கிறது. சாலை வசதி உள்ளதால் அனைவரும் வண்டியிலேயே மேலே சென்று விடுகிறார்கள். நடந்து சென்றால் தான் பட்டாம்பூச்சிகளில் இருந்து பறவைகள் வரை நன்றாக பார்க்க முடியும் என்பதால் நாங்கள் நுழைவுவாயிலில் இருந்தே நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் பொறுமையாக செடிகளையும் மரங்களையும் உற்று பார்த்துக்கொண்டு சென்றபோது ஒரு செடியில் நிறைய வண்ணங்களுடன் ஒரு பூச்சி கண்ணில் பட்டது. பால்ஸ் டைகர் மாத் (False Tiger Moth – Dysphania militaris) பட்டாம் பூச்சி மாதிரியே வண்ணங்கள் கொண்டது. பொதுவாக அந்துப்பூச்சிகள் மாலை நேரத்தில் தான் வெளியே வர ஆரம்பிக்கும், ஆனால் இந்த அந்துப்பூச்சி காலையிலேயே பறந்து கொண்டிருந்தது.
அந்தமான் புல்புல்(Andaman Bulbul) இங்கும் அங்கும் பறந்து கொண்டிருந்தது. ஓரியோல்
(Black-naped Oriole) அமைதியாக ஒரு மரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டிருந்தது.
அந்தமான் ட்ரீ பை (Andaman Tree Pie) கும்பலாக இருந்து கலகலவென்று பேசிக்கொண்டிருந்தன.
ட்ராங்கோ அந்தமான் சேர்பென்ட ஈகிளை துரத்தி கொண்டிருந்தது. மொத்தத்தில் அந்த காடு பல விதமான உயிரினங்களுடன் ரம்மியமாக இருந்தது.நடக்கும் பாதை வழி கொஞ்சம் ஏற்றமாக இருந்தாலும் 3கிமீ தூரம் தான் என்பதால் எளிதாக நடந்து மேலே உச்சிக்கு வந்து சேர்ந்தோம். வேகமாக வண்டியில் வந்து மேலே சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே நின்று selfie எடுத்து கொண்டிருந்தார்கள்.
வியூ பாயிண்ட்டில் நின்று பார்த்தால் படர்ந்து விரிந்த கடல் தெரிகிறது. ஆனால் நாங்கள் பார்த்த நேரத்தில் வெயில் காரணமாக தொலைவில் உள்ள அனைத்தும் மங்கலாக தெரிந்தது. அங்கே வேலை செய்கிறவர்களில் சிலர் தமிழ் பேசினார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது தான் ஹாரியேட் யாரென்று தெரிந்தது. எப்பொழுதுமே வெள்ளைக்காரன் பேர் வைத்த நம் ஊர் காடுகள்,சுற்றுலா தளங்கள் அனைத்தும் நமக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே வைத்த பெயராக இருக்கும். சுதந்திரம் கிடைத்த பின் ஏன் இந்த பெயர்களை எல்லாம் மாற்றவில்லையென்று நான் எப்பொழுதும் யோசிப்பேன். ஆனால் இந்த ஹாரியேட் பெயர் காரணம் கேட்ட போது மிகவும் கோபமாகவும் வருத்தமாகவும் இருந்தது. ஹாரியேட் டைட்லர் (Harriet Tytler) போர்ட் பிளேரில் வேலை பார்த்த சூப்பரின்டென்டென்டின் இரண்டாம் மனைவி. 2 வருடம் மட்டுமே போர்ட்பிளேரில் வசித்து இருக்கிறார்கள். அந்தமானில் நம் விடுதலை போராளிகளை அடைப்பதற்காக சிறைகள் கட்டி கொடுமை படுத்திய வெள்ளைக்காரர்கள் தான் அங்கே வசித்தவர்கள். அப்படி ஒரு பதவியில் இருந்த வெள்ளைக்காரனின் இரண்டாம் மனைவியின் பெயர் இன்னும் ஏன் நம் நாட்டில் உள்ள ஒரு தேசிய பூங்காவின் பெயராக இருக்க வேண்டும். விடுதலை தியாகிகள் பல பேர் அந்தமான் சிறையில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் எவர் பெயராவது வைத்திருந்தால் எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும்.
ஹாரியேட் மலையின் உச்சியில் வியூ பாயிண்ட் தவிர நிக்கோபாரி ஹட் கட்டி இருந்தார்கள். மிகவும் எளிமையான அந்த குடிசையில் தங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.ஹ்ம்ம், ஆனால் பாம்புகளும் கூடவே வந்து படுத்து கொள்ளும் என்று நினைக்கிறன்.அங்கே இருந்து கலபதார் (kalapathar) நடைவழி பாதை ஒன்று இருந்தது. அங்கே வெள்ளைக்காரர்கள் கைதிகளை பள்ளத்தில் தள்ளி கொன்று விடுவார்களாம். சரித்திரத்தில் இந்த இடம் கொடூரமாக இருந்தாலும் நாங்கள் பார்த்த பொழுது தேனீக்கள் கூடு கட்டியிருந்தன.
அந்தமான் மினிவேட் குடும்பமாக மரத்துக்கு மரம் பறந்து பேசிக்கொண்டிருந்தது, ஓணான்கள் தரையில் இங்கே அங்கே என்று ஓடிக் கொண்டிருந்தன.
Yamfly(Loxura atymnus) ,Myanmar Tree-Nymph(Idea agamarschana) ,Thai Plane (Bindahara phocides) , Common Birdwing (Troides helena) மற்றும் பல பட்டாம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.
இயற்கை ஆர்வலர்கள் அந்தமான் வந்தால் கண்டிப்பாக வசிக்க வேண்டிய ஒரு இடம் இந்த மௌன்ட் ஹாரியேட் தேசிய பூங்கா (Mount Harriet National Park).
Related post
Roaming In Andaman Islands